Sunday, May 4, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 04/06/2014

ஒரு வரிச் செய்திகள் – 04/06/2014

-

செய்தி: டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியை, பார் உரிமையாளர்களின் மிரட்டலுக்கு பயந்து கடை ஊழியர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். இதனால் குளிர்சாதன பெட்டிகள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீதி: பார் உரிமையாளர்கள் ஏற்படுத்தியிருக்கும் மோசடி பயத்திற்கே விளைவு இதுவென்றால், உண்மையான பயத்தை பெண்கள் உருவாக்கினால், கடைகளையே திறக்க முடியாதே?

_______________

செய்தி: தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பாட்டில் உள்ள 1.32 இலட்சம் வீடுகளை வெள்ளை அடித்து சீரமைப்பதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, குடிசை மாற்று வாரியம் பரிசீலித்து வருகிறது.

நீதி: வெள்ளை அடிப்பதில் ‘கருப்பு’ ஒப்பந்தாரர்கள் ஒருபுறம், வெள்ளை அடித்து அதில் இரட்டை இலை வரைந்து, அம்மா செய்யும் விளம்பரம் மறுபுறம்!

_______________

செய்தி: திருப்பதி தேவஸ்தானம் லட்டு வழங்கும் பிரிவில் உள்ள ஊழியர்கள், லட்டு அளவை (175 கிராம்) சிறியதாக்கி மீதம் வரும் பூந்தியை லட்டுகளாக பிடித்து கள்ள சந்தையில் அதிக விலையில் விற்று வருகின்றனர்.

நீதி: ஓசித் தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் பெறும் பக்தர்கள் நாட்டில், பெருமாளின் இலவச லட்டை பிதுக்கி பிசினஸ் பார்ப்பது தவறா?

_______________

செய்தி: “ஜூன் 1-ம் தேதி முதல் மின்வெட்டு முற்றிலுமாக நீங்கும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் மின்வெட்டு பிரச்சினை இன்னும் தீரவில்லை.” – சிபிஎம் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.

நீதி: சூரியன் கிழக்கே உதிக்கின்றது, தண்ணீர் தரையில் சுரக்கின்றது, நாக்கில் எச்சி ஊருகின்றது போன்ற அரிய உலக உண்மைகளை கண்டுபிடித்து சொல்வதில் சிபிஎம்-மை யாரும் விஞ்ச முடியாது.

__________________

செய்தி: “மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்கடையினரின் அத்துமீறல்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.” – பாமக தலைவர் ராம்தாஸ்.

நீதி: பாமக தமிழர்களுக்கான கட்சி என்று நீங்கள் சொன்னதற்கே அதிர்ச்சியடையாத நாங்கள் மோடி சொன்னதற்கு ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்?

__________________

செய்தி: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் போதிய பலம் உள்ளது. ஆதனால் எங்கள் கட்சி ஆதரவு தேவைப்படாது. ராஜ்ய சபாவை பொறுத்தமட்டில், அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்போம்” – ஜெயலலிதா.

நீதி: ஆகவே பாஜ கட்சி தன்னிடம் ஏதோ ஒரு வகையில் டீல் பேச வந்தேயாக வேண்டும் என்பதைத்தான் அம்மா இப்படி பணிவாக முன் வைக்கிறார்.

_________________

செய்தி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வெட்டை எதிர்த்து யஸ்வந்த் சின்கா தலைமையில் போராட்டம் நடத்திய பாஜகவினர், மின்வாரிய மேலாளர் தனிஷா ஷாவை கயிற்றால் கட்டி தாக்கினர். இதனால் சின்காவும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் அடைக்க கோர்ட் உத்திரவிட்டுள்ளது.

நீதி: எனில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விலை வாசி உயர்வு காரணமாக, நாம் பாஜக அமைச்சர்களை கட்டி வைத்து அடிக்கலாமா?

_______________

செய்தி: “நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கர குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் அனைத்து குற்றங்களும் உ.பியில் மட்டும்தான் நடப்பது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.” – அகிலேஷ் யாதவ், உ.பி. முதல்வர்.

நீதி: என்ன காரணம் அகிலேஷ் அவர்களே? மற்ற மாநிலங்கள் போல நீங்களும் ஊடகங்களுக்கு ‘கவர்’ செய்வதில்லையா? அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற உங்கள் கட்சிக்கு ‘கவர்’ செய்யப்பட்டது நினைவில்லையா?

_______________

செய்தி: நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தலைமையை மாற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மேற்கு வங்கத்தில் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நீதி: மேலிடத்தை மட்டுமல்ல, இரண்டாம்-மூன்றாம் என அனைத்து கட்ட தலைமையையும் ஏன் முழுக் கட்சியையும் கலைக்க தேவையிருக்கிறது. இது தேர்தல் தோல்விக்காக அல்ல, கம்யூனிசத்தை அடகு வைத்த தரகர்களை முறியடிப்பதற்க்காக!

______________

செய்தி: மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த சத்யபால் சிங், நடந்து முடிந்துள்ள தேர்தலில் உ.பி மாநில பாக்பத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மும்பை அந்தேரி பகுதியில் இவர் வாடகைக்கு விட்டிருந்த வீட்டில், விபச்சாரம் செய்ததாக ஒரு நபரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

நீதி:  போலீஸ் கமிஷனர் வீட்டை வாடகைக்கு எடுத்தவன், தைரியமாக விபச்சாரம் செய்கிறான் என்றால், அது வந்தே மாதரத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜ கட்சியைச் சேர்ந்த எம்பி சத்யபால் சிங்கிற்கு தெரியாது என்பதை, எவரேனும் ‘சத்தியம்’ செய்து நிரூபிக்க முடியுமா?

______________

செய்தி: மராட்டிய மாநிலத்தில், வீட்டு வசதி ஊழலில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், சிவசேனா தலைவருமான சுரேஷ் ஜெயின் தாதா, கார்ப்பரேட் மருத்துவமனையின் ஆடம்பர அறையில் தங்கியிருந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், மீண்டும் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதி: என்னதான் ஊழல் வழக்குளில் தண்டிக்கப்பட்டாலும், பாரத மாதா தவமிருந்து பெற்ற இந்த புண்ணிய சீலரை சாதா மருத்தவமனையில் வைத்திருப்பது என்ன நியாயம்?

_________________

செய்தி: ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் மூழகடித்தனர்.

நீதி: உடனே மோடியும், பாஜகவும் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேட்பதற்கு முன், இலங்கைக்கு ராமர் ‘போட்ட’ மண்பாலத்தின் மதிப்பு, இலங்கை கடற்படை விரட்டும் தமிழக மீனவர்களுக்கு இல்லை என்பதறிக!

________________

செய்தி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘உலகம் உயர் பெறும் உங்கள் மொழியில்’ என்ற விளம்பரம் ‘கோவா ஃபெஸட்’ 2014-ம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தங்க விருதை வென்றது.

நீதி: “விளம்பரங்கள் / விளம்பரதாரர் / அவர்களின் தயாரிப்புகள் / சேவைகள் போன்றவற்றின் நம்பகத்தன்மைக்கு இந்த செய்தித்தாளின் உரிமையாளர் உத்திரவாதம் அளிக்கவில்லை. இந்த விளம்பரங்களால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் இந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகமாட்டார்கள்.” – தி இந்துவில் அன்றாடம் வெளியாகும் பெட்டி செய்தி.

_______________

செய்தி: 16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

நீதி: அரட்டை மடத்தின் வரலாற்றில் “16-வது மடம், 16-வது மடத்தின் முதல் கூட்டம்”, என்பதற்கெல்லாம் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

______________

செய்தி: திருமணத்திற்கு ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக செலவு செய்தாலோ அல்லது 1,000 விருந்தினர்களுக்கு மேலாக திருமணத்திற்கு வந்தாலோ திருமண வீட்டாரிடம் ஆடம்பர வரி வசூலிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

நீதி: 8000 கோடியில் அம்பானியின் ஆன்டிலியா மாளிகை கட்டிடத்தை அனுமதிக்கும் சட்டம் ஆடம்பரமாக திருமணம் செய்வதை மட்டும் தடுத்து விடுமா?

______________

செய்தி: ஆடம்பர திருமணங்களுக்கு வரி போடுவதற்காக, கர்நாடக அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள சிக்கன திருமண சட்டத்தை, பாஜக ஒருபோதும் ஏற்காது என்று தெரிவித்துள்ளது.

நீதி: ஆடம்பரமும், பணக்காரர்களுமே வளர்ச்சியின் அடையாளம் எனும் போது வளர்ச்சிக்கு பாடுபடும் பாஜக இதை எதிர்ப்பதுதானே அறம்?