privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅ.தி.மு.க.வின் வெற்றி ... தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !

அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !

-

அதிமுக தேர்தல் வெற்றிமோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ”வரலாறு காணாத” வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை. ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ந்து கொண்டிருக்கும் கடுமையான மின்வெட்டு, கடும் விலைவாசி உயர்வு, தண்ணீர் பஞ்சம், மணற் கொள்ளை, தலைவிரித்தாடும் குற்றச்செயல்கள் போன்ற அனைத்துக்கிடையிலும், நம்ப முடியாத இந்த வெற்றியை ஜெ. எப்படிப் பெற முடிந்தது என்ற கேள்விக்குப் பதிலாக, தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் தேர்தல் செய்திகளைத் தொடர்ந்து வாசித்தவர்கள் கீழ்க்கண்ட விடயங்களை அவதானித்திருக்க முடியும். துவக்கத்தில் நாற்பதும் அ.தி.மு.க.வுக்கே என்று கருத்துக் கணிப்பு வெளியிட்ட ஊடகங்கள், தேர்தல் பிரச்சாரம் பாதி நாட்களைக் கடந்திருந்த நிலையில், அ.தி.மு.க. 15 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு வாப்பில்லை என்று உளவுத்துறை கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. கருத்து கணிப்புகளும் இதையே உறுதி செய்வதாக ஜெ ஆதரவு தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளுமே செய்தி வெளியிட்டன.

இத்தகைய சூழ்நிலையில்தான், இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், ”இரவு பத்து மணிக்கு மேல் வேட்பாளர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்யலாம்” என்று மாநில தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் அறிவித்தார். ”இது அதிமுகவின் பணப்பட்டுவாடாவுக்கான ஏற்பாடு” என்று கூறி எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன; ஆனாலும் பயனில்லை.

பிறகு காஷ்மீர், வட கிழக்கிந்தியா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கூட இல்லாத வகையில் தேர்தலுக்கு முதல் நாள் இரவு 144 தடை உத்தரவு பிறப்பித்தார் பிரவீண் குமார். இதுவும் பணப்பட்டுவாடாவுக்குத்தான் என்று எல்லா கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். பயனில்லை. பல இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலமும், போலீசு வேன்கள் மற்றும் ஆம்புலன்சுகள் மூலமாகவும் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ரூ.3,000 கோடிக்கு மேல் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக ராமதாசும், இது பணம் கொடுத்து வாங்கிய வெற்றி என்று பா.ஜ.க.தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். பணம் கொடுத்துப் பிடிபட்டவர்கள் எண்ணிக்கையிலும் அ.தி.மு.க. தான் அதிகம் என்பதையும் தேர்தல் ஆணையத்தால் மறுக்க முடியவில்லை. மாநிலம் முழுவதுமே மொத்த தேர்தலையும் ரத்து செய்யும் அளவுக்கு இந்த முறைகேடு நடந்திருந்த போதிலும், ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெ.வைப் பொறுத்தவரை பிரதமராவது என்ற நப்பாசை ஒருபுறமிருந்தாலும், அதைவிட முக்கியமாக 40 இடங்களையும் வென்று, அமையவிருக்கும் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவுக்கு வலிமையான நிலையில் இருந்தால்தான், தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தவும் முடக்கவும் முடியும் என்பதால், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் இருந்தார். இதன் காரணமாகத்தான், கருத்து கணிப்புகள் பாதகமாக இருக்கவே, வழக்கத்துக்கு விரோதமாக ஒருநாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு போயஸ் தோட்டத்தில் எல்லா வேட்பாளர்களையும் அழைத்து அவசரக் கூட்டம் நடத்தினார். அங்கே பணப்பட்டுவாடா திட்டம் போடப்பட்டு, அதனை நடத்தி முடிக்க உதவும் வகையில்தான் ஆணையம் 144 தடை உத்தரவும் பிறப்பித்திருக்கிறது என்று நாம் ஊகிக்கவும் சந்தேகிக்கவும் எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன. பணம் மட்டும்தான் வெற்றிக்கு முழுக்காரணம் என்று இதற்குப் பொருள் அல்ல. தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம், போலீசு ஆகியவற்றின் துணையுடன் ஒரு அப்பட்டமான கிரிமினல் நடவடிக்கை எப்படி அரங்கேறியிருக்கிறது என்பதற்கான விளக்கமே இது.

அதிமுக தேர்தல் வெற்றி 1மற்றபடி அ.தி.மு.க.வுக்கு சுமார் 30 சதவீத வாக்குகள் கொண்ட ஒரு இரட்டை இலை வாக்கு வங்கி இருப்பது உண்மை. பெரிதும் அரசியலற்றதும் அநேகமாக நிலையானதுமான இந்த வாக்கு வங்கியுடன், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களின் ஆதிக்க சாதிகளும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக சேர்ந்திருக்கின்றன. கடும் மின்வெட்டின் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுதொழில்களும் விசைத்தறியும் அழிந்து போயிருக்கும் மேற்கு மாவட்டங்களில், இந்த அழிவு தோற்றுவித்திருக்க வேண்டிய கோபத்தைக் காட்டிலும், சாதி உணர்வுதான் மக்களிடம் முதன்மைப் பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. இப்படிக் கிடைத்த வாக்குகளுக்கு மேல், சுமார் 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கவர்வதில் பணம் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்றே மதிப்பிட முடிகிறது.

வாக்குகளைப் பணத்துக்கு வாங்கியதைச் சொல்லும்போது, விற்கத் தயாராக இருந்த மக்களின் அரசியல் உணர்வு நிலை பற்றியும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கடுமையான மின்வெட்டு, தண்ணீர் பஞ்சம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும், அவையெதுவும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க அரசு தவறியிருக்கிறது என்ற பார்வையே இல்லாமல், வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக வாக்களிப்பது என்ற கண்ணோட்டம்தான் மக்களிடம் ஓங்கியிருந்திருக்கிறது. பல இடங்களில் தமக்குப் பணம் விநியோகமாகவில்லை என்று போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு ஓட்டுக்குப் பணம் வாங்குவது சமூக அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. பணம் வாங்காமல் வாக்களித்தவர்கள், இலவச திட்டங்களால் கவரப்பட்டோ அல்லது இரட்டை இலை விசுவாசத்துக்கோ, அ.தி.மு.க.வின் சாதிய ஓட்டு வங்கியாகவோ வாக்களித்திருக்கிறார்கள்.

”எல்லா கட்சி வேட்பாளர்களும் கோடீசுவரர்கள், அனைவருமே கொள்ளையடிக்கத்தான் தேர்தலில் நிற்கிறார்கள், எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது” என்ற சூழ்நிலையில், யாருக்கு வாக்கு எனத்  தீர்மானிப்பதில் பணம் அறுதி பாத்திரத்தை ஆற்றியிருப்பதும் தெரிகிறது.

அதிமுக தேர்தல் வெற்றி 2இது மட்டுமின்றி, ஜெ.ஆதரவு அலையை உருவாக்குவதில் ஊடகங்கள் ஆற்றியிருக்கும் பங்கும் முக்கியமானது. முன்னர் அழகிரியின் திருமங்கலம் பார்முலா தேசிய அளவில் இழிபுகழ் பெறக் காரணமாக இருந்த ஊடகங்கள் எதுவும், தமிழகத்தின் எல்லா தொகுதிகளையும் திருமங்கலமாக மாற்றியிருக்கும் ஜெ.வை அம்பலப்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல, எந்த அழகிரியின் கிரிமினல் நடவடிக்கைகளைக் காட்டி தி.மு.க.வைச் சாடினார்களோ, அதே அழகிரிக்கு வெட்கமே இல்லாமல் ஊடகங்கள் புகழ் பாடின. ஒரு செய்தி என்ற முறையில் கூட ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விவரங்களையும், நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட சொத்துப் பட்டியலையும், அந்த வழக்கை இழுத்தடிக்க ஜெ. மேற்கொள்ளும் கீழ்த்தரமான தந்திரங்களையும் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் கையாளாகவே நடந்து கொண்ட பிரவீண் குமாரையும், பண விநியோகத்தைப் பொறுப்பேற்று நடத்திய மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசு அதிகாரிகளையும் அம்பலப்படுத்தவில்லை. எனவே ஜெ. வுக்கு எதிரான கருத்து, ஊடகங்கள் மூலம் உருவாவதற்கான வாப்பு கடுகளவும் இல்லை.

மொத்தத்தில் பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனரல்லாத முதலாளிகளின் ஊடகங்கள் ஆகிய அனைத்தும், ”பா.ஜ.க. அல்லது அ.தி.மு.க.வை விட்டால் தமிழகத்துக்கு கதியில்லை” எனுமளவுக்கும், ”ஒழிந்தது திராவிட இயக்கம்” என்று குதூகலிக்கும் அளவுக்கும், பெயரளவிலான நடுநிலை பாசாங்கு கூட இல்லாமலும் நடந்து கொண்டன. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால், வாக்காளர்களின் கருத்தை வடிவமைக்கும் ஊடகங்களுக்கு பணம் வாரியிறைக்கப்பட்டது. மகாராட்டிரத்தில் சாய்நாத் அம்பலப்படுத்திய ”பெய்டு மீடியா”, தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகவே பத்திரிகைகளின் தொழிலாகி விட்டது.

ஊடகங்களின் பார்ப்பன ஆதரவு, ராமதாசு மட்டுமின்றி பாரிவேந்தர், சண்முகம், ஈசுவரன் முதலான சாதிவெறியர்களுக்குக் கிடைத்திருக்கும் புதுவாழ்வு, விஜயகாந்த் கட்சி என்று அழைக்கப்படும் ஆபாசம் ஒரு அரசியல் கட்சியாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, இந்தக் கூட்டத்தின் தோளிலேறி, ஐந்து சதவீத வாக்குளை பா.ஜ.க. தமிழகத்தில் பெற்றிருப்பது – இவை அனைத்தும், இதுவரையில்லாத அளவு மிகவும் ஆபத்தான ஒரு அரசியல் எதிர்காலத்தை தமிழகம் எதிர்நோக்கியிருப்பதையே நமக்குக் காட்டுகின்றன.

அஜித்.
_____________________________

புதிய ஜனநாயகம், ஜூன் 2014

_____________________________