Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கரவுடிப் படை இல்லாத காவிப் படை ஏது ?

ரவுடிப் படை இல்லாத காவிப் படை ஏது ?

-

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கிரிமினல் குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர்களை பாராளுமன்றத்திலிருந்தே விரட்டியடித்து அரசியலைத் தூய்மைப்படுத்துவதே எனது பணியாக இருக்கும். மே 16-ம் தேதிக்குப் பின் அது தான் எனது வேலையாக இருக்கும்” – பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி உதிர்த்த முத்துக்கள் இவை.

மோடியும் கிரிமினல் அரசியலும்
மோடியும் கிரிமினல் அரசியலும் – நன்றி: சதீஷ் ஆச்சார்யா

உச்சஸ்தாயியில் இருந்து கீழே படிப்படியாகத் தானே இறங்க வேண்டும். ஒரேயடியாக பல்டியடித்தால் சுதி தப்பி விடுமல்லவா? அதனால் தான் கடந்த பதினோராம் தேதி பாராளுமன்றத்தில் பேசிய மோடி, “கிரிமினல் குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களின் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து ஓராண்டுக்குள் முடிவு எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் கோரப் போவதாக அறிவித்தார்.

மேலும் பேசிய மோடி, ”வெளியே இருக்கும் பொது மக்களுக்கு பாராளுமன்றத்தில் இருப்பவர்கள்  கிரிமினல்கள் என்பது போல் தோன்றுகிறது. இதை உடனடியாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேட்க நன்றாக இருக்கிறதா?

இந்துத்துவ டவுசர்களின் கருத்துக்கும் பொய் தானே அழகு? அதனால் நாம் தாழம்பூவை மட்டும் பார்த்தால் போதுமா, அது உட்கார்ந்திருக்கும் அந்த ஒய்யாரக் கொண்டையையும் பிரித்துப் பார்த்து விடுவோம்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்துவிவரங்கள் மற்றும் இதர விவரங்களின் அடிப்படையில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 185 எம்.பிகளின் மேல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது பாராளுமன்றத்தில் உள்ள, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, இந்திய தேர்தல் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தின் தவப்புதல்வர்களில் 34 சதவீதம் (மூன்றில் ஒருவர்) பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இது கிரிமினல் வழக்குகளின் கணக்கு மட்டும் தான்; கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியது, போஜரி, 420 உள்ளிட்ட இன்னபிற சிவில் வழக்குகளின் கணக்கு இன்னமும் வெளியாகவில்லை.

இந்த 185 கிரிமினல்களில் 87 பேர் மீது மதக் கலவரங்களைத் தூண்டியதாகவும், வகுப்புகளுக்கிடையே மோதல்களைத் தூண்டியதாகவும் வழக்குகள் உள்ளன. இதில் 49 பேர் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனையைச் சேர்ந்தவர்கள் (பா.ஜ.க 41, சிவசேனா 8).

அந்த கிரிமினல் கும்பலில் இருந்து 13 எம்.பிக்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துள்ளார் மோடி. அதாவது 30 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். அதில் எட்டு அமைச்சர்கள் (18 சதவீதம்) கொலை முயற்சி, ஆள் கடத்தல், சமூக அமைதியைக் குலைத்தல் உள்ளிட்ட தீவிரமான குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்கிறது தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு என்கிற இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு ஒன்று.

மேலும், இவ்வமைப்புகள் நடத்திய ஆய்வின் படி மத்திய அமைச்சர்களின் 91 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேற்படி ஆய்வு வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்த அஃபிடவிட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

கிரிமினல் அமைச்சர்கள்
கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ள அமைச்சர்கள்

ஆய்வை நடத்தியது என்.ஜி.ஓ என்பதால் தங்களது அரிய கண்டுபிடிப்பை அப்படியே ஒரு மகஜரில் எழுதி நேராக கொண்டு போய் மோடியிடமே கொடுத்திருக்கிறார்கள்.  அவர்களிடம் மோடி என்ன சொன்னார் என்பதைப் பற்றி அவர்களும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை, அந்தக் காகிதங்கள் தில்லி சன்சாத் மார்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு குப்பைத் தொட்டி வடிவ கட்டிடத்தின் உள்ளே இருக்கும் எந்தக் கழிப்பறையில் தொங்க விடப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்களும் நம்மிடம் இல்லை. போகட்டும்.

கிரிமினல்கள் ஓட்டுக்கட்சி அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புதிய நிகழ்வோ புதிய இரகசியமோ இல்லை. இந்திய அரசியலை நெருக்கமாக கவனிக்கும் எவருக்கும் அது தெரிந்த உண்மை தான். என்றாலும் முசுலீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒடுக்கி வைக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டிருக்கும் இந்துத்துவத்தின் ஆன்மாவையும், கார்ப்பரேட் உலகத்திற்கு செருப்பாக இருக்க உறுதியெடுத்த உடலையும் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா அரசின் அதிகார அடுக்குகளில் இத்தனை கிரிமினல்கள் நிறைந்திருப்பது தான் நமது கவனத்திற்குரியது.

தேர்தலுக்கு முன்பிருந்தே மோடி கார்ப்பரேட்டுகளின் விருப்பத்திற்குரியவராக இருந்து வந்தவர். மோடியின் வெற்றியைத் தொடர்ந்து மும்பை தலால் வீதியில் பற்றிக் கொண்ட உற்சாகத்தின் அளவு இருபத்தையாயிரம் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். பொதுமக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்திக்க தயங்கி பொதுத்துறை மற்றும் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கான கதை மெல்லத் திறந்து விட்ட காங்கிரசை விட எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாத ஈவிரக்கமற்ற கிரிமினல் கும்பலான பாரதிய ஜனதாவே கார்ப்பரேட்டுகளின் விருப்பத் தேர்வாக இருந்தது.

அந்தவகையில் மதம், அரசியல், பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிரிமினல்கள் தேவைப்படுகிறார்கள். அதைத்தான் மேற்கண்ட புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த கிரிமினல்களை வீழ்த்த போலி ஜனநாயகம் பயன்படாது என்பதை உண்மையான ஜனநாயகத்தை தேடிவருவோர் புரிந்து கொள்ளட்டும்.

மேலும் படிக்க