Saturday, May 10, 2025
முகப்புசெய்திஇந்தி திணிப்பை எதிர்த்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை எதிர்த்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

-

  • படமெடுக்கிறது பார்பன பாசிச நச்சுப்பாம்பு
  • மோடி அரசின் இந்தி திணிப்பு சதியை முறியடிப்போம்!
  • இந்தியின் அலுவல் மொழித் தகுதியை நீக்கு
  • செத்த மொழி சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையிலிருந்து தூக்கு
  • அனைத்து தேசிய இன மொழிகளையும் ஆட்சி மொழியாக்கு

தமிழ் மக்களே,

  • பார்ப்பன பாசிச திமிரை ஒடுக்குவோம்!
  • இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியத்தை முறியடிப்போம்!

என்ற மைய முழக்கத்தின் கீழ் மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியோருடன் இணைந்து 24.06.2014 அன்று காலை இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் சரவணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நடத்தினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

மோடி அரசின் ஒரு பாசிச நடவடிக்கையாக அமைந்துள்ளது இந்தி திணிப்பு. கடந்த மாதம் 27-ம் தேதி அறிக்கையில், தகவல் தொடர்புகளை இனி இந்தியில் தான் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. எதிர்ப்புகள் வந்தபின் ராஜ்நாத்சிங் இந்தி பேசும் மாநிலங்களில்தான் இது பொருந்தும் என கூறினார்.

முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்கள் தான் செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்கின்றன. இன்னும் வெகு விரைவாக எல்லா தகவல் தொடர்புகளும் இந்தியில் மாறிவிடும்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தி பேசுவதில்லை. இந்தி இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் மொழி இல்லை. 80% பேர் மற்ற மொழிகளையே பயன்படுத்துகின்றனர். பொது மொழி கோட்பாடு என்பது பாசிசமே.

இனி பாடதிட்டங்களில் வேதங்களையும், உபநிடதங்களையும், மனுதர்மமும் சேர்க்க போவதாக கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார். நம் நாட்டிலேயே 25% பேர் கல்வி அறிவில்லாதவர்கள். ஆனால் அதற்கான திட்டம் எதுவும் இல்லாமல் உள்ளனர்.

14,000 பேர் சமஸ்கிருதம் பேசுவதாக கூறுகின்றனர். பல மொழிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

‘இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் மேம்படுத்த வேண்டும் ‘ என்று 1963-ம் ஆண்டு மத்திய சட்டம் உள்ளதை தூக்கி எறிந்து விட்டனர்.

சமஸ்கிருதத்தின் ஆளுமை இல்லாமல் தன்னுடைய தனித்தன்மையுடன் இருப்பது தமிழ்மொழி மட்டுமே. அதற்கு காரணம் இந்தியை எதிர்த்து நடத்திய கடுமையான போராட்டமே. நாமும் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எடுப்பதன் மூலம் இப்பாசிச நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரலாம்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ஓவியா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.