privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்தியாகி லீலாதரன் துரோகி வாஜ்பாய்

தியாகி லீலாதரன் துரோகி வாஜ்பாய்

-

பூட்ஸ் நக்கித்துவம் என்றால் என்ன?

அது 1942-ம் வருடம். இந்தியாவெங்கும் காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் வீச்சாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தேச விடுதலைப் போராட்டத்தின் குவிமுனையாக அன்று காங்கிரசு தான் நம்ப வைக்கப்பட்டது. இந்தியர்களின் விடுதலை உணர்ச்சியை நிறுவனமயமாக்கி மட்டுப்படுத்த வேண்டும் என ஆங்கிலேயர்களது ஆசியுடன் துவங்கப்பட்ட காங்கிரசை, காந்தி வழிநடத்திக் கொண்டிருந்தார். கீழ்மட்டத்தில் வெடிக்கத் தயாராக இருந்த மக்களின் கோபாவேசத்தை தணிக்க காங்கிரசு அவ்வப்போது அறிவித்த இயக்கங்களால் முடியவில்லை.

லீலாதரன்
லீலாதரன் 1998-ல்

ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், சத்தியாகிரகங்கள் என்று தொடர்ந்து காந்தி அறிவித்து வந்த போராட்டங்கள் அனைத்தும் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பின் விளைவாக தொடர்ந்து காங்கிரசு தலைமையின் கையை மீறிச் சென்று கொண்டே இருந்தன. 42-ம் வருடம் காங்கிரசு “வெள்ளையனே வெளியேறு இயக்க”த்தை அறிவித்திருந்தது – மக்கள் அந்த அழைப்பை உளமாற நம்பினர். காந்தியே எதிர்பாராத அளவுக்கு மக்களின் எழுச்சி வெடித்துக் கிளம்பியது. இரண்டாம் உலகப்போரில் களைத்திருந்த ஆங்கிலேயர் அரசாங்கம் மக்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

42-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27-ம் நாள். வட இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் ரக்சாபந்தன் விழாவிற்கு மறு நாள் அது. அன்று தான் மக்கள் இறந்து போன முன்னோர்களை நினைவூட்டும் விதமாக அனுசரிக்கும் ‘புஜாரியா கா மேளா’ என்கிற விழாவும் நடைபெறும். ஆக்ராவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்தேஷ்வர் கிராமத்தில் புஜாரியா கா மேளா நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று வீரம் சொரிந்த தங்கள் முன்னோர்களின் கதைகளை ‘ஆலா’ என்கிற கதைபாடல்களாக பாடிக் கொண்டிருந்தனர்.

வழக்கமான அந்த கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறிய இளைஞர்களின் கூட்டம் ஒன்று, லீலாதரன் என்ற இளைஞனின் தலைமையில் மேடையைக் கைப்பற்றுகிறது. அவர்கள் கையில் காந்தியின் பிரகடனம் இருக்கிறது. “இன்னும் ஏன் நமது பழைய பெருமைகளைப் பாடிக் கொண்டிருக்க வேண்டும். நாம் இந்த தேசத்தின் இன்றைய நிலைமையைப் பாடுவோம்” என்று முழங்கும் அவர்கள் தேச விடுதலைப் பாடல்களைப் பாடுகிறார்கள். கூட்டம் ஆமோதித்து அவர்களோடு சேர்ந்து கொள்கிறது.

பத்தேஷ்வர் வனத்துறை அலுலவகம்
பத்தேஷ்வர் வனத்துறை அலுவலகம்

மெல்ல மெல்ல அந்தக் கூட்டத்தை தன்வசப்படுத்தும் லீலாதரன், அடுத்த கட்டமாக அதிலிருந்த சுமார் 200 பேரை அருகில் இருந்த வனத்துறை அலுவலக கட்டிடத்திற்கு வழிநடத்திச் செல்கிறான். அது அந்தப் பகுதியில் அரசின் இருப்புக்குச் சான்றளித்துக் கொண்டிருந்த ஒரே அரசாங்க கட்டிடமாகும். அந்தக் கட்டிடத்தின் உச்சியில் மூவர்ணக் கொடியைப் பறக்க விடுவதோடு அதை வெள்ளையர் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு செய்வதும் தான் லீலாதரனின் நோக்கம்.

கட்டிடத்தின் உச்சியில் ஏற படிக்கட்டுகள் இல்லை. ஆனால் மக்களின் விடுதலை உணர்ச்சிக்கு அது தடை போடுவதாகவும் இல்லை. லீலாதரனின் சகாக்கள் ஒருவர் தோள் மீது ஒருவராக ஏறி கட்டிடத்தின் கூரையை அடைகிறார்கள். மூவர்ணக் கொடி பறக்க விடப்படுகிறது. தேச விடுதலையின் ஒரு துளியை ருசித்துப் பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் எல்லோரும் ஷியாம்லால் பிரசாத் என்கிற கவிஞனின் ’ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா’ (உயரே பறக்கிறது எங்கள் கொடி) என்ற பாடலை உணர்ச்சிகரமாகப் பாடுகிறார்கள்.

தகவல் கிடைத்த உடனேயே வெள்ளை அரசாங்கத்தின் காவல் துறை நடவடிக்கையில் இறங்குகிறது. கைது நடவடிக்கைகள் துவங்குகின்றன. லீலாதரன் தலைமறைவாகிறான். கூட்டத்தில் இருந்த 37 பேர் மேல் வழக்குகள் பதிவாகிறது – அன்றைக்கே 11 பேர் கைதாகிறார்கள். ஆக்ராவுக்குத் தப்பிச் சென்ற லீலாதரன் தன்னைச் சுற்றிலும் போலீசின் கண்ணி இறுகுவதை உணர்கிறான்.

ஆக்ராவில் லீலாதரன் எதிர்பார்த்துச் சென்ற உதவி கிடைக்கவில்லை. தப்பிக்க வேறு வழியே இல்லை என்பதை அறிந்த லீலாதரன் ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பகிரங்கமாக விடுதலை முழக்கங்களை எழுப்பியவாறே தடைசெய்ப்பட்ட துண்டறிக்கைகளை விநியோகிக்கிறான் – போலீசாரால் கைது செய்யப்படுகிறான்.

அன்றைக்கு பத்தேஷ்வரில் கைதான இளைஞர்களில் இரண்டு பேர் குவாலியர் அரசின் கல்வித்துறை கண்காணிப்பாளரின் புத்திரர்கள். அவர்கள் லீலாதரனின் மேல் அரசாங்கம் வைத்த குற்றச்சாட்டை வலுப்படுத்தும் விதமாக துரோகத்தனமான ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்கிறார்கள். அந்தச் சகோதரர்களில் இளையவர் பின்னாட்களில் இந்திய அரசியலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமையாக வளர்ந்தார். அவரது வாக்குமூலம் தான் நமது விசேட கவனத்திற்குரியது.

வாஜ்பாயி வாக்குமூலம்
வாஜ்பாயி வாக்குமூலம்

கிரிமினல் நடைமுறை வழிகாட்டுதல் விதி 164-ன் கீழ் (CrPC section 164) இரண்டாம் நிலை மாஜிஸ்டிரேட்டின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட அந்த வாக்குமூலத்தின் தமிழ் வடிவம் கீழே –

தந்தை பெயர் : கவுரி ஷங்கர்
எனது சாதி : பிராமணன்
வயது – 20
தொழில் – குவாலியர் கல்லூரியின் மாணவர்
முகவரி – பத்தேஸ்வர், பி.எஸ். பாஹ், ஆக்ரா மாவட்டம்.

நீதிமன்றத்தால் “நீ தீவைப்பு மற்றும் பாதிப்புண்டாக்கும் செயல் ஏதேனும் செய்தாயா? இது குறித்து நீ என்ன சொல்ல விழைகிறாய்?” என்ற கேள்விக்கு பதிலாக கீழ் கண்ட வாக்குமூலத்தை பதிவு செய்கிறார் அந்தச் சகோதரர்களில் இளையவர்:

”ஆகஸ்டு 27, 1942 அன்றைக்கு பத்தேஸ்வர் சந்தையில் ஆலா பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது சுமாராக மதியம் 2 மணி. காக்கா எனப்படும் லீலாதரும், மாஹானும் வந்து ஆலா பாடிக் கொண்டிருந்த மக்களிடையே உரையாற்றினர். மக்களை வனச் சட்டங்களை மீறுமாறு தூண்டினர். இருநூறு பேர் வன அலுவலகத்திற்கு கூட்டமாகச் சென்றனர். நானும் எனது சகோதரனும் அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்தோம். கூட்டம் பத்தேஸ்வர் வன அலுவலகத்தை அடைந்தது. நானும் எனது சகோதரனும் கீழேயே நின்று கொண்டோம். மற்றவர்கள் மேலே சென்றனர். அங்கே இருந்தவர்களில் காக்கா மற்றும் மாஹானின் பெயர்களைத் தவிர பிறருடைய பெயர்கள் எனக்குத் தெரியாது”

”செங்கற்கள் கீழே விழுவது தெரிந்தது. யார் சுவற்றை இடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் செங்கற்கள் சுவறில் இருந்து உதிர்ந்து விழுந்தது நன்றாகத் தெரியும்”

”நானும் எனது சகோதரனும் மாய்புராவிற்கு சென்றோம். கூட்டம் எங்கள் பின்னால் வந்தது. நான் மேலே குறிப்பிட்ட நபர்கள் அந்த ஆட்டு மந்தைக் கூட்டத்தை வழிநடத்தினர். கூட்டம் பிச்கோலியை நோக்கி நகர்ந்தது. பத்து அல்லது பன்னிரண்டு பேர் வன அலுவலகத்தில் இருந்தனர். நான் சுமார் 100 யார்டுகள் தொலைவில் நின்றேன். நான் கட்டிடத்தை இடிக்க எந்த உதவியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நாங்கள் திரும்பி விட்டோம்”

வாக்குமூலத்தைப் பதிவு செய்து அதில் கவுரி சங்கரின் இளைய புதல்வரிடம் ஒப்பம் பெற்றுக் கொள்ளும் மாஜிஸ்டிரேட், அதன் கீழ் தனது குறிப்பையும் பதிவு செய்கிறார். அவ்வாறு வாக்குமூல பத்திரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் குறிப்பின் தமிழ் சாராம்சம் கீழே :

”நான் கவுரி சங்கரின் புதல்வரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லையென்பதையும், கொடுக்கப்படும் வாக்குமூலம் எதுவும் அவருக்கே எதிராக கூட பயன்படுத்தப்படலாம் என்பதையும் தெரிவித்து விட்டேன். இந்த வாக்குமூலம் அவரால் சொந்த முறையில் அளிக்கப்பட்டது என்று நம்புகிறேன். எனது முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த வாக்குமூலத்தை அவரிடம் வாசித்துக் காட்டி அதில் உள்ளவை சரியானது தான் என்று அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது”

மேலே குறிப்பிட்டதைப் போல் விடுதலைப் போராட்ட இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த கவுரி சங்கரின் இளைய புத்திரன் பின்னாட்களில் ஓட்டுக்கட்சி அரசியலில் இணைந்து குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராக வளர்ந்தார். அன்றைக்கு அவரால் காட்டிக் கொடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடுமையான சிறை தண்டனை பெற்ற மகத்தான விடுதலை வீரனான லீலாதரனோ சுதந்திர இந்தியாவில் எந்த அடையாளங்களும் இன்றி கரைந்து காணாமல் போனான்.

வாஜ்பாயி - புஷ்
அமெரிக்க அதிபரின் அலுவலகத்தில் வாஜ்பாயி – புஷ் : ஏகாதிபத்திய சேவையில் இந்துத்துவம்.

ஆம், அன்றைக்கு லீலாதரனையும் விடுதலை இயக்கத்தையும் காட்டிக் கொடுத்த துரோகி பின்னாட்களில் பாரதப் பிரதமரானார். அந்த எட்டப்பனின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதற்கு என்னாலான உதவி செய்தேன், முடிந்தால் தண்டித்துப் பார் என்று ஏன் இந்த கவிஞர் ஒரு சவுடால் கவிதையாவது படிக்க முடியவில்லை? ஒருக்கால் பின்னாளில் பிரதமர் ஆவோம் என்று தெரிந்திருந்தால் அப்படி கூறியிருப்பார் என்று நம்புகிறீர்களா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இந்துமதவெறியரின் தோற்றமே ஏகாதிபத்திய சேவையின் பொருட்டுதான்.

துரோகி பட்டத்தின் பெருமைக்குரிய சொந்தக்காரர் வாஜ்பாயி மட்டுமல்ல. சொல்லப் போனால், ஒரு மாபெரும் துரோகப் பட்டாளத்தையே அரசியல் ரீதியில்  உருவாக்கும் வேலையில் அன்றைய இந்துத்துவ சக்திகள் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இன்றைக்கு தேசம் தேசபக்தி என்றெல்லாம் வண்ண வண்ணமாக கதை விடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய யோக்கியதை என்ன?

”பிரிட்டிஷாரை எதிர்ப்பது தேசபக்தி என்றும் தேசியம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தப் பிற்போக்குத்தனமான கருத்து தேச விடுதலை இயக்கத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும், மக்களின் மீதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது” – ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கரின் ஞான கங்கையில் இருந்து.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க கூடாது என்பது மட்டுமல்ல, இந்தியர்கள் அதற்கு செருப்பாகவும் உழைக்க வேண்டும் என்பது தான் இந்துத்துவ இயக்கங்களின் கொள்கை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து நாடெங்கும் அரசு வேலைகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் வேலைகளைத் துறந்து வெள்ளை அரசை எதிர்த்து களம் காணப் புறப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், இந்துக்கள் யாரும் அரசுப் பணிகளில் இருந்து விலக கூடாது என்று தெளிவாக சுற்றறிக்கை அனுப்புகிறார் சாவர்கர் (Facism of Sangh parivar by Ram punyani / Refer page # 43). அதுமட்டுமின்றி, ஆங்கிலேயர் இராணுவ சேவையில் இந்துக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வலியுறுத்தி நாடெங்கும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார் (மேற்படி நூல்)

வாஜ்பாயி
விடுதலை போராட்டத்தின் போது அஞ்சி நடுங்கி சரணடைந்த வாஜ்பாயி பிற்காலத்தில் தேசபக்தராக சித்தரிக்கப்பட்டார்.

அன்றைக்கு வெள்ளை ஏகாதிபத்தியம் 1917 சோவியத் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உலகெங்கும் இருந்த தனது காலனிய நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் ஒரு புதிய பரிமாணத்தில் உத்வேகத்தோடு நடப்பதைக் கண்டு அஞ்சியது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்த பிற்போக்கு சக்திகளை அந்தந்த நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் தலைமையில் பின்வாசல் வழியாக அமர்த்தி விடுதலை இயக்கங்களை ஊழல்படுத்தி நிறுவனமயமாக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விரும்பியது. ஏனெனில், ஒருவேளை மக்களின் அதிருப்தி அதிகரித்து தான் நாட்டை காலி செய்து விட்டுக் கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், தனது பொருளாதார நலன்களையும் சுரண்டலையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இந்தக் கையாட்கள் தனக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று ஏகாதிபத்தியம் எதிர்பார்த்தது.

அந்த வகையில் இந்தியர்களின் எதிர்ப்புணர்வை காங்கிரசின் ரூபத்தில் நிறுவனமயப்படுத்தியிருந்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம். மேல்மட்ட காங்கிரசு பெருச்சாளிகள் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாகவே இருந்தாலும், அவர்களது வெற்றுச் சவடால் விடுதலை கோஷங்கள் கீழ்மட்ட தொண்டர்களையும் மக்களையும் பற்றியது உண்மையே. எனவே காங்கிரசை மட்டும் நம்பியிராமல் தொடர்ந்து இந்தியாவை அரசியல் ரீதியில் பிளவு படுத்தி பிரித்தாள இந்து – முசுலீம் பிரிவினையைக் கையிலெடுத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.

காங்கிரசின் இந்துத்துவ சார்பை வைத்து ஒருபக்கம் இசுலாமியர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவு படுத்த முசுலீம் லீகையும், அவர்களுக்கு எதிராக நிறுத்த நேரடியான இந்துத்துவவாதிகளையும் தனது கைக்கருவிகளாக பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேயர் அரசு. எனவே தான், பொதுவுடைமை இயக்கத்தை தடை செய்து அதன் தலைமையை வேட்டையாடிய வெள்ளையர் அரசாங்கம் இந்துத்துவ கைக்கூலிகளை செயல்பட அனுமதித்தது.  ஆக, ஏகாதிபத்திய சேவையும், சொந்த நாட்டு மக்களையும், தேசத்தையும் காட்டிக் கொடுப்பது தான் இந்துத்துவ இயக்கங்களின் அவதார நோக்கம்.

1942-ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வெள்ளையர்களுக்கு தங்கள் சங்கத்தின் மேல் லேசான மனவருத்தம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. 1943-ல், சங்க சுயம்சேவக்குகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும் கோல்வால்கர், வெள்ளை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்பதால் தமது தொண்டர்கள் சீருடையில் ஷாகா பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் (reference from the Article written by AG Noorani, Frontline December 1, 1995).

பத்தேஷ்வரில் போலீஸ் மக்களை தாக்கிய இடம்
பத்தேஷ்வரில் போலீஸ் மக்களை தாக்கிய இடம்

வாஜ்பாயி 1939 வாக்கில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1942-ல் ஆர்.எஸ்.எஸ்சின் விசுவாசமான உறுப்பினராகவும், அரசியல் உணர்வு கொண்டவராகவும் வளர்ந்திருந்தார். எனவே ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கையின்படியே, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தனது பங்களிப்பை மறுத்ததோடு (சும்மா வேடிக்கை பார்க்கத்தான் போனேன்), போராட்டத்தை முன்னணியில் நின்று இயக்கிய தேசபக்தர்களையும் பெயர் சொல்லி குறிப்பிட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக நேரடியாக அழைக்கப்படாததால், வாஜ்பாயியை சட்டபூர்வமாக தேச துரோகி என்று அழைக்க முடியாதுதான். ஆனால், அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு அவரது வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட விபரங்களை ஒட்டியே இருந்ததோடு, அவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட லீலாதருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. எனவே உணர்வுரீதியாக அவர் ஒரு தேசதுரோகியாகவே வரலாற்றில் பதிவாகிறார்.

இதே வாஜ்பாயியை 1997-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திய போது, அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர் என்றும் தியாக போராட்டத்துக்காக சிறைக்கு போனவர் என்றும் அவரது தியாக போராட்டத்தின் களம் பத்தேஷ்வர் என்றும்  கற்பனை வரலாற்றை சங்க பரிவார அமைப்புகள் பரப்ப ஆரம்பித்தன.  1997-ம் ஆண்டு வாஜ்பாயியின் வரலாற்றுக் குறிப்பில் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்கு போனவர் என்பது சேர்க்கப்பட்டிருந்தது. பத்தேஷ்வரில் நடந்த சம்பவங்களை மயிர் கூச்செரிய விவரிக்கும் வாஜ்பாயியின் கட்டுரை இந்தி நாளிதழ்களில் வெளியானது.

1998-ம் ஆண்டு ஃபிரண்ட்லைன் இதழ் இந்த விவகாரத்தைக் கிளறி, லீலாதரனைக் கண்டுபிடித்து பேட்டியெடுத்தது. அதைத் தவிர்த்து லீலாதரனைக் குறித்த வேறு எந்த பதிவுகளும் இல்லை. அன்றைக்குப் பதினெட்டே வயதான லீலாதரனுக்கு இப்போது உயிருடன் இருந்தால் தொண்ணூறு வயதாகியிருக்க வேண்டும் – இருக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. தொண்டைமான்களின் ‘சுதந்திர’ இந்தியாவில் கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு என்னவாயிற்றோ அதுவே கூட லீலாதரனுக்கும் ஆகியிருக்கலாம்.

ஃபிரண்ட்லைன் ஆய்வு செய்து கண்டறிந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் போலியானவை என்று மறுத்தது வாஜ்பாயி தரப்பு. மறுக்க முடியாத கட்டத்துக்கு வந்ததும், வாஜ்பாயியே தன்னுடைய வாக்குமூலத்தை உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார். குவாலியரில் தன் மகன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் அரசு ஊழியரான அவரது தந்தை தன்னை பத்தேஷ்வருக்கு அனுப்பியதாக குறிப்பிட்டு தான் யாருக்கும் எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை என்று சப்பை கட்டுகிறார். அதாவது, ஆங்கிலேய அரசு ஊழியரான தனது தந்தைக்கு பணிந்து வெளியூர் சென்றதோடு அவருக்கு விசுவாசமாக நடந்தும் கொண்டிருக்கிறார். ஆனால், தான் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், போராட்ட தலைவர்களை காட்டிக் கொடுத்தும், போராட்ட நிகழ்வுகளை விவரித்தும் தான் கொடுத்த வாக்குமூலத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அத்தோடு வாஜ்பாயிக்கு சுதந்திர போராட்ட வீரர் பட்டம் கட்ட முயன்ற சங்க பரிவாரத்தின் முயற்சி பல்லிளித்தது.

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும், பிரதமரான பிறகும் அவர் சிறுவயதில் இந்திய இராணுவ வீரர்களுக்கு டீ கொடுத்தது முதல் அவரது வீர சாகசங்கள், நற்குணங்கள் பற்றிய கதைகள் ஊடகங்களில் அணிவகுக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக, விசாரித்து பார்த்தால் வாஜ்பாயியின் தேசபக்தி போல மோடியின் புனிதங்களும் பல்லிளித்து விடும்.

ஆர்.எஸ்.எஸ்சின் பிறப்பிலிருந்து கடைப்பிடிக்கும் ஏகாதிபத்திய அடிவருடி கொள்கைகளின் தொடர்ச்சியாகத் தான் பொதுத்துறை நிறுவனங்களை ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கவென்றே அருண் ஷோரியை அன்றைக்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக்கியதையும், இராணுவ தளவாட உற்பத்தியில் 100% அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு அனுமதியளிப்பதை உள்ளிட்டு பல்வேறு ஏகாதிபத்திய சேவைகளை செய்யத் துடிக்கும் இன்றைய மோடி அரசாங்கத்தின் செயல்பாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பூட்ஸ்நக்கித்துவம் பற்றிய தத்துவ விளக்கத்தை (theoritical) இதுவரை பார்த்தீர்கள் – செயல்முறை விளக்கத்தை (practical) இனிவரும் ஐந்தாண்டுகளுக்குப் பார்க்கப் போகிறீர்கள்.

–    தமிழரசன்

  1. தியாகிக்கும் துரோகிக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள்
    இல்லை சிந்திக்க தெரியாத மாக்கள்

  2. தந்தை பெயர் கவுரிசங்கர்.எனது சாதி பிராமணன்.பிராமணனும்,காட்டிகொடுத்தலும் ஒரு இயற்கையான ஒற்றுமை அல்ல.பிராமணீயம் கடைபிடித்து வரும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று.இந்த துரோகிக்கு பாரதரத்னா விருது பொருத்தமாக இருக்கும்.அதுவும் மோடியின் ஆட்சியில் வழங்குவது இன்னும் பொருத்தமாக இருக்கும் .

  3. இந்து, இந்தி, இந்திய தேசியம் என்று பேசும் சங்கபரிவாரங்களின் யோகியதையையும்,
    சம கால துரோகிகளை மட்டுமல்ல கடந்து கால துரோகிகளையும் நாம் இனம் காணவேண்டும் என்பதையும் இந்த பதிவு உணர்த்துகிறது.
    தியாகி லீலாதரனுக்கு புரட்சிகர வணக்கங்கள்!

  4. உண்மை தியாகியை வெளிபடுத்திய கட்டுரைக்கு நன்றி திரு. தமிழரசன்

  5. ஏங்க…. மோடிய வையிரதுக்கு இவ்ளோ பெரிய கட்டுரை தேவையாங்க…

    யாரோ திருடனா இருந்தவன் தான் பின்னாளில் திருந்தி ராமயணத்த எழுதுனானாம்.
    தப்பு பன்னுன ஒருத்தன் பின்னாடி திருந்தக்கூடாதா?

    அப்டி பாத்தா நீங்க கூடத்தான் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்துக்காக கட்சி ஆரம்பிச்சு இப்போ தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும் பாடுபடுறீங்க.

    இதையெல்லாம் நாங்க குத்தம் கண்டுபிடுச்சு எட்டுகால செய்தியிலா எழுதுனோம்.

    பர்ஸ்ட் நம்ம டவுசரு ஓட்டைய அடைங்க…

  6. 1942 உங்க கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னு கொஞ்சம் விலாவரியா சொன்னா நல்லா இருக்கும். 1942ல் சோவித் அதிபர் ஸ்டாலின் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் போர் உடன்படிக்கை செய்து கொண்டதால் இந்த இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவின் சுதந்திரத்தையே எதிர்த்து பெரிய போரட்டத்தையே ஆரம்பிச்சிடானுங்க, இப்போ சொல்லுங்கண்னா யாரு பெரிய துரோகின்னு…. கேக்குறவன் கேனையன இருந்தா எருமைமாடு ஏரியோபிளேனே ஒட்டுசின்னு கத விடுவிங்கலேய்….

  7. டவுசர்களின் டவுசர் கிழிந்து போச்சு….. கட்டுரைக்கு நன்றி. இந்திய விவகாரத்தில் தலையிட “அண்டை நாட்டு டவுசர்” விரைந்து வரும்…. 🙂

    • //வாஜ்பாயை திருடன் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி//

      ரொம்ப நன்றிங்கன்னா…

      பர்ஸ்ட் லைனுக்கு நன்றி தெரிவிச்சுட்டீங்க.

      //அப்டி பாத்தா நீங்க கூடத்தான் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்துக்காக கட்சி ஆரம்பிச்சு இப்போ தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும் பாடுபடுறீங்க.//

      இந்த லைனுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கல.
      அப்டினா உங்க போராட்ட பாதை மாறிடிச்சுன ஒத்துக்கறீங்களா??

  8. திருடனாக இருந்து திருந்தியவராக வாஜ்பாயை எப்படி சொல்லமுடியும்? அமெரிக்க என்ரான் கம்பெனிக்கு 13நாட்களே பிரதமராக இருந்த போது முறைகேடாக அனுமதி கொடுத்த உத்தமர்.அதே போல் இந்து தீவிரவாதியான பால்தாக்கரே சரத்பவார் காலத்தில் என்ரானுடன் ஒப்பந்தம் போட்டபோது அதை கிழித்து அரபிக்கடலில் வீசவேண்டும் என்று வசனம் பேசினார்.சிவசேனா ஆட்சியின் போது மகாராஸ்ட்ராவின் தபோல் பவர் பிளாண்ட் மின் உற்பத்தியை பெருக்கி கொள்ள என்ரான் நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டது.அதற்கு முன் என்ரான் கம்பெனியின் தலைவர் பால்தாக்கரேயை மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தது குறிப்பிட தக்கது.வாஜ்பாய் தமது அமைச்சரவை பிழைக்குமா என நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருந்த போது அவசர அவசரமாக என்ரான் கம்பெனிக்கு அனுமதி கொடுத்த மர்மம் பிரமோத் மகாஜனின் மரணம் பற்றிய மர்மத்தோடு கலந்து மறைந்து போய்விட்டது.ஆண்டிமுத்து ராசாவாக இருந்தால் உள்ளே தள்ளி விசாரிக்கலாம்.ஆரிய சமாஜத்தை யாரால் விசாரிக்கமுடியும்?

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க