மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5, ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
தொடர்பு : 9443260164
வழக்கறிஞர். சி.ராஜு, எம்.ஏ., எம்.எல்., மாநில ஒருங்கிணைப்பாளர்,
வழக்கறிஞர். இரா.ஜானகிராமன், பி.எஸ்ஸி., பி.எல்., மாவட்ட செயலாளர், தருமபுரி.
தொடர்பு 7418534695
தேதி : 30-6-2014
பத்திரிக்கைச் செய்தி
தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியிலிருந்து 7 பேரை தருமபுரி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஜார்கண்டிலுள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், பைப் வெடிகுண்டுகள் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்துள்ளனர். இப்படி ஒரு அபாண்டமான, அப்பட்டமான பொய்வழக்கு போட்டு தலித் மக்களை ஒடுக்கும் போலீசை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டுமெனக் கோருவதுடன், உண்மையில் நடந்தது என்ன என்பதை தமிழக மக்களுக்கு அறியத் தருகிறோம்.

தருமபுரி நத்தம் காலனியில் வரும் 4-7-2014 அன்று சாதிக் கொடுமைக்கு பலியான இளவரசன் நினைவுநாளில் இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி கேட்டு ஊர்த்தலைவர்கள் மனு கொடுத்திருந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் தருமபுரி வட்டம் முழுவதும் 144 தடையுத்திரவு பிறப்பித்தது. நத்தம் காலனி ஊர் தலைவர்கள் கொடுத்த மனுவிற்கு பதிலை எழுத்து பூர்வமாக பெற்று, அனுமதி மறுக்கப்பட்டால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு இளவரசன் இரங்கல் கூட்டத்தை அமைதியாக நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கு போலீசார் கொடுத்த பரிசுதான் வெடிகுண்டு வழக்கு.
மதிகோன் பாளையம் துணை ஆய்வாளர் சதாசிவம் என்பவர் கொடுத்த புகாரில், குற்றஎண். 122/2014 இ.த.ச.பிரிவுகள் 120B,153A,153AA,U/s 25 1 (a),27 Indian arms Act, Sec4,5, of Explosive substantive act 1908 ஆகிய பிரிவுகளில் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் தற்போது கைது செய்ய பட்டவர்கள்
- சந்தோஷ்
- அதியமான்
- சங்கர்
- சக்தி
- துரை
- அசோக்
- திருப்பதி
ஆகியோர். மற்றவர்கள் தனிப்படை அமைத்து தேடபட்டு வருகிறார்கள். இரண்டு வீச்சரிவாள், இரண்டு நாட்டு துப்பாக்கி, மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகியவற்றை இவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக போலீசார் ஜோடித்துள்ளனர்.
இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு நத்தம் காலனி தீ வைப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமான மதியழகன் என்பவரை தீர்த்து கட்ட இவர்கள் சதியாலோசனை செய்து அதற்காக அரக்கோணம்,சென்னை ஆகிய ஊர்களில் துடி என்ற அமைப்பின் மூலம் நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய இடங்களில் இருந்து 50 பேர் ஆயுத பயிற்சி, தற்காப்பு பயிற்சி எடுத்துள்ளதாகவும் இதற்காக காளிதாஸ், சந்திரா ஆகியோர் நத்தம் காலனிக்கு அவ்வப்போது வருவார்கள் என ஒப்புதல் வாக்கு மூலமொன்றை எழுதிக் கொண்டு வழக்கை போலீசு வழக்கம் போல் பதிவு செய்துள்ளது.
இளவரசன் நினைவு இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு நத்தம் காலனி சார்பாக போலீசிடம் விண்ணப்பம் கொடுத்த பிறகு, கடந்த 27-6-2014 அன்று மதியம் சுமார் 2 மணிக்கு கிருஷ்ணாபுரம் காவல் நிலைய தனிபிரிவு காவலர் (SBCID) சிங்காரம், நத்தம் காலனியிலிருந்து சந்தோஷ், அதியமான், சங்கர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு நயவஞ்சமாக பேசி அழைத்து சென்றுள்ளார். மனு தொடர்பாக பேச வேண்டியிருப்பதாக கூறி அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார் சிங்காரம். போனவர்கள் வரவில்லை. எங்கு வைத்திருக்கிறார்கள் எதற்காக அழைத்து செல்லப்பட்டார்கள் என்ற விபரம் ஊர் முக்கியஸ்தர்கள், மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாது.
அன்று பென்னாகரத்தில் நடந்த விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர திருமணத்திற்கு (மணமகன் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர், பெண் தலித் வகுப்பை சேர்ந்தவர்) ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். நத்தம் காலனி ஊர்தலைவர் சக்தி மற்றும் சிலரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் வழக்கறிஞர் ராஜுவிடம் (என்னிடம்) நடந்த விபரத்தை சொல்லி முறையிட்டார்கள். நான் உடனே எஸ்பி. அஸ்ராகர்க்கிடம் செல்பேசியில் பேசியபோது ”நீங்க பேசறது சரியா கேக்கல, செல்ல சரி பண்ணுங்க” என்று கூறி அவர் என்னிடம் பேசுவதை சாதுரியமாக தவிர்த்தார். பிறகு கிருஷ்ணாபுரம் காவல் ஆய்வாளர் காந்தியிடம் பேசினேன். அவர் ”சிங்காரம் என்பவர் எங்கள் காவல்நிலையம்தான், நாங்கள் யாரையும் கைது செய்ய வில்லை, அழைத்து வரவுமில்லை, ஒருவேளை க்யூ பிரிவு போலீசார் யாரும் கைது செய்தார்களா என நான் விசாரித்து சொல்கிறேன்” என்று கூறி வைத்து விட்டார்.
ஊர் தலைவர் சக்தியிடம், “இப்போது காவல் நிலையம் செல்ல வேண்டாம். இரவு 10-30 ஆகிவிட்டது. நாளை காலை நேராக சென்று எஸ்பியிடம் பேசலாம்” என்று கூறிவிட்டு நான் புறப்பட்டேன்.
இரவு 1 மணி சுமார் தனிப்பிரிவு காவலர் சிங்காரம் ஊர் தலைவர்களிடம் ”மதியம் அழைத்து வந்த மூன்று பேரையும் விசாரித்து விட்டோம். காவல் நிலையத்திற்கு 10 பேர் வந்து கையெழுத்து போட்டு அழைத்து செல்லுங்கள்” என தொலைபேசியில் கூறியிருக்கிறார். சிங்காரம் சொல்வது உண்மையா? என்பதை அறிந்து கொள்ள ஊர் தலைவர்கள் எஸ்.பி.அஸ்ராகர்க்கிடம் செல்லில் பேசியிருக்கின்றனர். “அவரும் ஆமாம், பி.1 போலீஸ் ஸ்டேசன்ல இருக்காங்க. போய் அழைத்து செல்லுங்கள்” என உறுதி படுத்தியிருக்கிறார்.
இரவு சுமார் 2 மணிக்கு ஊர் தலைவர் சக்தி, துரை, அசோக், ஜெயராமன் இன்னும் பலர் காவல் நிலையம் சென்றிருக்கின்றனர். அதில்தான் “சக்தி, துரை, அசோக் ஆகியோர்களை எஸ்பி.விசாரிக்கனும் சொல்லியிருக்கார். மற்றவங்க ஊருக்கு போகலாம்” என விரட்டி விட்டது காவல் துறை.
மறு நாள் முழுவதும் நத்தம் காலனி மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கைது செய்யபட்ட ஆறு பேர் எங்கு வைக்கபட்டிருக்கிறார்கள், எதற்காக கைது செய்யபட்டார்கள் என்பதை சொல்ல வேண்டும்” என கேட்டு காத்திருந்தனர்.
மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் ஜானகி ராமன், ராஜு, பாலசுப்ரமணியன் ஆகியோரும் காவல் துறை அதிகாரிகளிடம் “ பொய் வழக்கு போடுவது என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். கண்டிப்பா இனி நீங்க விடப்போவதில்லை. என்ன கேசு போட்டிருக்கீங்க, எங்க வைச்சிருக்கீங்க என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். எஸ்பி.அஸ்ராகர்க் நியாயமானவர் என பலர் நம்பியிருந்தனர். அவரும் அப்படித்தான் என்பதை நிரூபித்து விட்டார்” என்று வாதிட்டனர். மேலும் எஸ்.பியிடமும் போனில் தொடர்பு கொண்டனர். “நான் மீட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்” என அவர் தொடர்பை துண்டித்தார்.
நத்தம் காலனியில் இருந்து யார் பேசினாலும் இதே நிலைதான். மாவட்ட ஆட்சியரும் எஸ்பியும் மாலை சந்திக்கிறேன் என சொல்லியதை நம்பி மாலை வரை அமர்ந்து இருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அடைக்க பட்டார்கள் என்ற செய்தியை தெரிந்து கொண்டு கதறி அழுதனர்.
கைது செய்யபட்ட பொடா துரையின் மனைவி செல்வி கூறியபோது, “28-6-2014 விடியற்காலை 4 மணி சுமார் எஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பொடா துரை என்பவரை பின்புறம் கைவிலங்கிட்டு நத்தம் காலனியில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்து வந்து தூங்கிய மனைவி மக்களை எழுப்பி அரிசி, பருப்பு, துணி மணி, சாமன் செட்டு என சிறிய சேமிப்புகளை கூட எட்டி உதைத்து துவம்சம் செய்து வீட்டில் இருந்த துரையின் மகள், மனைவி ஆகியோரை கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டியது. துரையை அவர்கள் கண்முன்னே போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இளவரசன் சமாதி அருகில் உள்ள நிலத்திற்கு அழைத்து சென்றனர். துரையின் மனைவியை பார்த்து எங்கே உன் மகன் என மிரட்டினர். அய்யா அவன் சின்ன பையன் அவன ஒன்னும் பண்ணிடாதீங்க என காவல்துறை அதிகாரியின் காலை பிடித்துக் கொண்டு அவர் கதறினார். இரங்கல் கூட்டமா நடத்துறீங்க உங்களை எப்படி அடக்குறது என தெரியும் என போலீசார் எச்சரித்தனர். காலனி மக்கள் கூட ஆரம்பிக்கவே போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர்”.
அடிக்கடி தருமபுரியில் போடப்படும் 144 தடையுத்திரவால் எந்த மக்கள் பிரச்சினைக்கும் கூட்டம் போட்டு பேச முடியாத சூழல் ஒரு புறம், நத்தம் காலனியில் இளவரசனுக்கு இரங்கல் கூட்டம் நடத்த முயன்றால் வெடிகுண்டு வழக்கு போன்ற பொய் வழக்குகள் இன்னொரு புறம் என நத்தம் காலனி தலித் மக்கள் ஒடுக்கபடுகின்றனர். ஆதிக்க சாதியினர் நடத்திய அடக்கு முறைகளை, அரசு வேறு வடிவில் நத்தம் காலனி மக்கள் மீது தொடர்கிறது.
வழக்கமாக ஜெயலலிதா அரசை விமரிசித்து அறிக்கை விடும் பா.ம.க தலைவர் ராமதாசு, தற்போது, போலீசு போட்டிருக்கும் இந்தப் பொய்வழக்கைப் பாராட்டி அறிக்கை விட்டிருப்பதிலிருந்து, சாதி அமைப்புகளுடன் தருமபுரி மாவட்ட போலீசு கூட்டணி அமைத்திருக்கிறது என்று தெரியவருகிறது. இடதுசாரி, பெரியார், அம்பேத்கர் கொள்கையில் பற்று கொண்ட எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அரசு விடுவிக்க வேண்டும். இளவரசன் முதலாம் நினைவுநாள் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பதுடன் அதில் கலந்து கொள்ள யாருக்கும் எந்த தடையும் காவல் துறை விதிக்க கூடாது என்றும் கோருகிறோம்.
இப்படிக்கு
சி.ராஜு
(மாநில ஒருங்கிணைப்பாளர்)