உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
மே 6, 2014 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன குழு, முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், மூத்த வழக்கறிஞர் ரோகிந்தன் நாரிமன், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

நீதிபதிகள் நியமன குழுவினர் அரசுக்கு அனுப்பும் பரிந்துரை பட்டியலை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பரிந்துரை பட்டியலில் உள்ள நீதிபதிகளின் பெயர்களில் மத்திய அரசுக்கு ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால், அதைக் குறிப்பிட்டு பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டும். நியமன குழு மீண்டும் தனது பரிந்துரையை வலியுறுத்தினால் அரசு அதை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். எப்படி இருந்தாலும் பரிந்துரை பட்டியலை முழுமையாக ஏற்றுக் கொள்வதுதான் நடைமுறை.
மோடி அரசு இந்த நடைமுறையை தூக்கி எறிந்து, கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மட்டும் நிராகரிப்பதற்காக ‘அவரை ஏன் நிராகரிக்க வேண்டும்’ என சில பல செய்திகளை ஊடகங்களில் கசிய விட்டது. இதைத் தொடர்ந்து மோடி அரசு மற்ற 3 பேரை நீதிபதிகளாக நியமித்து ஜூன் 19-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. மேலும் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இரகசியமாக தலைமை நீதிபதிக்கு அனுப்பாமல் ஊடகங்களுக்கு அனுப்பினார்கள். அதன் மூலம் கோபால் சுப்பிரமணியத்தை அவமானப்படுத்துவதோடு, அவரை நீதிமன்ற நியமனத்திலிருந்து துரத்தி அடிப்பதும் மோடியின் நோக்கம்.
மத்திய அரசின் பரிந்துரைப்படி ஜூன் 22-ம் தேதி ரோகிந்தன் நாரிமன், ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகிய மூன்று பேர் மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி கோபால் சுப்பிரமணியம் நீதிமன்ற நியமனத்துக்கு தனது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதோடு சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் தான் நீதிமன்றத்தின் நண்பராக செயல்பட்டதால்தான் மோடி அரசாங்கம் தன் மீது ஏதாவது களங்கம் கற்பிக்கும்படி சி.பி.ஐக்கு வெளிப்படையாக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டினார். நீதித்துறை தனது சுயேச்சையை காத்துக் கொள்ள போராடவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என் வெங்கடாச்சலையா உள்ளிட்ட நீதித்துறையினர், மத்திய அரசு நீதிபதி தேர்வுக் குழுவின் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பிய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா ஜூலை 1-ம் தேதி “எனக்கு தெரியாமல், எனது ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தன்னிச்சையாக கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மட்டும் பிரித்து நிராகரித்ததற்கு நான் கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறேன்” என்றும், மத்திய அரசு ஒரு உயர்ந்த அரசியல் அமைப்பு பதவிக்கான நியமனத்தை மிகவும் அலட்சியமாக கையாண்டிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்.

ஜூன் 28-ம் தேதி நாடு திரும்பிய நீதிபதி லோதா, கோபால் சுப்பிரமணியத்தை சந்தித்து அவரது கடிதத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கோபால் சுப்பிரமணியம் நீதிபதி பதவிக்கு தனது பெயரை பரிந்துரைப்பதை மீண்டும் நிராகரித்திருக்கிறார்.
“20 ஆண்டுகளாக நீதித்துறையின் சுதந்திரத்துக்காக நான் போராடி வந்திருக்கிறேன். இதில் விட்டுக் கொடுக்கவே முடியாது. நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று தெரிந்தால் இந்த பதவியை தூக்கி எறியும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்றும் நீதிபதி லோதா கூறியுள்ளார். நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது இன்னும் எப்படி உணர்த்தப்பட வேண்டும் என்று கனம் நீதிபதி எதிர்பார்க்கிறார் என்று விளக்கவில்லை. ஒருவேளை கோபால் சுப்ரமணியம் இதை வெளியே தெரிவித்திருக்கா விட்டால் லோதா இதை சாதாவாக மறந்து போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மாறாக நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையே பறிபோயிருக்கிறது என்று கோபால் பேசிய பிறகே வேறு வழியின்றி தலைமை நீதிபதி பேசியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் மோடி அரசு மீது யாரும் அப்படி நாக் அவுட் குத்து விட முடியாது.
“வளர்ச்சி”, “திறமையான, நேர்மையான நிர்வாகம்” என்றெல்லாம் விதந்தோதி மோடி அரசை வரவேற்று, ஆதரித்த வலதுசாரி அறிவுஜீவிகள் ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்று அடுத்தடுத்து மக்கள் மீது அரசு இறக்கும் இடிகளை, தாங்கள் கோரும் “வளர்ச்சிக்கு” தேவையானதாக நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் தாங்களே வியந்து போற்றும் சட்ட திட்டங்களைக் கூட மோடி தன் கால்தூசுக்கு சமமாகத்தான் மதிப்பது குறித்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். அந்த வளர்ச்சியும் இந்த மௌனமும் வேறில்லையோ?
நீதிபதி நியமன விவகாரம் மட்டுமின்றி பிரதமர் அலுவலகத்துக்கு முதன்மை செயலராக நிருபேந்திர மிஸ்ராவை நியமிப்பதற்கு அவசரச் சட்டம் மூலம் செபி சட்டத்தை திருத்தியது, ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரயில் கட்டண உயர்வை அறிவித்தது என மோடி அரசின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் எதைப் பற்றியும் இவர்களில் பலர் வாய் திறக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த மே 16-ம் தேதி கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி நாடாளுமன்ற தேர்தலில் “பாஜகவுக்கே 272+ கிடைத்த”தைத் தொடர்ந்து மோடியின் சாதனைகளைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.
“மோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார். மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்”
அந்த சாதனைகளில் முதலாவதாக அவர் பட்டியலிட்டது
1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார்.

இதற்கு முன்பாகவே மோடியின் வாழ்க்கை பற்றி நிலஞ்சன் முகோபாத்யாயா எழுதிய Narendra Modi: The Man, The Times மற்றும் கிங் ஷூக் நாக் எழுதிய The NAMO story, a political life என்ற இரண்டு புத்தகங்களையும் படித்திருந்ததாக பத்ரி குறிப்பிட்டிருந்தார். ‘மோடி பற்றிய தனது கருத்துக்களை மாற்ற வேண்டியிருக்குமோ’ என்று அப்போது கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இந்த நூல்களில் 1980-களில் குஜராத் மாநில ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராக மதக் கலவரங்களை கட்டளையிட்டு ஒருங்கிணைத்து நடத்தியதிலிருந்து, 1990-களில் முரளி மனோகர் ஜோஷியின் பாரத் ஏக்தா யாத்திரையை நடத்தியதில் ஜோஷியை மதிக்காமல் கட்சியில் கோஷ்டி கட்டியது, கேஷூபாய் படேலுடன் சேர்ந்து வகேலாவை ஓரம் கட்டி கட்சியை விட்டுத் துரத்தியது, 2000-களில் கேஷூபாய் படேலிடமிருந்து முதலமைச்சர் பதவியை தனக்கு பறித்துக் கொண்டது, ஹரேன் பாண்டியாவை அரசியல் ரீதியாக தீர்த்துக் கட்டியது, கோர்தன் ஜடாஃபியாவை அழைத்து மிரட்டியது என்று மோடி மற்றும் அவரது தலைமையிலான அரசு “நியாயமான முறைகளை” பின்பற்றப் போவதில்லை என்பதை விளக்கும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.
ஹரேன் பாண்டியா கொலை, இஷ்ரத் ஜகான், சோராபுதீன் ஷேக் வரை பலர் போலி மோதல்களில் கொலை என சட்ட விரோத ஆட்சி நடத்தியதிலிருந்து, பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஒட்டுக் கேட்க உளவுத் துறையை பயன்படுத்தியது வரை நூற்றுக் கணக்கான வழிகளில் சட்ட வழிமுறைகளை மீறியே ஆட்சி செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகின.
அதற்கு பிறகும் மே 16-ம் தேதி மோடி நல்லவர், “நியாயமான முறைகளை” பின்பற்றுபவர் என்று எழுதிய பத்ரி ஒன்று, தான் படித்தவற்றை புரிந்து கொள்வதில் குறைபாடுடையவர் அல்லது தான் நாடும் “வளர்ச்சிக்காக” இத்தகைய முறைகேடுகள் சரி என ஆதரிக்கிறார். போகட்டும் இப்போதும் கூட பத்ரி அவர்கள் மோடி எனும் மாமனிதர் பிரதமர் அலுவலக அறையில் ஒரு சுவிட்சை போட்டு இந்தியா முழுவதும் வளர்ச்சி எனும் பல்பை எரிய வைப்பார் என்று நம்புவதாகவே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன?
தேர்தல் முடிவுகள் வெளியான அதே மே 16-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கு குறித்து அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு, குஜராத்தில் போலீசு-உளவுத் துறை மூலம் அரசு பயங்கரவாத, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவியதன் மூலம்தான் அவர் தொடர்ந்து நான்கு முறை முதல்வராகப் பதவியில் அமர முடிந்தது; இந்த சமூக விரோத கிரிமினல்தனத்தைத் தாண்டி அவரது தேர்தல் வெற்றிகளுக்கு வேறெந்த அடிப்படையும் கிடையாது” என்பதை நிரூபித்துக் காட்டியது. அது குறித்தும் பத்ரி திருவாய் மலரவில்லை.
இப்போது பத்ரி போன்ற வலதுசாரிகள் புனிதமாக கருதும் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்திலேயே மோடி அரசு எந்த அறத்தையும், சட்டத்தையும் மதிக்காமல் புகுந்து விளையாடியிருக்கிறது. ஒரு வேளை இதுவும் மோடி அறையில் உள்ள சுவிட்சை போட்டு வளர்ச்சி லைட்டை எரிய வைக்கும் திறமையாக இருக்குமோ? இல்லை தலைமை நீதிபதி லோதி காங்கிரசின் கையாளாக இருப்பாரோ? இல்லை இது ஏதோ மறதியாக நடந்த தவறா? அல்லது இதை வைத்து மோடி அரசை விமரிசிக்க கூடாதா?
பத்ரி மட்டுமல்ல பாஜகவை பல்வேறு காரணங்களால் ஆதரிக்கும் அறிஞர் பெருமக்களும், முதலாளிகளும் நிச்சயம் வேறு காரணத்தை முன்வைப்பார்கள். அது அன்னிய முதலீடுக்கு இந்திய நாட்டை திறந்து விடும் வேகம் முந்தைய மன்மோகன் சிங் அரசைக் காட்டிலும் அதிகம் என்பதால் இந்த சில்லறை பிரச்சினைகளை எழுப்பாதீர்கள் என்பதே அவர்களது உள்ளக்கிடக்கையாக இருக்கும். முதலாளிகளின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஒரு தலைவன் அதற்காக அவன் காட்டும் வேகம், ஒடுக்குமுறையை இந்துத்துவத்திற்காகவும் காட்டுவது நல்லதுதானே? அப்போதுதானே இதே சட்டவிரோத முறைகளை ‘வளர்ச்சிக்காகவும்’ செய்ய முடியும்?
வளர்ச்சியும் இந்துத்துவமும் வேறு வேறா என்ன?
– செழியன்
மேலும் படிக்க