privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇசைதிருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்

திருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்

-

யுகயுகமாய்த் தொடரும் தேவாசுரப் போரின்
புதிய அத்தியாயம் எழுதப்பட்டது திருவரங்கத்தில்

தேவாசுரப் போரில் அசுரர் பங்கையும்
தேவருக்கு தாரை வார்த்த அசதியில்
பள்ளி கொண்டிருந்த
அரங்க நாதன் அறிதுயில் கலைய
அரங்கேறியது திருப்பள்ளி எழுச்சி

மூலவர் கருவறை வழிமறைக்கும்
நந்தீஸ்வர இந்து முன்னணி
ஊர்வலத்திற்கு மட்டுமில்லை
ஸ்ரீரங்கத்தில் அவாளின்
உத்திரை வீதியும் சித்திரை வீதியும் தாண்டி
உற்சவ மூர்த்திகளையே
உலா விட மறுத்தன சூத்திர வீதிகள்

அன்றுதான் முதன்முதலாக அங்கே
பார்ப்பானும் பகவானும் சண்டாளன் ஆயினர்
பஞ்சமனும் சூத்திரனும் பெண்டுகளும்
பள்ளிகொண்டானைத் தொட்டுத் துயிலெழுப்பி
பள்ளி எழுச்சி பாடினர்
பிறவிப் பயனை எய்தியே விட்டனன்
‘பிறவா யாக்கை’ப் பெம்மான் தானும்

பட்டாசு கொளுத்தி மிட்டாய் கொடுத்து
பூசுர அகம்பாவ துவம்சம் செய்த
அசுர தீபாவளி ஆரம்ப மானது

காலகால நூல்வேலி கிழித்தே
கருவறை நுழைந்தது செம்பதாகை
அம்பேத்காரும் பெரியாரும்
ஆங்கெழுந் தருளினர்

ராமஜென்ம பூமியென அனுமார்கள்
கொடியேற்றிய கரசேவைக்கு
அம்பேத்கர் பிறந்த மண்ணின்
பெரியார் பூமியின்
விடையாற்றி இது.

* * * *

அடுத்த அத்தியாயம் அசுர கானமாய்
ஆரம்ப மானது தஞ்சை மண்ணில்

மூப்பனார்கள் தோப்பனார்
முப்பாட்டனர் காலந் தொட்டே வழிவழியாய்க்
“கோத்திரஞ் சொல்லு- உன்
கோத்திரத்தின் சூத்திரம் சொல்”லெனச்
சொல்லச் சொல்லியே சூத்திரர் நுழையாமல்
அவாளை மாத்திரமே அனுமதித்த
உஞ்சி விருத்திப் பரம்பரை ஆதிக்கப்
பஞ்ச நாதீஸ்வர பரிபாலன ஐயாற்றில்
அரங்கேறியது ஓர் அசுர வியூகம்

தியாகப் பிரம்ம ஆராதனையில்
பஞ்சரத்தினக் கீர்த்தனை
மங்களம் பாடுமுன்
திக்குகளெல்லாம் திக்குமுக்காட
ஊடறுத் தொலித்தது ஒயிலாட்ட விசில் விசில்

அபயகரமருளும் உபயதாரர்
மூப்பனார்ஜீயின் முகமெல்லாம் வேர்க்க
தூரதர்சனின் கேமரா ஆங்கிள்கள்
தாறுமாறாய்ப் புறம்புறம் திரிய
அரங்கத்தில் விரிந்தன செம்பதாகைகள்

சங்கு சக்கரங் கதிகலங்கிடச்
சனாதனத்தின் குலைநடுங்கிட
கங்கை வார்குழல் ‘திங்குதிங்’கெனச்
சைவாதீனம் பதைபதைத்திட
அசுர கானம் முழங்குகின்றது
அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.

“அபச்சாரம் அபச்சாரம்
அபஸ்வரம் அபஸ்வரம்
ஆபத்து ஆபத்”தெனப்
பறைகேட் டதிர்ந்த
பூசுர அசுணங்கள் புலம்பலாயின

ஆர்ப்பாட்டத்தின் போர்ப்பரணியை
ஐயாற்றின் வீதிகளில் மட்டுமில்லை
ஐயாறப்பன் செவிப்பறையினிலும்
அறைந்தறைந்ததிர்ந்தது பறை

அவனுக்கு மட்டும் இல்லையா ஆசை?
ஏழிசையாய் இசைப்பயனாய்
நின்றவனன்றோ அவ்வீசன்!
எந்நாட்டவர்க்கும் இறைவனே எனினும்
எத்தனை நாளாய் அதையே கேட்க
‘இராம நீ சமானம் எவ’ரென மட்டும்?
தஞ்சையில் கேட்ட தமிழிசை அமுதை
‘பண்ணாய்ந்த சுந்தரேசன்’
பண்தோய்ந்த செந்தமிழை
மீண்டும் மீண்டும்
ஐயாற்றிலும் கேட்க அவனுக்கும் ஆசை

தண்டபாணித் தேசிகர் பாடிய
தமிழிசை மேடையை
அசுரகானம் புகுந்த மாசென
ஸ்ரீரங்கக் கருவறையைத்
தீட்டுக்கழித்த திமிர்த்தனமும்
தேவாதிதேவப் பழியுந் துடைத்தே
மீட்டுக் கொடுத்தது அசுரகானமே

ஐயாறப்பனும் அரங்கநாதனும்
கட்டுண்டு கிடந்தனர்
ஏழிசைச் சூழலில்

“அலமந்து சிலமந்தி
மதிலேறி முகம்பார்க்கும் திருவை யாறே !”

நெடுமை நெடுங்காலமெலாம் ஆரியத்தின் கையால்
நெஞ்சொடிக்கப்பட்ட கதை மாறி நடந்தேறும்…
புறத்தெழுந்த புதுப்பாட்டாய்ப் பொய்யழிந்த செய்தி
புதுப்பண்ணின் இசையோடு யாழ்நரம்பில் ஓடும்”

– பொதிகைச் சித்தர்
________________________________
புதிய கலாச்சாரம் மே-1997

_________________________________

குறிப்பு:

1. 1993-ம் ஆண்டில் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தியது. இந்த ஆண்டில் மே 1-ம் தேதி தமிழகம் முழுவதிலும் வந்திருந்த தோழர்கள் திருவரங்கம் கோவிலை நோக்கி முன்னேறிய போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்ப்பட்டனர். மே-24-ம் தேதியன்று தோழர்களது சிறு அணி ஒன்று கோவில் கருவறையில் நுழைந்தது. இதில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தோழர்கள், பெண்கள், பெரியார் – அம்பேத்கர் படங்களை ஏந்தி கருவறையில் நுழைந்தனர். அங்கே பார்ப்பனர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய அந்த போராட்டம் குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

2. திருவையாறு தியாகையர் உற்சவத்தில், ‘தமிழில் பாடக் கூடாது, தமிழ் இசைக் கருவிகள் (பறை முதலான நாட்டுப்புறக் கருவிகள்) இசைக்கப்படக் கூடாது’ என்ற பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக, “தமிழில் பாடு, இல்லையேல் தமிழகத்தை விட்டு ஓடு” என்ற முழக்கத்தோடு 1994-ம் ஆண்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் போராடத் துவங்கியது. தமிழிசையில் இருந்து திருடப்பட்டதே கருநாடக இசை என்பதை நிறுவும் முகமாகவும், பார்ப்பனீய பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகவும் தமிழ் மக்கள் இசை விழா எனும் இந்தப் போராட்டம் அப்போது முதல் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இது குறித்தும் பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

இந்தக் கவிதை இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது.