privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாமாஃபியாவுக்கு கடன் கொடுக்கும் போப்பாண்டவர் வங்கி !

மாஃபியாவுக்கு கடன் கொடுக்கும் போப்பாண்டவர் வங்கி !

-

டந்த மாதம்  இத்தாலியின் தெற்குப் பிராந்தியமான கலாப்ரியா (Calabria) மாகாணத்திற்கு பயணம் சென்றார், போப்’பாண்டவர்’ ப்ரான்சிஸ். போப் என்றால் பயணமும் உபதேசமும் வழக்கம்தானே என்கிறீர்களா? இல்லை இந்த பயணத்தில் அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் அனைத்தையம் எழுப்புகிறார்.

போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

அதாவது, கிரிமினல் கும்பல்களை சகித்துக் கொள்ள முடியாதென்றும், சாத்தானின் பாதையைத் தெரிவு செய்து விட்ட கிரிமினல்கள் கத்தோலிக்க கிறிஸ்தவத்திலிருந்து மதவிலக்கம் செய்யப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.  போப்பின் கண்டனம் கலாப்ரியா பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் ரேங்கத்தா (Ndrangheta) என்கிற மாஃபியா கும்பலை குறிவைத்தே சொல்லப்பட்டதால் போப்பின் உயிருக்கே கூட ஆபத்து நேர்ந்து விடலாம் என்று மேற்கத்திய ஊடகங்கள் பரபரக்கின்றன.

ஆனால் இந்த பரபரப்பிற்கு பின்னால் ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக சாத்தோனோடு ஒரே பந்தியில் உண்டு களித்து ’ஒண்ணு மண்ணாக’ புழங்கி வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடத்திலிருந்து இப்படி ஒரு அறிவிப்பை வரலாறு அறிந்தவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஊழல் முறைகேடுகள், நிதி முறைகேடுகள், பாலியல் முறைகேடுகள், பாசிசத்தோடு படுத்துறங்கியது, கொலை பாதகங்கள் என்று சகலமும் சேர்ந்த சாக்கடைகளின் சங்கமம் தான் கத்தோலிக்க திருச்சபை.

ரோம சாம்ராஜ்ஜியத்தால் ஒடுக்கப்பட்ட அடிமைகளின் விடுதலைக் குரலாக முகிழ்ந்தெழுந்த நாசரேயனாகிய இயேசுவின் மரணத்திற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் அவரது அடியார்கள் செய்த முக்கியமான காரியம் அதே ரோம சாம்ராஜ்ஜியத்தின்  ஒடுக்குமுறை கருவியாக கிறிஸ்தவத்தை மாற்றியது தான். எளிய மக்களுக்காக இயேசு மரித்ததன் அடையாளமாக விளங்கிய சிலுவை, கான்ஸ்டாண்டினின் தலைமையிலான ரோம பேரரச இராணுவத்தின் அதிகாரப்பூர்வமான இலட்சினையாக மாறுவதற்குத் தேவைப் பட்டது வெறும் முன்னூறு ஆண்டுகள் மட்டும் தான்.

அன்று முதல், கடந்த ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக கிறித்தவம் ஒரு மத நிறுவனம் எனும் முறையில் மனித குலத்திற்கு எதிராக செய்த செயல்களை வரிசையாகப் பட்டியலிட்டால் அதன் நீளம் பூமியிலிருந்து பரமண்டலத்தையும் கடந்து செல்லும். கிறித்தவ ஆசியுடன் மேற்குல அரசுகளால் வேட்டையாடப்பட்ட (witch hunt) வேறு நம்பிக்கை கொண்ட மக்கள் கூட்டமும், கொய்த்தெறியப்பட்ட அறிவுத் துறையினர் மற்றும்  அறிவியல் அறிஞர்களின் தலைகளையும் எண்ணி மாளாது. இத்தனை நூற்றாண்டுகளாக கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடத்தை வரிசையாக அலங்கரித்து வந்த போப்பாண்டவர்களின் அந்தப்புர அசிங்கங்களையும், கள்ளத் தொடர்பு கொலைகளின் பட்டியலையும், அரசியல் சதி ஆலோசனைகளையும் இந்தக் கட்டுரையில் வரிசையாக குறிப்பிட்டால் புதிய ஏற்பாட்டை விட அது பெரிதாக இருக்கும். வினவின் சர்வரும் எகிறிவிடும்.

கார்டினல்கள்
கார்டினல்கள்

எனில், இப்போதைய போப்பாண்டவருக்கு எங்கேயிருந்து இந்த வன்முறைக்கு எதிரான திடீர் ஞானோதயம் வந்தது?

அதைப் பார்க்கும் முன் வாத்திகன் வங்கி சில ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட சிக்கல் ஒன்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. ’வாத்திகன் வங்கி’  என்று சொல்லப்பட்டாலும் அதன் உத்தியோகப் பூர்வமான பெயர் – “மத நடவடிக்கைகளுக்கான நிறுவனம்” (The institue for the works of the religion). அதிகாரப்பூர்வமான ஆவணங்களின் படி சுமார் 600 கோடி யூரோ (சுமார் ரூ 48,000 கோடி) நிதிக்  கையிருப்பை கொண்டிருக்கும் இந்த வங்கி,  2010-ம் ஆண்டு கணக்கின் படி சுமார் 5.5 கோடி யூரோ (சுமார் ரூ 440 கோடி) போப்புக்கு லாபமாக ஈட்டிக் கொடுத்துள்ளது. மத நடவடிக்கைகளிலேயா இவ்வளவு இலாபம் என்று அதிசயிப்பவர்கள், உள்ளூர் டிஜிஎஸ் தினகரன் கம்பெனி, மோகன் லசாரஸ் கம்பெனிகளை அறிந்திருந்தால் அதிசயிக்க மாட்டீர்கள். பிசினெஸ் என்று பார்த்தால், தேவ கிருபை என்பது பார்ப்பனியத்தின் லட்சுமி கடாட்சத்தையே ஊதிவிடும் வல்லமை கொண்டது.

தேவனது உபதேசங்களை பரப்பும் வங்கி என்பதால் வாத்திகன் வங்கிக்கு எந்த தணிக்கையும் இல்லை. குறிப்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இவ்வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அளவும் அதன் ரியல் எஸ்டேட் முதலீடுகளின் அளவும் இது வரையில் தணிகை செய்யப்படவே இல்லை. உலகிலேயே எந்த தணிக்கை ஒழுங்குமுறைக்கும் உட்படுத்தப்படாத ஒரே வங்கியாக வாத்திகன் வங்கி மட்டும் தான் உள்ளது. வங்கியின் நடவடிக்கைகளை ஓரளவுக்கு நன்கு அறிந்திருப்பவர்கள் மற்றும் வாத்திகனோடு கொடுக்கல் வாங்கலில் முரண்பட்டவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், வாத்திகன் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தின் அளவானது சில குட்டி நாடுகளின் பரப்பளவை விட அதிகமானதாக உள்ளது. ரிஷி மூலம் மட்டுமல்ல, ஃபாதர் மூலமும் இப்படி ஏகப்பட்ட வில்லங்கம் உடையதுதான்.

உலகளவில் நிறுவனமயப்பட்ட மதம் எனும் வகையில் கிறித்தவம் ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாய் இருக்கிறது. கத்தோலிக்கர்கள், மெத்தடிஸ்டுகள், லுத்தரன்கள், புராட்டஸ்டண்ட் மற்றும் பெந்தெகொஸ்தே சபையினர் என்று சகல கிறித்தவ நிறுவனங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இவர்களின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ 7.5 லட்சம் கோடி. சுமார் 40 லட்சம் முழுநேர ஊழியர்களையும், 13,000 நூலகங்களையும், 22,000 பத்திரிகைகளையும், சுமார் 1,800 தொலைக்காட்சி சேனல்களையும், 1,500 பல்கலைக்கழங்களையும், 930 ஆராய்ச்சி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகிறார்கள். பிரதி வருடம் சுமார் 400 கோடி துண்டுப் பிரசுரங்களும் நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

வாத்திகன் வங்கி
வாத்திகன் வங்கி

இதில் ஆகப் பெரும்பான்மையான நிறுவனங்கள் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படுபவை – அவற்றின் நிதி விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்துவது வாத்திகன் வங்கி தான். வாத்திகன் வங்கி தனது செயல்பாடுகள் குறித்த விவரங்களை எந்த சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை. வாத்திகன் வங்கியை நேரடியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் உண்டு – அவர் கத்தோலிக்க திருச்சபையின் உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட போப்பாண்டவர் மட்டும் தான்.

இப்பேர்பட்ட மகாத்மியங்கள் கொண்ட வாத்திகன் வங்கியின் மேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஐரோப்பா மற்றும் உலகமெங்கும் இயங்கும் கிரிமினல் கும்பல்களுக்கும் நிழலுலக மாபியா கும்பல்களுக்கும் பல்லாண்டுகளாக கள்ளப் பணப் பரிவர்த்தனை மையமாக வாத்திகன் வங்கி திகழ்ந்து வந்தது அம்பலமானது.  நிழல் உலகத் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பண சுழற்சிக்கு எதிரான அமைப்பு (Financial action Task force on Money laundering) வாத்திகன் வங்கியைக் கருப்புப் பட்டியலில் வைத்தது. பிசினெஸ் என்று வந்து விட்டால் பாதிரியார்கள் பாவம் புண்ணியம் பார்ப்பதில்லை போலும். இதைத்தான் வந்த காசை மட்டும் எண்ணு, திருடுன காசான்னு யோசிக்காதே என்று பகவான் கீதையில் அருளியிருக்கிறார்.

வாத்திகன் அரசாங்கத்தின் இரகசியமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜியான்லுகி நுஸ்ஸி என்பவர் “பதினாறாம் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்” எனும் தலைப்பில் விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். வாத்திகனின் பல்வேறு நிதி முறைகேடுகளை விரிவாக அந்நூல் பதிவு செய்திருந்தது. உடனே விசாரணையில் இறங்கியது வாத்திகன் போலீசு – ஆமாம், கடவுளின் நாட்டில் கூட போலீசு இருக்கத்தான் செய்கிறது. விசாரணையில் இறங்கிய போலீசு குற்றம் இழைத்தவர்களை கைது செய்திருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால்..  பரிசுத்தராகிய ஆண்டவர் உங்கள் கோயிந்துதனத்தை மன்னிப்பாராக.

ஜியான்லுகி நுஸ்ஸிக்கு உள் விவகாரங்களை விற்று விட்டார் என்று குற்றம் சுமத்தி போப் பெனடிக்டின் அந்தரங்க சமையல்காரர் பவுலோ காப்ரிலி என்பவரைக் கைது செய்தது வாத்திகன் போலீசு. திருடனை விட்டு சாட்சியை பிடித்த வாத்திகன் போலீசின் தேவகாரியத்தை மேற்குலகம் மொத்தமும் காறித்துப்பியபின் தனது பெருந்தன்மையைக் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பெனடிக்டுக்கு ஏற்பட்டது. பவுலோ காப்ரிலி ‘மன்னித்து’ விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே நடந்த விசாரணைகளில் “திருச்சபையில் சாத்தானின் வேலைகளும் ஊழல் முறைகேடுகளும் மலிந்து” போய் விட்டதால் தான் மனம் கேளாமல் உண்மைகளை வெளிக் கொணரும் பொருட்டு ஆவணங்களை கடத்த தாம் உதவியதாக பவுலோ தெரிவித்திருந்தார். ’உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும்’ சொல்லும் யோக்கியதை போப்பை விட அவரது சமையல்காரருக்கே இருந்திருக்கிறது.

வாத்திகன் வங்கி முறைகேடுகள்இவை ஒரு பக்கம் இருக்க, நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வாத்திகன் வங்கியை கருப்புப் பட்டியலில் இருந்து மீட்க போப் தலைமையிலான வாத்திகன் அரசு இன்னொரு பக்கம் தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருந்தது. வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை போப் அமைத்தார். 2013-ம் வருடம் பிப்ரவரி மாதம் இவ்விசாரணைக் கமிட்டியின் அறிக்கை போப் பெனடிக்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையின் விவரங்கள் இது வரை உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. பெனடிக்ட் அதை அப்படியே மூடி மறைத்து விட்டார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் பற்றி லத்தீன் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபை விவகாரங்களுக்கான இலாகாவைச் சேர்ந்த மூத்த கார்டினல்களுடன் போப் தொலைபேசியில் பேசிய விவரங்கள் பின்னர் ஊடகங்களில் கசிந்தது (ஆதாரம் எகனாமிஸ்ட் மற்றும்  கார்டியன் கட்டுரைகள் கீழே இணைப்பில்). அதில், போப்புக்கு அடுத்த கட்ட அதிகாரம் கொண்ட கார்டினல்கள் மட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அடங்கிய கூட்டணி ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், இவர்கள் நிதி முறைகேடுகளிலும் கூட்டு வைத்திருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. மோசடியில் கூட்டு என்பதற்கும் ஓரினச் சேர்க்கை என்பதற்கும் என்ன தொடர்பு?

விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த மாதமே பெனடிக்ட், போப் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். குற்ற உணர்வு மேலிட்டிருக்குமோ என்றெல்லாம் நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை – சாக்கடைக்கு பன்னீர் தெளித்து பவுடர் பூசி ‘புனிதத்தை’ ஒப்பேற்றிக் காட்டும் திறன் தன்னிடம் போதியளவுக்கு இல்லை என்பதை உணர்ந்திருப்பார், அல்லது அவருக்கு உள்வட்டத்தில் இருந்த கார்டினல்கள் உணர்த்தியிருப்பார்கள். அது எவ்வாறாக இருந்தாலும்,  மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் போப்பின் திடீர் பதவி நீக்கத்தின் பின் இருந்த ஓரினச் சேர்க்கை பாலியல் கூட்டணி பற்றிய கவர்ச்சி அம்சங்களை மாத்திரம் சில காலத்துக்கு கிசுகிசுத்து விட்டு அடங்கி விட்டன.

ஆனால், வாத்திகன் வங்கி கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததற்கு சொல்லப்பட்ட காரணங்களில் கருப்புப் பண சுழற்சி, மாஃபியா கும்பல் தொடர்பு பற்றி மெல்ல மெல்ல மேற்குலக ஊடகங்களே மறந்து விட்டன. இந்நிலையில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சற்று முன்பாக – அதாவது பிப்ரவரி 2013 இறுதி நாட்களில் இருந்து மார்ச் 2013 9-ம் தேதி வரை – ஐரோப்பிய ஒன்றிய நிதித் துறை அதிகாரிகளுக்கும் வாத்திகன் நிதி இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது.

வாத்திகன் வங்கிதனது நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக வாத்திகன் வங்கி மாற்றிக் கொள்வதற்கு 2012 டிசம்பர் 31-ம் தேதி தான் இறுதி நாள் என ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருந்தது. என்றாலும், தனது வங்கியில் கை வைப்பதும் கத்தோலிக்க மதத்தின் ’புனித’ தன்மைக்கே சவால் விடுவதும் ஒன்று தான் என்று சாதித்து வந்த வாத்திகன் வங்கி, அந்தக் கெடுவை மீறிய பின்னும் பழைய பாணியிலேயே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் போப் நியமித்த விசாரணைக் கமிட்டியின் அறிக்கை வெளியானதும், போப் பதவி விலகலும் நடந்தேறியது. இந்தப் பின்னணியில் தான் ஐரோப்பிய ஒன்றிய நிதி அதிகாரிகளின் கை பேச்சுவார்த்தைகளில் மேலோங்குகிறது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் வாழ்வா சாவா போராட்டத்தில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில் வாத்திகன் வங்கி போன்ற ஓட்டை வாளிகளை ’நம்பி’ ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் ஆட்ட விதிகளை தானே நிர்ணயிப்பேன் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அதே நேரம் மேற்குலகின் முதலாளித்துவம், காலனியாக்கம், பாசிசம், ஏகாதிபத்தியம் அனைத்திற்கும் ஆன்மீக ஸ்பான்சராக திருச்சபையே பங்காற்றியிருப்பதையும் மேற்படி கனவான்கள் மறந்திருக்கமாட்டார்கள். இனியும் அந்த பங்கு தேவை என்போடுதான் இந்த பங்கு சண்டையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றாண்டு கால கத்தோலிக்க சட்டாம்பிள்ளைத் தனத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தான்  பதவிக்கு வருகிறார் போப் பிரான்சிஸ்.

மார்ச் 2013-ல் பதவிக்கு வந்த போப் பிரான்சிஸ், ஓரினச் சேர்க்கைக் கூட்டணி ஒன்று உயர்மட்ட கார்டினல்களிடையே இருப்பதை ஒப்புக் கொண்டார். மேலும், சாத்தியமான சந்தர்ப்பங்களில் எல்லாம் தொடர்ச்சியாக மாஃபியா கும்பல்களுக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சி தான் தற்போது ரேங்கத்தா மாஃபியா கும்பலுக்கு எதிரான அவரது லேட்டஸ்ட் ‘பொங்கல்’.

ஆக, துரத்தப்படும் பல்லி வாலைக் கத்தரித்து விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தும் அதே உத்தியை போப் பிரான்சிஸ், மாஃபியாக்கள் விசயத்தில் கையில் எடுத்துள்ளார். குறைந்தபட்சம் மாஃபியாக்களுக்கும் திருச்சபைக்கும் இடையே முறுகலான நிலை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருந்து தான் இது போன்ற தத்துவ முத்துக்களை உதிர்க்கிறார். அப்படி உண்மையிலேயே மாஃபியாக்களை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்திருந்தால், முதல் வேலையாக நிதி முறைகேடுகள் பற்றியும் அதில் மாஃபியா கும்பல்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை அல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்!

ஆகவே தேவ விசுவாசிகளே, இந்த யோக்கியதாம்ச முகத்திற்கு பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் கள்ளத்தனத்தை கண்டு கொள்ளக் கடவீர். ஆமென்!

பாவிகளான உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கும் இந்த பாதிரிக் கம்பெனிகளின் தலைமையே இப்படி மாபாவம் செய்திருக்கிறது என்றால் நாம் வழங்க வேண்டியது மன்னிப்பா, தண்டனையா?

–    தமிழரசன்

மேலும் படிக்க