Wednesday, May 7, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கஇந்தித் திணிப்பு : மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!

இந்தித் திணிப்பு : மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!

-

இந்தித் திணிப்பு: மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்! (தலையங்கம்)

ளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவுடனேயே இந்தித் திணிப்பு உள்ளிட்டு தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது மோடி அரசு. வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ள நிலையில், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் மற்றும் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிராக பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி, அலுவலர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தியில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மே 27 அன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைச் சரியாகப் பின்பற்றுவோருக்குப் பரிசுத்தொகையும் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்புதமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் அந்த சுற்றறிக்கை என்று பார்ப்பனக் கும்பலுக்கேயுரிய இரட்டை நாக்குடன் ஒரு பித்தலாட்ட விளக்கத்தை அளித்து தற்காலிகமாகப் பின்வாங்கிக் கொண்டது மோடி அரசு. எனினும் இது தற்காலிகமானதே. இந்திதான் தேசிய மொழி என்றும் மற்றவை பிராந்திய மொழிகள் என்றும் உள்துறை இணை அமைச்சரான கிரண் ரிஜிஜு திமிர்த்தனமாகப் பேசுவதும், மைய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பள்ளிப் பாடத் திட்டத்தில் வேதம் – உபநிடதங்களைச் சேர்க்க வேண்டுமென்று கூறியிருப்பதும், மைய அமைச்சர்களில் நான்கு பேர் சமஸ்கிருதத்தில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருப்பதும், இசுலாமியருக்கு எதிரான பகைமையைத் தூண்ட காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளை பாரதிய ஜனதா கிளப்புவதும் பார்ப்பன பாசிசக் கும்பலின் உண்மை முகத்தை அம்பலமாக்கியிருக்கின்றன.

இந்தித் திணிப்புக்கு எதிராக தாளமுத்து, நடராசன், சின்னசாமி உள்ளிட்டு 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர் துறந்து, மக்கள் இயக்கமாக வளர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கல்வெட்டாக நீடிக்கிறது என்ற போதிலும், தமிழ்வழிக் கல்வி அழிவுக்குத் தள்ளப்பட்டு தமிழகத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆங்கிலவழிக்கல்வியை அரசே ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மொழிப்பாடமாகக் கூடத் தமிழைக் கற்பிக்க முடியாது என்று மெட்ரிக் பள்ளிக் கொள்ளையர்கள் வழக்கு போடும் அளவுக்கு மொழிப்பற்று மங்கியிருக்கிறது. பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வைப்பது ஒரு பண்பாடாகப் பரவி வருகிறது. பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதைப் போராட்ட மரபு என்பது தமிழகத்தின் இளைய தலைமுறைக்குத் தெரியாத பழைய கதையாகிவிட்டது மட்டுமல்ல; அத்தகைய போராட்ட மரபுகள் குறித்த பெருமித உணர்வு மங்கி, சுயமரியாதையும் மொழிப்பற்றும் இல்லாத ஒரு பிழைப்புவாதம் இளம் தலைமுறையின் கலாச்சாரமாகப் பரவியிருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக, இனப்படுகொலைக் குற்றவாளி என்று உலகத்துக்கே தெரிந்த பாசிச மோடியை பல்லக்கிலேற்றி, பார்ப்பன பாசிசக் கும்பலுக்குத் தமிழக மக்கள் மத்தியில் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து அரியணையிலும் அமர்த்தியிருக்கிறார்கள் தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் முதலான பிழைப்புவாதிகள். தேசிய இன அடையாளங்களை அழித்து இந்து தேசியப் பண்பாட்டைப் பரப்புவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு இத்தகைய புறச்சூழல் பெரிதும் சாதகமாக அமைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் தமிழக மக்கள் இந்திக்கு ஆதரவாகப் போராடுவார்கள் என்று பா.ஜ.க.வின் இல.கணேசனால் தைரியமாகப் பேச முடிந்திருக்கிறது. நாம் எதிர்கொள்வது வெறும் இந்தித் திணிப்பு குறித்த பிரச்சினை அல்ல. தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவால்!
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________