privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

-

யர் ரக உணவு விடுதிக்கு குடும்பத்துடன் சென்று வயிறுமுட்டத் தின்றுவிட்டு, கல்லாவுக்கு வந்து “கையில் காசில்லை” என்று சொன்னால் என்ன நடக்கும்? அங்கேயே தரும அடி கிடைக்கும். அப்புறம் போலீசிடம். பிறகு கம்பியும் எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவு ஏன், காசோலை கொடுத்து வங்கியில் பணமில்லை என்று திரும்பி வந்தால்கூட, சிறைத்தண்டனை உண்டு.

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள் அறந்தாங்கி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஆனால், விவசாயிகளிடம் கரும்பை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு, “காசில்லை” என்று கையை விரிக்கிறார்கள் சர்க்கரை ஆலை முதலாளிகள். பணம் கிடைக்காத விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள்; முதலாளிகளிடமிருந்து பைசா கூட பெயரவில்லை. அரசாங்கம் விவசாயிக்குப் பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். அல்லது ஆலையை ஏலம் விட்டு, கடனை அடைக்கச் சொல்ல வேண்டும். வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன் போன்ற கடன்களை வாங்கும் சாதாரண மக்களுக்கு நடப்பது இதுதான். ஆனால் சர்க்கரை ஆலை முதலாளிகள் விசயத்தில் நடப்பது என்ன?

சென்ற ஆண்டில் முதலாளிகள் இந்திய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை அடைப்பதற்காக, முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு 7200 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் கொடுத்தது. அதை வைத்தும் விவசாயிகளின் கடனை முதலாளிகள் அடைக்கவில்லை. இந்த ஆண்டு கடன் பாக்கி ரூ 11,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது மீண்டும் மோடி அரசு முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்கிறது. ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ 4200 மானியமும் கொடுத்திருக்கிறது.

“இது போதாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் விலை குறைவாக இருப்பதால் எங்களுக்கு நட்டமேற்படுகிறது” என்று புகார் செய்தார்கள் முதலாளிகள். உடனே, இறக்குமதி சர்க்கரைக்கு 40% வரி விதித்து, உள்நாட்டில் சர்க்கரை விலையை உயர்த்தி முதலாளிகள் இலாபம் பார்க்க வழி செய்து கொடுத்தது மோடி அரசு. வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோலில் 5%-க்கு பதிலாக 10% எத்தனால் கலக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சர்க்கரை முதலாளிகள் உற்பத்தி செய்த எத்தனாலை வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு டன் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, மின்சாரம், எரிசாராயம், மொலாசஸ், எத்தனால், கரும்புச்சக்கை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டி.என்.பிரகாஷ். முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது வடிகட்டிய பொய்.

“தமிழத்தில் 2012-13-ல் பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இலாபத்தில் இயங்கியிருக்கின்றன. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மாநில அரசு அறிவித்த தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு பைசா பாக்கியின்றி பட்டுவாடா செய்துவிட்டு, 214 கோடி ரூபாய் லாபமும் காட்டியிருக்கிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ரவீந்திரன் (பசுமை விகடன்,10.8.2014) ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா?

தமிழக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கடன் பாக்கி 527 கோடி ரூபாய். இதனை 29-ம் தேதிக்குள் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார் அமைச்சர் தங்கமணி. ஆனால் அந்தக் காலக்கெடுவுக்குள் ஒரு பைசா கூட வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளைப் பொருத்தவரை, ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய் கொடுத்தாலும், அதில் அவர்களுக்கு 15% தான் மிஞ்சும். ஆனால் டன்னுக்கு ரூ 2250-க்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லித்தான் சென்ற ஆண்டு சர்க்கரை ஆலை முதலாளிகள் கதவடைப்பு நடத்தி காங்கிரசு அரசிடமிருந்து ரூ 7200 கோடியைக் கறந்தனர். இதற்கு மேல் மாநில அரசுகள் பரிந்துரைத் தொகைகளை வழங்குகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு டன்னுக்கு 550 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பரிந்துரைத் தொகையை முதலாளிகள் தர மறுக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு 50% லாபம் கிடைப்பதை உத்திரவாதப் படுத்தவிருப்பதாக தேர்தல் வாக்குறுதியளித்தார் மோடி. அப்படியானால், கரும்புக்கான உள்ளீடு செலவைக் கணக்கிட்டு அதற்கு மேல் 50% வைத்து ஒரு டன் கரும்பின் விலை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக என்ன நடந்திருக்கிறது? முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி கொடுத்த மோடியின் உணவு அமைச்சர் பஸ்வான், “கரும்புக்கு மத்திய அரசு தீர்மானிக்கின்ற விலைக்கு மேல் (2250) மாநில அரசுகள் பரிந்துரை விலையைச் சேர்த்துக் கொடுக்கக் கூடாது” என்று தற்போது அறிவித்திருக்கிறார்.

சர்க்கரை ஆலை முதலாளிகளின் கூலிப்படைதான் இந்த அரசு என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?

– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________