privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஅறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

-

றிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது பிறந்த நாள் விழாக் கருத்தரங்கம் 16.08.2014 அன்று மாலை 6.00 மணிக்கு வேலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் அகிலன் கருத்தரங்கத்தை தலைமை ஏற்று நடத்தினார். “இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீதான தாக்குதலை மோடி அரசு தீவிரப்படுத்தியுள்ள இன்றைய சூழலில், தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய கால்டுவெல் அவர்களுக்கு இச்சமயத்தில் விழா எடுப்பது என்பது மோடி அரசின் தாக்குதலுக்கு எதிரானதொரு போராட்டத்திற்கு உரம் சேர்ப்பதாகும்” என தனது தலைமை உரையில் எடுத்துரைத்தார்.

தோழர் அகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் அகிலன் தலைமை உரை ஆற்றினார்.

மொழி ஆளுமை-கால்டுவெல்லின் பங்கு” என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் தோழர் ஜோ.சம்பத்குமார் உரையாற்றினார்.

“இராபர்ட் கால்டுவெல்லைப் பற்றி இப்பொழுது பேசமாட்டார்கள். பிற்காலத்தில் இவர் அதிகம் பேசப்படுவார்” என வா.வே.சு அவர்கள் அன்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.

மெகன்சி, எல்லீசு போன்றோரின் தமிழ் மற்றும் திராவிடம் குறித்த ஆய்வுக் கருத்துக்கள் தமிழின் சிறப்புகளை நிலைநாட்ட அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கு பெரிதும் உதவின. சமஸ்கிருதமே பிற இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கல்கத்தாவிலிருந்து வில்லியம் ஜோன்ஸ் என்பவர் முன்வைத்த ஆய்வுக் கருத்துக்களை நிராகரித்து, சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதையும், தமிழ் தனித்தே இருந்ததோடு தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக இருந்தது தமிழே என்பதையும் அறிஞர் கால்டுவெல் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் நிறுவியதை தக்க ஆதாரங்களுடன் தனது உரையில் எடுத்துரைத்தார்.

ஜோ சம்பத்குமார்
”மொழி ஆளுமை-கால்டுவெல்லின் பங்கு“ என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் தோழர் ஜோ.சம்பத்குமார் உரை

சமஸ்கிருதமும்-மொழித் தீண்டாமையும்” என்கிற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சா.குப்பன் அவர்கள் உரையாற்றினார்.

சிற்பி செய்த கற்சிலைக்கு மந்திரங்கள் ஓதி கருவறையில் அதாவது மூலஸ்தானத்தில் வைத்துவிட்டால் அது தெய்வத்தன்மையை அடைந்து விடுவதாகவும், அதன்பிறகு பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அக்கற்சிலையைத் தொட்டுவிட்டால் சாமி தீட்டாகிவிடுகிறது என்று கூறி சாமியில்கூட தீண்டாமையைத் தோற்றுவித்தார்கள்.

ஒரு முறை திருவையாறு தியாகய்யர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதற்காக மேடை தீட்டாகிவிட்டது எனக்கூறி மேடையைக் கழுவியதோடு மந்திரங்கள் ஓதி தீட்டுக் கழித்தார்கள். சமஸ்கிருதம் மற்றும் தெலுங்குக் கீா்த்தனைகளை மட்டுமே அங்கு பாடலாம். தமிழில் பாடுவதற்கு அங்கே அனுமதி கிடையாது. தமிழ் அங்கே தீண்டத்தகாத மொழி.

சா குப்பன்
“சமஸ்கிருதமும்-மொழித் தீண்டாமையும்” என்கிற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சா.குப்பன்

ஒரு முறை இராமலிங்கனார் அன்றைய பெரியவாள் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழில் உரையாடிய போது, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்திலேயே பதிலளித்தாராம். சங்கராச்சாரியாருக்கு நன்றாகத் தமிழ் தெரிந்திருந்தும் உரையாடிய இடம் பூஜை அறை என்பதால் அங்கே தமிழில் பேசக்கூடாது என்பதால்தான் சமஸ்கிருதத்தில் பேசினாராம். பூஜை அறையிலும் தமிழ் தீண்டத்தகாத மொழி.

ஒரு திருமணத்தில், திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் வராததால் பார்ப்பனச் சிறுவன் ஒருவனை அனுப்பி வைத்தார்களாம். கருமாதியில் ஓதப்படும் மந்திரம் மட்டும்தான் அவனுக்குத் தெரியும் என்பதால் அந்த மந்திரங்களையே திருமணத்திலும் ஓதிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மறைமலை அடிகள், ஓதப்படுவது கருமாதி மந்திரம் என்பதை மக்களுக்குப் புரிய வைத்து திருமணத்தை நிறுத்தியதோடு பிறகு அவரே தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தாராம். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கருமாதி போன்ற நமது வீட்டு நிகழ்ச்சிகளிலும் தமிழுக்கு இடமில்லை.

வேண்டுதலுக்காக கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.

சமஸ்கிருதத்தை பிறர் மீது மேலும் திணிக்க எத்தணிக்கும் இத்தருணத்தில் அதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ் மொழியின் விடுதலையோடும் மக்களின் விடுதலையோடும் சேர்ந்த ஒன்றாகக் கருதி நமது போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தோழர் காளியப்பன்
“தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் உரை.

கால்டுவெல் அவர்களின் 200-வது நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழகத்தில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். கால்டுவெல் பற்றி கருணாநிதி அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதா கால்வெல் சிலைக்கு மாலை அணிவித்து முடித்துக் கொண்டார். திராவிட என்கிற பெயரைத் தாங்கியுள்ள கட்சிகள் அரசியல் பிழைப்புக்காக வயிறு வளர்க்கும் கட்சிகளாக சீரழிந்துவிட்டன. இந்தச் சூழலில் கால்டுவெல் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வதன் மூலம் மோடி அரசு தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளை முறியடிப்பதும், தமிழின் சிறப்பை வளர்த்தெடுப்பதும் நமது கடமை என்பதால் நாம் கால்டுவெல் அவர்களுக்கு தமிழகமெங்கும் விழா எடுக்கிறோம்.

14 ஆண்டுகால கடும் உழைப்பிற்குப் பிறகு “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை வெளியிட்டு, ‘எதிர்காலத்தில் இதனைவிட சிறந்த ஆய்வுகள் தமிழில் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என தனது விருப்பத்தையும் பதிவு செய்தார் கால்டுவெல். ஆனால் அவர் விரும்பியதைப் போன்றதொரு ஆய்வு இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

செழுமையான, வளமையான மொழியைக் கொண்ட மக்கள் பொருளாதார – நாகரிக நிலையில் ஏன் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த போது கண்டறிந்து அதற்கான காரணங்களையும் ஆய்ந்தறிந்து நூல்களை இயற்றினார் கால்டுவெல்.

தென்னிந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதையும், அவற்றுக்கெல்லாம் தமிழே தாயாக இருப்பதையும், தென்னிந்திய மக்களிடையே உடல் அமைப்பிலும் ஒற்றுமை இருப்பதையும் கண்டறிந்து ”திராவிட இனம்” என்கிற கருத்தாக்கத்திற்கு கால்டுவெல் வந்தடைந்தார்.

பார்வையாளர்கள்

பிறப்பால் ஏற்றத் தாழ்வற்றவர்களாகவும், சாதி – தீண்டாமை பாராட்டாதவர்களாகவும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்தார்.

பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தால் உட்கிரகிக்கப்பட்ட நிலையில் தமிழ் மட்டும் தனித்து நின்று தனது தனித்தன்மைய நிலைநாட்டியதையும் கண்டறிந்தார். “தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அதற்கொரு குணமுண்டு!” என்கிற கருத்தாக்கத்துக்கு வித்திட்டது கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் என்றால் அது மிகையாகாது.

நடுவண் அரசு இந்தித் திணிப்புக்கு முற்பட்டபோதெல்லாம் தமிழகம் மட்டுமே அதற்கெதிரான போராட்டங்களை தீவிரமாக நடத்தியது. அதனால்தான் இன்றும்கூட வட இந்திய கட்சிகள், ஊடகங்கள் நம்மீது ஒருவித வெறுப்பைக் கொண்டுள்ளனர்.

இன்று மீண்டும் பா.ஜ.க. வின் மோடி அரசு

  • இந்தியை மிகத் தீவிரமாக திணிப்பதும்,
  • சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதும்,
  • வேத-இதிகாசங்களில் சொல்லப்படும் வர்ணதர்மத்தை நியாயப் படுத்த முயல்வதும்,
  • கங்கையை மாசுபடுத்தும் அகோரி சாமியார்களையும் ஆலை முதலாளிகளையும் விட்டுவிட்டு கங்கையில் எச்சில் துப்பினால் அபராதம் என அறிவித்திருப்பதும்,
  • இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத ஆர்.எஸ்.எஸ் காரர்களை இந்தியப் பாட நூல் நிறுவனத்தில் உறுப்பினர்களாக நியமித்திருப்பதும்,
  • ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் நூல்களை குஜராத்தில் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பதும்,
  • சாதி அமைப்பு சரி எனப் பேசுவதும்,
  • சனாதன தர்மம் இருந்த போது மக்களிடையே மோதல்கள் இல்லை எனவும்
  • கிருஸ்தவ-இஸ்லாமியர்களின் வருகைக்குப் பிறகே மக்களிடையே மோதல்கள் உருவானதாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்வதும்,
  • தமிழன் – தெலுங்கன்-மலையாளி-வங்காளி என தனித்தனி தேசிய இனங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது; இந்தியாவில் இருப்பது இந்து என்கிற ஒரே இனம் மட்டும்தான் என பிற தேசிய இனங்களை மறுதலிப்பதும்,
  • விமானம் பற்றிய அறிவியல் இராமாயணத்தில் இருப்பதாகவும்,
  • காந்தாரியின் கருச்சிதைவு பிண்டங்களை பாட்டில்களில் போட்டு நூறு கௌரவர்களை உருவாக்கியது ஸ்டெம்செல் மருத்துவ அறிவியல் மகாபாரதத்திலேயே நிறுவப்பட்டது என கதை அளப்பதும்

வேறு வேறு அல்ல. இவை எல்லாம் வேத – புராண – இதிகாச புரட்டுகளுக்கு அறிவியல் சாயம் பூசி, வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சியே அன்றி வேறல்ல.

மார்க்ஸ் சுட்டிக் காட்டியதைப் போல அன்று கல்வியை மற்றவர்களுக்கு மறுத்ததன் மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பனர்கள் முயற்சித்தார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் இந்தியாவை “மொழிகளின் தொட்டி” என்பார்கள். சமஸ்கிருதத்தை உலக மொழிகளின் தாய் என்கிறார்கள் பார்ப்பனர்கள். இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழித்தோங்கிய கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் 11-ம் நூற்றாண்டில் வரிவடிவம் பெற்ற சமஸ்கிருதம் எப்படி தாயாக இருந்திருக்க முடியும்?

தரவுகள் மூலம் உண்மையை நிறுவும் ஐரோப்பிய ஆய்வு முறை பார்ப்பனர்களுக்கு உகந்ததாக இல்லை என்பதாலும், ஆங்கிலேயர்களின் கல்வி முறை மனுதர்மக் கல்வி முறைக்கு எதிரானதாக இருப்பதாலும் இவைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள் பார்ப்பனர்கள்.

அதனால்தான் வேத-இதிகாசங்களில் உள்ள புரட்டுகளைப் பற்றி எழுதினால் அதற்குத் தடை விதிக்கிறார்கள். இன்று சமஸ்கிருதம் மந்திரங்களில் மட்டுமே ஓதப்படும் வெறும் ஓசை மொழியாக சுருங்கிப் போயுள்ளது. சனாதனக் கருத்துக்களை மக்களிடையே நிலைபெறச் செய்யவும் நடைமுறைக்குக் கொண்டு வரவும் அவர்கள் நம்மீது சமஸ்கிருதத்தை திணிக்க முற்படுகிறார்கள்.

நமக்கு இன்று தேவை மொழிப் பெருமிதம்; தாய்மொழிப் பெருமிதம்; தமிழ் மொழிப் பெருமிதம். தாய் மொழியே சுயமரியாதைக்கு அடிப்படை. தாய் மொழி அழிக்கப்பட்டால் சுயமரியாதையும் சேர்ந்தே அழியும். எனவே, தமிழ்ப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் ஒன்று படுவோம்! ஓரணியில் திரள்வோம்! ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம். அதற்காக கால்டுவெல் அவர்களின் 200 வது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் உறுதி ஏற்போம்!.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராஜன் நன்றி கூறினார்.

தோழர் இராஜன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராஜன் நன்றியுரை

கருத்தரங்கத்தையொட்டி பேருந்துகளிலும் நகரின் பல பகுதிகளிலும் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரியான தருணத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டதாக கருத்தரங்கில் பங்கேற்றோர் பாராட்டினர்.

சுவரொட்டிகள், முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

2. தஞ்சையில் ஆகஸ்ட் 3, 2014 ஞாயிற்றுக் கிழமை நடந்த கருத்தரங்கம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை

3. ஆகஸ்ட் 17, 2014 அன்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்

‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய் – அதுவே உயர்ந்த மொழி – தெய்வ மொழி’ என்று நிலை நாட்டப் பட்ட பார்ப்பனியக் கருத்தியலை தகர்த்து, தமிழே தென்னக மொழிகளின் தாய், அழகும் வளமும் நிறைந்து தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி தமிழ் என்பதைத் தக்க வரலாற்று சான்றுகளுடன் ஆணித்தரமாய் நிலை நாட்டிய அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கம் 17.08.2014 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு சூலூர் (கலங்கல் பாதை), அரிமா சங்கத்தில் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழர் சுரேஷ், ம.க.இ.க நன்றியுரை வழங்கினார்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
கோவை