privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !

ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !

-

தேநீர் மாதிரி அல்ல, காஃபி கொஞ்சம் செலவாகும் பொருள் தான். அதுவும் கும்பகோணம் டிகிரி காஃபி, நரசுஸ் பில்டர் காஃபியென்று தரமாக போனால் இன்றைய விலைவாசியில் ஒரு சிறு குடும்பத்திற்கே கணிசமாக செலவாகும். முதல் தரமான காஃபித்தூள் இந்தியாவில் கிலோ ஒன்றுக்கு ரூ.500 க்குள் கிடைத்து விடுகிறது. ஆனால் உலகத் தரமான காஃபியின் விலை என்னவாக இருக்கும்? கொஞ்சம் அதிகம் தலைவா! ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் மட்டும்தான்.

பிளாக் ஐவரி காஃபி
யானை சாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாக் ஐவரி காஃபி.

அதில் என்ன சிறப்பு? புனுகுப் பூனை காபி பழங்களை சாப்பிட்டு விட்டு எச்சமாக போடும் காபி கொட்டைகளை சுத்தப்படுத்தி இந்த விலைக்கு விற்கிறார்கள். தாய்லாந்தில் தயாராகும் இத்தகைய காபி கொட்டைகள் இயற்கையான முறையில் நொதிக்க வைக்கப்படுவதால் தான் இந்த விலையாம்! கோபி லுவாக் என்ற கம்பெனி இதனை குறைந்த அளவில் தான் தயாரிக்கிறது. சிங்கப்பூர், துபாய் போன்ற வாழத்தெரிந்த முதலாளிகள் உள்ள நாடுகளில், சில நட்சத்திர விடுதிகளில் மட்டும்தான் இந்த காஃபி கிடைக்கிறது. ஒரு கப் காஃபியின் விலை ரூ 5 ஆயிரம் மட்டுமே.

இது தவிர தாய்லாந்தில் உற்பத்தியாகும் புகழ்பெற்ற பிளாக் ஐவரி காஃபியும் கிலோ ஒன்றுக்கு ரூ 1 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. ஆண்டுக்கு 200 கிலோ தூள் மட்டும் தயாரிக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய நாற்பது உணவகங்களில் மாத்திரம் கிடைக்கும் இந்த காஃபி ஒரு கப் விலை ஏறக்குறைய நான்காயிரத்தை தாண்டும்.

இது யானைக்கு வாழைப்பழம், கரும்பு, புல் ஆகியவற்றுடன் காபி கொட்டையையும் கொடுத்து அதன் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லையில் உள்ள தங்க முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த நிறுவனம் பல யானைகளை காஃபி தூளுக்காக பராமரித்து வருகிறது. காஃபி தூள் லாபத்தில் எட்டு சதவீதம் மட்டும்தான் யானைச் செலவு. இந்தக் காஃபி அமெரிக்காவின் பிரபலமான சில கடைகளிலும் கிடைக்கும். பிறகு பூலோக சொர்க்கம் என்றால் சும்மாவா?

பூக்கும் தாவர வகைகளில் நான்காவது பெரிய எண்ணிக்கையில் உள்ள தாவர குடும்பம் காஃபி. ஆண்டுக்கு ஒரு முறை பூப்பூத்து காய்க்கும் இம்மரம் அல்லது புதர்ச்செடியில் கிடைக்கும் காஃபி பழங்களின் கொட்டைகள் தான் பழுப்பு நிற காஃபிக்கு மூலதாரம்.

காஃபியில் இரண்டு வகை உள்ளது. ரோபஸ்டா வகை காஃபி சமவெளியில் கூட பயிரிடக் கூடியவை. இதில் மணம் குறைவு, காஃபியின் அளவு அதிகம், எனவே விலை மலிவு. பிளான்டேஷன் ஏ என்ற அராபிக்கா வகை தான் இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் ஆண்டுக்கு உற்பத்தியாகும் மூன்று லட்சம் டன் காஃபியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அராபிக்கா வகையைச் சேர்ந்தது. இதன் உலக சந்தை மதிப்பு டன் ஒன்றுக்கு 2000 ஆயிரம் டாலர்கள் வரையிலும் இருக்கிறது.

காஃபி சாப்பிட வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? இதிலுள்ள காஃபின் நரம்பு மண்டலத்தோடு வினையாற்றி புத்துணர்ச்சியை தருகிறது. தலைவலி, பதட்டம் மட்டுமின்றி சிந்தனையை உற்சாகப்படுத்தும் சக்தியும் காஃபிக்கு உண்டு. குடலில் வரும் சிரோசிஸ் நோயை தடுக்க வல்லது காபி. ஆனால் உலகில் எல்லா இடத்திலும் காபியை பாலுடன் சேர்ந்து யாருமே அருந்துவதில்லை, நம்மைத் தவிர. பாலோடு சேர்ந்து அருந்தும் போது காஃபியின் முழுமையான பலன் கிடைக்காது.

பிளாக் ஐவரி காஃபி
மேல்தட்டு காஃபி குறித்து தெரிந்து வைத்திருப்பதும், அருந்தி சொல்வதும் நுகர்வுக் கலாச்சராத்தின் முக்கியமான தகுதி.

இன்றைய நகர்மயமாக்கல் சூழலில் தேநீரை விட ஓரிரண்டு ரூபாய் அதிகமாக இருப்பதால் புத்துணர்வு தேவைப்பட்டாலும் காஃபியை தவிர்க்கிறார்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்கள். சரவண பவனில் 200 மிலி காபியின் விலை ரூ 25. மால்களில் அதன் விலை ரூ 50. காபி டே போன்ற கடைகளில் ரூ 100-ல் ஆரம்பித்து ரூ 2500 வரை இருக்கிறது. கோல்டு காஃபி, சாக்லெட் பிளேவர், மேங்கோ பிளேவர், காஃபி வித் ஐஸ் க்ரீம், ஹாட் காஃபி என பல வகைகள் உள்ளன. இந்த மேல்தட்டு காஃபி குறித்து தெரிந்து வைத்திருப்பதும், அருந்தி சொல்வதும் நுகர்வுக் கலாச்சராத்தின் முக்கியமான தகுதி.

தாய்லாந்தின் பிளாக் ஐவரி காப்பியை ஒரு கப் ரூ 4 ஆயிரத்துக்கு குடிக்கும் கனவான்கள் நூற்றாண்டு காலம் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஒயினுக்காகவும் நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகின் மிகச் சிறந்த பகுதியை பார்ப்பது, அருந்துவது, நுகர்வது, அனுபவிப்பது அவர்களின் பொழுது போக்கு மட்டுமல்ல, வாழ்க்கைத் தரத்தின் அடையாளமும் கூட. இந்த தரத்தை அடைவதற்கு நிறைய பணம் வேண்டுமே?

அந்தப் பணத்தை அவர்களுக்கு வழங்குவதற்கென்றே வங்க தேசத்தில் ஆயத்த ஆடைத் தொழிலாளிகளும், தாய்லாந்தில் காலணிகளை தயாரிக்கும் குழந்தை தொழிலாளிகளும், இந்தியாவில் சுமங்கலித் திட்டத்திற்காக ஜவுளி ஆலைகளில் பணிபுரியும் இளம் பெண்களும், அமெரிக்காவின் ஆயத்த ஆடை நிறுவனங்களில் திருட்டுத்தனமாக குடியேறி உழைக்கும் சீனத் தொழிலாளிகளும், இதுபோல உலகெங்கும் இருக்கும் எல்லா அடிப்படைத் தொழிலாளிகளும் வாழ்க்கை முழுக்க உழைக்கிறார்கள்.

இவர்கள் உழைத்துக் கொடுக்கும் பணம்தான் சீமான்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் யானை காஃபியையும், புனுகு காஃபியையும் அருந்துவதற்கு பயன்படுகிறது. ஆகவே சொல்லுங்கள், காஃபி என்றால் புத்துணர்ச்சி மட்டும்தானா?