Friday, May 9, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்கோடீசுவரக் கொள்ளையர்கள் !

கோடீசுவரக் கொள்ளையர்கள் !

-

முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், திலிப் சாங்வி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி: கோடீசுவரக் கொள்ளையர்கள்!

1990-களில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தரகு முதலாளிகள்தான் உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இப்பொழுது அந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ 46. அன்று 32 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அக்கோடீசுவர முதலாளிகளின் சொத்து மதிப்பு, இன்று 17,630 கோடி டாலர்களாக விசுவரூபம் எடுத்திருக்கிறது. இந்த 46 கோடீசுவர முதலாளிகளுள் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ஆர்சிலர் ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர் லட்சுமி மிட்டல், சன் ஃபார்மா அதிபர் திலிப் சாங்வி, விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் நிறுவனப் பங்குதாரர் பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி ஆகிய ஐந்து பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் 5,23,897 கோடி ரூபாயாகும். இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் சரிபாதி இந்த ஐந்து தரகு முதலாளிகளிடம் குவிந்திருப்பதாக (8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிடுகிறது.

10-poorஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், வெறும் 5 பேர் அடைந்திருக்கும் ‘வளர்ச்சி’ மலைக்கத்தக்கதாக இருக்கும்பொழுது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ பேரழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

  • இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் (64 கோடி பேர்) வறுமையின் நிழலில் வாழ்கின்றனர்.
  • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5,000 குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல், நோய் தாக்குண்டு இறந்து போகின்றனர். உலகின் மொத்தமுள்ள நோஞ்சான் குழந்தைகளுள் 46 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாகும்.
  • கொடிய பட்டினியால் தாக்குண்டுள்ள 79 நாடுகளில் இந்தியா 65-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • இந்திய விவசாயிகளுள் 49 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்குண்டு உள்ளன. இந்தக் குடும்பங்களின் சராசரி கடன் சுமை தலா 25,891 ரூபாய். கடந்த இருபது ஆண்டுகளில் கடனை அடைக்க வழியின்றித் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,70,490.
  • தனியார்மயத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகளின் ஆண்டு வருமானம் 30,000 மடங்கு அதிகரித்திருக்கும்பொழுது, இந்தியத் தொழிலாளர்களின் கூலி 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபொழுதில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் – அதாவது தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படும் வேகம் 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இவை போன்ற மலைக்கும் மடுவிற்குமான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விசயம் நிச்சயம் புலப்படும். கோடிக்கணக்கான விவசாயிகளின், தொழிலாளர்களின், பிற உழைக்கும் மக்களின் உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி, வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி, சமூக அடுக்கின் உச்சியில் இருக்கும் மேட்டுக்குடி கும்பலிடம் கொண்டுபோய் சேர்த்ததன் விளைவாகத்தான் 5 பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு 5,23,897 கோடி ரூபாயாக வீங்கிப் போயிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதிதாகப் பதவியேற்றுள்ள மோடி அரசு ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு மானியங்களை ஒழிக்க வேண்டுமென்றும், தொழிலாளர் நலச் சட்டத்தையும் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் திருத்த வேண்டுமென்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்டவற்றை அறவே நீக்க வேண்டுமென்றும் கூறி வருகிறது. மோடி அரசின் இந்த வளர்ச்சிப் பாதை இந்திய உழைக்கும் மக்களுக்குப் பேரழிவுப் பாதையேயாகும்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________