privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்டிமிக்கி பேராசிரியர்

டிமிக்கி பேராசிரியர்

-

ண்பர் ஒருவர் பேராசிரியர்.

கனமான வருவாய் இருக்கையை ‘போராடிப்’ பிடித்தவர். சம்பள கவருக்கு வெளியேயும் சமூக உணர்வை கொப்பளித்துக் காட்டி, அது வேலைக்கு ஆபத்து இல்லாத வகையில் இருக்கும் ஸ்ட்ரேடஜி தெரிந்தவர்.

hypocrite-2சமூக நடைமுறையில் உள்ள அமைப்புத் தோழர்களை அழைத்து பேசுவதிலும் அவர்களுக்கு புதுப்புது ‘ஐடியா’ வழங்குவதிலும் வற்றாத வள்ளல் அவர். என்னை விட வயதில் மூத்தவர் ஆதலால், பார்க்கும் போதெல்லாம் உரிமையுடன் ஒட்டியும், வெட்டியும் பேச்சில் பொறிபறக்கும்.

“என்னங்க தம்பி, சும்மா பிரச்சாரம் பண்ணிகிட்டு, இன்னேரம் அவுனுங்கள ‘அனிகிலேட்’ பண்ண வேணாம், கம்யூனிஸ்டுகளெல்லாம் முன்ன மாதிரி இல்ல, சும்மா பயப்படுறாங்க! எத்தன காலந்தான் நீங்க பிரச்சாரம் பண்ணிகிட்டே இருப்பீங்க, “தி ஏசியா மூட்” – ங்குற நூல்ல குர்டால் என்ன சொல்றார்னா…” என்று ஆரம்பித்து உலகம் முழுக்க வலம் வந்தவர், நான் கொடுத்த ஆர்ப்பாட்டத்துக்கான துண்டறிக்கையை புரட்டிப் பார்க்கவே இல்லை.

“சார்! வந்துருங்க ஞாயிறுதான் ஆர்ப்பாட்டம்” என்று வலியுறுத்த,

“வெரிகுட்! கல்வி தனியார்மயம் ஆவுறத பத்தி நைன்-டீன்-நைன்டி-நைன்லயே நான் ஆல் இண்டியா செமினார்ல ஒரு ஆர்ட்டிகிள் எழுதிருக்கேன். அப்புறம் தாரேன் உங்களுக்கு! வாரேன் தம்பி சண்டேதான, மொத ஆளா நிப்பேன்!” உற்சாகமாக பேசி அனுப்பினார்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அடுத்த நாள் ஆர்ப்பாட்டத்தில் கடைசி ஆளா கூட அவரைக் காணோம்.

சரி, தொடர்ந்து வலியுறுத்துவதை நாம் செய்வோம். ‘அறிவாளி’ ஆயிற்றே, சமூக நடவடிக்கைக்கு அவர் அறிவும் தேவை என்ற ஆசையில் தொடர்ந்து அவரைச் சந்திப்பது என்வழக்கம்.

“என்னசார்! ஞாயிறு சமூக உணர்வுக்கு விடுமுறையா?” என்று லேசாக பிட்டைப் போட்டேன.

” தம்பி! ஸாரி, அன்னைக்குன்னு பாத்து பி.பி. கொஞ்சம் அதிகமாகி கொஞ்சம் உடம்புக்கு பிரச்சனையாயிடுச்சு” என்றவர் அதோடு நிற்காமல், “என்னங்க எதிரி ஏறி அடிக்கிறான், இப்பப் போயி நம்ப ஆர்ப்பாட்டம், முழக்கம்னா… ஐ டூ நாட் பிலிவ் இட்!” என்று முகத்தை சுழித்து, “நம்ப தியரிட்டீசியன் சொன்ன மாதிரி செயல் ஒன்றுதான் சிறந்த சொல்!” என்றார் தணலாக!

“சார்! அப்ப அந்த காலேஜ் தாளாளரை போட்டுத்தள்ள நீங்க லீட் பண்றிங்களா?” என்றதுதான் தாமதம்,

“என்ன தம்பி! வீ ஆர்  ஐடியாலஜிஸ்ட், ஆக்சனிஸ்ட் எப்போதும் வேற குரூப்பா இருக்கணும், அதான் ஸ்ட்ரேடஜி” என்று இருக்கை நுனிக்கு வந்தவர், “சாந்தி, தம்பிக்கு டீ கொண்டு வா!” என்று மனைவிக்கு அவசரமாக ஆணையிட்டார்.

“என்ன சார் , அனிகிலேசன் தான் இப்ப தேவைங்குறிங்க, அதுக்கு யாரும் லாயக்கில்லிங்குறிங்க, உங்கள கூப்பிட்டா, ஓரம் கட்டுறிங்க!” என்று வாதத்திற்கு இழுத்தேன்.

எனது விடாப்பிடியை சற்றும் எதிர்பார்க்காத பேராசிரியர், “தம்பி, மொதல்ல டீய குடிங்க”, என்று விருந்தோம்பினார்.

“தம்பி உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறது? நாங்களெல்லாம் தியேரிட்டீசியன், நாட் பொலிட்டீசியன். நாலெட்ஜ் ஈஸ் எ பவர்ஃபுல் ஆக்சன்!” என்று  வார்த்தைகளை அள்ளிவிட்டார்.

“என்ன சார்! அறிவாளிங்களுக்கும், தத்துவவாதிகளுக்கும் நடத்தை வேணமா? நீங்கதான் சொன்னீங்க செயல் ஒன்றே சிறந்த சொல்லுன்னு, இப்ப உங்களுக்குன்னா வேற ரூட் போடுறீங்களே…”

“தம்பி! அறிவு உணர்ச்சிவசப்படக் கூடாது, தமிழன் வீணாப் போனதே இப்படி உணர்ச்சிவசப்பட்டுத்தான்… நான் சொல்ல வந்தது பெரிய சப்ஜக்ட், இன்னொரு நாள் டீப்பா பேசுவோம்… டீய குடிங்க… தம்பி! யெங் பிளட், அப்படித்தான் சூடா கேக்கத் தோணும், தம்பி… நீங்க ஒரு செட் ஆஃப் பீப்புள மட்டுந்தான் பாக்குறீங்க, நான் பல ஆங்கிள்ல, பல பேர பாக்குறேன், என் சர்க்கிள்ல பல ஆளும் வாரான், அதால மக்களோட மைன்ட் ரீடிங் பவர் எங்களுக்கு அன் பிளான்டாவே உண்டு!” என்றவர், பேச எத்தனித்த என்னை மீண்டும், “டீய குடிங்க தம்பி, பேச நிறைய இருக்கு… பேசுவோம்”  என்று வாயை அடைப்பதில் நேர்த்தி காட்டினார்.

“சார்! இந்தாங்க வர்ற வெள்ளிக்கிழமை தாது மணல் கொள்ளைக்கு எதிரா ஆர்ப்பாட்டம். இது தவிர வி.வி. மினரல்ஸ்க்கு எதிராக அந்த மாவட்ட உள் கிராமங்களில் பிரச்சார இயக்கம். அவன் மிரட்டி வச்சிருக்குற ஊர்ல போயி, அவனுக்கு எதிராகவே நம்ம தோழர்கள் பிரச்சாரம், செய்தி, படங்கள் பாருங்க…” என்று அவர் பார்வைக்கு அளித்தேன்.

“அட, வெரிகுட், இப்படித்தான் தம்பி போராடணும், அவன் கோட்டையிலேயே போயி கலக்குறீங்களே… வெரிகுட்!” என்றவரிடம்,

“சார்! இதுல பத்து காப்பி இருக்கு, அப்படியே உங்க ஆபிஸ்ல பரப்புங்க… எங்க பத்திரிகையும் இருக்கு, ஒரு பத்து பத்து உங்க சர்கிள்ல விற்பனை செய்யுங்களேன்… கருத்துக்கள் பரவட்டும்…” என்று ஆவலாய் புத்தகங்களை நீட்டினேன்.

முகத்தில் உற்சாகம் இழந்தவராய், “அட! எங்க தம்பி நம்ப சர்க்கிள்ல எல்லாம் வேஸ்ட். ஓசியில கொடுத்தாக் கூட படிக்க மாட்டேங்குறான், சுத்த மட்டிப்பசங்க, அவனுண்டு, ஏனிங் உண்டுன்னு. டார்வின் சொன்ன மாதிரி மேன் ஈஸ் சோசியல் அனிமல்னு போயிகிட்டு இருக்கானுங்க” என்றவர், கொஞ்சம் குரலை தாழ்த்தி அக்கம், பக்கம் மனைவி, மக்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “அப்புறம் தம்பி, நாமெல்லாம் உடனே பப்ளிக்ல ஐடன்டிபை ஆகக் கூடாது, அப்படியே நான் ரகசியமா பல விசயங்கள காலேஜ்ல தூவிவிட்டு இருக்கேன், சமயம் பார்த்து வெளியே வரணும், இல்லேன்னு வச்சுக்குங்களேன் டோட்டல் பிளானும் வேஸ்ட்டா ஆயிடும்! அதனால வச்சுக்குங்க, நேரம் பார்த்து நானே கேக்குறேன் இப்ப வேண்டாம்…” என்று பல ஆங்கிளில் எனக்கு புரிய வைத்தார்.

பிறகு சில நாள் கழித்து மீண்டும் செய்திகள் சொல்லி எப்படியாவது அவரை நடைமுறையில் இணைக்க விரும்பி எனது போராட்டத்தை தொடர்ந்தேன்.

“என்ன சார், இது வரைக்கும் நானும் பழகி பல வருடமா ஒவ்வொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாத்துக்கும் சொல்றேன்… வரவே மாட்டேங்குறீங்க, அன்னைக்கு அவ்வளவு விளக்கியும்…” என்று நான் முடிப்பதற்குள்,

“அட! அத ஏன் கேக்குறீங்க தம்பி, நம்ப ஷேக்ஸ்பியர் மர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்ல வர்ற ஒரு கேரக்டர் கடனுக்கு பதில் இருதயத்தை கொடுங்குற மாதிரி, கொஞ்சம் பழைய கடன்லாம் வந்து மிரட்டி, உடனே பைசல் பண்ண பேங்க், லோனுண்ணு அண்ணைக்கு அலைச்சலா போயிடுச்சி. கார்ல் மார்க்ஸ் சொல்வாரில்ல, சிந்தனை பொருளை தீர்மானிக்கறதில்ல, பொருள்தான் சிந்தனையை தீர்மானிக்குதுன்னு அதுமாதிரி அன்னைக்கு ஆயிப்போச்சு… நம்ம விருப்பம் எறங்கி வேலை பாக்கலாம்னு நெனச்சாலும், சூழ்நிலை ஓவர்லுக் பண்ணுது… மாவோ அழகா சொல்லியிருப்பாரு… மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாயில்லைன்னு….”

அவர் லெனின், ஹோசிமின்னு தொடர்ந்து பேச பேச… சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வேறுபாட்டை, அதாவது சொன்ன மாதிரி வராததுக்கான காரணத்திற்குள் நுழையாமல் இப்படி ஒரு தன்னல கோணத்தில் தத்துவத்தை திரிக்கும் பேராசிரியரின் முழு ‘தம்மிற்கு’ ஈடு கொடுக்க முடியாமல் கொஞ்சம் வதங்கினேன்.

“சரி, சார், பத்து வருசமா பழகுறேன். எங்க அமைப்பு உட்பட எல்லோருக்கும் அப்படி செய்யணும், இப்படி செய்யணும்னு வழிகாட்டுறீங்க… உங்க அறிவுக் கூர்மையையும், சமூக ஈடுபாட்டையும் ஒரு தடவையாவது மக்களோடு சேர்ந்து வந்து பயன்படுத்திக்கக் கூடாதா! நீங்க சொல்ற மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் வீதிக்கு வந்த அறிவாளிங்கதான் சார்!”

hypocriteஉடனே அவர், ” தம்பி! வரக் கூடாதுன்னு இல்ல, டயம் அப்படி, நாங்கள்லாம் இன்டயரக்ட் ஆர்கான்ஸ் மாதிரி, உள்ளிருந்து வேலை செய்யணும், கிளாஸ் ஸ்ட்ரகிள கிளாஸ் ரூம்லய நடத்துனவன் நான்! எதிரிதான் நம்ப ஆயுதத்தை தீர்மானிக்குறாங்குற மாதிரி இப்ப அதுக்கேத்த மாதிரி… ஹ்.. ஹி..”

“அதுக்கில்ல சார், இன்னர் ஆர்கனா இருந்தாலும் மொத்த இயக்கத்தோட இணைஞ்சு இயங்கலேன்னா மூளையும் அழுவிடும்ல… அதான் அதுக்கு ஒரு அமைப்பு, ஒரு நடவடிக்கை தேவைங்குறோம். நீங்க மேற்கோள் காட்டுற தலைவர்களெல்லாம் தொழிலாளிகளுக்கு ஒரு அமைப்பு இல்லேன்னா எதுவுமே இல்லைன்னுதானே சொல்லிருக்காங்க…” என்று  நான் விவாதிக்க,

மேலும் தத்துவார்த்தமாக ரெண்டில் ஒன்று என இறங்குவார் எனக் காத்திருக்க,

“தம்பி, எல்லாம் சரிதான், உங்கள மாதிரி யெங் பிளட்ல நானும் இதவிட பேசுனவன் தான். பாருங்க உங்க வயசுலயே ஒரு முடிவெடுத்து இறங்கிருக்கணும். இப்பப் பாருங்க… பேமிலி செட் அப்… இருக்கே! இண்டியன் சொசைட்டில பெரிய தலைவலி… பொண்டாட்டி, புள்ளன்னு பெரிய புடுங்கல். பையன் டாக்டருக்கு படிக்கிறான். ஒரு ஸ்டஃப்பும் இல்ல. சோசியல் கான்சியசே இல்ல. புரட்சியா, ஒன்னோட வச்சுக்கோங்கிறான்… டோட்டலா கரெப்ட் சிஸ்டம் தம்பி…” என்று எல்லோரையும் திட்ட ஆரம்பித்தார்.

“சார்! அவங்க சிந்தனைக்கு அவங்க இயங்குறாங்க…. உங்க சிந்தனைக்கு நீங்க இயங்குங்க… புரட்சிய மொதல்ல நம்ப உணர்ச்சியில தட்டியெழுப்புங்க… பிறகு அடுத்தவருக்கு. ஒரு கூட்டத்துல வந்து உக்கார்றதுக்கு பத்து வருசமா எதுக்கு சார் இத்தன தியரி, மொதல்ல உங்க தயக்கத்த அனிகிலேட் பண்ணுங்க…” என்றேன் முடிவாக,

“தம்பி! என்ன சூடாயிட்டிங்க, கூல்! கைல என்ன நோட்டீஸ்?… அட! மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமா… வெரிஃபைன்… சரியான நேரத்துல சரியான சுலோகம்… பார்ப்பானுங்க கொட்டத்த அடக்கணும் தம்பி!…” போய்க் கொண்டே இருந்தவரிடம் இயக்கத்தின் அவசியத்தை விளக்கி,

“இந்த முறை கட்டாயம் வாங்க சார்! எதிர்பார்ப்பேன்!” என்று துண்டறிக்கையை தந்தேன்.

“நீங்க போய் மத்த வேலைய பாருங்க, சும்மா எனக்கு போன் பண்ணிகிட்டு உங்க வேலைய கெடுத்துக்க வேணாம், கரெக்ட் நேரத்துக்கு டாண்ணு அங்க நிப்பேன் பாருங்க… ட்ரூத் நெவர் ஃபெயில்ங்குற மாதிரி. இதெல்லாம் கொஞ்ச நாளுதான் தம்பி, பையன் வேலைக்கு போயிட்டான்னு வச்சுக்குங்க அப்புறம் நானும் உங்க கூடத்தான்… ஸ்ட்ரீட் அவர் பேட்டில்… வாங்க தம்பி! மொத ஆளா நிப்பேன்…”

வழக்கமான காரணங்களைத் தாண்டி ஒரு முடிவெடுத்தவர் போலிருந்தது அவர் பேச்சு.

அடுத்த நாள் திரளாக தோழர்கள், முழக்கம், ஆர்ப்பாட்டம், பத்து, இருபது மைல்கல் தாண்டி கம்பெனிக்கு லீவு போட்டுவிட்டு குவிந்திருந்தனர் தொழிலாளர்கள். கூட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து சல்லடைப் போட்டு தேடுவது போல தேடித்தேடிப் பார்த்தேன். இண்டு இடுக்கில், இன்னர் சர்க்கில் இன்டலிஜன்ட் அடையாளத்தோடு தனித்திருப்பாரா என்று திரும்பத் திரும்பத் தேடிப் பார்த்தேன்… கடைசி நிமிடம் வரை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பேராசிரியரைக் காணவில்லை…!

– சுடர்விழி

  1. தோழர் சொல்லும் பேராசிரியர் உண்மையாகவே ஏதோ படித்து ஓரளவு சித்தாந்தத்தை உன்வாங்கியிருப்பார் போலிருக்கிறதே? இன்றுள்ள ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட வெற்றுப் பேச்சுக்கூட ஒழுங்காகப் பேச மாட்டார்கள். ஆனால், தொழிலாளிகளும் சாதாரண (என்று தாங்கள் கருதிக்கொள்ளும்) உழைக்கும் மக்களும் அரசியலை விளக்கிப் பேசினால் ‘இவர்கள் வந்து நமக்குப் பாடம் சொல்வதா?’ என்ற ஈகோ மண்டையைப் பொத்துக்கொண்டு வெடித்துக் கிளம்புகிறது. ‘சரிங்க தோழர், நான் கொஞ்சம் வெளில போக வேண்டியிருக்கு…’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுகின்றனர். ‘நீங்கள் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர், உங்களிடம் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் என்று கூறுகிறார்களே…’
    ‘ஆமாம், ஆனால் இந்த அக்கேடமிக் வேலைகள் வந்துகிட்டு வேறெந்த ஆக்ட்டிவிட்டிக்கும் இப்போவெல்லாம் போக முடியறதில்ல.’ என்று சொல்லிவிட்டு, OLX-இல் இடம் வாங்குவது, விற்பது, புதிய மனைகளை வாங்குவது, வரிவிலக்குப் பெறுவது எப்படியென்று கலந்தாலோசிப்பது, எங்கு கருத்தரங்கிற்குச் சென்றால் எவ்வளவு பயணப்படி வருமானம் வருமென்று கணக்குப்போடுவது… … … போன்ற மிக முக்கியமான “அக்கேடமிக்” வேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிடுகின்றனர்!
    அறத்தோடும் நேர்மையோடும் நடந்துவந்த பேராசிரியர்கள் தலைமுறையை இழந்து வருகிறோம்… அந்த இனமே தற்போது முழுவதும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு குட்டி முதலாளி வர்க்கமாக மாறிவருகிறது…

  2. “டிமிக்கியை” ஆர்ப்பாட்டத்திற்க்கு கூப்பிட்டால், வந்து அடி வாங்க அவர் என்ன லூசுத் தோழரா?ஐடியாவை அள்ளிவிடுபவன்தான் “ஐடியாலஜிஸ்ட்”. காசு கொடு என்று உண்டியலை குலுக்கு.ஊ இஸ் திஸ் ஸ்டுபிட் ஸ்டேரேஞ்சர், என்று சொல்லி நாயை விட்டு கடிக்க விடுவான். தொப்புளை சுத்தி ஊசி போட்டுக்கொண்டு, இருவரும், எல்லாம் பார்ப்பன சதி என்று கூவி ஊரை ஏமார்றுங்கள்.

  3. அவர எதுக்குத் திட்ரீங்க?

    அவர மாதிரி நாங்க நெறைய பேரு இருக்கோம்…

    என்னைப்போல் ஒருவன்….

  4. சமீபத்தில் வினவில் படித்த கட்டுரைகளுள் மிகச் சிறப்பானது இது. சொல்லில் இருந்து செயலுக்கு தாவ பல தடைகள் இருக்கின்றன. போலித்தனம், சொந்த நலம் மீதான பற்று, பயம், குடும்ப நலன் சார்ந்த அக்கறைகள் என. பிரச்சனை ஏதுமற்ற மெழுகுவர்த்தி ஊர்வலங்களுக்கு செல்வதற்கே சோம்பேறித்தனம் தடையாக இருக்கிறது. அதற்கு பதிலாக டிவி பார்க்கலாம், புத்தகம் படிக்கலாம் என்ற ரீதியில். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், போலீஸ் அடி, ஜெயில் என்ற ரீதியில் அழைத்தால் கஷ்டம் தான். மேலும், இவற்றால் சொல்லிக்கொள்ளும்படி விளைவுகள் வருமா என்ற சந்தேகம் வேறு. வாய் சொல் வீரத்தனம் மலிந்து விடுகிறது.

  5. உண்மையை சொல்லுங்கள், அந்த பேராசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன்தானே?

  6. உத்திரவாதமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் எல்லாம் இப்படித் தான் இருக்கிறார்கள்.அரிக்கும் மூளையைச் சொரிந்துகொள்வதற்கு அறிவுஜீவிகளுக்கு மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,மாவோ தேவைப்படுகிறார்கள்.புரட்டல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.சமூகப் பிரச்சினைகள் இவர்களுடைய வீட்டு வாசல் வரை வந்தாலும்கூட அதை நெளிந்து,குனிந்து எப்படி சமாளிப்பது என்று நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.புரட்சி இப்போதைக்கு வராது என்று நம்பிக்கொண்டு ஆனால் எப்படி புரட்சிகரமாக வாய்ச் சவடாலடித்துக் கொண்டிருக்கிறார்களோ அது போலவே இப்போதைக்கு தமக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் திடமாக நம்புகிறவர்கள் இந்த வர்க்கம்.பிரச்சினை வரும்போது யார் கை ஓங்கி நிற்கிறதோ அந்தப் பக்கம் ஒட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள்.இன்றைக்குப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீதான பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஒரு நேர்மையான அறிவுஜீவியின் கடமை என்பது தெரிந்திருந்தும் பாரிய சுயநலத்தின் காரணமாக பாதுகாப்பாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்.மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நீதிக்காகப் போராடி துணைவேந்தர் கல்யாணியின் கூலிப் படையினால் தாக்கப்பட்டு இரு கைகளும் உடைக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் பின்வாங்காது போராடிக்கொண்டிருக்கிற முன்னுதாரணப் பேராசிரியர்களும் உண்டு.அவர்களை நாம் இனம் காண வேண்டும்.பலுகிப் பெருக்க வேண்டும்.ஆளும் வர்க்கம் இவர்களைத் தம் பக்கம் வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் விடாமல் செய்கிறது. நம்முடைய முயற்சி பிந்தங்கியுள்ளது எனலாம்.

    டி

Leave a Reply to Sulad பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க