கால்டுவெல்லை நினைவு கூர்வோம்! பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!
கருத்தரங்கம் கலைநிகழ்ச்சி
கால்டுவெல் தனது ஆய்வை தொடங்கிய தென்மாவட்டங்களில் இந்த கருத்தரங்கை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
இருப்பினும் கால்டுவெல் யார் என்றே தெரியாமல்தான் தென் மாவட்ட மக்கள் உள்ளனர். அதனை உடைக்க கால்டுவெல்லை உயர்த்திப்பிடிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை முன்வைத்து பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், பேராசிரியர்கள் மத்திலும் பரவலாக பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.
கால்டுவெல் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளிலேயே கால்டுவெல்லின் 200-ம் நூற்றாண்டை வெற்றுச்சடங்காகக் கூட கொண்டாடவில்லை, “நாங்கள் நடத்துகின்றோம், உங்கள் பள்ளியில் அனுமதி மட்டும் கொடுங்கள்” என்றால், “தேவை இல்லாத பிரச்சனை வரும் சார்” என தட்டிக்கழித்தனர். பிறகு, ‘கால்டுவெல் பள்ளியில் கால்டுவெல் கருத்தரங்கு நடத்த அனுமதி தரவில்லை என்றால் நம்மை கேவலமாக நினைப்பார்களோ’ என எண்ணியிருப்பார் போல 1000 கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தார் கல்வி நிறுவனர்.
“அமைப்பு பேனரில் நடத்த கூடாது, அரசியல் தொடர்பு இருக்க கூடாது, அரசியல் விசியங்களை பேச கூடாது. கால்டுவெல்லின் அருமை, பெருமைகளை மட்டும் பேச வேண்டும். எதிரில் எஸ்.பி ஆபிஸ் உள்ளது. எங்களுக்கு பிரச்சனை வரும். அமைதியாக நடத்த வேண்டும்” என இன்னும் நீளும் அந்த பட்டியல்.
கால்டுவெல்லை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள், யார் உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதை அனைத்து தரப்பு மக்களுக்கும் தெளிவாக உணர்த்த வேண்டும் என்பதால் அப்பள்ளியை நிராகரித்தோம். பல்வேறு தரப்பு மக்களிடமும் 1 மாதம் பிரச்சாரம் செய்து ஒரு வழியாக கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள உமா திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு நடத்தினோம்.
நிகழ்ச்சி காலை 11 மணிக்கு வரவேற்புரையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் கோ.ராஜபாண்டியன் தியாகிகளுக்கு வீரவணக்க பாடலுடன் தனது தலைமை உரையை தொடங்கினார்.

தோழர் கோ.ராஜபாண்டியன், “மோடி அரசின் சமஸ்கிருத வாரம் இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்” என்பதை சுருக்கமாக பேசி அமர்ந்தார்.

அவரை தொடர்ந்து பேசிய எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் “இந்து – இந்தி – இந்தியா என்னும் இந்துத்துவா அரசியலின் திணிப்பே சமஸ்கிருத வாரம்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார். அதில் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல. குறிப்பாக தழிழகத்தில் இந்து மதம் என்று ஒன்று இருந்ததே கிடையாது. தமிழர்களின் வழிபாடு முன்னோர்களின் வழிபாடு (குல தெய்வ வழிபாடு) தான். அதில் பார்ப்பனர்களால் வஞ்சகமாக (கற்பனையாக) திட்டமிட்டு திணிக்கப்பட்டது தான் இன்று நாம் சொல்லும் இந்துமதம் என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அவரை தொடர்ந்து பேசிய திருநெல்வேலி சவேரியார் கல்லூரி பொருளியில் துறை பேராசிரியர் அமலநாதன் அவர்கள் “பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் பேசினார். அதில் சமஸ்கிருதம் ஒரு மொழிதானே அதை ஏன் படிக்கக் கூடாது என்று சில அறிஞர்களே எண்ணுகின்றனர் ஆனால் அப்படி அல்ல சமஸ்கிருத மொழி திணிப்பு என்பது அதன் பண்பாட்டையும் சேர்த்து திணிப்பது தான் பார்ப்பன எதிர்ப்பு தமிழர் பண்பாட்டை மழுங்கடிப்பதுதான் அதன் நோக்கம் என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
இறுதியாக முடிவுரை பேசிய மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதன் மூலம் அதனுடைய அருவருக்கத்தக்க கேவலமான பண்பாடும் சேர்ந்து திணிக்கப்படுகின்றது என்பதையும் சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கால்டுவெல் எப்படி ஆதாரபூர்வமான ஆய்வுகளில் பிரித்து முன் வைக்கிறார் என்பதையும், தற்போது மோடி அரசு எந்தெந்த வழிகளிலெல்லாம் இந்தி – சமஸ்கிருதத்தை திணிக்கின்றது என்பதையும் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால் அதன் கேவலமான அருவருக்கத்தக்க பண்பாட்டையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று தான் அர்த்தம் என்பதையும் விரிவாக அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான பாடல்கள் பாடியும், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள்” என்ற நாடகத்தையும் நடத்தினர்.
கலை நிகழ்ச்சி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தூத்துக்குடி.