privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அங்கன்வாடி

-

“என் குழந்தைக்கி ரெண்டு வயசாகப் போகுது, உங்க பள்ளிக்கூடத்துல சேக்கறதுக்கான விவரம் தெரிஞ்சுக்கலாம்னு….” நான் முடிக்கக் கூட இல்லை..

குழந்தைகள் காப்பகம்
பூ, காய், கனி, விலங்கு அதோட குட்டிங்க, பறவை அதோட குட்டிங்க, இதுபோல எது எதோட தொடர்பு உடையது என்பதை சொல்லிக் கொடுப்போம் (படம் : உதாரணத்துக்கு மட்டும்)

“உள்ள வாங்க மேடம், இந்த சேர்ல உக்காருங்க” என்றவர் ஃபேன் சுவிட்சை தட்டிவிட்டு நேராக இருந்த நாற்காலியை தேவையில்லாமல் சரிசெய்து போட்டு மரியாதையை காட்டிய விதமே மிகவும் பவ்யமாக இருந்தது. பலிகொடுக்கக் கொண்டு போகும் ஆட்டுக்கு செய்யும் மரியாதையை செயல்ல காட்டிவிட்டு வேலையை தொடங்கிச்சு அந்தம்மா.

“வருசத்துக்கு 13,500 ரூபா டேர்ம் பீஸ் கட்டணும். நீங்க ரெண்டு அல்லது மூணு முறையா பிரிச்சுக்கூட கட்டலாம் மேடம். அட்மிஷன் பீஸ் 2,500 ரூபா, ஆண்டு விழாவுக்கு காஸ்டியூம் வாங்க ஏதாவது கொஞ்சம் பணம் கட்றா மாதிரி இருக்கும். கராத்தே, பரதநாட்டியம், பாட்டுகிளாஸ் இதுவும் இருக்கு. இது வேணுன்னா அதுக்கு தனியா பீஸ் கட்டணும். மத்தபடி எதுக்கும் நாங்க காசு வாங்கறதில்ல.”

“நாங்க முக்கியமா குழந்தைக்கி அடிப்படையான விசயங்களத்தான் சொல்லித்தர்றோம். வீட்ல பாத்திங்கன்னா குழந்தைங்க தானா சாப்பிடாது. ஊட்டச்சொல்லும். கண்ட எடத்துலயும் கண்டதையும் பண்ணி வப்பாங்க. வீட்டுக்கு வர்ரவங்ககிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் பண்ணாது. ஹாய், பாய் இப்படி எதுவும் சொல்லாம மரியாதை குறைவா நடந்துக்கும். அடிப்படையில டிசிப்ளினா நடந்துக்கணுங்கறத கத்துக் கொடுக்குறோம்.

சிலபஸ்ன்னு எடுத்துகிட்டா பூ, காய், கனி, விலங்கு அதோட குட்டிங்க, பறவை அதோட குட்டிங்க, இதுபோல எது எதோட தொடர்பு உடையது என்பதையும், சாலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும். அப்பறம் யோகா, பாட்டு, பரதநாட்டியம் இதெல்லாம் கத்துக் கொடுப்போம். இதுக்காக நான் ஸ்பெசலா குழந்தைகளடோ சைக்காலஜி படிச்சிருக்கேன். அதையெல்லாம் தாண்டி நானும் ரெண்டு குழந்தைகளுக்கு தாய்.

காலையில ஒன்பதரை மணிக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரை மணிக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம். மாலை நாலுமணி வரைக்கும் குழந்தைங்கள விடலாம். கூடுதலான நேரம் விட்டா சாப்பாடு கொடுத்து விடணும். கண்டகண்ட பாக்கெட் ஐட்டமெல்லாம் அனுமதிக்கிறது கிடையாது. ஒன்லி ஹெல்த்தி ஃபுட், வீட்ல பிரிப்பேர் பண்ணது மட்டுந்தான் கொண்டு வரணும். மத்தபடி எங்க குழந்தைங்க போல பாத்துப்போம். நீங்க என்னைக்கி மேடம் அட்மிஷன் போட்றீங்க? அட்ரச சொல்லுங்க?”

மூச்சு முட்ட ஒப்பிச்ச அந்தம்மா கூலா இருந்தாங்க. எதுத்தாப்போல கேட்டுட்டு இருந்த எனக்குதான் வேத்துப்போச்சு. ஏழு கழுத வயசான நமக்கே டிசிப்பிளினோட இருக்க முடியாம தடுமாருறோம். பச்ச பிள்ளைக்கி எதுக்குங்க டிசிப்பிளின்.  அந்தம்மா சொல்ற கணக்கப் பாத்தா ஒரு மாச மளிகை சாமானுக்கு செய்ற செலவ ஒரு மாசம் புள்ளைய பாத்துக்க கொடுக்கணும் போல இருக்கு. பட்டினி கெடந்து, பிள்ளைய அவங்கள பாத்துக்க சொல்லிட்டு நமக்கு என்ன வேலையின்னு தோணினாலும் ஒரு வீட்டில் ஒரு குழந்தையா தனிச்சு வாழும் இந்த நகர வாழ்க்கையில குழந்தைகளோட சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமும் இருக்கு என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

அங்கன்வாடி
மத்த பிள்ளைகள பாத்து எல்லாரைப்போலதான் நாமளுங்கற எண்ணம் உருவாகும்.

கிராமத்துல பிள்ளைங்க சேந்து விளையாடும், சேந்து சாப்புடும், குழந்தைகள் உலகத்துல உள்ள நல்லது கெட்டது புரிஞ்சுக்கும் வாய்ப்பு அதிகம். மத்த பிள்ளைகள பாத்து எல்லாரைப்போலதான் நாமளுங்கற எண்ணம் உருவாகும். தெருவுல வித்துட்டு போற எல்லாத்துக்கும் அடம் பிடிக்காம வீட்டு சூழல் புரிஞ்சுருக்கும். வீட்ல பெரியவங்க இருப்பாங்க, கூடமாட பாத்துப்பாங்க. வெளியே தெருவில கூட்டிட்டுப் போவாங்க. அக்கம்பக்கம் உள்ளவங்க கூட ஒத்தாசையா நடந்துக்குவாங்க.

ஆனா நகரத்துல நெலம வேற. மனிதர்களின் வாழ்க்கை முறை, அதன் சூழல், குழந்தைகளின் உலகம் வேறா இருக்கு. பெற்றோர் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளை தனியா விட முடியாது. அதிக படிப்பு, பெரிய வேலையா இருந்தாலும் சரி (ஆடம்பர வாழ்க்கையை பெருக்கிக் கொள்ள), கூலி உழைப்பு சாப்பாட்டுக்கே கணக்கு பார்க்கும் வேலையா இருந்தாலும் சரி, கணவன் மனைவி இருவருமே வேலைக்கி போக வேண்டிய சூழ்நிலை நகரத்து மக்களுக்கு. குழந்தைகளோ சேர்ந்து பழக, விளையாட முடியாமல் தனிச்சு போய்றாங்க. அதனாலேயே சின்ன வயசில குழந்தைகளை இதுபோல இடத்துக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்படுது.

தேவை இருந்தாலும் நமக்கான இடம் இது இல்லங்கற முடிவோட அரசு அங்கன்வாடி இருக்கும் இடத்தை விசாரிக்கத் தொடங்கினேன். அனேகம்பேர் கை காட்டியது தனியார் கல்வி சாரா பள்ளியைதான். “அங்கன்வாடி நம்ம பகுதிக்கு எங்க இருக்குன்னு தெரியல” என்றதே பதிலாக இருந்தது. அங்கன்வாடியை தேடும்போது அடிக்கொண்ணு டே-கேர், கிரச், நர்சரி என்று தனியார் நிறுவனங்களத்தான் கடந்து போகவேண்டி இருந்தது.

நான் அலைஞ்சு திரிஞ்சு தேடியதுல கண்டுபிடிச்ச ரெண்டு அங்கன்வாடியில ஒன்னு பழுதடஞ்சு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. “குழந்தைகள் யாரும் வர்ரதில்ல, தடுப்பூசிக்காக கர்ப்பவதியும், குழந்தைகளும் வாரத்துக்கொருக்க வருவாங்க, மத்தபடி பூட்டிதான் கெடக்கு”ங்கற தகவலோட அடுத்த அங்கன்வாடியில சந்திச்சவங்கதான் சாரதா.

புறக்கணிக்கப்படும் அங்கன்வாடிகள்
புறக்கணிக்கப்படும் அங்கன்வாடிகள்

பல குழந்தைங்க அம்மா அம்மா என்று அழுக, ஒரு குழந்தை முந்தானையை பிடிச்சு இழுக்க, இரு குழந்தைகள் அடித்துக்கொள்ள, அவர்களை சமாதானம் செய்யும் நேரத்தில் மற்றொரு குழந்தை சத்துமாவு பாக்கெட்டை பிரிச்சு கொட்ட குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல என்று தசாவதானியாக வேலை பார்த்தவரிடம் எனக்கு பதில் சொல்வது கூடுதல் சுமையாக இருக்குமோ என்ற தயக்கத்தோடவே அணுகினேன்.

ஆனால் மிகவும் பக்குவமாக சொன்னார் “சமைக்கிற நேரமாச்சு. இன்னும் டீச்சர் வரல. கேஸ் வேற தீந்துப்போச்சு. வெளிய வெறகடுப்புலதான் சமைக்கணும். கொழுக்கட்ட புடிக்கணும், முட்ட அவிக்கணும். இந்த பிள்ளைங்க வேற படுத்தி எடுத்துருவாங்க” என்று தன் வேலையின் நெருக்கடி நிலையை புலம்பிய போதே ஒரு குழந்தை மலம் போய்விட்டது. “கொஞ்ச நேரம் இங்க உக்காருங்க நான் இப்ப வந்துர்ரேன்.” என்று அந்த வேலையை கவனித்துவிட்டு வந்தார்.

ஒரு வயசு புள்ளையெல்லாம் சேத்துக்குவோம். நீங்க கொண்டாந்து விடுங்க. முதல்ல கொஞ்சம் அழும், அடம் பண்ணும். போகப் போக சரியாகிடும். இந்த அஸ்வின் கூட ஒரு வயசுலேருந்து வர்ரான். நான் எந்த வேல பாத்தாலும் எம்பின்னாலேயே வருவான். சேர்லதான் உக்காருவான். மடில போட்டுதான் தூங்க வக்கணும். ஒரு நாள் வீட்டுல இருக்க மாட்டான், பால்வாடிக்கி போறேன்னு அழுது அடம்பிடிக்கிறான்னு அவங்க அம்மா சொல்லுவாங்க.

இந்த பாப்பா பேரு க்ரேஸ் நல்ல புள்ள. நல்லா சாப்புடுவா, தூங்கி எழுந்து நான் சாப்புடும் போதும் சாப்புடுவா. வீட்டுக்கு போகும் போது மறக்காம கொழுக்கட்டைய கேட்டு வாங்கிட்டு போவா. நல்லா சாப்புடற குழந்தைகள பாத்துக்கறதுல எந்த கஸ்டமும் இருக்காது.

காவியா சமத்துக்கார பொண்ணு எந்தப் பொருள் கீழ கெடந்தாலும் எடுத்து வச்சுருவா. யார் ஒண்ணுக்கு போனா, ரெண்டுக்கு போனான்னு கரெக்டா வந்து சொல்லிருவா. ஒன்னு கேட்டா ஒம்பது சொல்லுவா நல்ல சுட்டி.

anganwadi-3காலையில ஒம்பது மணிக்கு வருவேன் நாலு மணிக்கு திரும்பி போவேன். அஞ்சு வருசமாச்சு இந்த வேலைக்கு வந்து. வேலைக்கு சேந்த புதுசுல ஒரே தலைவலியா இருக்கும். ஒரு லட்சரூபா குடுத்து இந்த வேலைக்கு வந்தோமே நம்மளால நெலைக்க முடியுமான்னு தொணுச்சு. இப்ப ஒரு நாளைக்கி லீவுன்னு வீட்டுல இருக்க முடியல இந்த பிள்ளைங்க ஞாபகம் வந்துருது.

ஒவ்வொரு குழந்தையின் தனித் தன்மை பத்தி கூறியது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது. அதே வேளை குழந்தைகளின் அழகான மழலை பேச்சை புரிந்து கொள்ளும் அறிவும் ஆற்றலும் நமக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ள தோன்றியது.

அங்கன்வாடியில் ஆயா வேலை பார்க்க படிப்பு ஒரு தகுதி இல்லை. வாழ்க்கையில் நலிவுற்றவர்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்கிறது அரசு. ஒரு குழந்தையை கவனிக்க முடியாமல் வீட்டில் வேலைக்காக ஆயாக்களை வச்சுக்குறவங்களா இந்த வேலைக்கு வரப்போறாங்க. துப்புரவு தொழில்ல தாழ்த்தப்பட்ட பிரிவினரைத் தவிர வேறு யாரும் அந்த வேலைக்கு வர்ரதில்லை. அது போலதான் இந்த ஆயா வேலையும். வாழ்க்கையில் கைவிடப்பட்ட நிலைமையில இருப்பவர்களே இந்த வேலைக்கு வருகிறார்கள்.

அங்க இருக்கும் குழந்தைகள்ள நாலு பேரு ஆட்டோக்காரங்க குழந்தைகள். ரெண்டு வீட்டு வேலை செய்பவரின் குழந்தைங்க. பழைய பேப்பர் வாங்குபவரின் குழந்தை ரெண்டுபேர். இப்படி அங்க இருக்கும் குழந்தைகள்ள அடிப்படைத் தொழிலாளியின் குழந்தைகளே அதிகம் பேர்.

அங்கன்வாடி இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம். 1975-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டிருக்கு. இன்னும் பசியால் வாடும் குழந்தைகள் இல்லாத நெலமைய கொண்டு வரமுடியாம இப்பதான் மசாலா முட்டை போட திட்டம் போட்ருக்கு அரசு.

உரிமைகளுக்காகப் போராடும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள்
உரிமைகளுக்காகப் போராடும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் (ஆகஸ்ட் 11, 2014)

நாப்பதாண்டு காலம் முடியப்போகுது மக்கள் தொகை எவ்வளவோ பெருகிப்போச்சு. குழதையை க்ரஷ்சில் விடும் வசதி படைத்த பெற்றோர்கள் ‘ஸ்கைப்’ மூலம் குழந்தை என்ன செய்யுது என்று அறியும் அளவுக்கு வசதி வாய்ப்பு ஒருபக்கம் பெருகிப்போச்சு. ஆனால் தண்ணி, டாய்லெட், ஆயா, டீச்சர், சமையல் பெருட்கள், கட்டிடம், பாதுகாப்பின்மை என்ற வசதி குறைவற்ற இந்த அங்கன்வாடி மையம் பெரும்பான்மை மக்களின் தேவையாக உள்ளது.

வீதிக்கி வீதி சாராய கடையை திறந்திருக்கும் அரசு தேடியும் அகப்படாத அளவுதான் அங்கன்வாடி திறந்துள்ளது. அதுக்கும் போதிய அளவு ஆட்கள் இல்லாமல் 40 குழந்தைகளுக்கு ஒரு டீச்சர் ஒரு ஆயா என்ற வீதத்துலயும், டீச்சருக்கு வேறு வேலைகளையும் கொடுத்து வருது நிர்வாகம். சரிவர கவனிக்க முடியாதது மட்டும் இல்லாமல் பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. தேனி உத்தம்பாளையம் குழந்தைகள் கடத்தல் விசயமே இதுக்கு சாட்சி.

தினக் கூலிக்கு வேலை செய்றவங்களும், மாதச் சம்பளம் குறைவாக உள்ளவர்களும் பெருகிவரும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறும் வேளையில், குழந்தைகளை பணம் கொடுத்து பார்த்துக்கொள்ள எப்படி முடியும். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் போல தனியார் குழந்தைகள் காப்பகமும் கொள்ளையடிக்கின்றன. விதவிதமான விளையாட்டு சாதனங்கள், ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், பெற்றோருக்கு விளையாட்டு போட்டி, பரிசு என்று கவர்ச்சி திட்டம் போட்டு பெத்தவங்க பிரச்சனையை பணம் பண்றாங்க.

அங்கன்வாடியில வேலைபார்க்கும் ஆயாக்களோ ‘குழந்தைகள் சைக்காலஜி’ படிக்கல. சாதாரண மக்களுக்கு இருக்கும் இளகிய மனம் உள்ளவராகவும் இயல்பிலேயே மக்களிடம் பந்தபாசத்துடன் நடந்துகொள்பவர்களாகவும் இருக்காங்க. ஆரம்பத்தில் குழந்தைகள், தண்டனை கைதிகளைப்போல பார்க்கவே பரிதாபமாக இருந்தாலும், அவர்கள் அன்பில் கொஞ்ச நாள்லயே விட்டுப்பிரிய மனமற்றவங்களா மாறி போறாங்க.

மூணு மாசம் முடிஞ்சுருச்சு. இப்ப என்னோட குழந்தைய அழைக்க போகும் போது, இன்னும் சரியாக பேச்சுக் கூட வராத மத்த குழந்தைகள் பைய எடுத்துக்கொடுத்து, கதவை தொறந்துவிட்டு, டாட்டா காட்டும் போது டிசிப்ளினை பத்தி பாடம் நடத்துன அந்த ‘மேடம்’தான் ஞாபகத்துக்கு வர்றாங்க!

– சரசம்மா