சென்ற வார தினகரன் நாளிதழின் இலவச இணைப்பான வசந்தத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ்சின் ஒரே ”அறிவுஜீவி”யான அரவிந்தன் நீலகண்டனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது (காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல). அக்கட்டுரையின் குரல் என்னவோ அவரது மனைவி ஃபன்ஷியா தானியலுடையதுதான் என்றாலும் அது அரவிந்தின் பெருமையையே பேசுவதால் அதனை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு தீவிர இந்துத்துவவாதி, 14 வயதில் ஷாகா பயிற்சிக்குப் போனவரான அரவிந்தன் தனது ப்ரொட்டஸ்டண்ட் கிருஸ்தவ மனைவிக்கு முழுமையான மத சுதந்திரம் வழங்கியிருப்பதாக சொல்லி இதுதான் உண்மையான மதநல்லிணக்க வாழ்க்கைக்கு இலக்கணம் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.
சங்கப்பரிவாரத்தைப் பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவன் இக்கட்டுரையின் மூலம் அரவிந்தன் நீலகண்டனைப் பற்றி புரிந்துகொள்ளப் போவதில்லை, அது அவனுக்கு அனாவசியம். ஆனால் அவர் வழியே ஆர்.எஸ்.எஸ்சை புரிந்துகொள்வான் என்பதுதான் மிகவும் அபாயகரமானது. மேலோட்டமான பார்வையில் தினத்தந்தி குடும்பமலர் பாணியிலான அந்த கட்டுரையில் என்ன பிரச்சினை என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பத்திதான் நமக்கு எச்சரிக்கை சமிஞ்சையை கொடுக்கிறது.
அரவிந்தனின் மத நம்பிக்கைகையை ஃபன்ஷியா மதிக்கிறார், பன்ஷியாவின் மத நம்பிக்கையை அரவிந்தன் மதிக்கிறார் என விளக்கும் அக்கட்டுரை அதன் பிறகு கீழ்கண்டவாறு நீள்கிறது.
இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலே மதவெறியர்கள்… பிற மதத்தை இழிவுபடுத்துபவர்கள் என்ற கருத்து பொதுத்தளத்தில் உருவாகியிருக்கும் சூழலில். மதவெறியர்கள் வேறு,… அவர்கள் எல்லா மத்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷக்கிருமிகள். காதலை எதிர்ப்பதும் இவர்கள்தான். சமூகத்தை சீரழிப்பதும் இவர்களேதான். இவர்களுக்கும் உண்மையாகவே தங்கள் மதத்தை நேசிப்பவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என தங்கள் வாழ்க்கை மூலம் நிரூபித்து வருகிறார்கள்.
இங்குதான் இக்கட்டுரையின் முக்கியமான பிரச்சாரம் இருக்கிறது. இந்துத்துவாவாதிகள் மதவெறியர்கள் இல்லையா? பிறமதத்தை இழிவுபடுத்துவதுதானே இவர்களது தலையாய பணி? சொல்லப்போனால் அந்த இழிவு படுத்தல் பல நூறு சிறுபான்மை மக்களை கொல்லும் ஒரு வரலாற்று நடைமுறை. ஆனால் தவறுதலாக பொதுத்தளத்தில் இப்படியான கருத்துகள் உருவாகிவிட்டதாக எழுதுவதன் உள்நோக்கம் என்ன?
இந்து மதத்தில் வேண்டுமானால் மதவெறியர்கள், மதநல்லிணக்க வாதிகள் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். (அதுவே உண்மையில் பிரச்சினைதான். ஏனெனில் இந்துமத்தின் ஆன்மாவே சாதி என்பதால் அங்கே சமத்துவத்தின் வாசனைக்கு கூட வழியில்லை.) ஆனால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் ஒருவர் நல்லவர் என்றால் எவ்வளவு அயோக்கியத்தனம். ஆக சங்கபரிவாரம் எனும் பயங்கரவாதிகளை அரவிந்தன் நீலகண்டனது காதல் மனைவியின் முகத்தை வைத்து நல்லவர்கள் என்று காட்டுகிறார்கள் தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்.
இக்கட்டுரை மூன்று கோணங்களில் புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்குகிறது. அரவிந்தன் நீலகண்டன் ஒரு மதநல்லிணக்கவாதி, அவரது மனைவி ஃபன்ஷியா ஒரு மதநல்லிணக்கவாதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒரு மதசகிப்புத்தன்மையுள்ள இயக்கம். காவி பயங்கரவாதிகள் இதனை ஒரு ஆதாரமாக பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பு 100 சதவிகிதம் உண்டு. ஆகவே அரவிந்தினனின் காதல் வாழ்வை நாம் விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய தேவை தவிர்க்க இயலாததாகிறது.
ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இந்தக் காதல் அவர்களது மதவெறி கொள்கைக்கு முரணானது அல்ல. காரணம் குஜராத் கலவரத்தை கண்டிக்காத ஒரு கிருஸ்தவ இந்தியனும், பாபர் மசூதி இடிப்பை கண்டுகொள்ளாத ஒரு இசுலாமிய இந்தியனும் அவர்களுக்கு ஏற்புடையவர்களே. கோல்வால்கரது விதிகளின்படி இவர்களை இந்துக்களாகவே கூட ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது அல்லாவையோ, ஏசுவையோ தொழுவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த தொழுகைக்காரர்கள் இந்த நாட்டின் பண்பாட்டை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி, அந்த பண்பாடுதான் என்ன?
ராமன் இந்த நாட்டின் தேசிய புருஷன், சதி மாதாவை போற்றுதல், பசுவை வெட்டி உண்ணாமல் தொட்டு வணங்குதல், ஜகத்குருவை அங்கீகரித்தல், என்று இந்த பண்பாடு ஆரம்பித்து காத தூரம் பல நூறு விதிமுறைகளோடு விரிந்து கிடக்கிறது. இதன்படி காளி, துர்கை என்று வரும் வந்தே மாதரத்தை கூட ஒரு முசுலீம் பாடித்தான் ஆக வேண்டும்.
ஒருவேளை அரவிந்தன் வீட்டுப்பெண் ஒருவர் இந்த இந்து ராஷ்ட்டிர காவாலித்தன்ங்களை எதிர்த்தால் அவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் எதிரியாவாரே தவிர ஆர்.எஸ்.எஸ்காரரை ஏற்றுக்கொள்ளும் ஃபன்ஷியா அவர்களுக்கு எதிரியல்ல. இந்த அடிப்படையில்தான் முக்தர் அப்பாஸ் நக்வி பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார். கீதையை ஆராதித்து காவி தீவிரவாதத்தை கண்டுகொள்ளாத அப்துல் கலாமை இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகவே அரவிந்தனின் கல்யாணத்தில் ஆர்.எஸ்.எஸ் முரண்பட அவசியமேயில்லை.
இணையத்தை பாவிப்பவர்களால் அரவிந்தனையும் ஆர்.எஸ்.எஸ்சையும் தனித்தனியே பார்க்க முடியாது என்பதால் மேற்சொன்னவை அவருக்கும் பொருந்தும். இருப்பினும் வேறு சில அம்சங்களும் நம் பரிசீலனைக்கு உகந்தவையே. உயர் மத்தியதர வகுப்பினரின் பார்வையில் வர்க்கமும் சாதியும்தான் முதலில் வரும். அனேகமாக எல்லா மதங்களிலும் பெண் இரண்டாம்பட்சமே, அவர்கள் தங்கள் சாதி பட்டப்பெயரைகூட திருமணத்துக்குப் பிறகு சுமக்கமுடியாது.
ஆணின் சாதியே அடுத்த தலைமுறைக்கு அடையாளமாகும் என்பதால் தனக்கு நிகரான சாதி மற்றும் வர்கப் பின்னணியுள்ள ஒரு வேற்றுமதப் பெண்ணை ஆண் மணப்பதற்கு உரிய ‘நெகிழ்வு’த்தன்மையை இந்து மதம் கொண்டிருக்கிறது. ஐயர், ஐயங்காரையோ, ரெட்டி நாயுடுவையோ, முதலியார் கொங்கு கவுண்டரையோ, குமரி மாவட்ட வேளாளர் குமரி மாவட்ட பணக்கார நாடாரையோ மணந்து கொள்வதில் பார்ப்பனியத்திற்கு பிரச்சினையே இல்லை.
குமரி மாவட்டத்தில் நாடார் சாதி மக்கள் இந்து, கிறிஸ்தவ மதங்களில் இருந்தாலும் திருமண சம்மந்தம் சர்வ சகஜம். இருப்பினும் மண்டைக்காடு கலவரத்திற்கு பிறகு இதையே பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டார்கள் சங்கபரிவார இயக்கத்தினர். எனினும நாடார் தலித் திருமணமோ, மீனவர் நாடார் திருமணமோ, நாஞ்சில் நாட்டு வேளாளர், ஆசாரி திருமணோ இங்கு எப்போதுமே சாத்தியமில்லை.
இந்த பின்னணியில் பார்க்கையில் அரவிந்தனின் திருமணம் இரண்டு பேராசிரியர் குடும்பங்களுக்கிடையேயான இரு கம்ப்யூட்டர் பட்டதாரிகளின் திருமணம் அவ்வளவே. அரவிந்தனின் மனைவியின் செயல்பாட்டிலும் முற்போக்கு அம்சமென்று ஏதுமில்லை. அவரது கணவரின் மதவெறிப் படைப்புக்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அவர் கொடுத்த பைபிள் படிப்பு சுதந்திரத்தை கிடைத்தற்கரிய பேறாக கொண்டாடும் டிபிகல் இந்து கலாச்சாரப் பெண்ணாகவே அவர் காட்சியளிக்கிறார். மேலதிகமாக இந்தியாவில் சிறுபான்மை மக்களை வேட்டையாடும் ஒரு கூட்டத்தின் உறுப்பினரை மானே தேனே என்று வியந்து போற்றுமளவுதான் அவரது சமூக உணர்வு தரந்தாழ்ந்து இருக்கிறது.
ஆகவே இத்தம்பதிகள் உதாரண மனிதர்களாவது அவர்களது சமூகப் பாத்திரத்தின் மூலம்தான் சாத்தியம். வீட்டுக்குள் அனுசரித்துப்போகும் இயல்பில் மெச்சிக்கொள்ள ஏதுமில்லை. கோயிலில் ஆடு கோழி வெட்டக்கூடாது என சட்டமியற்றிய ஜெயலலிதா தன் வீட்டு நாய்களுக்கு தினசரி எட்டுகிலோ ஆட்டுக்கறி வாங்கியதாக குன்ஹாவின் தீர்ப்பு சொல்கிறது. நாய்க்கு கறி போட்டதை வைத்து ஜெயாவை மதிப்பிடுவது சரியாக இருக்குமா?
அரைகோடி யூதர்களை கொன்றொழித்த ஹிட்லர் தனது காதலியை மதிக்கும் விசயத்தில் ஒரு குறையும் வைத்தவரல்ல. ஈவாவின் பார்வையில் ஹிட்லர் மகத்தான மனிதராகவே இருப்பார். அதைவைத்து மட்டும் அவரை உதாரண மனிதராக காட்ட முடியுமா? இல்லை மஹிந்த ராஜபக்சே கூட தனது மனைவியை ஒய்யாரமாக நடத்துகிறார், கருணைக் கடலே என ஆராதிக்கத்தான் முடியுமா?
அப்பாவிகளை சுட்டுத்தள்ளும் ராணுவத்தினர் முதல் அடித்துக்கொல்லும் போலீஸ்காரர்கள் வரை எல்லா குற்றவாளிகளும் தமது குடும்பத்தினர் பால் அன்பு கொண்டேராகவே இருக்கிறார்கள். இது குறித்து ஹாலிவுட் படமான பாடி ஆஃப் லைஸ்-ல் வரும் சிஐஏ அதிகாரியின் வாழ்க்கையை சொல்லலாம். வினவில் வெளிவந்த இந்த பட விமரிசனத்தை வாசகர்கள் படித்து அறியலாம். இந்த கோணத்தில் பார்த்தால் உலகின் ஆகப்பெரிய கிரிமினல் கூட உதாரண மனிதனாகிவிடக் கூடும்.
ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள்தான் நாடெங்கும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று லட்சக்கணக்கிலான மக்களை அகதிகளாக்கியது, இன்றுவரை அது தொடர்கிறது. இந்த இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் மனைவி பைபிள் படிக்க அனுமதிக்கிறார் என்பதை பரிகாரமாக கருதுவதே அநீதி. இதனை எப்படி உதாரண வாழ்வாக கருதுவது? வேசிக்கும் விலைமகளுக்கும் வித்தியாசம் தேட இயலுமாயின் இந்துத்துவவாதிக்கும் மதவெறியனுக்குமான வித்தியாசத்தை நாம் தேட முடியும்.
ஆனால் இரண்டும் வேறு வேறுதான் என சத்தியம் செய்கிறது தினகரன். அதற்கான உதாரணமாக அரவிந்தன் நீலகண்டன் காட்டப்படுகிறார். அந்த தம்பதிகள் வாழ்க்கை இந்தியர்கள் அனைவருக்குமான பாடம் என்கிறது தினகரன் ஞாயிறு இணைப்பின் (9/11/2014) அட்டைப்பட வாக்கியம். இந்த உதாரண புருஷரின் மத நல்லிணக்கத்தை தெரிந்துகொள்ளலாமென ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் நடத்தும் தமிழ்ஹிந்து இணையதளத்தை பார்த்தால் மாற்று மதத்தவர் மீதான அரவிந்தரின் அன்பு கரைபுரண்டோடுகிறது. அதில் அரை ஸ்பூன் மட்டும் கீழே…
இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள்.
அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்….
இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. (அரவிந்தனின் கட்டுரைகளில் இருந்த மிகச்சில உதாரணங்கள்)
இருந்தாலும் ஒரு இந்துத்துவவாதி தனது மனைவிக்கு இத்தகைய மத சுதந்திரத்தை வழங்கியிருப்பது பாராட்டத்தக்க அம்சம்தானே எனும் கேள்வி எழக்கூடும். ஆனால் இது பாராட்டுக்குரிய அம்சமல்ல. அரவிந்தன் வீட்டில் மனைவியின் மத உரிமையை மதிக்கிறார், அவருக்கு அசைவ உணவு வாங்கித் தருகிறார், அவர் பைபிள் படிப்பதை அனுமதிக்கிறார் என மேலோட்டமாக படிக்காமல் சற்று நின்று நிதானித்து பாருங்கள்.
அரவிந்தன் நீலகண்டனது சாதி என்ன, நமக்குத் தெரியவில்லை. அவரது குடும்பம் ஆச்சரமான சைவ உணவு தீவிரவாதிகள் என்பதால் நிச்சயம் சைவ உணவை புண்ணியமாகக் கொண்ட ஏதோ ஒரு “உயர்” சாதி என்று தெரிகிறது. இத்தகைய சாதிக்காரர்கள் அசைவ உணவு சாப்பிடும் மருமகளை எப்படி நடத்துவார்கள் என்பதை நாவலாக எழுதுமளவு எழுத்தாளர் நாஞ்சின் நாடனால் சொல்ல முடியும். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் எனும் ஆதிக்க சாதியினர் அங்கே எப்படி தலித்துக்களை நடத்துவார்கள், தமது சாதிப்பெருமையை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.
இந்த பின்னணியில் சைவ உணவு சாதிக்கரரான அரவிந்தன் நீலகண்டன் தனது காதல் மனைவிக்கு அசைவ உணவு வேண்டுமென்றால் வெளியே ஓட்டல்களில் வாங்கித் தருவாராம். ஒரு உண்மையான ஜனநாயகவாதி என்றால் தனது மனைவியின் உணவுப் பழக்கத்தை மதித்து வீட்டிலேயே சமைப்பதை வலியுறுத்த வேண்டும். இதில் அனுமதி என்று வந்தாலே அது ஆணாதிக்கப் பிச்சை என்பது வேறு விசயம். ஆனால் இங்கே அது கூட இல்லை.
ஒரு வேளை நீலகண்டனது பெற்றோர் அதை விரும்பாவிட்டால் அவர்களுக்கு ஜனநாயகம் குறித்து வகுப்பு எடுத்து வலியுறுத்த வேண்டும். மறுத்தால் அவர்களையோ இல்லை தானோ வீட்டை விட்டு வெளியற்றவோ, வெளியோரவோ செய்ய வேண்டும். இதெல்லாம் செய்யாமல் நீலகண்டன் அவர்கள் வீட்டில் தனக்கு பிடித்த தயிர் சாதத்தை நக்குவாராம். காதல் மனைவிக்கு மட்டும் ஓட்டலுக்கு சென்று எலும்பு கடிக்க ஏற்பாடு செய்வாராம்.
இவ்வளவிற்கும் அவரது மனைவி வீட்டில் இவருக்கென்று சைவ உணவு சமைத்து கொடுப்பார்களாம். ஆக அங்கேயும் இவர் சமத்துவமாக நடந்து கொள்ளவில்லை. இருந்திருந்தால் பீஃப் பிரியாணியில் பீசை வைத்து விட்டு சோற்றையாவது உண்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம். மாறாக நீலகண்டனது மாமியார் இவருக்கென்றே வெஜிடெபிள் பிரியாணி சமைத்துக் கொடுப்பாராம்.
ஒரு வேளை இந்த ஓட்டல் சமத்துவமே போதுமென்று புல்லரிப்பவர்கள் சற்று யோசித்து பாருங்கள்.
அவர் உயிரைகொடுத்து ஆதரிக்கும் இயக்கம் இசுலாமியர்களை கொன்று குவிக்கிறது, பாதிரியாரை குழந்தைகளோடு எரிக்கிறது, கன்னியாஸ்திரிகளை வன்புணர்ச்சி செய்கிறது, பிள்ளையார் ஊர்வலத்தில் குடிகாரர்களை வைத்து மசூதிகளுக்கருகே ரவுடித்தனம் செய்கிறது. வீட்டு காம்பவுண்டுக்குள் மத நல்லிணக்க முகமும்(அதுவும் ஓட்டல் நல்லிணக்கம்) வெளியே வந்தால் நல்லிணக்கம் எனும் கருத்தின் மீதே வெறுப்பு கொள்ளும் முகமும் ஒருவருக்கு இருக்குமாயின்… அவரது நிஜமான முகம் எது? ஒன்று நிஜமெனின் இன்னொன்று நடிப்பென்றாகிறது. கணவர் பாத்திரம் பொய்யானதா அல்லது காக்கி டவுசர் பொய்யா?
இதை இருதுருவ மனநிலை பிறழ்வு என சொல்லி கரிசனம் காட்டவும் முடியாது. பைபோலார் வந்தவர்கள் சிலகாலம் ஒருவிதமாகவும் அடுத்த சில நாட்கள் அதற்கு நேரெதிரான இயல்புடனும் இருப்பார்கள். அங்கே காலம்தான் மனநிலையை மாற்றுமேயன்றி காம்பவுண்ட் சுவரல்ல. அவர் புரிதலின்றி வானரப்படையில் இருக்கிறார் என்றும் சொல்ல முடியாது. அவர் எழுதிய கட்டுரைகளில் இருக்கும் வன்மத்தை விடுங்கள்… வினவில் மனோஜ் குமார் எனும் தலித் இளைஞரிடம் பிடிபட்டார் அல்லவா, அப்போது தனது பார்ப்பன ஜிக்களை விட்டுக் கொடுக்காமல் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்.

மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே? இன்னொரு மதத்துப் பெண்ணை காதலித்து வீட்டை எதிர்த்து கைப்பிடிக்கும் உரிமையை பயன்படுத்திய நபர், முஸ்லீம்கள் இந்துப் பெண்களை காதலித்தால் லவ் ஜிகாத் என கொச்சைப்படுத்தி அதனை தீவிரவாதமாக சித்தரிக்கும் அசிங்கத்தை எப்படி செய்கிறார்? மனைவியோடு கிருஸ்துமஸ் கொண்டாடும் மனிதர் எப்படி கிருஸ்துவர்கள் எல்லோரும் வக்கிரம் பிடித்தவர்கள் என எழுதுகிறார்?
இதற்கான பதில் இந்துத்துவாவின் வரலாற்றிலேயே இருக்கிறது. தங்கள் மேலாதிக்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் மராட்டிய சித்பவன பார்ப்பனர்களுக்கு இருந்தது. இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. இந்த இரண்டு தேவைகளுக்குமான கள்ள உறவிற்கு பிறந்த குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். அந்தமான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி வெள்ளையனின் காலில் விழுந்தவர் சாவர்க்கர். அவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சேரும்படி வலியுறுத்தியவர்.
ஆனால் இதே சாவர்க்கர் ஒருகாலத்தில் மொகலாய அரசின் பிறைக்கொடியை தேசியக்கொடி (எரிமலை எனும் அவர் எழுதிய நூல்) என்று சொன்ன வரலாறும் இருக்கிறது. தனக்கு ஆதாயம் கிடைக்குமாயின் கழுதையைக் கூட அப்பா என்றைழைக்கும் இக்கும்பல் ஆதாயமில்லாவிட்டால் அப்பாவைக்கூட கழுதை என்று சொல்லும். எனினும் இந்த முரண்பாடுகள் பார்ப்பனியத்தின் நலனுக்காக செய்யப்படும் சாமர்த்தியமே அன்றி ஒரு போதும் கொள்கை சமரசம் என்று பார்க்க கூடாது. அல்லது காலந்தோறும் பார்ப்பனியம்.
பெண்களை தெய்வமாக வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் இந்த கலாச்சாரக் காவலர்கள்தான் ஒருகாலத்தில் தம் சொந்த சாதி கைம்பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி அழகுபார்த்தவர்கள் (மொட்டையடித்தால் அழகு போய்விடும், பிறகு எப்படி இன்னொரு துணையை தேடுவாள் எனும் அறிவார்ந்த இந்து ஞானத்தின் கண்டுபிடிப்பு). இவர்கள் முஸ்லீம்களை இந்துக்களின் எதிரிகள் என வெறித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் காசியில் மட்டும் சுமார் 5 லட்சம் இந்து விதவைகள் அநாதைகளாக விடப்பட்டிருந்தார்கள். சாப்பாட்டுக்கு வழியின்றி அதில் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கும் உ.பி பிருந்தாவன் நகரில் கைவிடப்பட்டு அநாதையாக திரியும் இந்து விதவைகள் எண்ணிக்கை நாற்பதாயிரம்.
இத்தகைய இயக்கத்தின் பிரதான் பண்டிட் ஒருவர் இரட்டைவேடம் பூணுவதில் வியப்படைய எதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் சின் ரத்த வேட்கைக்கும் அரவிந்தனின் அடிப்படைவாதத்துக்கோ அவரது வீட்டுக்குள் இருப்பதாக??? சொல்லப்படும் மத நல்லிணக்கம் பரிகாரமாகிவிடாது.
நாடறிந்த இந்து வெறியனான சுப்ரமணியசாமியின் மகள் சுகாசினி ஹெய்தர் மணந்திருப்பது ஒரு மேட்டுக்குடி முசுலீமைத்தான். இந்த சம்மந்தம் சு சாமியின் மதவெறியை கொஞ்சம்கூட மாற்றிவிடவில்லை. அனேகமாக தினகரனின் அடுத்த உதாரண புருஷர் சூச்சூஸ்வாமியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
குஜராத் கலவரத்தின்போது கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளின் விவரங்களை கையில் வைத்துக்கொண்டு அதில் கவனமாக இந்து அல்லாதவர்களை மட்டும் தனியே கொலை செய்த இந்துத்துவ வெறியர்களின் செயலை நாமும் மறந்துவிட முடியாது. அரவிந்தின் நலன்விரும்பிகளும் மறந்துவிடக்கூடாது.
உண்மையான மதநல்லிணக்கவாதிகள் நம் அருகே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பள்ளி காலத்தில் ஒரு பிராமண நண்பன் வீட்டுக்கு சென்றபோது தரப்பட்ட காபியை அன்னாத்தி குடிக்கச்சொன்னார் நண்பனது அப்பா. அப்போது அவனது அம்மா இடைமறித்து நீ வாய் வச்சே குடிடா என்று சொல்லிவிட்டு குடித்து முடிக்கும் வரை அருகில் நின்றார். அவருக்கு மத நல்லிணக்கம் எனும் வார்த்தைகூட அப்போது தெரிந்திருக்காது. ஆனாலும் தன் வீட்டில் தனது ஆச்சாரத்தைக் காட்டிலும் விருந்தாளியின் சுயமரியாதை முக்கியம் என கருதிய அவரது இயல்பில் இருக்கிறது மத நல்லிணக்கம்.
கோவையில் நடந்த கலவரத்தின்போது முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. அப்போது உச்சகட்ட இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம் கோவையெங்கும் செய்யப்பட்டிருந்தது. கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்படுவதாகக்கூட வதந்திகள் பரப்பப்பட்டன. ஆகவே அந்த சூறையாடலில் சாதாரண மக்களும் தயக்கமின்றி பங்கேற்றார்கள். அப்போதும் அதில் பங்கேற்காத, பங்கேற்கச்சென்ற அண்டைவீட்டு நபர்களை தடுத்த இந்து ஒருவரை நான் கோவையில் சந்தித்திருக்கிறேன். பொழப்பு கொடுத்த ஊர்ல எப்படிங்க திருட முடியும் எனும் ஒற்றைக் கேள்வியை அதற்கான காரணமாக முன்வைத்தார் அவர். அந்த எளிய மனிதனின் அற உணர்வை மத உணர்வால் வெல்ல முடியவில்லை.
இப்படியான எளிய மனிதர்களிடத்திலும் மிக அரிதாக ஹேமந்த் கர்கரே போன்ற அதிகாரிகளிடத்திலும் மத நல்லிணக்கம் இருக்கிறது. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ள நாம் எது மதவாதம் என்பதையும் யாரெல்லாம் மதத்தீவிரவாதி என்பதையும் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். வெறுமனே தினகரனை படித்தால், அல்லது தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள் சொல்வது போல படித்தால் அரவிந்தன் நீலகண்டன் மட்டுமல்ல அவரது ஆசானான ஹிட்லர் கூட நமக்கு காந்தியாகத்தான் தெரிவார்.
கண்ணிருப்பவர்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கோபம் கொள்ளுங்கள்!
– இசையவன்.