Saturday, May 10, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 01/12/2014

ஒரு வரிச் செய்திகள் – 01/12/2014

-

blue-flameசெய்தி: மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த ‘தி இந்து’ ஆதரவாக இருக்க வேண்டும் என்று விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் கேட்டுக் கொண்டார்.

நீதி: என்ன மாற்றம்? சுயநிதிக் கல்லூரி வள்ளல்கள் குறித்த மக்கள் வெறுப்பை, போதிய அளவு ‘தி இந்து’ மாற்றவில்லையோ?
_________

செய்தி: ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதங்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் உளவுத் தகவல் சேகரிப்பை பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

நீதி: ஆமாமாம்! குஜராத்தில் இளம்பெண்ணை உளவு பார்த்ததெல்லாம் ஊடகங்களுக்கு தெரிய வந்தது போலல்லாமல் சிஐடி துறையை பலப்படுத்த வேண்டும்.
__________

செய்தி: “திரைப்படங்களில் காவல் துறையினரைப் பற்றி மோசமாக சித்தரிக்கப்படுகின்றன. இதனால் காவல் துறையினரை பொதுமக்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. இது தவறு.” – கௌகாத்தியில் ஐபி உளவுத்துறை சார்பில் நடந்த காவல் துறையின் 49-வது மாநாட்டில் மோடி.

நீதி: மிகச் சரி. இர்ஷத் ஜஹான் தொட்டு எண்ணிறந்த போலி மோதல் கொலைகளை நடத்திய குஜராத் போலிசாரை சிறை வைப்பதும், விமரிசப்பதும் எந்த விதத்தில் நியாயம்?
_________

செய்தி: திரிபுராவை ஆளும் சிபிஎம் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, திரிபுரா அமைச்சரவை முன் உரையாற்றுகிறார்.

நீதி: இருக்கும் ஒரே மாநிலமும் காவியில் சரணடைவதைப் பார்க்கும் போது எதற்கய்யா சிவப்பு கொடியும் பொதுவுடமைப் பெயரும்?
__________

செய்தி: எண்ணெய் வடியும் பெண்களைக் கொண்ட சென்னை நகரம்தான் இன்று நவீன அழகு நிலைய சங்கிலித் தொடரிலும், அழகு கலை பொருட்களின் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி போகிறது.

நீதி: அரசியல் போராட்டங்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம், அழகு பாவனையில் முன்னணியானால் கிடைப்பது அடிமைத்தனமா, அழகுப் பெருமிதமா?
_________

செய்தி: “அமைதியான உலகம் அமைய வேண்டுமென்றால் சைவ உணவுமுறையை பின்பற்ற வேண்டும்” – சர்வதேச சைவ உணவாளர்கள் சங்கத்தில் கூட்டத்தில் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன்.

நீதி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அப்பாவிகளை வதைத்து வாக்குமூலங்கள் வாங்கியவர்களும், பாசிச ஹிட்லர், சிங்கள ராஜபக்சேவும் கூட சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான். எனில் உலக அமைதி என்பது மயானத்தின் அமைதிதானே கார்த்திகேயன் சார்?
_________

செய்தி: “எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக்கும் வகையில் செயல்படுவோம்” – டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் செய்தி.

நீதி: காலில் விழும் அடிமைகள் இல்லாத சமுதாயம் எப்போது உருவாகும் பாஸ்?
_________

செய்தி: கடந்த நிதியாண்டில் தனியாரிடமிருந்து 16,280 கோடி ரூபாய் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் வாங்கியுள்ளது.

நீதி: மத்திய அரசின் மின் நிலையங்களிலிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.1.80-ம், தனியாரிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.14 ரூபாயும் கொடுத்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு யாருடைய அரசு?
________

செய்தி: “பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களைப் பற்றி பேசினால், வைகோ பாதுகாப்பாக இருக்க முடியாது, அவரது நாவை எப்படி அடக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

நீதி: பெரியாரை அவமதித்த ராஜாவின் நாக்கை வருடிக் கொடுத்து பாஜக கூட்டணியில் மோடிக்காக பொளந்து கட்டிய வைகோவுக்கு இதெல்லாம் உரைக்காது, வலிக்காது, கேட்காது!
________
செய்தி: பிரதமர் மோடியை யாரும் ஒருமையில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நீதி: கொலைகார மோடி, நரவேட்டை மோடி, பாசிச மோடி என்று அழைப்பதை ராஜா எதிர்க்கவில்லை. பன்மைதான் முக்கியம், பாசிசம் பிரச்சினையில்லையாம்!
_________

செய்தி: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த வைகோ, அங்கே தமிழிசை சவுந்தராஜனை சந்தித்து பேசினார்.

நீதி: “பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோவும், ராமதாசும் மோடியை விமரிசித்து எதிர்க்கட்சி போல் செயல்படக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் எச்சரித்த தமிழிசை நேரில் எப்படியெல்லாம் மிரட்டியிருப்பார்! அய்யகோ வைகோ!
________

செய்தி: ஒடிசாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையின் போது சைக்கிள் பம்ப் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீதி: மோடியின் கிளீன் இந்தியாவுக்காக அனில் அம்பானியும், பிரியங்கா சோப்ராவும் தெருவில் இறங்கி ஷோ காட்டுவதற்கே கையுறை போடும் நாட்டில் பெண்களின் வயிற்றில் காற்றடைக்க சைக்கிள் பம்ப் பயன்படுத்துவதுதானே நீதி?
_________

செய்தி: இந்த ஆண்டின் சிறந்த மனிதருக்கான டைம் பத்திரிகையின் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நீதி: இதற்கு முன்னாடி ராஜபக்சே கூட இப்படி இருந்தார் என்பதால் மோடியும் சிறந்த மனிதருக்கான போட்டியில் இருப்பது சரிதான்.
_________

செய்தி: பல விமான பயணங்களை ரத்து செய்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சுமார் 5000 ஊழியர்களுக்கான சம்பளத்தையும் தராமல் இழுத்தடிக்கிறது.

நீதி: மூடப்பட்ட கிங்பிஷர் விமான கம்பெனிக்காக ஆட்டம் போட்ட மல்லையா அரசு வங்கிகளை நாமம் போட்ட மாதிரி, கலாநிதி மாறன் யாரிடம் ஆட்டையை போட்டுள்ளார்?
_________

செய்தி: பெர்கூசனில் கருப்பின இளைஞனை சுட்டுக் கொன்ற வெள்ளையின போலீஸ் அதிகாரி டேரென் வில்சன் தனது மற்றும் சக போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

நீதி: என்னதான் வெள்ளையர்கள் பெரும்பான்மை, அரசு ஆதரவு, நீதிமன்ற ஆதரவு இருந்தாலும் ஏதுமற்ற கருப்பின மக்களின் போராட்டம் ஒரு நிறவெறியனுக்கு பயத்தை ஏற்படுத்தியதா இல்லையா?
_____________