privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை : அப்ரசைல்

சிறுகதை : அப்ரசைல்

-

“கைய்ஸ்.. அயம் வெரி ப்ரௌட் டு ஹேண்ட் ஓவர் மை ரெஸ்பான்சிபிலிட்டீஸ் டு அவர் ஒன் அண்ட் ஒன்லி அனந்தா.. ஆல் நோ ஹி டிசர்வ்ஸ் திஸ் பொசிஷன். லெட்ஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்” ( நண்பர்களே, என்னுடைய பொறுப்பை நமது அனந்தாவுக்கு கொடுப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். அவருக்கு உங்களுடைய பாராட்டை கை தட்டி தெரிவியுங்கள்).

it-stress-4வாய் நிறைய சிரிப்பும் மனம் நிறைய வெறுப்புமாய் சித்தார்த் தனது சிற்றுரையை முடித்து வைக்க அறுபது பேர் கூடியிருந்த அலுவலக ஆலோசனை அறையில் (conference room) கைத்தட்டல் நிற்க மூன்று நிமிடங்கள் பிடித்தது. வெட்டப்பட்ட கேக்கின் மேல் பகுதியிலிருந்து வழித்தெடுக்கப்பட்ட க்ரீமை அனந்துவின் முகத்தில் அபிஷேகம் செய்து வைத்தார் சித்தார்த். மற்றவர்கள் அந்த சடங்கை தொடர்ந்தனர், அதில் சில எதிர்கால அனந்துக்களும் இருந்தனர்.

தேனீர் விருந்து முடிய இரவு பத்தாகி விட்டது. அனந்துவின் டிசையர் காரில் முதன் முதலாக பயணிக்கிறேன்.

”நீ நினைச்சது நடந்தாச்சி. அப்புறம் ஏண்டா முகத்தை உர்ருன்னே வச்சிட்டு இருக்கே?”

”மச்சி! வள்ளியோட நிலைமை கொஞ்சம் மோசமா இருக்கு. இப்பல்லாம் சுத்தமா பேசவே மாட்றா. வீட்டுக்குப் போகணும்னு நினைச்சாலே என்னவோ மாதிரி இருக்கு. பேசாம ஆபீஸ்லயே இருந்துடலாம்னு தோணுது. நீ எதுனா சொல்லேன். வேணும்னா நீயும் உன் வொய்பும் வந்து அவட்ட ஒரு தரம் பேசிப் பார்க்கறீங்களா?”

நான் பேசவில்லை. இது பற்றி நானே கேட்டாலும் நீ பேசக் கூடாது என்பது அவனது உத்தரவு.

ஆறு மாதங்களுக்கு முன்பு……………..

“ஆறு வருசமா என்னோட ரேட்டிங் (மதிப்பு) அவுட்ஸ்டேண்டிங்ல போயிருக்கு மச்சி. இத்தனை வருசமா என்னோட அப்ரெய்சல் பர்சண்டேஜ் (பணித்திறன் விகிதம்) உங்க எல்லாரையும் விட அதிகம். இதெல்லாம் சும்மா வரல்லே. ராத்ரி பகல்னு பார்க்காமே நான் கஷ்டப்பட்டிருக்கேன். இப்ப நீ என்னா சொல்றே… எல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டு பொண்டாட்டிய சுத்தி பாத்துட்டு வீட்ல இருக்கச் சொல்றியா?”

“அனந்தா உனக்கு நல்ல ரேட்டிங் குடுத்திருக்கானுகன்றது சரி தான். அதே மாதிரி உனக்குத் தான் அப்ரைசல் பர்சண்டேஜும் அதிகம். ஆனா எவ்ளோ அதிகம்? எல்லோருக்கும் 10 குடுத்தா உனக்கு 10.5 தர்றான். மத்தவங்களுக்கு 12 குடுத்தா உனக்கு 12.5. இந்த அரை பர்சண்டேஜுக்காக நீ வாழ்க்கைல நிறைய மிஸ் பண்றேன்னு புரியலையா?”

”மத்தவனுக்குத் தான் பொறாமைன்னா உனக்குமாடா? காசுன்னு பாத்தா கம்மி தான். பட் (ஆனால்), டாப் மேனேஜ்மெண்ட் (மேல்மட்ட நிர்வாகம்) வரைக்கும் நான் விசிபிளா (பார்வையில்) இருக்கேண்டா. நம்ம டிவிஷன்ல (பிரிவில்) எதுன்னாலும் வி.பி (துணைத் தலைவர்) என்னைத் தான் கூப்டு பேசறாப்ல. பிராஜக்ட் மேனேஜரை (திட்ட மேலாளர்) கூட அவர் நம்பரதில்லை. அடுத்த வருசம் சித்தார்த் சாரை நீல்சன் பிராஜக்டுக்கு (திட்டத்துக்கு) மாத்திடுவானுக. அப்ப இந்த டிவிஷனுக்கு நான் தான் பி.எம். உனக்கும் சேர்த்துத் தான். புரியுதா?”

“புரியுது. ஆனா அதுக்காக நீ எவ்ளோ இழந்திருக்கே தெரியுதாடா?”

sad woman

நீண்ட மௌனத்தையும் அதன் கூடவே நிறைய புகையையும் வெளியேற்றினான்.

“நீ சொல்றது புரியுது.”

”சரி என்னா செய்யப் போறே?”

“தூக்கித் தெருவில வீசிடலாம்னு தான் ஒரு சமயம் தோணுது. ஆனா… த்தா பாக்க பாவமாவும் இருக்கு. என்னையே நம்பி வந்தவ. சனியன்… ஒரு சமயம் ஏன் தான் கல்யாணம் செய்தோம்னு இருக்கு. ஒரு சமயம் பயமாவும் இருக்கு. இப்டியே இருந்து எதையாவது இழுத்து வச்சிட்டான்னா என்ன செய்ய முடியும்? என்ன தாண்டா செய்யச் சொல்றே? எதுனா சைக்யாட்ரிஸ்டு (உளவியல் மருத்துவர்) கிட்டே காட்டலாமா?”

“சைக்யாட்ரிஸ்டு கிட்டே காட்டலாம். ஆனா அவளை மட்டும் இல்லே, உன்னையும் தான். மனசாட்சியை தொட்டு சொல்லு அனந்தா… நீ காரணமில்லே?”

நீண்ட மௌனத்திற்குப் பின் வாய் திறந்தவன், “மச்சி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இனிமே இந்த மேட்டர் (பிரச்சினை) பத்தி என்ட்டே நீ எதுவும் பேசக்கூடாது. நானா கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாது. சொன்னியன்னா நம்ம ப்ரென்ஷிப் (நட்பு) அத்தோட கட்டாயிடும். ஓக்கே?”

அன்றிலிருந்து அனந்துவுக்கு அலுவலகமே வீடானது. உழைப்பு மட்டுமே உயர்வைக் கொடுத்து விடாத கார்ப்பரேட் சூழலில் உள்ளரசியல் ஒன்றே அவனுக்குக் கைகொடுத்தது; அனந்து அதில் நிபுணன். சித்தார்த்துக்கு யாரையெல்லாம் பிடிக்காது என்பதையும் யாருக்கெல்லாம் சித்தார்த்தை பிடிக்காது என்பதையும் நுண்ணுணர்வோடு மோப்பம் பிடித்து காய் நகர்த்தினான். மூன்று மாத இறுதியில் அவன் எதிர்பார்த்த அப்ரெய்சல் (பணித்திறன்) முடிவுகள் அவன் எதிர்பார்த்த வண்ணமே வந்தது. கழுத்தறுப்புப் போட்டியில் வெற்றி.

ஆனால், வள்ளியம்மை வேறு திசையில் பயணித்திருந்தாள்.

ஊரில் இருந்த காலத்திலிருந்தே எனக்கு வள்ளியம்மையைத் தெரியும். குணத்தில் அனந்தாவுக்கு நேர் எதிர். டிபிக்கல் காரைக்குடி “அட இந்த நெய் முறுக்கு சூப்பரா இருக்கே” – ஆறே ஆறு வார்த்தைகள் போதும். ”அண்ணா… தோ இந்த பாத்திரம் புல்லா நிரப்பிருக்கேன். அண்ணிக்கும் கொண்டு போய் கொடுங்களேன்”. தின்ன வைத்து திணறடித்தல் இருந்தாலும் மற்றவருக்காக முசிந்து வேலை செய்யவும் ஒரு கருணை அவளிடம் எப்போது இருந்தது.

காரைக்குடியில் வள்ளியம்மையின் குடும்பம் பெரியது. நாங்கள் ஒரே ஊர்தான். அனந்துவும் எங்கள் ஊர் தான்; பக்கத்துத் தெரு. அண்ணன், அக்காள், தங்கை, தம்பி அப்புச்சி, அம்மச்சி, தாத்தாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், மாமா மாமிகள், மச்சான்கள்… தமிழில் உறவு முறையைச் சொல்ல என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையிலும் குறைந்தது இரண்டு பேர்கள் வரை இருப்பார்கள். வள்ளியம்மை ஊரில் இருந்த ஒரு பள்ளியில் கணக்கு டீச்சராக சில வருடங்கள் வேலை பார்த்தாள். மிக தூரத்தில் பார்த்தால் எனக்கு சகோதரி.

it-office“அண்ணே இந்த பெங்களூர்ல எப்போயும் எழவு வுழுந்தா மாதிரியே எல்லாரும் இருக்காங்களே ஏண்ணே?”

“அண்ணே நீங்க அடுத்த முறை வரும் போது அண்ணிய கூட்டி வாங்களேன். இந்த நாலு வருசத்தில நாலு சொவத்தை தாண்டி யாரையுமே தெரியாம போச்சின்னே. அவுக அஞ்சாவது சொவருண்னே”

“அது என்னா அப்பிரெய்சல்? எந்த நேரமும் இவுக அதே சிந்தனையாத்தேன் இருக்காக. சாப்பிடும் போது கூடவா உர்ர்ருன்னே இருப்பாக?”

”சதா நேரமும் கம்பேனி நெனப்பாவே இருக்காகளே.. ஒங்க மொதலாளி அவுக லாபத்திலேர்ந்து இவுகளுக்கு தனியா எதுனா தர்றேன்னு சொல்லிருக்காகளா?”

“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”

வள்ளியம்மையின் கேள்விகள் மிக எளிமையானவை தான்; எனது குழப்பமெல்லாம் ‘கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வள்ளிக்கு எங்கேயிருந்து சொல்லிப் புரியவைப்பது?” என் மனைவியும் வள்ளியம்மையும் ஊரில் இருந்தே தோழிகள் தான்.

அனந்தா என்னிடம் புலம்புவதும் வள்ளி என் மனைவியிடம் புலம்புவதுமாக மாதங்கள் ஓடின.

“சம்திங் ராங் (ஏதோ தவறு) மச்சி. எப்ப பாரு எதையோ இழந்தவ மாதிரியே இருக்கா. நான் என்ன குறை வச்சிருக்கேன்? தோ.. பழைய ஜென்னை (மாருதி கார்) கடாசிட்டு டிசையர் இறக்கி ஒரு வருசம் கூட ஆவலை. ஜ்வெல்ஸ் (நகைகள்) வாங்கிக் குடுத்திருக்கேன்… பட் அவ கிட்ட என்னவோ பிரச்சினை இருக்குடா”

it-depression“அன்னிக்கெல்லாம் நைட்டு ஒரு ரெண்டு மணி இருக்கும். திடீர்னு தூக்கத்திலேர்ந்து முழிச்சி பார்க்கறேன். தலைய விரிச்சிப் போட்டுட்டு பேய் மாதிரி வெறிக்க வெறிக்க ஒக்காந்துனு இருக்கா. பேஜாராயிடிச்சி மச்சி”

“யார்ட்டயுமே பேச மாட்றாடா. நம்ம ஆபீஸ் கெட்டுகெதர்க்கு (அலுவலக விழா) அழைச்சிட்டு வந்தேன்ல. நீ கூட பாத்தியே… பட்டிக்காடு மாதிரி ’பே’ன்னு முழிச்சிட்டே இருக்கா”

என் மனைவி வள்ளியை வீட்டில் சந்தித்து விட்டு வந்தாள்.

“வள்ளி ரொம்ப லோன்லியா பீல் (தனிமை சிந்தனை) பண்றா மாதிரி இருக்கு. எனக்கென்னவோ இது டிப்ரஷன்ல (மன அழுத்தம்) மாதிரி தெரியுது. உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க. இப்டியே விட்டா சீரியஸா எதுனா பிரச்சினை ஆயிடுமோன்னு நினைக்கிறேன்”

“அவ சின்ன வயசுல விளையாடின பொம்மை ஒன்னு வச்சிருக்கா. அது ஏதோ உயிரோட இருக்கிற ஆள் மாதிரி நினைச்சு பேசறா சிரிக்கிறா. எனக்கே என்னவோ போல ஆயிடிச்சிங்க. சீக்கிரம் உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க”

ஆனால், அதற்குள் அலுவலகத்தில் சாதிக்கும் வேலையில் அனந்து மும்முரமாகி புராஜக்ட் மேனேஜராகவும் (திட்ட மேலாளர்) ஆகியிருந்தான்.

பதவி உயர்வு கிடைத்து சில மாதங்களுக்குப் பிறகு…

”தப்புப் பண்ணிட்டமோன்னு நினைக்கிறேன் மச்சி. ஒருத்தன் காலை வாரிவுட்டு மேல வர்றது ஈசியா இருந்திச்சிடா.. இங்கே மிடில் லெவல்லே (நடுத்தர நிலை) என்னை மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கான். எல்லா நேரமும் கவனமா இருக்க வேண்டியிருக்கு”

“த்தா.. என்னால ரெவின்யூ (நிறுவனத்தின் வரவு) ஏறும் போது கூப்டு பல்லைக் காட்டினானுக. இப்ப ரெவின்யூ குறையும் போது கூப்டு சாவடிக்கிறானுக. இத்தனைக்கும் மார்ஜின்ல (இலக்கில் சற்று குறைவு) லேசா டவுன் ஆகியிருக்கு, அவ்ளோ தான். வீட்ல வேற வள்ளியோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. பயம்மா இருக்கு மச்சி”

“வீட்ல பேசி ஒரு மாசமாச்சிடா. இந்த க்வார்ட்டர் டார்கெட்டுக்கு (காலாண்டு இலக்கு) இன்னும் 2 க்ரோர் பில் (2 கோடி) ஆகணும். ரெண்டே வாரம் தான் இருக்கு. பாஸ் கூப்டு லெப்ட் அண்ட் ரைட் சொருவிட்டாரு. எனக்கு வேற கொஞ்ச நாளாவே பட படன்னு அடிச்சிது. தெனமும் காலைல லேசா தடுமாறினுச்சி. போய் செக் பண்ணேன். ஆன்க்சைட்டின்னு (படபடப்பு) சொல்லி மாத்திரை குடுத்திருக்கானுக”

நாள் ஒன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் நாற்காலியில் அமர்ந்து, தாகத்திற்கும் அவசரப் பசிக்கும் கோக்கை உள்ளே இறக்கி, மதியம் பற்றியெறிந்த வயிற்றுக்குப் பீஸாவும் பர்கரும் வார்த்து கம்பெனி நிர்ணயித்த காலாண்டு இலக்குகளை நிறைவேற்றத் தடுமாறிக் கொண்டிருந்த இடைவெளியில் 34 இன்சுகளாக இருந்த அனந்துவின் இடுப்பு 40 இன்சுகளானது. நின்றாலே மூச்சு வாங்கியது.

”மச்சான்.. இந்த எர்வாமேட்டின்  (தலையில் முடி வளர ‘அமேசான் காடுகளிலிருந்து கிடைக்கும் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும்’ தைலம்) சுத்த பிராடுடா. ங்கொய்யாலெ ஏழெட்டு லிட்டர் வாங்கி தலைய முக்கியே எடுத்திருப்பேன்; ஆனா இந்த ப்ளே க்ரௌண்டு (வழுக்கைத் தலை) மட்டும் விரிஞ்சி கிட்டே போவுது”

இடையில் வள்ளியின் நிலைமை மோசமாகி அனேகமாக பேச்சையே நிறுத்தியிருந்தாள். முன்பொரு காலத்தில் பட்டாம் பூச்சியாக இருந்த அவளது இன்றைய கூட்டுப்புழு வாழ்க்கையைக் காண எனக்கு மனம் ஒப்பவில்லை. நான் அவளை இனிமேல் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். அனந்து ஒரு முறை பேசும் போது வீட்டை ’பேய் குகை’ என்றான்; அலுவலகத்தை ’பிசாசுக் குழி’ என்றான். பிந்தையது அவனது விருப்பத் தேர்வாக இருந்த காரணத்தால் முந்தையதை அவனே உருவாக்கியிருந்தான். ஆரம்பத்தில் கவர்ச்சியாகத் தோன்றிய பிசாசுக் குழி அவனை மொத்தமாக உள்ளிழுத்து மூழ்கடித்தது.

it-stressஅனந்துவின் உழைப்பை மட்டுமின்றி, அவனது சொந்த வாழ்க்கை, நிம்மதி, ஆரோக்கியம் என்று சகலத்தையும் தின்று இலக்குகளை அடைந்த நிறுவனம் மூன்றாம் ஆண்டின் இறுதியில் ’இனி பிழிவதற்கு ஏதுமற்ற சக்கை இவன்’ என்று முடிவு கட்டியது.

நான்காம் ஆண்டின் துவக்கத்தில் அனந்து ஒரு உப்புமா பிரிவுக்குத் தூக்கியெறியப்பட்டான். அந்தப் பிரிவுக்குச் செல்பவர்களின் நிறுவன வாழ்க்கை அடுத்த நான்கைந்து வருடங்களில் முடிந்து விடும் என்பது எழுதப்படாத விதி. நிறுவனம் என்கிற அந்த இயந்திரத்திலிருந்து ’கழிவுகளை’ வெளியேற்றும் குழாயாக அந்தப் பிரிவு செயல்பட்டு வந்தது.

“மச்சி, திரும்ப ரெஸ்யூமை (சுய விவரங்கள்) ரெடி பண்ணனும்னு நினைக்கிறேன். ஐ.டி.ஐ.எல் சர்டிபிகேஷனுக்கு இப்பயும் வேல்யு இருக்கில்லே?”

நான் பதில் சொல்லவில்லை. எனது பதிலை எதிர்பார்த்து நீண்ட இடைவெளி விட்டவன், பதில் வராததைக் கண்டு மெல்ல பேச்சைத் துவங்கினான்.

”எங்கேயோ தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். எங்கேன்னு தான் புரியலை”

நான் பதில் சொல்லவில்லை. அறிவினாக்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று எப்போதோ தீர்மானித்திருந்தேன்.

-சுகுமாரன்