Saturday, May 3, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !

வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !

-

வெள்ளாறு பொங்கட்டும்! போராட்டம் வெல்லட்டும!

reclaim-vellaru-04ஊரையே காத்த ஆறு – அதற்கு
உன்னை விட்டால் வேறு யாரு?
முகம் கிழிந்து கிடக்குது பாரு
ரத்தம் கொதிக்குதடா மணல் மீது!

சேர்வராயன் தொடங்கி
சேரும் இடம் வரைக்கும்
வண்டல் வழங்கிய ஆறு,
மக்களை
வாழ வைக்கும் வெள்ளாறு!
அதன் தொண்டைக் குழியே
தூர்ந்து போகுது பாரு,

துடிக்கத் துடிக்க
கழுத்தை அறுக்கும் குவாரிகளை
வெட்டி எறி வேரோடு!

reclaim-vellaru-07நம் உதிரம் கலந்த ஆறு
உருக்குலைந்ததை பாரு,
மண்ணுயிர்க்கெல்லாம்
பால் வார்த்த வெள்ளாறு – அதன்
மார்பை டிப்பர் லாரிகள்
நசுக்கிய தடம் பாரு,

நம் உறவில் கலந்த ஆறு
ஒருவன் கொள்ளைக்கா கூறு?
நம் கண்ணைத் தோண்டுவதாரு
கலெக்டர், போலீசு, தாசில்தாரு,
ஆற்றைச் சுரண்டும் அதிகாரத்தின்
அடக்குமுறைகள் மீறு!

எத்தனை தலைமுறை
பருகிய ஆறு!
எத்தனை கால்நடை
பழகிய ஆறு!
எத்தனை பறவைகள்
உரசிய ஆறு!

reclaim-vellaru-09எத்தனை உயிரினம்
நம்பிய ஆறு!
அத்தனை உணர்ச்சியும்
அடி மணல் பாரு! – இதை
மொத்தமாய்க் கொல்லும்
குவாரிகளை மூடு!

நாணல் பூ நிழல் விழுந்தாலே
கூசும் நம் ஆறு – அதை
நாலாபக்கமும் பொக்லின் நகங்கள்
குதறி எடுப்பதைப் பாரு,
இயற்கையின் மடி அறுக்கும்
எந்திரங்கள் நம் தாய் மீது,
ஆற்றை அழிக்கும்
வன்முறைக்கு எதிராக
ஆயிரம் கரங்களாய்ச் சேரு!

reclaim-vellaru-02ஆற்றை காக்க முடியாத
ஓட்டு கேட்கும் தேர்தல் எதற்கு?
கூட்டு சேர்ந்து மணலை
கொள்ளையடிக்கும் கட்சிகளை
வெள்ளாற்றில் வைத்து நொறுக்கு!

சுட்டுப் பொசுக்கிய வெயிலிலும்
நமக்கு சுரந்து கொடுத்த ஆறு!
ஒட்டச்சுரண்டிய போதும் – இப்போது
மக்கள் ஊற்றெடுக்கும் ஆறு!
மணல் பரப்பெல்லாம் பாரு – மடியாத
உழைக்கும் மக்களின் வரலாறு
மக்கள் என்றால் கார்மாங்குடி – என
தமிழகமே நெஞ்சு நிமிர்கிறது!

போராட்ட உணர்ச்சியின் தடம் பதிந்து
வெள்ளாற்று மணலும் சிவக்கிறது!
நம் கர்ப்பம் சிதைப்பது யாரு?
அவன் கைகளை முறிக்கும்
போராட்டப் பெருக்கில்
பொங்கும் வெள்ளாறு!

– துரை.சண்முகம்