பிப்ரவரி 24-ம் தேதி “அம்மா” பிறந்த நாளில் ஜெயங்கொண்டம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே அதிரடியாக டாஸ்மாக் கடையைத் திறந்தது, தமிழக அரசு!
டாஸ்மாக் கடை அருகில் தீயணைப்பு நிலையம், யூனியன் அலுவலகம் போக தனியார் கல்லூரி, அரசுப் பள்ளி விடுதி என சுமார் 4,000 மாணவர்கள் கல்வி கற்கும் இடமாக இருக்கிறது.
ஏற்கனவே, 2004-ல் மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த இடத்தில் இருந்த டாஸ்மாக் சாராயக்கடை அகற்றப்பட்டு இருந்தது.
மூடப்பட்ட கடையை மீண்டும் திறப்பது என்பது ஏழை மாணவர்கள் மீது தொடுக்கும் சாராய யுத்தம் என்பதை மாணவர்களுக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் புரிய வைத்தார்கள்.
“படிக்கச் செல்லும் மாணவர்களை குடிக்க சொல்லுது அரசு” என்ற தலைப்பில்பிரசுரங்கள் அடிக்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
12-ம் வகுப்பு பொது தேர்வு 05-03-2015 அன்று நடக்க இருப்பதால் உடனே கடையை மூடவேண்டும் என்ற அடிப்படையில் 04/03/2015 காலை 9 மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தோழர்கள் முடிவு செய்தனர்.
உளவுத்துறை போலிசார் தோழர்களிடம் “போராட்டத்திற்குஅனுமதி வாங்கிவிட்டீர்களா” எனக் கேட்டனர் . அதற்கு தோழர்கள், “இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் பிரச்சனை, எதற்காக அனுமதி வாங்க வேண்டும், போராட்டம் உறுதியாக நடக்கும்” எனக் கூறினர்.
04-ம் தேதி போராட்டம் என்பதால் 6, 7, 8 வகுப்புகளுக்கு விடுமுறை விட்டு போராட்டத்தை திசை திருப்பினார்கள் அதிகாரிகள். ஆனால் முந்தைய நாள் பெரும்பாலான ஆசிரியர்கள் பிரசுரத்தை படித்துவிட்டு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
04-ம் தேதி போராட்டம் 9.30 மணிக்கு என்றாலும் காலை 8.30 மணிக்கே மாணவர்கள் அணிதிரண்டனர். முழக்க அட்டைகளுடன் மாணவர்களும், தோழர்களும் தயாராயினர். உடன் முற்றுகை போராட்டமும் துவங்கியது.
காலை 8.45 மணிக்கு காவல் துறையினர் 20 பேர் லத்தியுடன் வந்து இறங்கினர். காவல்துறை ஆய்வாளர், “போராட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை, இப்படி செய்யக்கூடாது” என்றார்.

மேலும், “தாசில்தார் வருவதாக சொல்லியிருக்கிறார். நீஙகள் அவருடன் பேசுங்கள்” என்றார்.
மறுபுறம் போராட்டம் நட ந்து கொண்டு இருந்தது. நாம் போராடுவது ஒரு நல்ல விசயத்திற்காக என்பதை புரிந்து கொண்ட மாணவர்கள் போலீசின் மிரட்டலை சட்டை செய்யவில்லை.

மாணவர்களின் முழக்கத்தை அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கேட்டுவிட்டு இளந்தலைமுறை இப்படி போராடுகிறது நாம் என்ன செய்கிறோம் என குற்ற உணர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லலாம்.
தாசில்தார் வந்தார். அவர், “நாம் பேசிக்கொள்ளலாம். மாணவர்களை அனுப்பி வையுங்கள்” என்றார். நம் தோழர்கள், “போராட்டமே மாணவர் நலனுக்குத்தான். அவர்களை போகவிட்டு பேசுவதற்கு என்ன இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவர்களையும் வைத்துக் கொண்டு வெளிப்படையாக பேசுங்கள்.” என்றனர்.

பக்கத்தில் இருந்த டாஸ்மாக் மண்டல மேலாளர், “இது அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை. உடனே எதுவும் செய்ய முடியாது. 2 மாதகாலம் அவகாசம் வேண்டும்” என்றார்.

இதற்கிடையே உளவுத்துறையினர் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.

இறுதியாக அரசு அதிகாரிகள், “இன்னும் 20 நாட்களில் கடையை மூட நடவடிக்கை எடுக்கிறோம், போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்றனர்.

“போராட்டத்தை நடத்துவது மாணவர்கள்தான். நீங்களே அவர்களிடம் பேசுங்கள்” என்றனர் தோழர்கள்.
இதைக் கேட்டவுடன் பதட்டமான தாசில்தார், “நீங்களே பேசுங்கள்” என்று கூறிவிட்டு, செல்போனை எடுத்து யாரிடமோ அவசரமாக பேசினார்.

நம் தோழர்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதிபடுத்திக்கொண்டு மாணவர்களிடம் மேற்கண்டசெய்தியைக் கூறினர்.
மாணவர்கள், “குறிப்பிட்ட நாளில் சாராயக்கடையை மூடவில்லையென்றால் நாமே மூடுவோம்” என்றனர்.

இறுதியில் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துவிட்டு, “குறிப்பிட்ட நாளில் மூடாவிட்டால், டாஸ்மாக் கடையை நாங்களே இழுத்து மூடுவோம்” என எச்சரிக்கை செய்துவிட்டு கலைந்து சென்றனர்.

இருபது நாட்களில் கடை மூடப்படவில்லை என்றால் இதே மாணவர் சக்தி இன்னும் பெருகி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
டாஸ்மாக் முற்றுகை போராட்டம் பற்றிய பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
– செய்திகள், புகைப்படங்கள்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, ஜெயங்கொண்டம்.
தொடர்புக்கு : 9786106180 மின்னஞ்சல் : rsyfjkm@gmail.com