கடந்த மார்ச் 1-ம் தேதி, காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை புது வண்ணாரப்பேட்டை கிராஸ்ரோடு சாலை அருகே உள்ள மண்டபத்தில் சட்ட உதவிமுகாம் நடைபெற்றது! நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பகுதிவாழ் இளைஞர்கள் உதவிகள் செய்தனர். சட்ட ஆலோசனை வழங்க மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும், சமூக அக்கறை கொண்ட உயர்நீதி மன்ற வழக்குரைஞர்களும் பங்கேற்றனர். இப்பகுதியைச் சார்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் நூர்தீன் முகாமிற்கு தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.
முகாம் துவங்கியதிலிருந்து இறுதிவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் சொத்து, குற்றவியல், விபத்து, தொழிலாளர் போன்ற பல்வேறு வகையான வழக்குகளுக்கு ஆலோசனை பெற்றும், தங்களது அடிப்படை உரிமைகள் பற்றிய தெளிவு பெற்றும் சென்றனர்.
நிகழ்வின் பொழுது, கலந்துகொண்ட கவிதை, பாடல், பேச்சு என மக்களையே பங்கெடுக்க வைத்ததன் மூலம் முகாம் துவக்கம் முதல் இறுதிவரை ஜனரஞ்சமாகவும், தொய்வு இல்லாமலும் சென்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தனிப்பட்டவர்களின் வழக்கு மட்டுமில்லாமல், சமூகப் பிரச்சனைகள் குறித்த கேள்விகளை வெளிப்படையாக மக்கள் மத்தியில் கேட்க வைத்ததின் மூலம், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டது.

இறுதியாக, ம.உ.பா. மையத்தின் தோழர் சரவணன் தனது உரையில் முகாம் நடத்துவதற்கான அவசியம் குறித்து விளக்கினார்.
“தனிநபர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிலநேரங்களில் நீதிமன்றம் உதவினாலும், பொதுவான மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், வாழ்வாதார பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் உதவாது. மக்களின் உறுதியான போராட்டங்களின் மூலம்தான் நீதி பெறமுடியும்” என்றார். மேலும், “ஓட்டு போடுவது ஒன்று தான் ஜனநாயக உரிமையாக மக்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, இயற்கை நமக்கு கொடுத்த வளங்களை பாதுகாப்பதும், நமது உரிமை. நமது சந்ததியினர் வாழமுடியாத அளவிற்கு ஆற்று மணலில் தொடங்கி நிலக்கரி வரையிலான அனைத்து கனிம வளங்களும் மக்களின் தேவைக்கு அப்பாற்பட்டு லாப வெறியுடன் சூறையாடப்படுகின்றது. பாதுகாக் கவேண்டிய அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளோடும், முதலாளிகளோடும் மாபியா கும்பலோடும் சேர்ந்து கொண்டு கொள்ளைக்கு துணை போகின்றனர். அரசு அதிகாரிகள் செய்ய தவறிய வேலையை நாம்தான் செய்யவேண்டும். நாம் தாம் பாதுகாக்கவேண்டும்” என வலியுறுத்தி, சமீபத்தில் ம.உ.பா. மையம் தலைமையில் 18 கிராமங்களை ஒன்றிணைத்து போராடி, கார்மாங்குடி மணல் குவாரியை மூடிய அனுபவங்களை மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.

மேலும், “அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி, மருத்துவம் தரவேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல! ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. இந்த கடமையிலிருந்து அரசு சிறிது சிறிதாக அரசு விலகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை நடத்துவதே மனித உரிமை மீறல்” எனச் சாடினார். “இத்தகையை சமூக ரீதியான உரிமைகளுக்கு தனிநபராக இருந்து போராடமுடியாது. அமைப்பாக இருந்தால் தான் சாத்தியம். போராடக்கூடியவர்களுக்கும் இத்தகைய கண்ணோட்டம் இருக்கவேண்டும். அத்தகைய கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதே இத்தகைய இலவச சட்ட உதவி முகாம் நடத்துவதற்கான அவசியம்” எனக் கூறினார்.
இறுதியாக வழக்குரைஞர் ம.உ.பா. மைய நிர்வாகக் குழு உறுப்பினர் மீனாட்சி நன்றியுரையுடன் முடிந்தது.
தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை கேட்க வந்த பகுதி மக்களுக்கு சட்ட ரீதியான சந்தேகங்கள் நிவர்த்தியானதோடு அரசியல் உணர்வும் பெற்றனர். இலவச சட்ட உதவி முகாம்களுக்கு முன்மாதிரியாக இம்முகாம் அமைந்திருந்தது. இம்முகாமிற்கு வந்திருந்த பிற பகுதி மக்கள் தங்கள் பகுதியிலும் நடத்த நமது அமைப்பிற்கு கோரிக்கை வைத்தார்கள். மக்களின் கோரிக்கைக்கேற்ப மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சட்ட உதவி முகாம்களை நடத்த திட்டமிட்டு வருகிறது!
தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை