பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லும் நீதிபதி சந்துரு!
அன்பார்ந்த வழக்கறிஞர்களே!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கறிஞர் போராட்டம் குறித்து நீதிபதி சந்துரு கடந்த 16-03-2015 தேதிய ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் ஏராளமான புள்ளி விவரங்களை அள்ளி வீசிக் கட்டுரைகள் எழுதியிருந்தார். கடந்த ஆண்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்சனைக்கு இதைவிடத் தீவிரமாக நடந்த போராட்டத்தை மூத்த வழக்கறிஞர் காந்தியும் அவர் சார்ந்த மெட்ராஸ் பார் அசோசியனும் பயன்படுத்திக் கொண்டபோது சந்துருவின் கட்டுரை வரவில்லை என்பது முக்கியமானது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்பதும், நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி காக்கப்பட வேண்டுமென்பதும்தான் வழக்கறிஞர்கள் போராட்டத்தின் நோக்கம். நீதிபதிகள் நியமனத்தில் இரகசியத்தன்மை காக்கப்படுவதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம்.
இப்போதைய தேர்விலும் தலைமை நீதிபதி, வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து ஒரு பட்டியல் வாங்கினார், அது என்னானது ?
”நீதிபதி பால்வசந்தகுமார் இருக்கும்வரை பட்டியலில் கையெழுத்திட மறுத்தாராமே காரணம் என்ன? தலைமை நீதிபதி- ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி – ஆர்.எஸ்.எஸ், நீதித்துறை பிரிவைச் சேர்ந்த பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஆகியோர்தான் இப்பட்டியலை தயாரித்தார்களாமே – உண்மையா?”
இவையெல்லாம் வழக்கறிஞர்களிடம் உலாவரும் தகவல்கள். தற்போதைய வழக்கறிஞர்களின் பார்கவுன்சிலுக்கு எதிரான போராட்டம் கூட நீதிபதிகள் நியமனம் தொடர்பான போராட்டத்தை திசைதிருப்பும் சதுரங்கத்தின் ஓர் அங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. பார்ப்பனீயத்தின் ஈராயிரமாண்டு வரலாற்றைப் படித்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து, வழக்கறிஞர்கள் எழுப்பும் மிக முக்கிய பிரச்சனை, ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இசுலாமிய நீதிபதிகள் ஒருவர்கூட இல்லை என்ற நிலையில், தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்விலும் ஒரு சிறுபான்மையினர் (முஸ்லீம் & கிறிஸ்தவர்), ஒரு பெண் வழக்கறிஞர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது போன்ற மிக முக்கியமான இக்கேள்விகளை நீதிபதி சந்துரு தவிர்ப்பது தாமாக ஏற்படுத்திக் கொண்ட மறதி நோயின் காரணமாகவா?
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டத்திற்குத் தொடர்பில்லாத கீழமை நீதிமன்ற புள்ளிவிபரங்களைக் காட்டி நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்து சமூகநீதி தமிழகத்தில் பூத்துக் குலுங்குவதாகச் சொல்லியுள்ளார் சந்துரு. இப்படிப் புள்ளிவிபரங்கள் காட்டினால் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அருந்ததியர் சமூகத்தினர்தான் 100% துப்புரவுப் பணியில் உள்ளனர். இப்பணிகளில் முற்பட்ட சமூகத்தினரின் பங்கேற்பு குறைந்து விட்டது சமூகநீதி செழித்துள்ளது எனச் சொல்லலாமா?
உண்மையில் கீழமை நீதிமன்றப் பணிகளுக்கு பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட சமூகத்தினர் வரத் தயாராக இல்லை. மாறாக சங்கரமடம் போல வேண்டியவர்கள், செல்வாக்குள்ளவர்கள், லாபியிங் என்று சொல்லப்படும் தரகு வேலை பார்ப்பவர்கள் வருவதற்கு உகந்த, அதிகாரம் வாய்ந்த பதவியாய் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வரத்துடிக்கிறார்கள். கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு வருவதற்காவது ஒரு அளவுகோல் இருக்கிறது (தேர்வு + நேர்காணல்), ஆனால் அவர்களை எல்லாம் அடிமைகளாக நடத்துகிற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுமுறைக்கு என்ன அளவு கோல் என்பதை நீதிபதி சந்துருவால் உலகுக்குச் சொல்ல முடியுமா? இன்று பதவியில் உள்ள நீதிபதிகளில் பலர் மூத்த நீதிபதிகளைப் பார்த்து லாபியிங் செய்து வந்தவர்கள்தானே?
நீதிபதி சந்துரு அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பொழுது நடந்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில், அனைத்து நீதிபதிகளடங்கிய கூட்டத்தில், மேற்படி தேர்வு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்து இவர் பேசியதுண்டா? வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஒரு சில சங்க நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்வது உண்மைதான் என்றாலும், நீதிபதிகள் தேர்வு முறை குறித்தும், அதுதான் பிரச்சனையின் மூலம் என்பதையும், எழுதாமல் வேண்டுமென்றே தவிர்க்கிறார் சந்துரு.
இது தவிர முற்பட்ட சமூகத்தினர் என்ற போர்வையில் தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட ஆறுபேரும் பார்ப்பன சமூகத்தினராகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளனர். வேறு மாநிலத்தவர் இருவர் எனக் கொண்டாலும், பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலிருக்கும் நீதிபதி கண்ணனைச் சேர்த்தால் அய்ந்து பேர் பார்ப்பனர்கள். இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். சந்துருவின் புள்ளிவிபரப்படி தேர்வு வைத்தால் ஒருவர் மட்டுமே மாவட்ட நீதிபதிகளிலிருந்து தேர்வாகிறார். ஆனால் தேர்வு இல்லாத நிலையில் 6 பேர்.
இதுதவிர, இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் முற்பட்ட வகுப்பினர் 800 பேர் உள்ளனரே. இதில் பிற்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 50-க்கும் குறைவுதானே. இந்தப் புள்ளி விபரங்கள் உயர்நீதிமன்றத்தில் சமூகநீதி அடிப்படையிலான தேர்வு தேவை என்பதை உணர்த்தவில்லையா? இதற்கும் மேலாக இட ஒதுக்கீடு ஏதோ சலுகை போலச் சித்தரிக்கிறார் சந்துரு. மெத்தப் படித்த மேதாவியான சந்துருவுக்கு இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை எனத் தெரியாதா?
கீழமை நீதிமன்றங்களிலிருந்து, உயர்நீதிமன்றத்திற்குத் தேர்வாகி வரும் மாவட்ட நீதிபதிகள் அனைவரும் பணிமூப்பின் அடிப்படையில் வருபவர்கள் என்ற உண்மையை மறைக்கும் சந்துரு, இவர்களையும் கொலீஜியம் தேர்வு செய்ததுபோல் காட்டுகிறார். பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்காக இத்தவறைத் தெரிந்தே செய்கிறார் சந்துரு.
அடுத்து மொத்த நீதிபதிகள் காலியிடங்களுக்கும் தேர்வுப் பட்டியல் அனுப்பாமல் பிரித்து அனுப்புவது ஏன்? மொத்தமாக அனுப்பினால் ஒரே சமூகத்திற்கு அதிகப் பணியிடங்கள் ஒதுக்குவது வெளிப்படையாகத் தெரியுமென்பதால், இரண்டு கட்டமாக அனுப்புகிறார்கள் என்பது வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு. இதற்கும் சந்துரு பதில் அளிக்கவில்லை.
சென்ற ஆண்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் “வெளிப்படையான தேர்வு; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரநிதித்துவம்” என்று தற்போதைய நீதிபதிகள் தேர்வு நடக்கவில்லை. வழக்கமாக அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை முன்னுதாரணமாகக் காட்டும் நீதிபதி சந்துரு இதனை மறந்தது-தற்செயலானதா?
இறுதியாக, வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பாக அடிக்கடி வாளைச் சுழற்றும் சந்துரு நீதித்துறை ஊழல் குறித்து ஆழ்ந்த மவுனத்தில் இருப்பது ஏன்? இதுவரை நடந்த நீதிபதிகள் தேர்வு, பணம், சாதி, செல்வாக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் நடந்ததா? இக்கேள்விகளுக்கான பதிலை சந்துருவின் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
வழக்கறிஞர்கள்,
உயர்நீதிமன்றம், மதுரை.
98653 48163, 94434 21368.