Saturday, May 15, 2021
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் நிதியும் நீதியும் - புரோக்கர் பொன்னுசாமி உரை

நிதியும் நீதியும் – புரோக்கர் பொன்னுசாமி உரை

-

மதுரை உயர்நீதிமன்ற கடைகளின் புரோக்கர் பொன்னுச்சாமியும்-டவுட் தனபாலும்

கடை எண்: ———-

பதிவாளர் பக்கிரிசாமி:
மனித உரிமை அமைப்புகளின் முன் ஜாமின்மனுக்கள் தள்ளுபடி! இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகமாக இருப்பதாகக் காட்டுகின்றனர்-உயர்நீதிமன்றம் கடுமை!

தாது மணல் கொள்ளை - வைகுண்டராஜன்
வைகுண்டராஜன், வைகுண்டராஜன் – னு, ஒருத்தரு பெரிய கொள்ளைக்காரன்னு ஊரே சொல்லுது!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, அய்யா ரொம்பக் கடுமையா இருப்பாரு! ஏமாத்துறவங்க, தப்பு செய்யிறவங்க கண்ணுல விரல விட்டு ஆட்டிருவாரு ஆட்டி! யாரும் தப்பமுடியாது!

டவுட் தனபாலு:
ஆமாண்ணே, உண்மதான்! நானும் டெய்லி பேப்பர்ல பாக்குறேனுல்ல!அப்புறம் ஒரு சந்தேகம்ணே! இந்த வைகுண்டராஜன், வைகுண்டராஜன் – னு, ஒருத்தரு பெரிய கொள்ளைக்காரன்னு ஊரே சொல்லுது! ஆனா அய்யா அவருக்கு, ஜாமீன் குடுத்ததாச் சொல்றாங்க! ஒருவேளை இவரு வேற வைகுண்டராஜனோ?

புரோக்கர் பொன்னுச்சாமி:
ஆமாம் தம்பி! அவரு இவரா இருக்கலாம்! இவரா இல்லாமலும் இருக்கலாம்! அவரும், இவரும் வேறயா இருக்கலாம்-வேறயா இல்லாமலும் இருக்கலாம்!

டவுட் தனபாலு:
அட ஏண்ணே காலையிலே சரக்கடிச்ச மாதிரிப் பேசுற! அவரு, இவரா இருக்க மாட்டருண்ணே! இந்த வைகுண்டம் ஏதாவது சுதந்திரப் போராட்டத் தியாகியா இருப்பாரு! ஏன்னா! தூத்துக்குடி துறைமுகம், கப்பல்-ன்னு வருதில்ல! வ.உ.சி.க்கு தூரத்துச் சொந்தமா இருப்பாரு!

புரோக்கர் பொன்னுச்சாமி:
இருப்பாரு! இருப்பாரு! அப்புறம் தம்பி இந்த 420-ல்ல பாத்தீங்கண்ணா, ஒரு லட்சம் ஏமாத்துனாக்கூட காசு கட்டாம ஒரு பயல விடமாட்டாரு! ஒரு காட்டுக் காட்டித்தான் விடுவாரு! அய்யா மதுரைக்கு வந்தப்பெறகு அம்புட்டு 420-யும் இலங்கைக்கு ஓடிட்டாங்கண்ணா பாத்துக்க எங்க அய்யா தெறமைய!

டவுட் தனபாலு:
அப்பிடியாண்ணே! ஆனா இந்த சிறீரங்கம் தேர்தல் பி.ஜே.பி கேண்டிடேட்டு ஆக்ஸ்போர்டு சுப்பிரமணி 1 கோடியே 13 லட்சம் ஏமாத்திருக்காரே! 2 பிரீவியஸ் கேசும் இருக்கு! அவருக்கு டெபாசிட் இல்லாம விட்டுட்டாரேண்ணே! எப்பிடிண்ணே!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை
இந்த சிறீரங்கம் தேர்தல் பி.ஜே.பி கேண்டிடேட்டு ஆக்ஸ்போர்டு சுப்பிரமணி 1 கோடியே 13 லட்சம் ஏமாத்திருக்காரே! 2 பிரீவியஸ் கேசும் இருக்கு! அவருக்கு டெபாசிட் இல்லாம விட்டுட்டாரேண்ணே! எப்பிடிண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி,ஆக்ஸ்போர்டு அடிச்ச காசு 1,13,20,000/-. இங்கதான் இருக்கு கதையில டுவிஸ்டு! அடிச்ச காச நல்லாக் கூட்டிப்பாரு! கூட்டுத்தொகை 7 வருதா? 7-அய்யாவுக்கு ராசியான நம்பரு! அதான் விட்டுட்டாரு! அந்த ஆக்ஸ்போர்டு 1 ரூபா சேத்து அடிச்சிருந்தான்! கத கந்தல்தான்!

டவுட் தனபாலு:
காலையிலேயே கண்ணக் கட்டுதேண்ணே! நம்ப முடியலையே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
உனக்கு எல்லாம் விளக்கமாச் சொல்லணுமா? மரமண்ட! மனுதர்மம் தெரியுமோ நோக்கு! அதுல சூத்திரன் கொலை பண்ணுனா மரண தண்டணை-அதே சமயம் பிராமணன் கொலை பண்ணுனா மொட்ட அடிச்சாப் போதும்!

டவுட் தனபாலு:
அப்ப அந்த அமெரிக்கக் கப்பலு கேசு! கொச்சியில வரும்போது ஆயுதம் இல்லையாம்- தூத்துக்குடிக்கு வரும்போது ஆயுதம் இருந்துச்சாம். அந்தக் கேசும் முடிஞ்ச்சுருச்சுல்லண்ணே! அவங்களும் – அவங்களாண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி! அவங்கெல்லாம் செவப்பா இருக்காங்கல்ல! அதனால தப்புப் பண்ணியிருக்க மாட்டாங்க!

டவுட் தனபாலு:
குவாட்டர் அடிக்காமலேயே தல சுத்துதேண்ணே!

கடை எண்: ————

பதிவாளர் பக்கிரிசாமி:
இந்தக் கடை ஓனர் ரொம்ப டெரர் ஆன ஆளு! கண்ண உருட்டி, மெரட்டுனாருன்னா ஜூனியர்ஸ் எல்லாம் தாங்க மாட்டீங்க! பாத்து நடந்துக்கங்க எல்லாம்!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, அய்யாவுக்கு இந்த ஆடல்-பாடல்-ஆபாசம் எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது! கலாச்சாரத்தக் காக்க கம்பா நிப்பாரு!

மேட்டுக்குடி ஆபாசம்
இந்த ஜட்ஜுங்க போற 5 ஸ்டார் ஓட்டல்- கிளப்-ஏன் கிரிக்கெட்டுல கூட பொண்ணுங்க அரைகுரையா ஆடுறாங்களே! அது எல்லாம் ஆபாசம் இல்லையாண்ணே!

டவுட் தனபாலு:
ஆமாண்ணே, உண்மதான்! ஓரே ஒரு சந்தேகம்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்னா?

டவுட் தனபாலு:
இந்த டி.வி.- சினிமாவுல அவுத்துப் போட்டுட்டு ஆடுறாங்களே! அப்புறம் இந்த ஜட்ஜுங்க போற 5 ஸ்டார் ஓட்டல்- கிளப்-ஏன் கிரிக்கெட்டுல கூட பொண்ணுங்க அரைகுரையா ஆடுறாங்களே! அது எல்லாம் ஆபாசம் இல்லையாண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி அது மேன்மக்கள் ஆட்டம்! கிராமத்துக்காரன் – போறவன் – வர்றவனுக்கெல்லாம் ஆபாச ஆட்டம் தேவையா என்ன?

டவுட் தனபாலு:
அடப்போண்ணே! இந்த 2—ஆம் நம்பர் கடையில ஆடலும்-பாடலும் ஆர்டரு அள்ளி விடுறாங்க! டெய்லி 20-30 டிஸ்போசலாம்! அங்க கூட்டம் கும்முது!

புரோக்கர் பொன்னுச்சாமி:
அப்பிடியா தம்பி! இது தெரியாமப் போச்சே! நம்ம கடைக்கு 200-300 டிஸ்போசல் ஆகிருக்குமே! வட போச்சே!

டவுட் தனபாலு:
அப்புறண்ணே! ஒரு மேட்டர முடிக்கணும்! முன்னப் பின்ன இருந்தா பாத்துக்கலாம்!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, விளையாடாத! இது மத்த கட மாதிரி சாதாரணக் கடயில்ல! 22,000 கோடி அடிச்ச நோக்கியா, பல லட்சம் கோடி அடிச்ச வி.வி எல்லாம் நம்ம கடை கஸ்டமர்ஸ்தான்!

டவுட் தனபாலு:
அந்த அளவுக்கு இல்லண்ணே! பாத்துச் சொல்லுங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன தம்பி ரொம்ப வீக்கா இருக்கியே! நம்ம கடை ஓனரோட சீனியரு வந்தாக்கூட பிளைட்-போக்குவரத்து-பீசுன்னு 2-3 ஆகுமேப்பா!

டவுட் தனபாலு:
அந்த அளவுக்கு இல்லண்ணே! கொஞ்சம் பாத்துச் சொல்லுங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
சரி தம்பி உன் லெவலுக்கு மதுரையிலே ஆள் இருக்கு! எப்பிடிக் கொறச்சாலும் 1-11/2 ஆகுமேப்பா!

டவுட் தனபாலு:
அண்ணே! நான் உங்க தம்பிண்ணே! ரெண்டு நாள்தான் இருக்கு! பாத்துச் சொல்லுங்கண்ணே! ஒரு 1-க்குள்ள முடிங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன தம்பி, உலகம் புரியாத ஆளா இருக்கியே! ஏ/சி எல்லாம் போட்டு கடை நடத்துறோம்! சும்மாவா! நம்ம கடையோட தத்துவமே – காசு, பணம், துட்டு,மணி-மணி————– காசு,பணம், துட்டு, மணி-மணி——————-

கடை எண்: —————–

பதிவாளர் பக்கிரிசாமி:
இந்தா பாருங்க கஸ்டமர்ஸ்! இந்தக் கடையில எல்லாருக்கும் பொருள் கிடைக்குமுன்னு லிஸ்ட் இருக்கும்! ஆனா, பொருள வாங்குறது உங்க சாமர்த்தியம்! இதுக்கு மேல நாசூக்கா என்னால சொல்ல முடியாது!

கிரானைட் கொள்ளை
மேலூர்ப் பக்கம் கஸ்டப்பட்டு கடப்பாரைய வச்சு கல்லத் தோண்டிருக்காங்க சில பேரு! அதுக்குப் போயி கேசு போடுறாங்க! விடுவமா ஸ்டே குடுத்தமா? இல்லையா?

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, ஒரு நாளைக்கு 637 கேசு! 1-ல்ல 2-லிஸ்ட்! அது மட்டுமில்ல 10.30-க்கு நீங்க மென்சன் பண்ணலாம்! 12.00 மணிக்கு முக்கியமானவங்க லிஸ்ட்! அதுலக் கொஞ்சம் தொந்தரவு பண்ணாதீங்க! அப்புறம் 2.15 –க்கும் உங்களுக்கு வாய்ப்பிருக்கு! எத்தனை சான்ஸ்! எல்லாருக்கும் நீதி! எப்புடி!

டவுட் தனபாலு:
அதெல்லாம் சரிண்ணே! டெய்லி காலைல ஆசையாத்தான் கடைக்கு வர்றோம். காலைலருந்து இப்பக் கெடைக்கும், அப்பக் கெடைக்குமுண்ணு காத்திருந்தாலும் கடை மூடுறவரைக்கும் நமக்கு ஒண்ணும் போணியாகல. ஆனா சில பேரு கேப்புல கெடா வெட்டுறாங்க! என்ன செய்யிறது?

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி கண்ணு குருடா உனக்கு? டெய்லி ஏவாரம் கூவிக் கூவி நடக்கு! நேத்துக்கூட இந்த மேலூர்ப் பக்கம் கஸ்டப்பட்டு கடப்பாரைய வச்சு கல்லத் தோண்டிருக்காங்க சில பேரு! அதுக்குப் போயி கேசு போடுறாங்க! விடுவமா ஸ்டே குடுத்தமா? இல்லையா?

டவுட் தனபாலு:
அது சரிண்ணே! இந்த கல்லத் தோண்டுனதத்தான் கிரானைட் திருட்டுங்கிறாங்களா? இதத்தான் சென்னைல உட்காந்து CJ – வேற சகாயத்த விசாரிக்கச் சொல்றாரா? அவருவேற உருண்டு-பெறண்டு ஏதோ பண்ணிட்டுக் கெடக்காரு!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, நம்ம எல்லாத்தையும் சட்டப்படி செய்யிறோம்! அவ்வளவுதான்!

டவுட் தனபாலு:
அதெல்லாம் சரிண்ணே! திருட்டுக் கேச போலீசு விசாரிக்கவே கூடாதுண்ணு சொல்லிட்டீங்க! ஆனா, நிறைய ஜூனியர் வக்கீலுங்க போட்ட F.I.R. QUASH -எல்லாம் USUAL ORDER-ன்னு டிஸ்மிஸ் பண்ணுறீங்களே! நியாயமாண்ணே?

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, அதெல்லாம் மேட்டரப் பொறுத்து! வர்ற ஆளப் பொறுத்து! இது CONSTITUTIONAL COURT-தம்பி விளையாடாத!

கோயில் உண்டியல்
ஓரத்துல உண்டியல் இருக்கு! அதுல காணிக்கை போட்டா, உடனே பிரசாதம் கிடைக்கும்! நோ ஆர்க்யூமென்ட்! ஒன்லீ ஆர்டர்!

டவுட் தனபாலு:
என்னமோ போங்கண்ணே! உங்க கடையில கொள்ளைக்காரன்- முகம் தெரிஞ்சவனுக்குத்தான் போணி ஆகுது! எங்கள மாதிரி ஆளுங்க என்ன செய்யிறது?

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன தம்பி 2000 வருசத்துக்கு முன்னாடியே நம்ம முப்பாட்டன் எழுதிட்டாரு! “ பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”ன்னு!

கடை எண்: ———

பதிவாளர் பக்கிரிசாமி:
இந்தா பாருங்க கஸ்டமர்ஸ்! மத்த கடைக மாதிரி மறைஞ்சு, மறைஞ்சு ஏவாரம் பண்ற கடை இல்ல இது! ஓரத்துல உண்டியல் இருக்கு! அதுல காணிக்கை போட்டா, உடனே பிரசாதம் கிடைக்கும்! நோ ஆர்க்யூமென்ட்! ஒன்லீ ஆர்டர்! மதியம் வரைக்கும்தான் ஏவாரம்! பாத்துக்கங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, இப்பிடி வெளிப்படையா ஏவாரம் நடக்குற கடை இந்தியாவிலே நம்ம கடதான்! இதுக்கே எங்களுக்கு ஒரு விருது குடுக்கணும்! அடுத்து பிரணாப் முகர்ஜியத்தான் ஸ்டெரய்ட்டாப் பாக்கணும்!

மதுரை உயர்நீதிமன்றம்
காலைல இருந்து மதியம் வரைக்கும் உழைக்குறோம்! சம்பாதிக்கிறோம்! இதுல மறைக்கிறதுக்கு என்னா இருக்கு?

டவுட் தனபாலு:
இருந்தாலும் கொஞ்சம் அரசல்-புரசலாப் பண்ணலாமுல்லண்ணே! அப்பத்தான் ஏவாராம் ரொம்பநாள் ஓடும்! மத்த கடக்காரங்க எல்லாம் சங்கடப்படுறாங்கண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
அடிங்…………….! எவன் கூவுறது! எங்க ஓனருக்கு எல்லாம் தெரியும்! நம்மளப் போல பல கடையிலயும் 2—ஆம் நம்பர் பிஸினஸ்தான் நடக்குது! என்னா கொஞ்சம் பந்தா பண்ணி- பாசாங்கு பண்ணி- சமாளிச்சு ஏவாரம் பண்ணுறாங்க! நம்ம ஓனரு ஸ்ட்ரெயிட் பார்வேர்டு! வெள்ளந்தியான ஆளு! எதையும் மறைக்கத் தெரியாது அவருக்கு!

டவுட் தனபாலு:
இருந்தாலுமுண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன நொறுந்தாலும்! காலைல இருந்து மதியம் வரைக்கும் உழைக்குறோம்! சம்பாதிக்கிறோம்! இதுல மறைக்கிறதுக்கு என்னா இருக்கு? ஏய் ஓடிரு! இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு! உண்டியல் பாதிகூட நெறையல! என்னதான் இருந்தாலும் மெட்ராசு அளவுக்கு மதுர இல்ல! அடுத்தாவது இந்த மைன்ஸ்-மினரல்ஸ்-ன்னு ஏதாவது வாங்கணும். அப்பத்தான் கட்டும்!

குறிப்பு: கடை எண்களை சரியாக எழுதுவோருக்கு சிறந்த ஊகிப்பாளர் விருது கிடைக்கும்.

தொகுப்பு:

வழக்கறிஞர்கள்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
150-இ, ஏரிக்கரை சாலை,
கே.கே.நகர், மதுரை-20.
98653 48163.

Leave a Reply to வேல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க