சேரிக்குள்
சிறை வைக்கப்பட்ட
தாழ்த்தப்பட்ட மக்கள்

கூண்டுக்குள்
அடைக்கப்பட்ட
அம்பேத்கர் சிலைகள்.
சுதந்திரமாக திரியும்
சாதி வெறியர்கள்
தந்திரமாக
அம்பேத்கர் சிலைக்கு
மாலை போட்டுவிட்டு
தாழ்த்தப்பட்டோர் குடிசைக்கு
தீ வைக்கும்
‘சமூகநீதி ‘ காவலர்கள்
மாட்டிறைச்சிக்குத்தான் தடை
தலித் இறைச்சி
தேசமெங்கும் தாராளமாக.
ரத்தம் உறைவதற்கு முன்பே
உறைந்துவிடும் நீதி
சாதிப்பஞ்சாயத்துக்களில்
துடைத்துப் போடப்படும்
அரசியல் சட்டங்கள்

தீண்டாமையில்
தேசிய ஒருமைப்பாடு
மலம் அள்ளுவதற்கு மட்டும்
இட ஒதுக்கீடு
திருஞான சம்பந்தருக்கு
ஞானப்பால்
‘தீண்ட்டத்தகாதோருக்கு’
சாணிப்பால்!
இதுதான் இந்து மதம்
இந்த
இழி சமூக அமைப்பை
வெறுக்கவும் கூடாது
இயல்பாக
சமூக உறவை
விரும்பவும் கூடாது என
விதிக்கப்பட்ட
தண்டனையாய்
இந்து சமூக வாழ்க்கை
வரலாறு தெரியாதவனால்
வரலாறு படைக்க முடியாது என
முதலில்
பார்ப்பன இந்துமத
அடிமைச்சங்கிலிக்கு
அம்பேத்கர் வெடி வைத்தார்

ராமன்_ கிருஷ்ணன் புதிர்
மூலமாக
மனுதர்ம பாம்புகளின்
நச்சுப் பற்களை
நறுக்கிக் காட்டினார்
சாதிக்கறையின்
மனங்கள் தெளிய
மக்களோடு குளத்தில் இறங்கினார்
சாதி இந்துக்களும் மனிதராக
சட்டத்தை வெளுத்தார்
ஒரு பக்கம்
காந்திய கட்டுவிரியன்
மறுபக்கம்
ஆர்.எஸ்.எஸ். ஆதிசேசன்
பிடுங்கலின் நடுவே
பார்த்த இடமெங்கும்
பார்ப்பனியம்
பிடுங்கி எறிந்தார்
கைம்பெண் உரிமை.. ஜுவனாம்சம்
ஒருதார மணம்
பெண்களுக்கு சொத்துரிமை
அனைவருக்கும் கல்வி உரிமை….. என
அம்பேத்கர் சட்டம் பேசப் பேச…
பீனல் கோடுகளை கட்டிப்போட
பூணூல் கோடுகள் வெகுண்டு பாய்ந்தன!

சமூகப்போராட்டத்தின்
சாதனைகள்
அரசியல் சட்டங்களில்
நீர்த்துப்போனதை
உணர்ந்த அம்பேத்கர்
தெளிவுபடுத்தினார்;
” பார்ப்பனர்களுக்கு
ஒரு ராமாயணம் தேவைப்பட்டது
வால்மீகி பயன்பட்டார்,
பார்ப்பனர்களுக்கு
ஒரு மாபாரதம் தேவைப்பட்டது
வியாசர் பயன்பட்டார்.
பார்ப்பனர்களுக்கு
ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டது
என்னை பயன்படுத்திக் கொண்டார்கள்”…
முட்டிமோதி
பட்டுத்தெளிந்து சொன்னார்;
” இது… இலட்சியத்திற்கு
பயன்படாதெனில்.. இந்த
அரசியல் சட்டத்தை கொளுத்தும்
முதல் ஆளாக நானே இருப்பேன்”
அம்பேத்கரின்
சிந்தனை அழகு
சிலையில் மட்டுமா?
இந்த நிலையில் உள்ளது
முடிவுக்கு வந்த
அம்பேத்கரின்
அரசியல் சிந்தனைத் தொடர்ச்சியாய்
செயல்பட வேண்டிய காலமிது!

அம்பேத்கரே
வெறுத்துப்போன
அரசியல் சட்ட கட்டமைப்பை
நம்ப வைக்க போராடுவது
ஏமாற்று வேலை
அடுத்த கட்டம் சிந்திப்பதுதான்
அடித்தள மக்களின் தேவை.
பார்ப்பனக் காலைச்
சுற்றுவதற்கு
பாபாசாகேப் படம் எதற்கு?
பஞ்சாயத்து தலைவராகவே
உட்கார முடியாத ஜனநாயகத்தில்
பாராளுமன்ற
காவடி எதற்கு?
இன்னல்களின் நடுவே
பார்ப்பன பயங்கரத்தின்
பின்னல்களில் சிக்காமல்
இந்துமதக் கொடுங்கோன்மைக்கு எதிராக
மக்களின்
எண்ணங்கள் வளர்த்தவர் அண்ணல்,

“இன்னமும்.. நான்
பார்ப்பனிய அடிமை” என
எறியும் காசுக்காக
காவி அடிமையாய்
அலையும் கூட்டமும்
அம்பேத்கரை தொடுவது
அரசியல் இழிதகைமை!
அம்பேத்கர்
‘கற்பி’ என்றது,
படித்து ஐ.ஏ.ஸ், அய்.பி.எஸ் ஆகி
போராடும் தலித்துக்களையும்
போட்டு மிதிக்க அல்ல.
சமூக இழிவுகளைப் போக்க
போராட்டங்களை கற்பிக்கச் சொன்னார்!
ஆதிக்கசாதி ஆதிக்க வர்க்க
அரசாட்சியில்
உழைக்கும் மக்கள்
உரிமைக்காகப் போராடினால்
உதைக்க மட்டுமே சட்டம்!
எதிர்க்கும் குரலுக்கு
சாதிவெறியின் சிறுநீர்
இந்தக் கட்டமைப்பை
ஏற்றுக் கொண்டால்
தனிச் சுடுகாடும் தகராறு
கம்யூனிசத்தை
ஏற்றுகொண்டதால்
பண்ணை அடிமைத்தனதை
போட்டுப் புதைத்த
கீழத்தஞ்சை வரலாறு!
அடித்தள மக்களை
அடித்த திசையெங்கும்
அரசியல் சட்ட ஒப்பாரி,
ஆதிக்க ‘ரன்வீர்சேனா’வை
அடித்து விரட்டியது
உழைக்கும் மக்களின் நக்சல்பாரி!
ஒடுக்கும் வர்க்கத்தின்
இந்தக் கட்டமைப்பை
ஒழிக்காமல் மக்களுக்கு
ஒரு போதும் விடியாது
என்ற உண்மையை
ஓங்கிச் சொல்லும்
ஒரே அரசியல் ‘நக்சல்பரி’
தனிக்குவளை…
தனிக் கிணறு
தனிச் சுடுகாடு..
மட்டுமல்ல
இது தனி ஜனநாயகம்
சுரண்டுபவன்
ஆயுதமேந்தினாலும்
அது அகிம்சை
பாதிக்கப்பட்டவர்
நகம் வளர்த்தாலும் தீவிரவாதம்
மாறிவிடவில்லை எதுவும்
தலித்துகளின்
பழங்குடிகளின், உழைக்கும் மக்களின்
நிலத்தை பிடுங்கும் கார்ப்பரேட் ஆண்டைகள்
ஊரைவிட்டே விலக்கும்
வளர்ச்சித்திட்டம்
நாடு கடத்தும் கூலி வேலை,
கழனி விட்டு
கணினி போனாலும்
எதிர்த்துப் பார்த்தால்
இ- மெயிலில் சவுக்கடி
இணையத்தில் சாணிப்பால்!
கிராமம் விட்டு
தப்பி வந்தாலும்
தனியார்மய தாராளமய
மறுகாலனிய பண்ணைகளில்
கால நேரமின்றி
கசக்கிப்பிழியப்படும் வாழ்வு!
முற்றிலும்
ஆதிக்கச்சுரண்டலுக்காகவே
அமைக்கப்பட்டிருக்கும்
இந்த போலிஜனநாயகத்தில்
தலித்தே ஆட்சிக்கு வந்தாலும்
தாழ்த்தப்பட்டோரையும்
மனுதர்மும்
மறுகாலனீய தர்மமும்
ஒடுக்கவே செய்யும்!
அம்பேத்கர்
இல்லைதான்..
அவலங்களை பார்த்துகொண்டிருக்கும்
நாம் ஒரு முடிவுக்கு
வரலாம்தான்…
இந்த கட்டமைப்பை தகர்க்காமல்
அதிகாரத்தை கையில் எடுக்காமல்
ஏது ஜனநாயகம்?
ஏது வாழ்க்கை?
– துரை. சண்முகம்