மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் 05-04-2015 அன்று மாலை நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் 2001-ம் ஆண்டு “மனித உரிமை பாதுகாப்பு மையம்” என்ற பெயரில் தொடக்கப்பட்ட அமைப்பு 2015-ல் “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்” (PRPC) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த 15 ஆண்டுகளில் அமைப்பின் செயல்பாடுகளை ஒரு சிறுகையேடாக தொகுத்து ஆவணப்படுத்துவது, சிறு புத்தகமாக வெளியிடுவது என முடிவு செய்து, நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு புத்தக வெளியீடு மற்றும் கார்மாங்குடி வெள்ளாற்று பகுதியில் சட்ட விரோத மணல் குவாரியை மூடவைத்த மக்களை ஒருங்கிணைத்து PRPC செய்த சமரசமில்லாத போராட்ட குறுந்தகடு (DVD) வெளியீடு ஆகியவை நடைபெற்றன.
PRPC-ல் புதிய உறுப்பினர்கள் இணைவதும், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தலும் நடைபெற்றது.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவராக கடலூர் வழக்கறிஞர் ச.செந்தில், செயலாளராக வழக்கறிஞர் R.புஷ்பதேவன், இணைச் செயலாளராக சிதம்பரம் வழக்கறிஞர் சி.செந்தில், பொருளாளராக கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக அப்பதவியில் செயல்பட்டு வரும் செந்தாமரைக்கந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக செல்வகுமார், செல்வம், ஆனந்த், பழனி, குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தின் செயலாளர் R.புஷ்பதேவன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தாமரைக்கந்தன் ஆண்டு வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் விருத்தாசலம் முன்னாள் நகர மன்ற தலைவர் மருத்துவர் வள்ளுவன், எழுத்தாளர் இமையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.பஞ்சமூர்த்தி ஆகியோர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார்கள்.
மணல் கொள்ளைக்கு முடிவு கட்டிய மக்கள் போராட்ட குறுந்தகட்டை (DVD) வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு M.G.பஞ்சமூர்த்தி வெளியிட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு.வை.வெங்கடெசன் பெற்றுக்கொண்டார்.

“கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறோம்” என்ற மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 2001-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான செயல்பாடுகளின் தொகுப்பு புத்தகத்தினை கடலூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செந்தில் வெளியிட மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பெற்றுக் கொண்டார்.
PRPC மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, “இந்த ஜனநாயக அமைப்பு முறையில் வார்டு கவுன்சிலர் முதல் பிரதமர் வரை அதிகார வர்க்கம் அனைத்தும் சீர்குலைந்து செயலற்றுப் போய் விட்டது. அவை நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கான அமைப்புகளாக மாறிவிட்டன. மக்கள் போராடாமல் தங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியாது” என்பதை விளக்கியும் PRPC யின் செயல்பாடுகளை விளக்கியும் தொகுப்புரையாற்றினார்.
பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி வழக்கறிஞர் புஷ்பதேவன் பேசினார்.
கூட்டத்தின் இறுதியில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்டிய மக்களின் போராட்ட குறுந்தகடு அனைவருக்கும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அனைவரும் மிகவும் ஆச்சர்யத்துடன், ஆர்வத்துடன் அதனை கண்டு களித்தனர்.
PRPC-யின் செயற்குழு உறுப்பினர் R.செல்வகுமார் நன்றியுரை கூற பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
PEOPLES RIGHTS PROTECTION CENTER
கடலூர் மாவட்டம்.