Saturday, May 10, 2025
முகப்புசெய்திமேகாலயாவில் அமித் ஷாவுக்கு மாட்டுக்கறி ' வரவேற்பு '

மேகாலயாவில் அமித் ஷாவுக்கு மாட்டுக்கறி ‘ வரவேற்பு ‘

-

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர சங் பரிவாரங்களின் இந்துத்துவ பாசிச தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதில் தமிழகம் தனித்து இல்லை என்பதற்கு சான்று பகர்கிறது மேகாலயா மாநிலத்தில் நடந்திருக்கும் போராட்டம்.

அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி 'வரவேற்பு'
அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி ‘வரவேற்பு’

பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித் ஷா வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மேகாலயா மாநிலத்திற்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சென்றார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைநீயூவ்ட்ரெப் தேசிய விடுதலை இயக்கம் – Hynniewtrep National Liberation Council (HNLC) 12 மணிநேர பந்த்-க்கு அழைப்பு விடுத்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நிகழ்த்தப்பட்டு வருகின்ற தாக்குதல்களை கண்டித்து இந்த பந்த் நடத்தப்பட்டது.

HNLC, த்மா யூ ரங்க்லி-ஜுகி (TUR) என்ற அமைப்பு,  மற்றும் காசி தேசிய ஒன்றியம் ஆகிய அமைப்புகள் மாட்டுக்கறி விருந்தை பா.ஜ.க.வின் மாநில தலைமையகத்திற்கு முன்பாக நடத்தியது.

மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்
அமித் ஷா வருகையை ஒட்டி, மோடி அரசின் இந்துத்துவ தாக்குதல்களை கண்டித்து மாட்டுக் கறி உணவு உண்ணும் போராட்டம்.

“இது வெறுமனே மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் மட்டும் அல்ல; சங் பரிவார அமைப்புகள் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்” என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ரிங்காட் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க கட்சியினரை “வெறுப்பின் தூதர்கள்” என்று அழைக்கும் ஏஞ்சலா, “கர் வாபஸி, நில கையகப்படுத்தல் சட்டம், மேக் இன் இந்தியா திட்டம் போன்ற நம்மை அடிமைப்படுத்தும் வெறுப்பு பிரச்சாரம் அனைத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார். இந்தப் போராட்டத்தை  உரிமைக்கான விருந்து (Feast for Right) அவர் அழைக்கிறார்.

வெவ்வேறு பின்னணி கொண்ட பல்வேறு தரப்பு மக்கள் இந்த போராட்டத்துக்கு அணிதிரண்டனர். மேலும், பந்த் அழைப்பை மதித்து பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அனைத்தும் அமித்ஷா வருகை புரிந்த அன்று மூடப்பட்டிருந்தன.

அமித் ஷா வருகை எதிர்ப்பு
அமித் ஷாவுக்கு ‘வரவேற்பு’

அமித்ஷாவின் நிகழ்ச்சி நடந்த அரங்கத்திற்கு முன் செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததால், ஷில்லாங்கில் கவர்னர் மாளிகை மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைமையகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தனது உரையில் காங்கிரஸ் கட்சியை மட்டும் குறை கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார், அமித்ஷா.

மாநில பா.ஜ.க தலைவர் க்லுர் சிங் லிங்டோ மாட்டுக்கறி உண்பதை ஆதரித்து ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியிருந்தார். அது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தமிழிசை சவுந்தரராஜன் வடிக்கும் முதலைக் கண்ணீரை போன்றது.

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதாக மேற்கொண்டிருக்கும் பயணத்தில் மூன்றில் மட்டும் தான் தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார் அமித்ஷா. மற்ற மாநிலங்களில் பொரி உருண்டை அமித்ஷா சந்திக்கப் போகும் எதிர்ப்பின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இது தொடர்பான செய்தி