செய்தி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் நடந்த புத்த பூர்ணிமா தின விழாவில் கலந்து கொண்டு நேபாள மக்களுக்காக பிரார்த்தித்தார்.
நீதி: மோடியின் உதவியை விளம்பரப்படுத்துவதற்காக நேபாளத்தில் சுற்றும் 200 இந்திய ஊடக நபர்களை வெளியே போகுமாறு நேபாள் மக்கள் டிவிட்டரில் வறுத்தெடுக்கிறார்கள். ஏழவு வீட்டில் ஏலக்காய் கேட்டால் அவன்தான் இந்திய பத்திரிகையாளன்.
_______
செய்தி: பாராளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
நீதி: இந்தக் கோழி வானம் ஏறி வைகுந்தம்தான் போகாது. கூரை ஏறி கூ முட்டை கூடவா போடக் கூடாது யுவர் ஆனர்?
________
செய்தி: வருமான வரித்துறை 2014–2015–ம் நிதி ஆண்டில் வரியாக ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 200 கோடி வசூலித்து உள்ளது.
நீதி: வரியிலிருந்து முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை எவ்வளவு?
________
செய்தி: ரயில்வே பணிகள் குறித்து ஆய்வு செய்ய, அமைக்கப்பட்ட பிபேக் தேப்ராய் கமிட்டியும், ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு ஆதரவாக, பரிந்துரை செய்திருந்தது. ஆனால், ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சுரேஷ் பிரபு, ‘ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை’ என, ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது இந்த தகவலை மீண்டும் உறுதி செய்து உள்ளார்.
நீதி: பாரத மாதாவையே பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்த்த நிலையில் ரயில்வேயை தனியாக தனியாருக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்வது நோயாளி செத்தா என்ன, ஆபரேஷன் கண்டிப்பாக உண்டு என்று சொல்வது போலவே.
________
செய்தி: ஏழை மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 9-ம் தேதி துவக்கி வைக்கவுள்ளார்.
நீதி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கும் இலட்சியத்தையே ஏழைகளுக்கு பாதுகாப்பு, ஓய்வு, திட்டம் என்று என்ன ஒரு பில்டப்பு. எச்சி துப்புறதை வறண்டு போன பூமியில் பெய்யுற மழைன்னு வியாக்கியானம் சொன்னா விட்டுருவீங்களா, வெரட்டுவீங்களா?
________
செய்தி: தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு பிரதமர் மோடியின் மனைவி யசோதா மீண்டும் மனு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதி: மனைவியாக மதிக்காமல் காவலுக்கு மட்டும் பத்துப் பேரைப் போட்டது ஏன் என்று கேட்பதில் என்னய்யா சர்ச்சை?
_______
செய்தி: யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்களில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பரவலாக தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை (cluster bomb) பயன்படுத்துவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
நீதி: ஷியாக்களை பூண்டோடு ஒழிப்பதே சன்னி வகாபியசத்தின் இசுலாமிய சகோதரத்துவம்!
_______
செய்தி: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை குறைத்ததால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். ஆனால், பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் ஆவின் நிர்வாகம், உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றன. இதனால், தினசரி, 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது.
நீதி: ஆவின ஒழிக்க தனியார் பாலைக் கொண்டு வந்தார்கள். இப்போது பால் விவசாயிகளை ஒழிக்க தனியார் நிறுவனம் ஆவினைப் பயன்படுத்துகிறது! ஆவினையும் அரசையும் திருத்தணும்னா தனியாரை அடிக்கணும். அங்க அடிச்சா இங்க வலிக்கும்!
______
செய்தி: இந்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்த போது மத்திய அரசால் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், இந்த கேள்விக்கு பதில் அளிக்க மத்திய அரசின் வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது. உணர்ச்சிபூர்வமான விஷயம் என்பதாலும், இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என்பதாலும் பதில் அளிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதி: ஆமாய்யா டீ பார்ட்டிக்கு மோடி போட்ட நமோ கோட்டுக்கு செலவுன்னு பத்து இலட்சத்தை காமிக்கிறது உணர்ச்சிபூர்வமான விசயம்தானே?
_______
செய்தி: ராஜஸ்தானில் பசு மாட்டு சிறுநீர் அதாவது கோமியம் சுத்திகரிப்பு நிலையத்தை அந்த மாநில அரசே நிறுவியுள்ளது. இதை அந்த மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் திறந்து வைத்துள்ளார். பத்மேரா கௌ ஷாலா என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் முலமாக பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளதாம்.
நீதி: சரிடா, ஆட்டு புழுக்கை, பன்றி விட்டை, கழுதை விட்டை போன்ற வஸ்துக்கள் மட்டும் என்ன பாவம் செய்தன?
_______
செய்தி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனம், அரசிடமிருந்து கடன் பெற்று முறைகேடு செய்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான சி.ஏ.ஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதி: நிதின் கட்காரி ஊரறிந்த மோசடி பேர்வழின்னு அமைச்சராவதற்கு முன்பே மோடிக்கு தெரியும் போது சி.ஏ.ஜி அறிக்கை ஒரு ஐ.எஸ்.ஐ சதியே!
________