Tuesday, May 6, 2025
முகப்புஅரசியல்ஊடகம்சல்மான் கான் கொன்று பழக ஏழைகள் தேவை

சல்மான் கான் கொன்று பழக ஏழைகள் தேவை

-

”ஒரு நாய் சாலையில் தூங்கினால் அதற்கு நாயின் சாவு தான் கிடைக்கும். சாலைகள் ஒன்றும் ஏழைகளின் அப்பன் வீட்டு சொத்தல்ல”

”சாலைகள் கார்களுக்கும் நாய்களுக்குமானது.. அதில் தூங்கும் மக்களுக்கானதல்ல”

– மேற்படி வக்கிர உபதேச முத்துக்களை உதிர்த்திருப்பவர் பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா.

”ரெயில் பாதையைக் கடக்க முயற்சிப்பவரின் மேல் ரெயில் மோதிக் கொன்றால் அதற்கு அதன் ஓட்டுனரைக் கைது செய்ய முடியுமா?”

“வேண்டுமானால் நாம் சாலையில் கோடு கிழித்து வீடற்றவர்கள், கார் ஏறிக் கொல்லும் என்ற அச்சமின்றித் தூங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம்”

– மேற்படி முத்துக்கள் பாலிவுட் நடிகர் சஞ்சய் கானின் சீமந்த புத்திரி ஃபாரா அலி கானுடையது

சல்மான்கான் கைது (2003)
தனது டயோட்டா லேண்ட் க்ரூசரை (Toyota Land Cruiser ) சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்ற ஏழை உழைக்கும் மக்களின் மேல் ஏற்றி ஒருவரைக் கொன்று மேலும் நான்கு பேர்களை படுகாயப்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சல்மான்.

மொத்த பாலிவுட்டும் கடந்த 6-ம் தேதியன்று தங்கள் சக நடிகர் சல்மான் கானின் பின்னே அணி திரண்டது. மற்ற இரண்டு கான்களும் சல்மானின் வீட்டுக்கே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். சிவ சேனையின் தலைவரும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவின் தலைவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

விசயம் வேறொன்றும் இல்லை, 2002-ம் ஆண்டு, செப்டம்பர் 28 அன்று இரவு முழு போதையுடன் தனது டயோட்டா லேண்ட் க்ரூசரை (Toyota Land Cruiser ) சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்ற ஏழை உழைக்கும் மக்களின் மேல் ஏற்றி ஒருவரைக் கொன்று மேலும் நான்கு பேர்களை படுகாயப்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சல்மான் மீதான வழக்கில் கடந்த 6-ம் தேதியன்று கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

குடி போதையில் ஓட்டுநர் உரிமம் கூட இல்லாமல் வண்டியை ஓட்டி அநியாயமான முறையில் ஒரு உயிரைக் கொன்ற குற்றச்சாட்டுக்கு கிடைத்த தண்டனை வெறும் ஐந்தாண்டுகள் தான். அதுவும் தீர்ப்பை வாசித்த கையோடு சல்மான் கான் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக இரண்டு நாட்கள் ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இந்த மொக்கைத் தீர்ப்பை வழங்க கீழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட வருடங்கள் 13.

கிடைத்த இரண்டு நாள் இடைவெளியில் உயர் நீதிமன்றத்தை நாடிய சல்மான் கான் உடனடியாக மேல் முறையீடு செய்துள்ளார். சல்மான்கானின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்து, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம்.

கொலைச் சம்பவம் நடந்த போது பாதுகாப்பிற்காக சல்மானுடன் காரில் இருந்த ரவீந்திர பாட்டீல் என்ற போலீசு கான்ஸ்டபிள்தான் சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவர். சல்மான் குடி போதையில் காரை ஓட்டியதையும், வேகத்தைக் குறைக்கச் சொல்லி தான் அறிவுருத்தியதையும் மீறி காரின் கட்டுப்பாடு கைமீறிப் போகும் அளவுக்கு வேகமாக ஓட்டியதையும் ரவீந்திர பாட்டீல் வாக்குமூலமாக அளித்திருந்தார்.

ரவீந்திர பாட்டீல்
உண்மையைச் சொன்ன ஒரே காரணத்திற்காக ரவீந்திர பாட்டீல் கிட்டத்தட்ட வேட்டையாடப்பட்டார்.

நடந்த உண்மையைச் சொன்ன ஒரே காரணத்திற்காக ரவீந்திர பாட்டீல் கிட்டத்தட்ட வேட்டையாடப்பட்டார். வாக்குமூலத்தை மாற்றச் சொல்லி உயரதிகாரிகளின் அழுத்தம், சல்மான் கான் தரப்பிலிருந்து வந்த மிரட்டல்கள் அனைத்தையும் எதிர் கொண்டவர் இறுதியில் வேலையை இழந்து காசநோய் தாக்கி குடும்பத்தாராலும் கைவிடப்பட்ட நிலையில் பரிதாபமான முறையில் இறந்தும் போனார்.

வழக்கின் இறுதிக் கட்டம் வரையில் தப்பிப்பதற்கான சகல முயற்சிகளையும் சல்மான் கான் மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, பதிமூன்று ஆண்டுகள் கழித்து சமீபத்தில் “இவர் தான் சம்பவத்தின் போது காரை ஓட்டினார்” என்று போலியாக ஒருவரைத் தயாரித்து நீதி மன்றத்தின் முன் நிறுத்திய கூத்தும் நடந்தது. இவ்வளவு எத்து வேலைகளையும் மீறி கீழமை நீதி மன்றம் சல்மான் கானுக்கு வழங்கிய மயிலிறகால் வருடும் தீர்ப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாலிவுட் கொந்தளித்துப் போயுள்ளது.

ஜெசிகா லாலை சுட்டுக் கொன்ற மனு சர்மா பரோலில் வந்து கேளிக்கை விடுதிகளில் குடித்து கும்மாளமிட்ட செய்தியோ அல்லது சஞ்சய் தத் தனது பெண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று விண்ணப்பித்து பரோலில் வந்து குடும்பத்தோடு தான் நடித்த படத்தின் புரமோசன் விழாவுக்கு சென்றதாகட்டும் – ஒவ்வொரு முறையும் மேட்டுக்குடியினரின் மைனர்தனத்தை விவரித்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வது ஒன்றே முதலாளித்துவ ஊடகங்களின் ஒற்றைக் குறிக்கோள்.

சல்மான் கான்
“சம்பவம் நடந்த போது எனக்கு 22 வயது. எனது கால் உடைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் எதையும் எதிர்பார்க்கவில்லை” – சல்மான் கான் காரை ஏற்றி தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவர்

சல்மான் கான் வழக்கிலும் அதன் திடுக்கிடும் திருப்பங்களை மர்ம நாவலின் சுவையோடு விவரிப்பதில் காட்டிய ஆர்வத்தை பாதிக்கப்பட்ட மக்களின் பால் இந்த ஊடகங்கள் தமது கவனத்தைத் திருப்பவே இல்லை. முக்கியமாக நகரமயமாக்கத்தைக் மையமாக கொண்டு நடந்து வரும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விவசாயம் பாதிக்கப்பட்டு ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் குவிந்து வீடற்றவர்களாய் சாலையோரங்களில் ஒதுங்கும் மக்கள் மேட்டுக்குடியினர் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சோகத்தின் குறியீடாக வெறும் செட் பிராபர்ட்டி போலவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

காட்சி ஊடகங்களிடையே நடந்த போட்டியில் என்.டி.டி.வி ஒரு படி மேலே போனது. பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் உத்திர பிரதேசத்தின் கிராமத்துக்கே தனது குழுவை அனுப்பி காயமடைந்த ஒருவரை தனது விவாத நிகழ்ச்சியில் இடம் பெறச் செய்தது. மேன்மக்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தனது சோகத்தைக் குறித்து ‘உச்சு’ கொட்டுவதைப் பற்றிய பிரக்ஞை இன்றி பரிதாபமாக அமர்ந்திருந்த அவர்,”உங்கள் சோகத்தைக் குறித்து என்ன சொல்ல நினைக்கிறீர்கள்” என்ற பாணியில் கேள்விகள் கேட்கப்பட்ட போது திணறினார்.

சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட ‘தண்டனையை’ ஒட்டி நிகழ்த்தப்பட்ட தொலைக்காட்சி விவாதங்கள் சிலவற்றில் பங்கேற்ற பேஜ் 3 பார்ட்டிக்களின் நாயகியான மேட்டுக்குடி சீமாட்டி ஷோபா டே உதட்டுச் சாயம் கலையாமல் “ஏழைகள் பாவம் தான்… ஆனால் பாருங்க” என்று இழுத்த இழுப்பு இருக்கிறதே – அருவருப்பின் உச்சம்.

வீடற்றவர்கள்
லட்சக்கணக்கானவர்கள் நடை பாதையிலோ, ரயில்வே நிலைய பிளாட்பாரம்களிலோ, கடற்கரை மணலிலோதான் இரவு உறங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தம்பிடி பைசா கூட இழப்பீடாக வழங்கப்படாத நிலையில் அவர்களின் இழப்புகளுக்கு யார் காரணம்?

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி, மும்பை பெருநகர் மற்றும் புறநகருக்கு உட்பட்ட மக்கள் தொகை சுமார் 1.8 கோடி. சமீத்தில் உலக வங்கி எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின் படி, மும்பை மக்களில் 54 சதவீதம் பேர் சேரிகளில் வசிப்பவர்கள். சுமார் 30 சதவீதம்பேர் நடை பாதையிலோ சாலிலோ (Chawl) வசிப்பவர்கள். சால் எனப்படுவது ஒற்றை அறை வீடுகளைக் (Kholi) கொண்ட கட்டிடம். சுமார் பத்துக்குப் பத்து அளவுள்ள ஒரே அறைக்குள் அடுக்கடுக்காக படுக்கைகள் போடப்பட்டு ஒரு அறையில் சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் வரை பதுங்கிக் கொள்ள வேண்டும். மாதம் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகையாக கொடுக்க வேண்டும்.

இதற்கும் வழியின்றி லட்சக்கணக்கானவர்கள் நடை பாதையிலோ, ரயில்வே நிலைய பிளாட்பாரம்களிலோ, கடற்கரை மணலிலோதான் இரவு உறங்குகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 300 – 500 குடும்பங்கள் மும்பை நகருக்கு இடம் பெயர்ந்து வந்திறங்குகின்றன. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிழைக்க வழியின்றி அத்துக் கூலிகளாய் மும்பையில் வந்து விழும் இவர்களின் உடனடிப் புகலிடம் சாலையோரங்கள் தான்.

சல்மான் கான் கார்
”இந்த மக்களைச் சாலையில் உறங்க விட்டதற்காக அரசைத் தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சல்மானைப் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?”

வேறு போக்கற்ற இவர்களைத் தான் நாயினும் கீழாக தம் வார்த்தைகளால் மென்று துப்புகின்றனர் பாலிவுட் பொறுக்கிகள். ”இந்த மக்களைச் சாலையில் உறங்க விட்டதற்காக அரசைத் தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சல்மானைப் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?” என்று கூசாமல் கேட்கிறார். விவாதத்தில் பங்கேற்ற இன்னொரு மேட்டுக்குடி கனவான், “வீடற்றவர்கள் மற்றும் சேரி வாழ் மக்களுக்கு விரைவில் அரசு ஒரு வழி செய்ய வேண்டும். அவர்களை மீள் குடியமர்த்தும் வேலைகளை உடனடியாக துவங்க வேண்டும்” என்கிறார்.

அதாவது, அபிஜித் பட்டாச்சார்யா நேரடியாகச் சொன்னதை இவர்கள் மறைமுகமாகச் சொல்கிறார்கள். நகரங்களைத் தூய்மைப் படுத்துவது, சேரிவாழ் மக்களை மீள் குடியமர்த்துவது என்ற அலங்காரச் வார்த்தைகளின் பின்னே நடப்பதென்ன? உழைக்கும் மக்களை நகரங்களில் இருந்து பிய்த்தெறிந்து நகரங்களுக்கு வெளியே ஆள் அண்டா பிரதேசங்களுக்குத் தூக்கியடிப்பது தான். உலக வங்கி மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கியுள்ள உத்தரவும் அது தான்.

சல்மான்கான்
மேட்டுக்குடி பொறுக்கிகள் கொல்வதற்குத்தான் ஏழை மக்களா?

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது தில்லி நகரைத் ’தூய்மையாக்கும்’ திட்டத்தின் அடிப்படையில் நடந்ததும், பிற பெருநகர வளர்ச்சிக் குழுமங்களின் திட்ட நிகழ்ச்சி நிரலில் இருப்பதும் இதுதான். நகரங்களை கட்டியமைக்க ஏழைகளின் உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொள்வது, மற்றும் நகரின் ’அழகைப்’ பராமரிக்கும் வேலைகளில் அவர்களை கூலிகளாக ஈடுபடுத்திக் கொள்வது என்று உழைக்கும் ஏழை மக்களை முடிந்த வரைக்கும் பயன்படுத்திக் கொண்டு வேலை ஆனதும் தூக்கியெறியும் மேட்டுக்குடித் திமிரின் இன்னொரு பெயர்தான் மீள்குடியேற்றம்.

நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் மக்கள் விருப்பத்தோடும் மன மகிழ்வோடும் சேரிகளில் வசிப்பதில்லை – அவர்களின் வேலை போக்குவரத்துக்கு தோதான இடமாக இருப்பதாலேயே நகரங்களுக்குள் கிடைக்கும் இடுக்குகளில் ஒண்டிக் கொள்கிறார்கள்.

சல்மான் கான் வழக்கின் மர்மத் திருப்பங்களை சுவைபட விவரிப்பதோடு ஏழைகளுக்கு நீலிக் கண்ணீர் வடிப்பதாக நடிக்கும் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான உள்ளக் கிடக்கை இது தான். நகர்ப்புற மேட்டுக்குடியினர் விரும்பும் ’அழகிய’ நகரங்களில் உழைக்கும் மக்களைப் பொருத்தவரையில் அவர்கள், ஒன்று தெருவில் வைத்து கொல்லப்படுவார்கள் அல்லது பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறியப்படுவார்கள்.

இந்தியாவில் ஏழை உழைக்கும் மக்களுடைய உயிர்களின் மதிப்பும் கிள்ளுக்கீரையின் மதிப்பும் ஒன்று தான். சல்மான் கான் ஒரு நடிகராக வளரவும் கோடிகளில் புரளும் பாலிவுட்டின் கொழுப்பு அதிகரிக்கவும் இதே ஊடகங்கள் தான் காரணம். பேஜ் 3 பக்கங்களில் பாலிவுட் பொறுக்கிகளின் கேளிக்கைக் கொண்டாட்டங்களை விவரித்து கல்லா கட்டுவதற்கும் முதல் பக்கத்தில் சல்மானின் தண்டனை விவரங்களை யோக்கியர்களைப் போல் அச்சிட்டு “சட்டம் எல்லோருக்கும் சமம்” என்று பீற்றிக் கொள்வதற்கும் சாராம்சத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது?

பேஜ் 3 என்பது பாலியல் ரசனைக்கானது என்றால், சல்மான் கான் வழக்கு கண நேர அதிர்ச்சி மதிப்பீட்டிற்கானது. ஜாமீன் பெற்ற கையோடு விமானத்தைப் பிடித்து காஷ்மீர் பறந்துள்ள சல்மான் கான், தனது அடுத்த சினிமாவிற்கான படப்பிடிப்பில் மும்முரமாகி விட்டார். விபத்தில் பலியான நூருல்லாவும், காயமுற்ற மற்ற நான்கு பேரும் கடந்த பதிமூன்றாண்டுகளாக இடைக்கால நிவாரணம் கூட கிடைக்காமல் உத்தரப் பிரதேசத்தின் ஏதோவொரு மூலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சல்மானின் அடுத்த படம் திரைக்கு வரும் போது இதே ஊடகங்கள் அவரை மீண்டும் பேஜ் 3 பக்கங்களுக்கு இழுத்து வந்து விடும். அவரும் கூடிய விரைவில் சட்டப்படியே முழுமையாக விடுதலை செய்யப்படுவார்.

எனில், மேட்டுக்குடி பொறுக்கிகள் கொல்வதற்குத்தான் ஏழை மக்களா?

– தமிழரசன்