privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்

ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்

-

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா 2001-ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றதை ஒட்டி புதிய ஜனநாயகத்தில் வெளியான தலையங்கக் கட்டுரை, 2015-க்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இது போலி ஜனநாயகம் என்பதை புரிய வைக்க பல்வேறு பிரச்சினைகள் உதவயிருந்தாலும், புரட்டுத் தலைவி போல இதை அம்மணமாக்கியது வேறு யாருமில்லை.  எனினும் இது ஏதோ ஜெயா-சசி கும்பலின் தனிப்பட்ட ‘சாதனை’ அல்ல. இந்த அமைப்பு முறையே இப்படித்தான் இயங்குகிறது.

– வினவு

தமிழகத் தேர்தல்கள் – ஜெயா பதவியேற்பு : அம்பலமானது அரசியல் சட்ட போலித்தனம்

ஜெயா - நாற்காலி
தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராகியிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவி ஜெயலலிதாவை ஒரே ஒரு காரணத்திற்காக நாம் பாராட்டி வந்திருக்கிறோம்.

ற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராகியிருக்கும் அ.இ.அ.தி.மு.க.வின் நிரந்தரத் தலைவி ஜெயலலிதாவை ஒரே ஒரு காரணத்திற்காக நாம் பாராட்டி வந்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு இரண்டு ஊழல் வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை நிரபராதி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி விடுவித்ததைத் தொடர்ந்து இதையே எழுதியிருந்தோம். இப்போதும் சொல்லுகிறோம்.

இந்த நாட்டின் சட்டங்கள் – நீதிமன்றங்கள் போன்றவற்றின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மேன்மை, பத்திரிகை – செய்தி ஊடகத்தின் நடுநிலைமை, நிர்வாக அதிகார வர்க்கத்தின் நேர்மை ஆகிய எல்லாம் போலியானவை என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், ஜெயலலிதா. இதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

நாட்டிலேயே மிக அதிகம் ஊதியம் பெறும் திறமை வாய்ந்த சட்ட நிபுணர்களையும் உயர்நீதிமன்ற – உச்சநீதிமன்ற நீதியரசர்களையும் கூட விலைக்கு வாங்கவும் நீதியின் செங்கோலை வளைக்கவும் முடியும் என்று செய்து காட்டினார். மத்திய முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜேத்மலானியை புதுக்கோட்டை குற்றவியல் வழக்குமன்றம் வரை கொண்டு வந்து வேலை வாங்கினான் போலி சாமியார் பிரேமானந்தா. அவனையும் விஞ்சும் வகையில் மாநில முதலமைச்சாரகவும் மத்திய சட்ட அமைச்சராகவும், அமெரிக்காவில் இந்தியத் தூதராகவும் பதவி வகித்த சித்தார்த்த சங்கர் ரேயை தமிழ்நாட்டில் ஒரு கோட்டாட்சியர் முன்பாக வாதிடும்படி வைத்து விட்டார் ஜெயலலிதா.

வழக்குகளை முடக்கி வைப்பது, இடைக்காலத் தடைகள் போடுவது, ஒரு தரப்பாகவும், சட்டவிரோதமாகவும் தீர்ப்புகள் வழங்குவது ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் விலைக்கு வாங்கினார். முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என். சேசன் முதல் மலைச்சாமி, தேவாரம் ஆகிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட இப்போது பதவியில் இருக்கும் அதிகாரிகளையும் தனது விசுவாச சேவகர்கள் ஆக்கிக் காட்டினார், ஜெயலலிதா. முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கிடராமன், முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயணன் சிங் முதல் இன்னாள் அரசுத் தலைவர்களையும் தனது சேவையில் வைத்துக் கொண்டார்.

சித்தார்த்த சங்கர் ரே
அரை பாசிச ஆட்சி நடத்தித் தமது கட்சியினரைக் கொன்று குவித்தவர் என்று போலி கம்யூனிஸ்டுகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர் சித்தார்த்த சங்கர் ரேதான் ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர்.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, காந்தியம், பாரதீயம், திராவிடம், தமிழினம், தலித்தியம், மார்க்சியம் ஆகிய எல்லா பேச்சுக்களுமே வெறும் சவடால்கள்; எந்த ஓட்டுக் கட்சியையுமே விலைக்கு வாங்கி விட முடியும் என்று காட்டி விட்டார். ஜெயலலிதா சில கோடி ரூபாய்களுக்கும், சில தொகுதிகளுக்கும் வேண்டி எத்தகைய அவமானத்தையும் தாங்கிக் கொள்ளும் முதுகெலும்பு இல்லாத கும்பல்கள்தாம் எல்லா ஓட்டுக் கட்சிகளும் என்பதையும் நிரூபித்து விட்டார். ஜெயலலிதாவுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கருணாநிதியோ, வைகோவோ, தனது கொள்கை, இலட்சியங்களை வீசியெறிந்து விட்டு அவற்றுக்கு நேரெதிரான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு விசுவாசிகளாக மாறியிருப்பதற்கும் ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறையும் ஒரு காரணம். தமிழக அரசியல் வாழ்வில் பாம்பும், கீரியுமாக கடித்துக் குதறிக் கொண்டிருந்த திராவிடர் கழக அய்யா வீரமணியையும், இந்து முன்னணியின் வீரத்துறவி ராமகோபாலனையும் ஒரே மேடையில், ஒரே அணியில் கொண்டு வந்து நிறுத்தி ஒரே குரலில் பேச வைத்திருக்கிறாரே ஜெயலலிதா, அதை விடப் பெரிய சாதனை என்ன வேண்டும்?

ஜெயலலிதா – சசிகலா கும்பலின் 1991-96 ஐந்தாண்டு கால ஆட்சியின் இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், உல்லாச – ஊதாரித்தனங்கள், கிரிமினல் – ரவுடித்தனங்களையும் படம் பிடித்துக் காட்டியே பரபரத்து வந்த பத்திரிகை – செய்தி ஊடகங்களை அப்படியே புரட்டிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் கிரிமினல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஆத்திரத்துக்கு இலக்கான அதே செய்தி ஊடகம், இப்போது அவரது அரசியல் நிர்வாகத் திறமையைப் பாராட்டும்படி செய்து விட்டார். சந்தர்ப்பவாதம் அரசியலில் மட்டுமல்ல, எங்கும் எதிலும் நிறைந்திருப்பதை மிகவும் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜெயலலிதாதான்.

***

சிலியின் பினோசெட், பனாமாவின் நோரிகா, உகாண்டாவின் இடி அமீன், இந்தோனேசியாவின் சுகார்த்தோ, யூகோஸ்லாவியாவின் மிலோசேவிச் போன்ற பதவியிழந்த பாசிச கிரிமினல் குற்றவாளிகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்பினால் நம்முடைய ஜெயலலிதாவிடம் வந்து பாடம் கற்க வேண்டும். அதுவும் இரத்தம் சிந்தி அதிரடி ஆட்சிக்கவிழ்ப்புகளில் ஈடுபடாமல் அமைதி வழியில், சட்டபூர்வமாகவே நாடாளுமன்ற ஜனநாயக முறை மூலமாகவே எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதை ஜெயலலிதா அவர்களுக்குத் தெளிவாகவே சொல்லிக் கொடுக்க முடியும்.

ஆனாலும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஜெயலலிதா, முன்னோடிகளே இல்லாத புதியதொரு பாத்திரம் அல்ல. அரசியல் கிரிமினல்மயமாவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எப்பொழுதோ தொடங்கி விட்டது. அதாவது, அரசியல்வாதிகள் கிரிமினல்களாக வளர்வதும், கிரிமினல்கள் அரசியல்வாதிகளாவது இவ்விரு வகையினருடன் அதிகாரிகள் கைகோர்த்துக் கொள்வதும் புதிதல்ல. இத்தகைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் ஒரு பரிணாமத் தோற்றந்தான் ஜெயலலிதா.

கிரிமினல் நாடாளுமன்றம்
1996 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட 13,592 பேர்களில் 1,500 பேர் கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டவர்கள்.

1996 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட 13,592 பேர்களில் 1,500 பேர் கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டவர்கள் அல்லது கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள். அவர்களில் 40 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி விட்டனர். உத்தரபிரதேசத்தின் தற்போதைய 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 166 பேர், 100 மந்திரிகளில் 19 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள குற்றவாளிகள். இவ்வாறு அரசியல் கிரிமினல்மயமாவதைக் கண்ட ஜனநாயகவாதிகள் பலரும் கூச்சல்போடவே, அது குறித்து விசாரிப்பதற்கு மத்திய போலீசுத் துறைச் செயலாளர் வோரா என்பவர் தலைமையில் கமிசன் போடப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால், மத்தியிலும் மாநிலங்களிலும் அரசியல்வாதிகளில் – அதிகாரிகளில் குறிப்பாக போலீசு அதிகாரிகளில் எவ்வளவு பேர், யார் – யார் கிரிமினல் குற்றக் கும்பல்களோடு உறவு வைத்திருக்கின்றனர் என்ற விவரம் மூடி மறைக்கப்பட்டது.

வோரா கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சி சார்ந்த, கட்சி சாராத ஜனநாயகவாதிகள் எல்லோருமே அரசியல் கிரிமினல்மயமாவது குறித்து ரொம்பவும்தான் கவலைப்பட்டார்கள். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளைத் தவிர, எல்லா அரசியல் கட்சிகளுமே கிரிமினல் குற்றங்கள் புரிந்து தலைமறைவானவர்கள், பிணையில் உலாவுபவர்கள், சிறையில் உல்லாச ஓய்வு எடுப்பவர்கள் பலரையும் தேர்தல்களில் நிறுத்தி, அமைச்சர்களாகவும் வரச்செய்தனர். போலி கம்யூனிஸ்டுகள் தேர்தல் கூட்டணி வைத்து, இவர்களை ஆதரித்தனர். இத்தகைய கிரிமினல்கள் பெரும்பாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாதி – மதக் கலவரங்களை நடத்தியவர்கள். இன்னும் பலர் ஆள் கடத்தல் பணயத்தொகை பெறுவது, நிலக்கரி – இரயில் வாகனக் கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள். பால் தாக்கரே, முலயம் சிங், கன்ஷிராம், சௌதாலா, பஜன்லால், பன்சிலால், லல்லு பிரசாத், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா இப்படிப் பலரும் தளபதிகள், மாவீரர்கள், “சம்பா”க்களை வைத்தே கட்சி நடத்துகின்றனர்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி தனது அமைச்சர்களுடன்

இப்படி கிரிமினல்கள் அரசியலுக்குக் கொண்டு வரப்படுவது ஒருபுறம் இருக்க, அர்ஜூன் சிங், சௌதாலா, பஜன்லால் – பன்சிலால்கள், சரத் பவார் – பங்காரப்பாக்கள் என்று இலஞ்ச-ஊழல் அதிகார முறைகேடுகள் செய்து கோடி கோடியாகக் குவித்து கிரிமினல் மயமானவர்களும் உண்டு. இவர்களெல்லாம் ஜெயலலிதாவுக்கு முன்னோடிகள் என்றால், குறிப்பாக தேர்தல் தில்லுமுல்லுகள் செய்து தண்டிக்கப்பட்ட பின்னும், சட்ட விதிகளை வளைத்து ஆட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் ஜெயலலிதாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும் உண்டு. அவர்தான் “அன்னை” இந்திராகாந்தி.

1971 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களின் போது உ.பி ரேபரேலித் தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரதமரான இந்திரா காந்தி அரசு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கமும் சிறைத்தண்டனையும் பெற்றார். உ.பி உயர்நீதிமன்றத்தில் இத்தண்டனை பெற்ற இந்திரா, உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடையும், இரண்டும் கெட்டான் தீர்ப்பும் பெற்றார். அதாவது, இந்திரா பிரதமராக நீடிக்கலாம், ஆனால், நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமைகளை கோர முடியாது என்பதே தீர்ப்பு. இன்று மனித உரிமை பேசித்திரியும் முற்போக்கு வேடதாரி வி.ஆர். கிருஷ்ணய்யர்தான் (ஜெயலலிதாவுக்கு இப்போது வக்காலத்து வாங்கும் சேசன், சோ, ராம கோபாலன் வகையறாக்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்) அந்தத் தீர்ப்பை வழங்கியவர். அதன் பிறகு இந்திரா பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராடி அரசியல் நெருக்கடி முற்றியது. தனக்கு எதிராக அமெரிக்க சி.ஐ.ஏ சதி செய்ததாகக் கூறி “அவசர நிலை” பாசிச ஆட்சியைப் பிரகடனம் செய்து, சட்டத்தைத் திருத்தி, தன் மீதான வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். எதிர்த்த அனைவரையும் சிறையிலடைத்தார்.

அதன் பிறகு 1977 பொதுத்தேர்தல்களில் ஆட்சிக்கு வந்த ஜனதா கூட்டாளிகள் இந்திரா – அவரது இளைய வாரிசு சஞ்சய் காந்தியின் அவசர நிலைக்கால அக்கிரமங்களை விசாரிப்பதற்கு கமிசன்கள் போடப்பட்டன. விசாரணை முடிந்து தண்டனை பெறுவதற்கு முன்பாகவே ஜனதா அரசு கவிழ்ந்து மறுதேர்தல்கள் வந்தன. மீண்டும் ஆட்சியைப் பிடித்த இந்திரா – சஞ்சய் கும்பல் இலஞ்ச -ஊழல் அதிகார முறைகேடு வழக்குகளையெல்லாம் ரத்து செய்தது.

இந்திரா காந்தி
இந்திரா ஏற்படுத்திச் சென்ற அவரச நிலைக் காலச் சட்டம்தான் ஜெயலலிதா போன்ற அரசியல் கிரிமினல்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

அந்தக் காலம் முழுவதும் இந்திரா – சஞ்சய் கும்பலின் விசுவாசக் கூட்டாளியும் ஆலோசகருமாக இருந்த சித்தார்த்த சங்கர் ரே, மேற்கு வங்கத்தில் அரை பாசிச ஆட்சி நடத்தித் தமது கட்சியினரைக் கொன்று குவித்தவர் என்று போலி கம்யூனிஸ்டுகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர் அதே சித்தார்த்த சங்கர் ரேதான் இப்போது ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர், அந்த ஜெயலலிதாவின் அணியில் சித்தார்த்த சங்கர் ரேயுடன் தோள் உரசுகிறார்கள், “அந்தத் தோழர்கள்”.

இந்தக் கதை பழையதென்றாலும், அப்போது இந்திரா ஏற்படுத்திச் சென்ற அவரச நிலைக் காலச் சட்டம்தான் ஜெயலலிதா போன்ற அரசியல் கிரிமினல்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. அரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க முடியாது என்று சட்டம் போட்டார் இந்திரா. பின்னர் அது எந்தக் கட்சி ஆட்சியிலும் நீக்கப்படவில்லை. அரசுத் தலைவர், மாநில ஆளுநர் அனுமதி பெற்று கிரிமினல் வழக்குப் போடலாம் எனத்தான் மாறியது.

இரயில் விபத்துக்கள் நடந்தாலோ, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலோ தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்று சொல்லப்படும் மரபு இருந்ததாகக் கூறப்படுவது கூட உண்மையல்ல என்று காட்டத்தான் இந்த பழைய கதை. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற இந்திரா மீண்டும் பிரதமராகவில்லையா? போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் ராஜீவ் காந்தி கும்பல் தண்டனை பெற்றதா, பதவி இழந்ததா? மீண்டும் தேர்தலில் நிற்கத் தடை வந்ததா? எவ்வளவோ மந்திரிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் குற்றங்களுக்காக “பிடி வாரண்ட்” பிறப்பிக்கப்பட்டும் சிறப்புக் காவல்படை பாதுகாப்புடன் நடமாடுகின்றனர்; அதேசமயம் போலீசு அவர்களைத் தேடி வருகிறது; இன்னும் பிடிக்க முடியவில்லை என்று வழக்கு மன்றங்களில் பதிவாகிறது.

  • அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு பொறுப்புகளைத் துறந்து கட்சிப் பொறுப்புகளை ஏற்பதும், சிறிது காலம் சென்று மீண்டும் அரசுப் பதவி ஏற்பதும் என்பதுதான் முன்பிருந்த மரபு.
  • குற்றச்சாட்டுகள்தான் நிரூபிக்கப்பட்டு விட்டதா, வழக்கு ஏதும் இருக்கிறதா என்று கேட்கும் மரபு பின்னர் வந்தது.
  • வழக்கு பதிவாகியிருக்கிறது, வழக்கு மன்றத்தில் குற்றம் பதிவாகியிருக்கிறதா என்று கேட்டு அப்படி பதிவான பிறகு பதவி விலகுவது மரபானது.
  • அதன் பின்னர் குற்றம் பதிவானாலும் அது நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவில்லையே என்று கேட்பது அடுத்த மரபானது. தண்டிக்கப்பட்டாலும் கீழ் நீதிமன்றத் தீர்ப்புதானே, மேல்முறையீடு செய்யலாம், உச்சநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்று கேட்பது மரபானது.
  • உயர்நீதி மன்றமென்ன, உச்சநீதி மன்றமென்ன எங்கே தண்டிக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது என்று சொல்லும் மரபு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இப்படிச் சொல்லித்தான் இந்திரா – சஞ்சய் கும்பல் மீதான வழக்குகள் 1980 தேர்தலுக்குப் பின்னர் இரத்து செய்யப்பட்டன.
ஜெயா-சசிகலா
ஜெயலலிதா – சசிகலா கும்பலின் 1991-96 ஆட்சியின் போது இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த காலத்திலிருந்தே தன்னைக் காத்துக் கொள்வதற்காக அடுத்தடுத்து அரசியல் – சட்ட நெருக்கடிகளை எழுப்பி வருகிறது.

ஆனால், மக்கள் தீர்ப்பை நாடாளுமன்ற ஜனநாயகவாதிகள் ஒரு போதும் மதித்ததில்லை. தேர்தல்கள் மூலம் பெரும்பான்மை பெற்று அமைக்கப்பட்ட ஆட்சியை 356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட முறை கலைத்திருக்கிறார்கள். 1977-இலும் அதன் பின்னரும் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனதா வகையறாக்களும் இதைச் செய்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக் கவிழ்ப்புகள் – கலைப்புகளுக்கு இரண்டு கழகங்களுமே மாறி மாறி ஆதரவு தெரிவித்தன, கோரிக்கை விடுத்தன. ஒரு கட்சியின் நின்று வெற்றி பெற்ற பின் மக்கள் தீர்ப்புக்குத் துரோகம் செய்து பணத்துக்கும், பதவிக்கும் கட்சி மாறுவதும் மரபாக மட்டுமல்ல, நியதியாகவும் இருக்கிறது.

***

ஜெயலலிதா – சசிகலா கும்பலின் 1991-96 ஆட்சியின் போது இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த காலத்திலிருந்தே தன்னைக் காத்துக் கொள்வதற்காக அடுத்தடுத்து அரசியல் – சட்ட நெருக்கடிகளை எழுப்பி வருகிறது. அப்போது முதல்வர் மீது வழக்கு போடுவதற்கு அனுமதி தரும் உரிமை ஆளுநருக்குக் கிடையாது என்று வழக்கு போட்டு வாதாடி, இலஞ்ச – ஊழல் வழக்குகளை முடக்கி வைத்தது. பதவி இழந்த பிறகும் இப்படியே பல தடைகளை உருவாக்கி வழக்குகளை முடக்கி வைப்பது, தள்ளிப் போடுவது, அடுத்து வரும் தேர்தல்களில் எப்படியும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்படையும் மக்கள் தம்மை தேர்ந்தெடுப்பர், வழக்குகளை இரத்து செய்து தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டது.

அது எதிர்பார்த்தபடியே வந்த 1998 தேர்தல்களில், பா.ஜ.க-வுடன் கூட்டுச் சேர்ந்து, கோவை குண்டு வெடிப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அதிக இடங்களைப் பிடித்து மத்திய ஆட்சியிலும் பங்கேற்றது. தனது எடுபிடி தம்பிதுரையை மத்திய சட்ட மந்திரியாக்கி அம்மணமான வழிமுறைகளைப் பயன்படுத்தி, சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்து, ஊழல் வழக்குகளில் இருந்து விடுபட எத்தனித்தது. உச்சநீதி மன்றமே, வெட்கக் கேடான முறையில் நடந்து கொண்டு, ஜெயா-சசி கும்பலுடன் ஒரு பேரம் நடத்தி அதன் எத்தனிப்புகளை கைவிடும்படி செய்தது. தமிழ்நாட்டு நலன்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது என்ற பெயரில் பா.ஜ.க கூட்டணி அரசின் கையை முறுக்கி காரியம் சாதிக்க முயன்றது. பா.ஜ.க அரசு கால தாமதம் செய்வதாக எண்ணி அவசரமும் ஆத்திரமும் அடைந்த ஜெயலலிதா ஆட்சிக் கவிழ்ப்பு செய்தார். அடுத்து வந்த தேர்தல்களில் ஜெயலலிதா கூட்டணி பெரும்பான்மை பெற முடியாத நிலையில் அதிகாரப் பங்கு கிடைக்காமல் தவித்த ஜெயலலிதா, சட்டபூர்வமான தடைகளைப் பெற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கூடவே, யாகங்கள், சோதிடங்கள் நடத்தியும் பார்த்தார். ஆனாலும், இரண்டு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியவில்லை.

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர்
புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு பிரச்சாரம் செய்வதில் தற்போதைய அரசியலில் ஜெயலலிதாவுக்கு நிகரானவர் யாருமில்லை.

புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு பிரச்சாரம் செய்வதில் தற்போதைய அரசியலில் ஜெயலலிதாவுக்கு நிகரானவர் யாருமில்லை.

  • கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், தனது கார் மீது லாரி விட்டு மோதியும் கொல்ல முயன்றனர்;
  • சட்டமன்றத்தில் சேவை அவிழ்த்து மந்திரியும், ஆளுநர் மாளிகையில் தகாத முறையில் அணுகி ஆளுநரும் தன்னை மானபங்கப்படுத்தினர்;
  • எம்.ஜி.ஆருக்கு நஞ்சு வைத்து அவர் மனைவியே கொன்றார்;
  • தனது ஆட்சியில் நட்ட ஈடு பெறுவதற்காகவே காவல் நிலைய கற்பழிப்பு புகார்கள் கூறுகின்றனர்;
  • தமிழ்நாட்டில் பிரிவினைவாத – தீவிரவாத ஆபத்து, துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது; இதற்குக் காரணம் கருணாநிதிதான்; ராஜீவ் கொலை, கோவை குண்டு வெடிப்பு, வீரப்பன் – தமிழ்த் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஆகியவற்றின் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் –

இப்படி அடுக்கடுக்காக இடைவிடாது புளுகி வருகிறார் ஜெயலலிதா. இந்த வகையில் இட்லரின் நாஜி பிரச்சார மந்திரிகள் கோயபல்சு, கோயரிங் ஆகியோர் ஜெயலலிதாவிடம் பிச்சை கேட்க வேண்டும்.

போயசு தோட்டத்து நீண்ட நெடிய சுவர்களுக்குள் உல்லாச – ஊதாரி வாழ்க்கை நடத்திக் கொண்டே தனக்கென்ன பிள்ளையா, குட்டியா? அனாதையான தனக்கு மக்கள் சேவைதான் ஒரே இலட்சியம் என்று புளுகிப் புளுகி ஆட்சிக்கு வந்து கோடி கோடியாகக் குவித்து அம்பலமாகி, ஆட்சியிலிருந்து எட்டி உதைக்கப்பட்டு, போயசுத் தோட்டத்துப் புதையல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்த போது, எல்லாம் தனக்குத் தெரியாமல் சுற்றி இருந்தவர்கள் செய்து விட்ட தவறு; இனி வளர்ப்பு மகனும் கிடையாது, உடன்பிறவா சகோதரியும் தள்ளி வைப்பு என்று நாடகமாடினார். ஆனால், மிகப்பெரிய கொள்ளைக்காரி ஜெயலலிதாதான் என்பது அம்பலமான போது, சிறைக்கொடுமை, பெண் என்பதால் இழைக்கப்படும் கொடுமை, அரசியல் சதி, பழிவாங்கும் முயற்சி என்றெல்லாம் பச்சையாகப் புளுகி அனுதாபத்தைத் தேடுவதில் ஈடுபட்டார்.

தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற வழக்குகள் எல்லாம் பொய்யானவை; அவற்றை இரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதா செய்த முறையீடுகள் மீண்டும் அவரது முகத்தில் வீசியடிக்கப்பட்டன. விலைபோன நீதிபதிகளால் தற்காலிகத் தடைபோட்டு வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும் நடந்தன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றதும் கோரத் தாண்டவமாடிய ஜெயா விசுவாசிகள் மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திய போதிலும், அதுவும் தன்னுடைய எதிராளிகள் செய்த சதிதான் என்று புளுகினார். மேலும் ஒரு வழக்கில் தண்டனை பெற்று, சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிந்தும் சட்டபடி தான் போட்டியிட்டு வென்று முதல்வராக முடியும் என்று சாதித்து வந்தார்.

***

ஜெயா வெற்றி
1996 தேர்தல்களில் ஜெயலலிதா உட்பட அவருடைய அணியினரை மண்ணைக் கவ்வச் செய்த அதே மக்கள், இப்போது மீண்டும் ஒரு ஐந்தாண்டுகள் ஜெயா – சசி கும்பல் தமிழ்நாட்டை ஆளுவதற்காக அமோக ஆதரவு தந்திருக்கிறார்கள், அது ஏன்?

பொய் – புளுகு, பித்தலாட்டங்களையே அரசியல் மூலதனமாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று தற்போதைய தனது தேர்தல் வெற்றிக்கு ஒரு வியாக்கியானம் தந்து வருகிறார். “ஜெயலலிதா – சசிகலா மீதான இலஞ்ச – ஊழல், சொத்துக் குவிப்பு, அதிகார முறைகேடுகள் என வழக்குகள் எல்லாம் பொய்யானவை, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு புனையப்பட்டவை. அதற்காக சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டவைதாம் சிறப்பு நீதிமன்றங்கள். ஆகவே எல்லா வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா – சசிகலா மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்க வேண்டும்” என்று மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள். இதைத்தான் தன் தலைமையிலான அணியின் வெற்றி குறிக்கிறது என்று ஜெயலலிதா விளக்கமளிக்கிறார். இதையே வேறு வார்த்தைகளில் போலி கம்யூனிஸ்டுகள் உட்பட ஜெயலலிதா அணையினர் அனைவரும் கூறுகின்றனர்.

தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது என்பது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி எழுதப்படாத வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் போட்டுத் தருவதைப் போன்றதுதான். பிறகு அதில் அவர்கள் தமது நோக்கப்படி எழுதிக் கொண்டு இதற்காகத்தான் தனக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று சொல்வதும், செய்வதும்தான் நடைமுறை என்பதை நாமறிவோம். 1991 தேர்தல்களில் ஜெயலலிதா கட்சிக்கு ஓட்டுப் போட்டு ஆட்சிக்கு அனுப்பினார்கள். கோடி கோடியாக கொள்ளையடித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துக்களைக் குவிப்பதற்கா அப்படி ஓட்டுப் போட்டார்கள்.

ஜெயலலிதா அணியின் இன்றைய வாதப்படியே பார்த்தாலும் 1996 தேர்தல்களில் எந்தப் பிரச்சாரத்தைக் கேட்டு ஓட்டுப் போட்டார்கள்? ஜெயா – சசி கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே! மக்களுடைய அந்தத் தீர்ப்பை மட்டும் அவர்கள் ஏற்க மறுத்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, அரசியல் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, கருணாநிதி அரசு மக்களுக்கு அளித்த ஏமாற்றங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வரத் துடித்தது ஏன்?

இது ஒருபுறமிருக்கட்டும். 1996 தேர்தல்களில் ஜெயலலிதா உட்பட அவருடைய அணியினரை மண்ணைக் கவ்வச் செய்த அதே மக்கள், இப்போது மீண்டும் ஒரு ஐந்தாண்டுகள் ஜெயா – சசி கும்பல் தமிழ்நாட்டை ஆளுவதற்காக அமோக ஆதரவு தந்திருக்கிறார்கள், அது ஏன்?

1991-96 ஆகிய முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் அக்கும்பல் நடத்திய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், உல்லாச – ஊதாரி வாழ்க்கைக் களியாட்டங்கள், இவை மட்டுமல்ல, அதே ஆட்சியில் நடந்த வாச்சாத்தி – சின்னாம்பதி, சிதம்பரம் – பத்மினி பாலியல் வன்முறைகள், தராசு அலுவலகம் மற்றும் வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சியினர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், மீனவர் மீது, கொடியங்குளம் தாழ்த்தப்பட்டவர் மீது, வீரப்பனைத் தேடுவதாக மலைவாழ் மக்கள் மீதான போலீசு படுகொலைகள் – கற்பழிப்புகள் – இப்படி எல்லா அக்கிரமங்கள், அட்டூழியங்களையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட்டார்களா? அல்லது இவையெல்லாம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கருணாநிதி குடும்பத்தினர் செய்யும் அவதூறு – பொய்ப் பிரச்சாரம் – பொய் வழக்குகள் என்ற ஜெயலலிதா அணியினரின் வாதத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பி விட்டார்களா?

அதெல்லாம் இல்லை, தேர்தல்களில் கருணாநிதி அணியைத் தோற்கடித்ததற்கும், ஜெயலலிதா அணியை வெற்றிபெறச் செய்ததற்கும் வேறு காரணங்கள் உள்ளன. ஜெயா – சசி கும்பலின் கிரிமினல் குற்றங்களை இன்னும் மக்கள் மறந்துவிடவில்லை என்பதால்தான் இந்த அளவாவது கருணாநிதி அணி சில இடங்களைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா அணியின் வாதத்தை மக்கள் அப்படியே ஏற்றிருந்தால் முந்தைய தேர்தல்களில் நடந்ததைப் போல ஒற்றை இலக்கத்தைக் கூட கருணாநிதி அணி பெற்றிருக்க முடியாது.

உண்மையில் கருணாநிதியின் தோல்விக்கும், ஜெயாவின் வெற்றிக்கும் மிக முக்கியமாக அமைந்த காரணம், தமிழக மக்கள், ஏழை எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கையை சமீப காலத்திலும் உடனடியாகவும், நேரடியாகவும் பாதித்தது எப்போதோ (!) நடந்த ஜெயா-சசி கும்பலின் இலஞ்ச ஊழல் – அதிகார முறைகேடுகளை விட இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகள் மற்றும் பொருளாதார – வாழ்க்கைப் பிரச்சனைகள்தாம்.

சாதாரண மக்கள், கருணாநிதியின் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்று கருதவில்லை. “வருமானம் இல்லை, அதே சமயம் விலைவாசி கிடுகிடுவென உயருகின்றது. அடிமட்ட இலஞ்சம் ஒழியவில்லை” இதுதான் மக்கள் பேசிக் கொள்வது. இதைக் கேட்கும் நிலையில் கருணாநிதி இல்லை. கொங்குச்சீமையிலே ஆலை விசைத்தறி, பஞ்சாலை, பனியன் தொழிற்சாலைகள், வார்ப்படத் தொழில்கள் மூடப்பட்டு முடங்கிக் கிடக்கின்றன. நெல்லை – விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி – அச்சு – பட்டாசுத் தொழில்கள் இயந்திரமயமாக்குவதால் 10 லட்சம் பேருக்கு வேலை இல்லை. வேலூர் – திண்டுக்கல் மாவட்டங்களில் தோல் பதனிடும் ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. கைத்தறித் தொழில்கள் – கட்டுமானத் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன.

விவசாயிகளுக்கோ அடி மேல் அடி. விவசாய இடுபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு, விளைபொருட்கள் விலை போகவில்லை. கரும்புத் தோட்டங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. வெங்காய மூட்டைகள் வீதியில் கொட்டப்படுகின்றன. தேயிலை விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – நிர்வாண ஊர்வலம், கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது. ரௌடித்தனமும் பகற்கொள்ளையும் புரியும் கிரிமினல் கும்பல்கள் குறையவில்லை.

இவ்வளவு இருந்தும், “தொடரட்டும் இந்தப் பொற்காலம்” என்றார் கருணாநிதி. பாலங்கள் போட்டோம், சாலைகள் அமைத்தோம், கணினிக் கல்வி பெருக்கினோம், சென்னையை வாகன உற்பத்தி நகராக்கினோம், கணினி மென்பொருள் பூங்கா நிறுவினோம், அந்நிய முதலீடு பன்மடங்கானது, அமெரிக்க்காவுக்கு கணினிப் பட்டதாரிகள் ஏற்றுமதி அதிகரித்தது என்கிறார் கருணாநிதி. எல்லாம் சரி! இவற்றால் நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினரில் கூட ஒரு சிறு பிரிவினருக்குப் பொற்கால ஆதாயமாக இருக்கலாம். உழவர் சந்தைகளும், வருமுன் காப்போம் திட்டமும், சமத்துவபுரங்களும், சில இலவசத் திட்டங்களும் யானைப் பசிக்கு சோளப்பொறிதான்.

கருணாநிதி அரசால் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது. நரசிம்ம ராவ் – ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சிதம்பரம் – மாறன் – வாஜ்பாய் போன்றவர்களால் தீவிரமாக அமலாக்கப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராள மயம் என்ற மக்கள் விரோதக் கொள்கைகளின் பாதிப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் கடுமையாக மக்களைப் பாதித்திருக்கிறது.

இதனால் மக்களுடைய மனநிலையை நன்கு புரிந்து கொண்ட காங்கிரசு, த.மா.கா., பா.ம.க மறும் போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய கணிசமான ஓட்டு வங்கியைப் பெற்றுள்ள கட்சிகளை அணி சேர்ப்பதிலும், ம.தி.மு.கவை பா.ஜ.க-தி.மு.க அணியிலிருந்து வெளியேற்றி, கருணாநிதியைத் தனிமைப்படுத்துவதிலும், பெரும்பான்மை சாதியினரின் ஆதரவைப் பெறுவதிலும் ஜெயலலிதா வெற்றி கண்டார். சில சிறிய சாதிக் கட்சிகளோடும் இரு தலித் அமைப்புகளோடும் தனிமைப்படுத்தப்பட்ட கருணாநிதி வீழ்த்தப்பட்டார்.

முக்குலத்தோருடைய திடமான ஆதரவைப் பெற்றுள்ள ஜெயலலிதாவின் கட்சி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தனக்கென நிரந்தரமானதொரு ஓட்டு வங்கியைப் பெற்றிருக்கிறது. படிப்பறிவில்லாத பாமர மக்கள் மட்டுமே எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் பின்புலம் என்று பலரும் நம்புகின்றனர். கள்ளச் சாராயம், ஆற்று மணல் திருட்டு, புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு விற்பது போன்ற சட்ட விரோத, சமூக விரோத தொழில்கள் முதல் அரசு ஒப்பந்தக் காரர், சாலை போக்குவரத்து, வீடியோ கடை, வீடு – வீட்டு மனை விற்பனை, கந்து வட்டி நிதி நிறுவனங்கள் என்று பல வழிகளிலும் தொழில் புரியும் அல்லது அரசியலையும் தரகு வேலையையுமே முழு நேரத் தொழிலாகக் கொண்ட ஒரு பொறுக்கி அரசியல் கும்பல்தான் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் ஓட்டு வங்கியைப் பராமரித்து வருகிறது. இவர்கள் கருணாநிதி ஆட்சியினால் முடக்கப்பட்டு, இத்தொழில்களில் ஆளும் கட்சிப் போட்டியாளர்களைக் கண்டார்கள். இவர்கள் ஆத்திரத்துடன் அரசியல் வேலை செய்து கருணாநிதியை வீழ்த்துவதற்கு அடித்தளமாக அமைந்தனர்.

ஆனால், ஒரு உண்மையை ஜெயலலிதா அணியினர் மறந்து விட்டனர். தொடரும் புதிய பொருளாதாரக் கொள்கையின் அதிதீவிர ஆதரவாளரான ஜெயலலிதா, காங்கிரசு, பா.ஜ.க கும்பல்கள் மக்களை மேலும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகள் எடுப்பது தவிர்க்க முடியாது. கூடவே, ஜெயலலிதாவின் போலீசு பயங்கரவாத அடக்குமுறை கொள்கைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள், தொடரும் கிரிமினல் குற்றங்கள் தவிர்க்க முடியாது விரைவிலேயே மக்கள் ஆத்திரத்துக்கு உள்ளாகும். அதற்குள்ளாகவே அரசியலை முழுமையாக கிரிமினல் மயமாக்குவதில் ஜெயலலிதா வெற்றி பெற்று விடுவார். அப்போதாவது ஜெயலலிதா – சசிகலா போன்ற கிரிமினல் – பொறுக்கி அரசியல் தலைமையோடு இந்தப் போலி ஜனநாயகத்தையும் அடியோடு தூக்கி எறிந்து விட வேண்டும். இல்லை என்றால் சுழற்சி முறையில் மீண்டும் அத்தகைய சமூக விரோதிகள் ஆட்சிக்கு வருவது தவிர்க்க முடியாது.
__________________________________________
புதிய ஜனநாயகம் – 16 மே 2001 – 15 ஜூன் 2001
தலையங்கம் (சுருக்கப்பட்டிருக்கிறது)
___________________________________________