Saturday, May 10, 2025
முகப்புசெய்திபொட்டிப்புரத்தை போர்க்களமாக்கும் நியூட்ரினோ திட்டம்

பொட்டிப்புரத்தை போர்க்களமாக்கும் நியூட்ரினோ திட்டம்

-

நியுட்ரினோ ஆய்வுத்திட்டத்தை விரட்டியடிப்போம் ! பொட்டிப்புரத்தைப் போர்க்களமாக்குவோம்!

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் ஐ.என்.ஓ (இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி) சார்பில் ரூ 1560 கோடி மதிப்பில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் தொடங்கி உள்ளன.

இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ராமகிருஷ்ணபுரம், டி.புதுக்கோட்டை, பொட்டிப்புரம், தம்மிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம்
கோப்புப் படம்

இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விஞ்ஞானிகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு 22 பக்கங்களில் “பொட்டிப் புரத்தை போர்க்களமாக்குவோம். நியூட்ரினோ திட்டத்தை அடித்து விரட்டுவோம்” என்ற தலைப்பில் வி.வி.மு சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விழா மே 25-ம் தேதி பொட்டிப்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் தலைமை வகித்தார். வி.வி.மு பொறுப்பாளர் தோழர் பழனிசாமி முன்னிலை வகித்தார். தேவாரம் செயலாளர் தோழர் முருகன் புத்தகம் குறித்து விளக்கினார்.

நியூட்ரினோ திட்ட எதிர்ப்புப் போராட்டம்
ஐ.என்.ஓ ஆய்வகம் அமைக்கும் இடம்.

கிராம மக்கள் சார்பில் போராட்டத்தில் முன்னிற்கும் விவசாயிகளான புதுக்கோட்டை திரு. முத்திலிகாமு – திரு.ராமசாமி , ராமகிருஷ்ணாபுரம் திரு. கருப்பையா- திரு சுப்புராஜ் –திரு செல்லத்துரை, தேவாரம் திரு மீசைராசு ஆகியோர் வெளியீட்டைப் பெற்றுக்கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தேவாரத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் 3 ஆயிரம் புத்தகங்களை வி.வி.மு தோழர்கள் விநியோகம் செய்துள்ளனர்.

அரசு மற்றும் போலிசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் “நியுட்ரினோ திட்டம் எங்கள் பகுதிக்கு தேவையில்லை” என தி.ரெங்கநாதபுரம், தம்மிநாயக்கன்பட்டி பஞ்சாயத்து சபைகள்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டம்
“நியுட்ரினோ திட்டம் எங்கள் பகுதிக்கு தேவையில்லை”

தம்மினாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு ஜவகர் வி.வி.மு தோழர்களிடம் கூறியதாவது:

“நியுட்ரினோ திட்டம் பற்றி அதிகாரிகள் எங்களிடம் கூறியபோது ‘இதனால் எங்கள் ஊருக்கும், இப்பகுதிமக்களுக்கும் என்ன பலன் இருக்கு’ என்று கேட்டோம். அதற்கு விஞ்ஞானிகள் தரப்பில் பேசியவர்கள், ‘நாங்கள் மத்திய அரசிடம் பேசி ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கி தருகிறோம். அதைவைத்து உங்கள் மக்களுக்கு என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள்.

ஆனால் இதுவெல்லாம் மோசடி என்று இப்போதுதான் தெரிகிறது.அதனால்தான் இப்போது ‘இத்திட்டமே எங்களுக்கு வேண்டாம்’ என்று கடந்த மே 1-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம்.

இதற்கே உளவுத்துறை அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டு, ‘அரசுக்கு எதிராக எப்படி தீர்மானம் நிறைவேற்றலாம்’ என மிரட்டினார்கள்.

‘எனக்கு மேலதிகாரி கலெக்டர்தான், அவருக்கு தகவல் அனுப்பிவிட்டோம். உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்று நான் சொல்லிவிட்டேன்”

திரு ஜவகர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புத்தக வெளியீட்டு விழா கூட்டத்தில் பேசிய திரு.செல்லத்துரை அவர்கள், “இந்த பொட்டிப்புரம் பஞ்சாயத்தில் உள்ள மக்கள் இதுவரை எவ்வித கிரிமினல் வழக்கிலும் சம்பந்தப்படாதவர்கள். ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இன்று ‘போர்க்களமாக்குவோம்’! என்று கோசம்போட வைத்துவிட்டார்கள் இந்த விஞ்ஞானிகள்” என்று வருத்தப்பட்டார்.

புதுக்கோட்டை விவசாயி திரு இராமசாமி , “அய்யா எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். இப்போது இருக்கிறமாதிரி எங்களை நிம்மதியா வாழவிட்டால்போதும், இருக்கிற பிழைப்பை கெடுத்துப்புடவேண்டாம்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இறுதியில் பேசிய தோழர் காளியப்பன் அவர்கள், “இன்று உழைப்பாளி மக்கள் நேர்மையாக ஒரு தொழில் செய்து வாழவழியில்லை. விவசாயி தன நிலத்தில் உழைத்து உற்பத்திசெய்த காய்கறிகளை கட்டுப்படியான, லாபகரமான விலைக்குவிற்று வாழமுடிந்தால் ஏன் தற்கொலை செய்துகொண்டு சாகிறான்? இதைத் தடுப்பதற்கு அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆராய்ச்சியா செய்யவேண்டும்?

நாட்டில் பெருகிவரும் பட்டினிச்சாவுகளைத் தடுப்பதற்கு எந்த ஆராய்ச்சி உதவியிருக்கிறது?” என அறிவியல் ஆராய்ச்சிகளின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

தொடர்ந்து, “இந்த அரசின் அனைத்து அங்கங்களும் புழுத்து நாறிக்கிடக்கிறது. மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தோல்விகண்டு, திவாலாகி விட்டது. போலிசும்-நீதிமன்றமும் கிரிமினல் கூடாரமாக சீரழிந்து விட்டது.

இந்த நிலையில் நியுட்ரினோ திட்டம் போன்ற மக்கள்விரோத திட்டங்களை முறியடிக்கவும்,மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் அதிகாரத்தை கையிலெடுக்கும் வகையிலான போராட்டங்களில் இறங்க வேண்டும்.போராட்டம் ஒன்றுதான் தீர்வு'” என்பதை நடைமுறை உதாரணங்களுடன் விளக்கி பேசினார்.

உள்ளூர் கிராம விவசாயிகளும், உழைப்பாளி பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வயதான மூதாட்டிகளும் தேடிவந்து வெளியீட்டை வாங்கிசென்றது எதிர்காலப் போராட்டத்திற்கு முன்னறிவிப்பாக இருந்தது .

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி
தொடர்புக்கு – 96269 33278

  1. இந்தியாவின் வளர்ச்சிக்கு எதுநடந்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற “உயரிய” தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இந்திய வளர்ந்தால் நமக்கு இருக்கிறது ஆப்பு என்று மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவை குறிவைத்து துவேசத்தை பரப்பி வருகின்றன!!! அவர்கள் கொடுக்கும் பிச்சை காசுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்திய எதிர்ப்பு சக்திகளும் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. இதற்கு முன் தமிழ் ஈழம் மலரப்போகிறது என்று கூறி இறந்துபோன தலைவரை தூக்கிவைத்து கொண்டாடினார்கள். அதன்பின் முகத்தில் “கரியை” பூசிக்கொண்டார்கள். அதன்பின் அணுமின் உலை ஆகாது என்று கூறி போராடினார்கள். இதுவும் வீணானது மட்டுமல்லாது மூஞ்சில் “கரியை” பூசிக்கொண்டார்கள். பெருமாள் முருகனுக்கு பிற ஜாதியினரை குறைகூறி எழுத உரிமை உண்டு எழுதினார்கள். பெண்கள் பெருமளவில் திரண்டு எதிர்ப்பு காண்பித்தவுடன் முகத்தில் “கரியை” பூசிக்கொண்டார்கள். இப்படி எத்தனையோ கூறலாம்!! இன்னும் கூறிக்கொண்டே போகலாம். வெளி நாட்டு தீய சக்திகளுடன் சேர்ந்து இந்தியாவை வளர்ச்சி அடையாமல் செய்ய கொடுமையான நோக்கத்துடன் ஒரு தற்குறி கூட்டம் பணத்திற்காக செயல்படுகிறது. அந்த கூட்டம் எழுதுவதைப் பார்த்தால் படித்தவர்கள் கூட உண்மை என்று நம்பும்படியாக இருக்கும். _____________ காலம் கருணை காட்டின் நல்லவர்கள் இவர்களை என்பது மட்டும் உறுதி!!!

    • பெரியார், அம்பேத்கர் பற்றி பேசினால் அவர்கள் என்ன தமிழர்களா? என்று ‘அறச்சீற்றம்’ கொள்ளுனம் நாட்ராயான் இப்போது மட்டும் ‘இந்திய’ தேசப்பற்று பொங்கி வழிவதன் காரணம் என்னவோ? மேற்கத்திய நாடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் ‘கூட்டிக்கொடுக்கும்’ புனிதப் பணி செய்து இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க துணை நிற்பது நாட்ராயன் பார்வையில் ‘தமிழரான’ மோடிதானேயொழிய போராடுபவர்கல் அல்ல….மற்றபடி அணுமின் நிலையம், பெருமாள் முருகன், ஈழம் பிரச்சினை பற்றிய நாட்ராயனின் கருத்தினை அவரே நம்புவதில்லை என்பதே உண்மை.

  2. நீர் என்ன சொன்னாலும் மனித குல விரோத கருத்துகள் தானாயா? மோடி பிரதமர் ஆனது கூட இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காத மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சதி தான் போலும்…

  3. கால் வயிற்றுக் கஞ்சிக்காக காலம் காலமாகப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வில் நியூட்ரினோ திட்டம் என்னென்ன வளர்சிகளைக் கொண்டு வரும் என்பதை திரு நாட்ராயன் அவர்களும் அவரைப் போன்ற தேச பக்தர்களும் விளக்க வேண்டும்.

  4. மறைந்த தலைவர்களை, அதிலும் மக்களுக்காக போராடிய வீரர்களை என்றைக்குமே பார்ப்பனீயம் மதித்தது இல்லை! தமிழ் ஈழ போராட்டம், இந்திய தேசியத்தாலேயே ஒடுக்கப்பட்டது! அமெரிக்கா தனது எதிரிகளை வீழ்த்த அல்கைதா, அய் எஸ் தீவிர வாதிகளை பயன்படுத்திக்கொன்டு காரியம் முடிந்தவுடன் அழிக்க முனைவது போல, தமிழ் தேசிய வாதிகளை ஆதரித்து, காரியம் முடிந்தவுடன், தனது அடுத்த குறிக்கோளான தமிழ் இன ஒழிப்பையும் நிறைவேற்றிக்கொண்டது இந்திய தேசியம்! பெரியாரை, அவர் சுயமரியாதை இயக்கம் பரவுவதை தடுக்க, ம பொ சி, திரு வி க முதலிய தமிழறிஞர்களை பயன்படுத்திக்கொண்டு பின் தூக்கி எறிய வில்லையா? வரலாற்றிலிருந்து பாடம் கற்றுகொள்ளாத தமிழன் எப்படி உருப்படுவான்? அன்பழகன் முன்பொருமுறை சொன்னது: பார்ப்பான் வாழ்த்திய எவனும் வாழ்ந்தது இல்லை, அவனால் தூற்றப்பட்டவர்கள் மக்கள் மனதிலிருந்து வீழ்ந்ததுமில்லை என்று! ராவணனும், கர்ணனும், கார்த்தவீர்யனும், பார்பன தாசனாக பிற்காலத்தில் சித்தரிக்கப்பட்ட கண்ணனும் போல பெரியாரும், பிரபாகரனும் மக்கள் மனதில் என்றும் போற்றப்படுவார்கள்!

  5. இறுதியாக நண்பர் நாட்றாயன் போன்றோர் உணரவேண்டியது : ஜெயித்த கட்சியிக்கு பரிவட்டம் கட்டி, அண்டி பிழைக்கும் வழி தமிழனின் மரபணுவில் இல்லை! வெற்றி அல்லது வீரமரணமே தமிழனின் மந்திரம்! இன்று எம் தலைவர்கள் பொட்டி அல்லது பதவி என்று அலையலாம், அதற்காக தமிழினமே தாழ்ந்துவிட்டதாக எள்ளல் வேண்டாம்! அம்மா இட்டிலிக்கும், அய்னூறு பணத்துக்கும் சோரம்போன தலைமுறை மாறும்! தன்மானம் மீண்டும் தலையெடுக்கும்!

  6. அஜாதசத்ரு…… நாட்ராயணின் தமிழ் மரபுவேறு..அவர்களது முன்னோடிகள் தொண்டைமான், எட்டப்பன்,கருணா, டக்ளஸ் தேவானந்தா…..அவரது தொழிலும் தற்போது மோடி பார்க்கும் வேலை போன்றதே “விளக்கு பிடிப்பது’. நீங்கள் கழுதையாக கத்தினாலும் உங்கள் கருத்து அவருக்கு புரியாது…அவர் வேண்டுவது அதுக்க்க்க்க்கும் மேஏஏஏஎல…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க