privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஐ.ஐ.டி தடை - சென்னை, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்

ஐ.ஐ.டி தடை – சென்னை, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டம்

-

“சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் தடையை நீக்கு!” –

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே 02/06/2015 அன்று மதியம் 1.30 மணியளவில் வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

APSC தடை - சென்னை உயர்நீதிமன்றம் ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம்.

காலை முதல் மதியம் வரை வழக்குரைஞர்களுக்கும், மக்களுக்கும் பிரசுரங்களை வழக்குரைஞர்கள் விநியோகித்தனர். சிலர் பிரசுரத்தை படித்தவுடன் சரியான போராட்டம் எனவும் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாயிலருகே 02/06/2015 அன்று மதியம் 1.30 மணியளவில் வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம்.

சென்னை ஐ.ஐ.டி மாணவர்களின் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததின் மூலம் மாணவர்களின் ஜனநாயக குரலை நெறிக்கும் மோடி அரசை கண்டித்தும், அம்பேத்கர்-பெரியார் கருத்துக்களை தடை செய்த ஐ.ஐ.டி டீனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் பால் கனகராஜ் அவர்களும், செயலர் வழக்குரைஞர் அறிவழகன் அவர்களும், மூத்த வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், வழக்குரைஞர் தமிழினியன், வழக்குரைஞர் பாரதி, வழக்குரைஞர் ரஜினிகாந்த், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்குரைஞர்கள் செயலர் ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் மீனாட்சி, இந்திரா, பார்த்தசாரதி என பலரும் பேசினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், இந்துத்துவ வெறியர்களுக்கும் எதிராக போராடவேண்டும், பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் இந்துத்துவத்திற்கு கல்லறை எழுப்பவேண்டும் என்ற உணர்வை தருவதாகவும் அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஏற்பாடு :

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், சென்னை.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை. 9094666320

மதுரை வழக்குரைஞர்கள்

  • அம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
  • சென்னை ஐ.ஐ.டி டீன் சிவக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • கருத்துரிமையைக் காக்க வழக்கறிஞர்கள் களம் இறங்குவோம்!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 02.06.2015-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
02.06.2015-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ”கடந்த ஆண்டு சென்னை அய்.அய்.டி-யில் தொடங்கப்பட்ட அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் செயல்பாடுகள் மோடியின் கார்ப்பரேட்-பார்ப்பனீய சேவையை விமர்சித்ததால் தற்போதைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதே மோடி காங்கிரஸ் உள்ளிட்ட பலரையும் விமர்சித்தே பதவிக்கு வந்தார். அதேபோல் சென்னை அய்.அய்.டி.யில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான விவேகானந்தா மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குருமூர்த்தியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் நடத்துகின்றனர். பெரியார்-அம்பேத்கர் பெயர் அவர்களை அச்சுறுத்துகிறது. நாளை நமக்கும் இது நடக்கும். ஆகவே இந்த பார்ப்பனீய-மனுதர்ம தடையை எதிர்க்க வேண்டும்” என்றார்.

அடுத்துப் பேசிய வழக்கறிஞர் தி. லஜபதிராய் ”இந்தத் தடையால் பல நன்மைகள் நடந்துள்ளது. மும்பை, கான்பூரில் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமஸ்கிருத திணிப்பு,உயர்கல்வியில் காவிமயம் என்னும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தடையும் உயர்கல்வியில் காவிமயத்தின் ஓர் அங்கம்தான். மோடி நாட்டைக் கூறுபோட்டு விற்று வருகிறார். எழுத்தாளர் அருந்ததிராய் இதனை சுட்டிக் காட்டியுள்ளார். அரசியல் சட்டத்தின்படி இத்தடை சட்டவிரோதமானது. இந்த அபாயமான போக்கை நாம் மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
“சென்னை அய்.அய்.டி.யில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான விவேகானந்தா மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் குருமூர்த்தியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் நடத்துகின்றனர்.”

தனது வாயில் கருப்புத் துணியைக் கட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, மிகவும் உணர்சிப்பூர்வமாக உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “இந்திய அரசியல் சட்டம் சரத்து 19-ன்படி எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை உண்டு. இதை அய்.அய்.டி நிர்வாகமும், மத்திய அரசும் பறிப்பது மாபெரும் அரசியல் சட்ட மீறல். பா.ஜ.க.தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசும்போது மோடிக்கு எதிராகப் பேசுவது தேசத் துரோகம் என்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
“பா.ஜ.க.தலைவர்கள் தொலைக்காட்சிகளில் பேசும்போது மோடிக்கு எதிராகப் பேசுவது தேசத் துரோகம் என்கிறார்கள். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.”

மோடி அரசு வந்ததிலிருந்து மக்கள் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. இதை எதிர்க்காமல் எப்படி இருக்க முடியும்? மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதுதான் தேசபக்தி; எதிர்க்காமல் இருப்பது தேசத் துரோகம் என்று நான் சொல்கிறேன். இத்தடை இயற்கை நீதிக்கு எதிரானது. இதற்கெதிராக கடும் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அதிகாரம், பாசிசம் வன்முறை வடிவில் வந்தால், நாமும் அவ்வடிவிலே எதிர்ப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு” என்றார்.

மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் அவர்கள் “குஜராத்திலிருந்து இவர்களது அநீதிகள் அரங்கேறி வருகின்றன. குஜராத் படுகொலையின்போது உயர்காவல்துறை அதிகாரிகள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நாங்கள் தப்பித்ததே பெரிய விசயம் என்றனர். நாம் நேரடியாக அங்கு சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். அம்பேத்கர் பார்ப்பனீயத்தின் கொடுங்கோண்மைகளை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் இன்று பி.ஜே.பி அம்பேத்கரைத் தூக்கி வருகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருங்கிணந்து போராட வேண்டும்” என்றார்.

APSC தடை வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்
“அம்பேத்கர் பார்ப்பனீயத்தின் கொடுங்கோண்மைகளை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் இன்று பி.ஜே.பி அம்பேத்கரைத் தூக்கி வருகிறது.”

அதன்பின் பேசிய வழக்கறிஞர்கள் சாஜி செல்லன், வாமனன், பானுமதி, எழிலரசு, சங்க செயலர் மாணிக்கம் ஆகியோர் சென்னை அய்.அய்.டி நிர்வாகத்தையும், மோடி அரசையும் வன்மையாகக் கண்டித்து, அய்.அய்.டி.யின் பார்ப்பனத் தன்மையை அம்பலப்படுத்தி, பெரியார்-அம்பேத்கரைப் பிரிக்கும் பார்ப்பன சூழ்ச்சியைக் கண்டித்து, மோடி-அம்மா லேடி கூட்டணியைச் சாடி, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலைப் புரிந்து கொண்டு பெரியார்-அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்தில் “வினவு-இணையதள” செய்தியை துண்டறிக்கையாக மாற்றியும், அய்.அய்.டி.நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் மொட்டைக் கடிதத்தின் நகலும் விநியோகிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் வெறும் போனில் தகவல் சொல்லி அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டாலும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:

  • அம்பேத்கார் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த
    பார்ப்பன மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
  • சென்னை ஐ.ஐ.டி டீன் சிவக்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • கருத்துரிமையைக் காக்க வழக்கறிஞர்கள் களம் இறங்குவோம்!

த்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடித் தலையீட்டின் பெயரில், சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீதான இந்தத் தடை நடவடிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பிய மொட்டைக் கடுதாசியின் பேரில் எந்த விசாரணையுமின்றி ஐஐடி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என அரசு உறுப்பின் ஒவ்வொரு கதவுகளையும் மனு மேல் மனுபோட்டும் பதில் கிடைக்காமல் இருக்கிற பொழுது ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது என்றால் அந்தக் கடுதாசியில் இருந்த பிராதுதான் என்ன?

  1. பாசிச மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளான நிலக் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீடு சட்டம், தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் கார்ப்பேரட் கைக்கூலியாகச் செயல்படுகிற மோடியை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விமர்சிக்கிறதாம் இவ்வமைப்பு.
  2. இந்துத்துவக் காலிகளின் சமஸ்கிருத இந்தி திணிப்பு, கர் வாப்சி, பசுவதைத் தடைச் சட்டம், லவ் ஜிகாத் கொள்கைகளை இவ்வமைப்பு விமர்சித்து துண்டுப்பிரசுரம் வழங்குகிறதாம்.
  3. குறிப்பாக அம்பேத்கர் பெரியார் கொள்கைகளை பரப்புவதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் இவ்வமைப்பு திரட்டுகிறதாம். (இதன் மூலமாக தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறது மோடி அரசின் இந்துத்துவக் கும்பல்)

மேற்கண்ட குற்றச் செயல்களுக்கு (!!!) சாட்சியாக ஏப்ரல்-14 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அமைப்பு வழங்கிய துண்டுபிரசுரத்தைக் காட்டியிருக்கிறது இந்த மொட்டைக்கடுதாசி.

அமைச்சகத்தின் உத்தரவிற்கு பதில் சொல்லும் விதமாக சென்னை ஐ.ஐ.டி டீன் எம். சீனிவாசன், இவ்வமைப்பு ஒழுங்கு விதிகளை மீறியிருக்கிறது என்று சொல்லி எந்த விசாரணையுமின்றி தடை செய்திருக்கிறார். அது என்னடா ஒழுங்குவிதி என்றால் துண்டு பிரசுரமோ, போஸ்டரோ, டீனின் ஒப்புதல் இன்றி வழங்கப்படக் கூடாதாம்.

ஆனால், ஏப்ரல்-14-ல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கிற்கு பிற்பாடான நாட்களில் அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஒழுங்குவிதி மீறலைக் கண்டுபிடிக்காத ஐ.ஐ.டி நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் காலிகள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மொட்டைகடுதாசி அனுப்பிய பிறகு தான் இது ஒழுங்குவிதி மீறல் என்று எதேச்சதிகாரத்துடன் மாணவர் அமைப்பை தடை செய்கிறது என்றால் இந்து பாசிசத்தின் எத்துணை கொடூரமான காலகட்டத்தில் இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியவரும்.

ஆனால் இதே ஒழுங்குவிதி மீறல் விவேகானந்தா வாசகர் வட்டத்திற்கு கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சென்னை ஐ.ஐ.டி, தென்னிந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் கேந்திரமாக விவேகானந்த வாசகர் வட்டம் மூலமாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஐ.ஐ.டி விடுதி, நூலகங்களை கைப்பற்றுவது, ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடத்துவது, வெறியுடன் பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது என்று பல காலி வேலைகளை செய்து வருகிறது.

மேலும் குருமூர்த்தி இந்துத்துவ லெக்சர் கொடுக்கவோ, அரை டவுசர் அரவிந்த நீலகண்டன் ஏகாந்தவாதம் பேசுவதற்கோ அவாள் நிர்வாகம் சாம்பிராணி போடுகிறது. ஆனால் அம்பேத்கர்-பெரியார் பெயரைக் கண்டவுடனே அலறித்துடித்து ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய வன்மத்துடன் மாணவர்களின் சனநாயக குரல்வளையை நசுக்குகிறது. இந்த கேடுகெட்ட சந்தர்ப்பத்திலும் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களை இந்துக்களுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் திசைதிருப்புகிறது என்று சொல்வதன் மூலமாக தனது சனாதன வர்ணாசிரம பாசிசத்தை ஆழ்ந்து நிறுவுகிறது.

ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கான கல்வி நிலையமாக இருந்துவரும் வேளையில் சமூக பாசிசக் கொள்கைகள் மாணவர்களை உந்தித் தள்ளி போராட வைக்கிறது. நலிந்த பின்புலத்திலும் சாதியக்கட்டுமானத்தில் பழிவாங்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களையும் சனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்ட பிற மாணவர்களையும் அங்கு அப்பட்டமாக செயல்பட்டு வரும் பார்ப்பன-பாசிசத்திற்கு எதிராக போராட வைக்கின்றன.

தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களின் தாக்கத்தாலும் பல்வேறு மாநிலங்களின் மாணவர் இயக்கங்களின் பின்புலத்தாலும் சென்னை ஐ.ஐ.டியின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் முன் எப்பொழுதையும் விட மாணவர்களால் தீர்க்கமாக எதிர்க்கப்பட்டு போராடப்பட்டுவருகின்றன. இதன் குரல்வளையை நசுக்கும் சந்தர்ப்பமாக இந்துத்துவ பாசிச மோடி கும்பல் நேரடியாக தலையிட்டு மாணவர் அமைப்பை துடைத்தெறிய எத்தனித்திருக்கிறது.

ஆனால் சென்னை ஐ.ஐ.டி இந்துவக்காலிகளுக்கான இடமல்ல. அது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் கல்வி நிறுவனம் என்றும் அது மக்களுக்கானது என்றும் அங்கே மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டிப்பதற்கு மாணவர்களாகிய எங்களுக்கு தார்மீக உரிமை உண்டு என்று சொல்கிற மாணவர்களின் குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து வருகிறது .இத்தகைய தருணத்தில் மாணவர்களுக்கு நாம் ஆதரவாக நிற்பதுடன் இந்து பார்ப்பனியத்தின் பாசிசக் கொள்கைகளை கருவறுத்திட வாசகர்களும் பிற கல்லூரி மாணவர்களும் அறிவுத்துறையினரும், வழக்கறிஞர்களும், மக்கள் திரளினரும் கைகோர்த்திட வேண்டும்.

இந்துத்துவம், கொடூரங்களின் கூடாரம் என்றார் அம்பேத்கர். ஸ்மிருதிகளையும் ஸ்ருதிகளையும் கொண்டிருக்கும் மதம் அழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர் (இதைச் சொன்னதற்காகவும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது!). இவையிரண்டிற்கும் வழிவகுத்து பார்ப்பனியத்திற்கு சாட்டையடி கொடுத்தது பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபு. ஆனால் இன்று இத்தலைவர்களின் பெயரைத்தாங்கிய மாணவர் திரளின் அமைப்பே கலைக்கப்பட்டு இந்து பாசிசம் நிலைநிறுத்தப்படுகிறது.

இதை இன்று நாம் எதிர்க்காவிட்டால் நாளை நாமும் அடிமையாவோம்! எனவே பார்வையாளராக இருந்தது போதும்! போராட்டங்களில் பங்கேற்பாளராக மாறுவோம்! கருத்துரிமைக்கெதிரான பார்ப்பன மதவாதத்தை வீழ்த்துவோம்! சமத்துவ சமூகத்தை நிறுவுவோம்!

இவண்:
வழக்கறிஞர்கள், மதுரை
9865348163, 9443421368.

தகவல்:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
9443471003, 9865348163.

தஞ்சை

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் செயல்பட்டு வரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் முன்முயற்சியால் பார் அசோசியேசனுக்கு கடிதம் வழங்கப்பட்டது. APSC மீதான தடையை நீக்க வேண்டிய அவசியத்தை தோழர்கள் விளக்கிப் பேசினர். இதனை ஏற்று பார் அசோசியேசன் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தகவல்
பு.ஜ செய்தியாளர்,
திருச்சி