Saturday, May 3, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?

இராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருப்பது தேசபக்தியா, ஊழலா ?

-

avadiசென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான படை உடை தொழிற்சாலை, கனரக வாகனத் தொழிற்சாலை, தீண் ஊர்தி (டாங்கி) தொழிற்சாலை ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் இது போல 41 தொழிற்சாலைகள் இருக்கின்றன. தமிழகத்தில் ஆவடி, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டம் அருவங்காடு என மொத்தம் 6 தொழிற்சாலைகள் இருக்கின்றன.

இந்த இராணுவ தொழிற்சாலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள், தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படுகின்றன. 5000-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஆவடி கனரக வாகனங்கள் தயாரிக்கும் ஆலையில் ஆண்டுதோறும் 110 பேர் தேர்வு மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். 2015-ம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் கடந்த மார்ச் மாதம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1500 பேர் பங்கேற்றனர்.

இதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சான்றிதழ்களை சரிபார்க்கும் போது பீகாரைச் சேர்ந்த 5 பேரின் கைரேகைகளும், அவர்கள் தேர்வு எழுதிய போது பதிவு செய்யப்பட்ட கைரேகைகளும் வெவ்வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்ததாக 5 பேரும் இப்பிரச்சினையில் தொடர்புடைய 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தேர்வு எழுதுவதில் ஆள்மாறாட்டம் நடப்பதெல்லாம் புதிய விசயம் அல்ல என்கிறார்கள் இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள். அதற்கு பல உயர் அதிகாரிகளே உடந்தையாக இருக்கின்றனர் என்றும், இந்த ஆலையில் பீகார் முதலான வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் பல உயர் பொறுப்புகளில் உள்ளனர், அந்த அதிகாரிகள் தான் இவர்களுக்கு உடைந்தையாக இருந்திருக்கிறார்கள், இது பற்றி அறிந்தும் அவர்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றனர், இத்தகைய ஆள்மாறாட்ட முறைகேடுகள் மட்டுமின்றி வினாத்தாள்களை விற்கும் அதிகாரிகளும் ஆலைக்குள் இருப்பதாக கூறுகின்றார்கள் தொழிலாளிகள்.

இந்த ஆள்மாறாட்ட வேலைகள் தொடர்கதையானதால், இதை தடுப்பதற்காக அண்மை காலமாக நடைபெறும் தேர்வுகளில் தேர்வு எழுதுபவரின் புகைப்படம் மற்றும் கைரேகைகளை பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. பாதுகாப்புத் துறையில் ஆள்மாறாட்டம் மூலம் வேலைக்குச் சேருவது ரொம்ப சாதாரண விசயம் சார் என்கிறார்கள் விசயம் அறிந்த தொழிற்சங்கத்தினர். இது போன்ற வேலைகளில் சேர்த்துவிடுதற்கென்று ஏராளமான புரோக்கர்கள் வேறு இருப்பதாக கூறுகிறார்கள்.

தற்போது தேர்வு எழுதுவதில் செய்யப்பட்டிருக்கும் சில மாற்றங்களால் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் அடுத்தடுத்து மாட்டிக்கொள்வதாலும், அரசின் பெயர் கெட்டுபோவதாலுமே இப்போது தலையிட்டிருக்கின்றனர். ஆவடி ஆலையில் ஆள்மாறாட்ட முறைகேடுகள் தொடர்கதையாகி வந்ததால் ஆலையில் இயங்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் கூட்டாக சென்று தொழிற்சாலையின் பொது மேலாளரைச் சந்தித்து இப்பிரச்சினைக்கு நிர்வாகத்தின் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதன் பிறகு தான் தேர்வு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பத்தில் உள்ள கைரேகைகளையும், நுழைவுத் தேர்வின்போது பதிவு செய்யப்பட்ட கைரேகைகளையும் நிபுணர்கள் மூலம் ஒப்பீடு செய்து, இரண்டுக்கும் வேறுபாடும் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று எழுத்து மூலம் கடிதம் கொடுத்திருக்கிறார் மேலாளர்.

அதற்கு பிறகு தான் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களாக சான்றிதழை சரிபார்க்கும் போது, வட மாநிலத்தைச் சேர்ந்த பிரதேஷ் குமார், கோவிந்த குமார், ஷிவம் குமார், சந்தீப் குமார், விக்ரம் குமார் ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் பிடிபட்டதும் வரிசையில் நின்று கொண்டிருந்த இதே போன்ற மோசடியில் ஈடுபட்ட பலர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு பணிக்கூடச் சட்டத்தின்படி (Workshop Act) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, 50 சதவீதம் பணியாளர்களை அந்த ஆலை எந்த பகுதியில் அமைந்துள்ளதோ அந்த பகுதியிலிருந்து தான் பணிக்கமர்த்த வேண்டும். இது தான் சட்ட நடைமுறை ஆனால் சமீப காலமா இந்த நடைமுறை எந்த அரசு துறையிலும் பின்பற்றப்படுவதில்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இது போன்ற நிறுவனத்திலேயே அரசால் இயற்றப்பட்ட சட்டம் பின்பற்றப்படுவதில்லை என்கிற போது பிற பொது துறை நிறுவனங்களில் எப்படி இருக்கும். இந்த சட்டம் ஏன் பின்பற்றப்படுவதில்லை ? இவற்றை எல்லாம் பின்பற்றிக் கொண்டிருந்தால் அங்கு உட்கார்ந்துகொண்டிருக்கும் அதிகாரிகள் சுதந்திரமாக ஊழலில் ஈடுபட முடியாது, எனவே தான் ஊழலுக்கு தடையாக இருக்கும் இந்த சட்டத்தை தூக்கி கடாசிவிட்டனர்.

மேலும் இங்கு தயாரிக்கப்படும் தளவாடங்களும் இந்திய இராணுவத்திற்கு பெருமளவில் பயன்படுவதில்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் மக்கள் பணம் கரைந்து போனதுதான் மிச்சம். இவற்றை விட முன்னேறிய இராணுவத் தளவாடங்களை ஏகாதிபத்திய நாடுகள் தயாரிக்கின்றன. இராணுவத்திற்கு தேவைப்படும் பெரும் எண்ணிக்கையிலான தளவாடங்களை இந்தியா அந்நாடுகளிடமிருந்து தான் இறக்குமதி செய்கிறது. அவ்வாறு இறகுமதி செய்யும் போது அதிலும் ஊழல் செய்கிறது அதிகார வர்க்கம்.

பொதுவில் இராணுவம், பாதுகாப்பு, தளவாடம் என்றால் இங்கே பெரிய அளவில் தேசபக்தி பொங்கி வழிவது வழக்கம். சவுடால் அரசியலுக்கா பா.ஜ.க அமைச்சர்கள் பாகிஸ்தானை எதிர்த்தும், சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தும் மிரட்டல் விடுவது வழக்கம். அப்பேற்பட்ட சிகாமணிகளின் ஆட்சியில் இராணுவ  தொழிற்சாலை நடக்கும் இலட்சணம் இதுதான். பணமிருந்தால் நீங்கள் இராணுவ தொழிற்சாலை என்ன, இராணுவத்திற்குள்ளேயே ஊடுறுவிவிடலாம்.  ஃபோபார்ஸ் முதல் கார்கில் சவப்பெட்டி ஊழல் வரை அதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

எல்லையில் இருந்து உயிர்விடும் இராணுவீரர்களுக்காக சிலிர்த்துக் கொண்டு எழும் தேசபக்தர்கள், இப்படி ஒரு இராணுவத் தொழிற்சாலையின் ஊழலைக் கண்டு மோடி அரசை துவம்சம் செய்வார்களா?