privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் !

காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் !

-

காக்கா முட்டை திரைப்படம் சொல்லும் திடீர் நகர் மக்களின் வாழ்க்கை குறித்து இயக்குநர் வசந்தபாலன் மெய்மறந்து உள்ளொளியின் உவகையுடன் பேசுவதைக் கேட்டோம்.

‘அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள்’ என்று அவர் மட்டுமல்ல பல்வேறு அப்பாவிகளும் உண்மையிலேயே ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது ஒன்று தோன்றியது.

நாமே திடீர் நகருக்கு நேரில் சென்று படம் குறித்த படைப்பாளிகள், மற்றும் ரசிகர்களின் கருத்தை சொல்லி அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்வோம் என முடிவு செய்தோம்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள்

சென்னை-அண்ணாசாலையை ஒட்டிய சைதாப்பேட்டை மறைமறையடிகள் பாலம் அருகே கீழே உள்ள திடீர் நகர், கோதாமேடு-அண்ணாநகர் பகுதிகளுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்றோம்.

எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள். மூன்றடி இடைவெளிச்சந்தில் இருபுறமும் தகரக் கொட்டகைகள்.

சிரிப்பு, கும்மாளம், அவலம், வெறுமை, சுறுசுறுப்பு, சோம்பிக்கிடத்தல் என விதவிதமான உணர்ச்சிகளுடன் தென்பட்ட சிறுவர் பெரியவர் அனைவரையும் சந்தித்தோம்.

“காக்கா முட்டை படம் சூட்டிங் நடந்த இடம் இதுதானே”

“ஆமாம்” என்று சிரித்தனர்.

“காக்காமுட்டை படம் பார்த்தீர்களா”

“டிவியிலே பார்த்தோம் பாட்டு, ட்ரெயிலர் எல்லாம்..” என்றனர். சிலர் டி.வி.டியிலும் ஓரிருவர் தியேட்டரிலும் பார்த்தாக சொன்னார்கள். பெரும்பான்மையினர் பார்க்கவில்லை. சொல்லப்போனால் அப்படம் திரையரங்குகளில் வந்ததே தெரியாது.

கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…“, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..” என்று காக்கா முட்டையில் கவிஞர் நா. முத்துக்குமார் உருவாக்கியிருக்கும் அற்புதமான மகிழ்ச்சி, சந்தோஷம், ஜாலி, நிம்மதி குறித்து மக்களிடம் கேட்டோம்.

அருகில் வந்த ஒருவர் “அவனுங்க, காக்காமுட்டை, பல்லிமுட்டைனு படம் காம்ச்சி, அவார்டு வாங்கி மேலேமேலே பூடுவனுங்கோ….நாங்க மட்டும் கூமுட்டையா கூவத்துலேயே இருக்கணும்னு படம் காட்டாறனுங்களா? இங்க எங்களுக்கு இன்னா… நிம்மதிய கண்டானுங்க… அவசரம்னா…. போறத்துக்கு வீட்டுல ஒரு கக்கூஸ் இருக்குதானு பாத்தானுங்களா? பொம்பளைங்க, குழந்தையுங்க, வயித்துவலி பேதி வந்தா, ரோடு வரைக்கும் ஓடணும். அங்கேயும் போனா…க்கியூதான்…அது வரைக்கும் …நீ நில்லுன்னா… அது…நிக்குமா? பெருசுங்கக்கூட காலோடோ…போ…ய்யி..டும். அந்த அசிங்கம் அவனுங்களுக்கு தெரியுமா? …

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…”, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..”

இங்க..2000 பேருக்கு மேல்..கிறோம்…2..கக்கூஸ்தான் (பொதுக் கழிப்பறை – ஆணுக்கு 2, பெண்ணுக்கு 2)…அதுலயும் அங்க தண்ணீ…இல்ல.. டப்பாவுல எடுத்துகினு போனோதான் கழுவ முடியும்…!…இன்னும் ஆயிரம் கப்பு (நாற்றம்)… இருக்குது இங்கே.. ..அதலதான் ..நாங்க வாழ்றோம். இந்த.. வாழ்க்கை அவனுங்களுக்கு சந்தோசமா.. தெரியுதா?” என்று எரிச்சலாகி முறைத்தார்.

அடுத்ததாக கூவம் கரைக்கு அதாவது காக்கா முட்டையின் படி “தாயின் மடி” கரைக்கு நம்மை அழைத்துச் சென்றனர், பகுதி சிறுவர்கள். “பச்சை பசுங்காடு” என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் “பச்சை பீக் காடு” கண்டு பீதியில் உறைந்தோம்! அதன் நடுவே, சிறுவர்கள் ஒரு கற்பாறையில் கிரிக்கெட் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தனர். அனுபவம் இல்லாததால், கவனமாக சென்றும்  பீயில் விழுந்து எழுந்த பிறகுதான் வினவு செய்தியாளர் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது!

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”

“சார்.. இங்க எதுக்கு வர்றீங்க …?” என்றனர், அருகில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.

“இங்கு எப்படி விளையாடுவீர்கள்? பந்து ஆய் மீது விழுந்தால் என்ன செய்வீர்கள்”

‘அதெல்லாம் ஒரு மேட்ரா…’ என்பது போல் நம்மைப் பார்த்தார்கள்!

“டொக் (மெதுவாக அடிப்பது அல்லது கட்டை போடுவது) அடிச்சிதான் இங்க விளையாடணும். தூக்கி அடிக்கிறவன தொறத்திடுவோம்” என்றனர். ஆக இங்கே சிக்சரோ இல்லை ஃபோருக்கோ வழியில்லை. கிரிக்கெட்டிலே கூட திடீர் நகர சிறுவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது என்ற போது அங்காடித் தெரு இயக்குநரின் அறிவு குறித்து நாம் கரிசல் மண் சென்றுதான் அழ வேண்டும்.

அரசுக்கு சொந்தமான டோபி கானா (வண்ணார் துறை – சலவைத் தொழிலாளர் பகுதி) நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சுதாகர் என்ற மாணவரிடம்…

“ஆமா நீ ஏன் செருப்பு போட மாட்டேங்குற?

“அத போட்டா வழுக்குதுண்ணே?”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல”

“நடந்தாலே வழுக்குதா?”

“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”

“சரி வீட்டுல டாய்லெட் இல்லயா?”

“வீட்டுல குளிக்க மட்டுந்தா முடியும்”

“நைட்ல டாய்லெட் வந்துச்சுன்னா என்ன பண்ணுவ?

“கரைக்கி(கூவம்) போயிட்டு இங்க வந்து கழிவிக்குவேன்”.

திடீர்நகர சிறுவர்கள் செருப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது பற்றி காக்காமுட்டை படம் உருவாக்கிய குறியீடு, படிமம், கவித்துவம் குறித்து கதையளந்த அந்த நல்லவர்கள் எங்கே?

வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மு என்பவர், “சொன்னா.. அசிங்கம்..சார்…எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…” என்று மீண்டும்… கோபத்தோடு ஏதோ.. சொல்ல வந்தவரை அருகிலிருந்த பிற பெண்கள் இழுத்து வாயடைத்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?”

அத்தெருவில் சாப்பாட்டுக்கடை நடத்தும் கற்பகம் என்பவர், “இந்த சினிமாக்காரனுங்க எங்களப்பத்தி இப்படி காமிகிறதுக்கு புதுசு இல்ல! ஆனா இந்த சாக்கடையிலக் கூட எங்கள வாழவுடாம பலபேரு, இந்த எடத்த எப்படி புடிங்கிறதுனு குறியா கீறானுங்க. சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல” என்றார், குரல் உடைந்து.

பக்கத்திலிருந்த கமலக்கண்ணன் என்பவரிடம், “உங்களை கொசுக்கள் கடித்தாலும் காக்கா முட்டையில் வரும் பாடல் போல ‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?” என்று கேட்டோம்.

“….சார்…நல்லா வாய்ல்ல வருது சார்…பேமானிங்க, சினிமாக்காரனுங்கள இங்க ஒரேஒரு நாளைக்கு வந்து படுக்க சொல்லுங்க சார்…! 3 அடிஅகலம் உள்ள சாக்கடைதான் எங்களுக்கு தெருவு! அதுமேல சிமெண்டு ஸ்லாப் போட்டு  நடக்கிறோம், சாப்புடுறோம். தூங்றோம். இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!” என்றார்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…”

பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த சொளமியா என்பவர். “கொசுக்கடி மட்டுமில்ல, குடிக்க தண்ணீ, குழாயில ராத்திரி 12 மணிக்கு மேலதான் வரும்! பாதி ராத்திரி 1 மணி, 2மணிக்கு குடிக்கிற தண்ணிய புடிச்சுட்டு, அப்பிடியே குளிச்சிருவோம். அந்நேரத்திலதான் யார் பாப்பாங்களோன்ற பயம் இல்லாம குளிக்க முடியும்! பிறகுதான் தூங்கப் போவோம்.

எல்லார் தலைமாட்டிலும் ஒரு கொசு வத்திய கொளுத்தனாதான் தூங்க முடியும். அதனால பகல்லானா… குழந்தைங்க விடாம இருமுதுங்க… டாக்டர் கிட்டப்போனா கொசுவத்தி வைக்கக் கூடாதுனு சொல்றாரு.. .எங்க வேதனைய… யார்..கேக்றாங்க..” என்றார்.

திடீர்நகர் வீடுகளில் கழிப்பறை இல்லை. குளிக்கவே முடியாது. ஏனெனில் வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் பெண்கள் நள்ளிரவில் ஊர் அடங்கியதும் தெருக்கோடிகளில் சென்று குளிக்கிறார்கள். குளியல் என்றால் ஏற்படும் ஒரு ரம்மியம், மணம், மல்லிகை, ஸ்கந்தம், பாத்ரூம் பாடகர்கள் போன்ற குறியீடுகளில் வாழ்பவர்கள் தங்களது தெருக்களில் நள்ளிரவில் குளித்தால் காக்கா முட்டை குறித்த படிமங்கள் டமாலென உடைந்து விடும், கவனம்!

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“லின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”

திடீர் நகர் சிறுவர்களின் ஆர்வம், கனவு, பணப் புழக்கம், நவீன நுகர் பொருட்கள் பற்றிய அறிவு என்ன?

நாங்கள் சென்ற நேரம் கோலிக்குண்டு சீசன். கோதாமேடு, அதை ஒட்டியுள்ள ஹவுசிங் போர்டு தான் இவர்களின் ஆடுகளம். காலை 7 மணிக்கு ஆட ஆரம்பித்த சிறுவர்கள் 1 மணி வரையில் பல்வேறு கூட்டமாகப் பிரிந்து பிரிந்து விளையாடினர்.

மாத்திரை (விஷ்ணு) வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு வந்து மீண்டும் கெத்தா விளையாட ஆரம்பித்தான். அப்போது அவனுடைய நண்பன் சொரி(சந்தோஷ்) “டேய் இவன யாரும் சேத்துக்க வேணாண்டா! இவனுக்க சாப்ட கொடுத்த துட்ட வெச்சி கோலிக்குண்டு வாங்கியாந்துட்டான்” செல்வம் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்தார்.

சஞ்சீவ், முட்டை பஜ்ஜி (ரகுமான்), கலீல், ஷாஜஹான், கவுதம், கமலேஷ் என எல்லாரும் கோலிக்குண்டு விளையாடி ஜெயிப்பதில் மூழ்கியிருந்தனர். இவர்கள் ஒரே அணியாக மட்டுமே விளையாடவில்லை. சிறிது நேரம் ஒரு குழு, பிறகு வேறு ஒரு கூட்டம் என மாறி மாறிக்கொண்டே இருந்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா

ஒரு குண்டு ஒரு ரூபாய் என ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 ரூபாய் மதிக்கத்தக்க குண்டுகள் இருந்தன. புதிதாக ஒரு கிரவுண்ட் இருந்தாலும் அங்கே வாலிபர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொள்வதாலும், வெயிலாக இருப்பதாலும், வெறும் மணலாக மட்டுமே இருப்பதாலும் சிறுவர்கள் வீட்டிற்கு அருகிலேயே விளையாடுகின்றனர்.

திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா, 15 ரூபாய் சம்பாதிக்க திண்டாடுவார்களா என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

சுதாகரிடம்…

“ரயில்வே ட்ராக் பக்கமெல்லாம் போவீங்களா?

”இல்லண்ணே அங்க போனா பெரியவங்க தொரத்திருவாங்க”…

காக்கா முட்டை காட்டிய படங்கள்
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“பள்ளிக்கூடத்துல தெனமும் தீனி எதாவது வாங்கி சாப்புடுவியா?”

“சிப்ஸ், குர்குரே, பிங்கோ எல்லாம் சாப்புடுவேன்”

“சரி யாரு ஒனக்கு இவ்ளோ காசு கொடுப்பா?”

“எங்கம்மா தான் கொடுப்பாங்க, தெனமும் 5 ரூவா இல்ல 10 ரூவா கொடுப்பாங்க,

டீச்சர் கல்லூரியில் உள்ள அரசு மாடல் மேல்நிலைப்பள்ளியில் 11-வது படிக்கும் செல்வத்திடம்..

“என்னடா தம்பி கோலிக்குண்டு வெளையாடலியா?”

“இல்லண்ணா நாங்கெல்லாம் WWF-தான் பாப்போம்”

“அப்படியா யாரப் புடிக்கும்?”

“இப்பக்கி ஜான் சினா தான்”

“சரி வேற யாரையெல்லாம் தெரியும்?”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன்.”

“காலின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”

“ஏண்டா தம்பி பத்தாவது படிச்சவுடனே டிப்ளமோ படிக்க போயிருக்கலாம்ல?”

“இல்லண்ணா,  ஸ்கூல்ல படிச்சா ஃபிரண்ட்ஸ்களோட ஜாலியா பேசிக்கினு வெளையாடிக்கினு இருக்கலாம், காலேஜ்-னா செரமம் அதான் +1 சேந்துட்டேன்”

“ஒனக்கு நெறையா காசு கெடச்சா என்னடா தம்பி சாப்டுவ?”

“நெறையா காசு இருந்தா பீஃப் ரைஸ் தான்னே சாப்பிடுவேன்”

“பீசாவெல்லாம் சாப்பிடுவியா?”

“எங்கப்பாகிட்ட சொன்னா, ஆட்டோ ஓட்டி முடிச்சிட்டு வர்றப்ப வாங்கிக்கினு வருவாரு, பேக்கரில கூட 30 ரூவாக்கி கெடைக்குது. மெக்டொனால்ட்ஸ்-ல கூட 90 ருப்பீஸ்-கு போட்ருக்காங்கன்னா”

மற்றும் இங்கிருக்கும் பல சிறுவர்களுக்கு வாட்ஸ் அப் உட்பட அனைத்தும் பரிச்சயம். செல்பேசி இல்லாத சிறுவர்கள் கூட தங்களுக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு இருப்பதை சொல்லி பெயர் கொடுத்தார்கள்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு”

கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சுதாகரிடம்…

“தினமும் பள்ளிக்கூடத்துக்கு போறப்ப குளிப்பியா?

“குளிப்பேன்”,

“எங்கடா தம்பி குளிப்ப?“

“வீட்ல தான் குளிப்பேன்!”

“கூவத்துல குளிக்க மாட்டியா?”

“சின்னப்புள்ளயா இருக்கப்ப தான் குளிச்சிருக்கேன், அப்பல்லாம் தண்ணி நல்லா இருக்கும், இப்பல்லாம் வீட்ல மட்டும் தான் குளிக்கிறோம்”

செல்வத்திடம்…

“ஒனக்கு ரொம்ப நாளா எதாவது ஆசையிருக்குதா?”

“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல, லீவு நாள்ல வாட்டர் கேன் சப்ளை பண்ணுவேன், கெடைக்கிற வச்சு சட்டையெல்லாம் எடுத்துக்குவேன், மீதி இருந்தா அம்மா கிட்ட கொடுத்துருவேன்”

“சரி தினமும் கூவத்துல குளிக்கிறியா?”

“என்னாண்ணா? அங்க குளிக்கிற மாதிரியா இருக்கு? ஒரே சேறா இருக்கு, நான் சின்ன புள்ளயா இருந்தப்ப குளிச்சிருக்கேன், அப்பொல்லாம் தண்ணி க்ளியரா இருக்கும், இப்பல்லாம் சாக்கடை தண்ணியா தொறந்து வுடுறாங்க, ஏ.பி.டி-லேர்ந்து தெனமும் அவ்ளோ சாக்கட தண்ணியா கொட்டுறாய்ங்க”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!”

“அப்ப ஆத்துகெல்லாம் எப்ப தான் போவீங்க?”

“காலைல கால் கழுவ மட்டும் தான்னா போவோம், அதுவும் வூட்ல கக்கூஸ் இருந்தா இன்னாத்துக்கு போறோம்.”

“சார்… இங்க.. வாங்க” என்றார் கமலக்கண்ணன், “பல நாள் சூட்டிங் எடுத்து எங்க பொழப்ப கெடுத்தாங்க சார்… எங்க வீட்டிலேயே எங்கள நிம்மதியா இருக்க விடாம…. அடிக்கடி வெளிய வராதீங்க.. வீட்டுல டிவி சவுண்டு கொஞ்சம் கொறைங்க… அப்படினு அவனுங்க சொல்லறது எல்லாம் கேட்டோம். இப்ப அந்த சினிமாவிலயே எங்களையே நக்கல் பன்றானுங்களா” என்றார் எரிச்சலாக.

ஆறுமுகம் என்பவர் “கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு… அவங்க குழந்தைக்குட்டிங்க இப்ப அநாதையா இருக்குது சார்” என்றார் விரக்தியுடன். கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் பல இணைய பிரபலங்கள் இந்த வரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த விக்னேஷ் என்ற இளைஞர், “அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன். சினிமாக்காரனுங்க எல்லாம் ஜோட்டா (பிராடு) வேலை பண்றவங்க” என்றார்.

அங்கு கும்பலாக இருந்த பெண்களிடம் பேசினோம், “மழைக்காலம் வந்தா இங்க எப்படி? குழந்தைகளோடு நீங்களும் சந்தோசத்தில் மிதப்பீங்களாமே?

“….அப்படியா….மழைவந்தா நீங்க இங்க வாங்க. எங்கக்கூட சேர்ந்து வெள்ளாடுவிங்க….” என்று சிரித்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும்”

“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க  ரொம்ப கஸ்ட்டப்படும். காய்ச்சல், பேதி, நாத்தம், வேலையில்ல, சோறு இல்லனு…. செத்து பொழைப்போம்… இருந்தாலும் மழை வேணுமில்லனு… மனசு சொல்லும். குழந்தைகளை தேத்திகினு.. இருப்போம்” என்று வலியோடு பேசினர்.

மழையை ரசித்து சிறுவர்கள் ஆட்டம் போடுவதாக காக்கா முட்டை படத்தில் காட்டப்பட்டது பற்றி செல்வம் என்ற சிறுவனிடம்

“மழையெல்லாம் வந்தா என்னடா தம்பி செய்வீங்க”

“அண்ணா, மழை பெஞ்சுச்சுனா வீட்டுல ஒழுவுற எடத்துலெல்லாம் பானைய வெக்கணும், அப்புறமா ரெண்டு மூனு நாளு கழிச்சி கொசு கடி தாங்காது, வெள்ளம் கூடுனா உடனே பள்ளிக்கூடத்தண்ட போயிருவோம். தண்ணி வடிஞ்சப்புறம் வருவோம்”

நாம் பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் பலர் சூழ்ந்து கொண்டனர். காக்காமுட்டை படத்தில்  வரும்  டாஸ்மாக் கடைக்காக  தன்னுடைய டீக்கடையை தற்காலிகமாகக் கொடுத்தவர், கொதிப்புடன், “சூட்டிங் எடுத்துட்டு அப்பால, பேசுனது மாதிரி பணம் கொடுக்காம ஓடுன திருட்டுபசங்க சார் அவனுங்க… இந்தப்படம் தியேட்டருக்கு இல்ல… சின்ன பட்ஜெட்டு.. நீங்களெல்லாம் உதவி  பண்ணனும்னு…. பொய் சொன்னாங்க அவனுங்க. பிச்சைக்கார பசங்க! இப்ப அவனுங்கள வரச்சொல்லுங்க. 100 பொம்பளங்கள கூப்பிட்டு தொடப்பக்கட்டையாலேயே அடிப்போம்! அவனுங்க போலீசு ஸ்டேசன் இல்ல எங்கவேனாலும் போய் ரிப்போட் பண்ணட்டும். டூபாக்கூர் பசங்க… ” என்றார்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள்.

இப்படி பலபேர், காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள். “துணி காயப்போடும் சீனுக்காக, பலமுறை பசங்களை ஓட்டுமேல ஏத்தினாங்க, எங்க வீட்டு சிமெண்ட் ஓடெல்லாம் போச்சி. அத ரிப்பேரு பண்ண  பணம் தரேனு, கடைசியிலே ஏமாத்திட்டு போய்ட்டாங்க…” என்றார் ஒருவர்.

மேலும் சூட்டிங்க்குகாக தன்னுடைய காயலாங் கடையைக் கொடுத்தவர், தடுப்பு கட்டி பாத்ரூம் தந்தவர், அதில் நடித்த அப்பகுதி லட்சுமி பாட்டி…  இப்படி பலர் காக்காமுட்டை சினிமா கும்பல் தருவதாக சொன்ன சில நூறு ரூபாய்களைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடிய  கதையை சொன்னார்கள். ஆனல் காக்காய் முட்டை உலகமெங்கும் வசூலித்த தொகை பதினைந்து கோடி என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சினிமா படைப்பாளிகள்தான் காக்கமுட்டைத் திரைப்படத்தில் வரும் திடீர் நகர் மக்கள், தமது பகுதி சிறுவர்களை அடித்த பீட்சா முதலாளியை எதிர்த்து போராடுவதற்கு பணம் எதிர்பார்த்தார்கள் என்று காட்டுகிறார்கள். தங்கள் சொந்தப் பிரச்சினைக்குக்கூட, பேரணி, போராட்டம் என்று அவர்கள் தெருவுக்கு வருவது சாராயம், பிரியாணி, பணத்திற்குதான் என்று பார்வையாளர்களுக்கு குறிப்பால் புரிய வைத்து உலக சினிமா, ஈரானிய சினிமா என்று ஏங்க வைத்தார்கள்.

திடீர் நகர் மக்களிடம் இதைப்பற்றிக் கேட்டதும்,

காக்கா முட்டை காட்டிய படங்கள்
அவன்ங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?

“எங்க பசங்கள எந்த கஸ்மாலமோ அடிச்சதுக்கு, ஞாயம் கேக்க நாங்க காசு கேட்டோமுனு எந்த பாடு சொன்னான்? அவன இங்க இத்துணு வா, கீறி டிக்கிய பொளந்து பீசாக்குறேன். ஏன் சார், எங்க பசங்கள காப்பாத்தக்கூட நாங்க துட்டு கேப்பமா? இதெல்லாம் நிஜமென்னு நம்பிக்கினு உன்ன மாறி பட்ச்சவங்க வந்து கேப்பீங்களா? இதுவே அந்த சினிமா பாடு வந்து சொன்னான்னா கதை வேற! இதுக்கு மேல கேக்காதா, வாயில வந்துற போது”

“சினிமாக்காரனுங்கன்னா எங்கள எது ஒன்னாலும் சொல்வான்களா? அவனங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய  ஆட்டுவான்களாமா?…. கண்டத சினிமான்னு காம்ச்சி எங்கள பணம் புடுங்குவோம்னு காட்டுவானுங்களா”, என்று கொதித்தனர்.

இனி என்ன? இந்த வினவு கட்டுரை பிரபலமாகி, காக்கா முட்டை படப்பிடிப்புக்குழு, தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறன், பெரிய தயாரிப்பாளர் முர்டோச் (ஃபாக்ஸ் ஸ்டூடியோ), 60 மார்க் ஆனந்த விகடன் அனைவரும் திடீர் நகர் சென்று இஸ்திரி பெட்டி, மூன்று சக்கர சைக்கிள்,
வேட்டி சட்டை, சேலை கொடுக்கும் விழாவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அப்படி ஏதும் திட்டம் அறிவிக்கப்பட்டால் காக்கா முட்டையின் கவித்துவத்தை அம்மக்களுக்கு காட்சிப்படுத்துவோம். மீதியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

– வினவு செய்தியாளர்கள்

  1. வினவுக்கு என்ன வயிதெரிச்சல்னா…. இவனுங்க தான் சேரி சனங்களுக்கு வக்காலத்துன்னு இருந்தானுங்க, ஆனா ஒரே ஒரு படத்துல எல்லோரும் பேசும்படியா நடந்தவுடன் வினவின் அறிவு ஜீவீகளுக்கு அரிப்பெடுக்க ஆரம்பித்துவிட்டது…. ஒரு சினிமா திரைப்படம் என்பது ஒரு “பொழுது போக்கு” விஷயம் என கூட தெரியாத கூமுட்டைகள் கட்டுரை எழுத வந்துட்டானுங்க….

    • நீ உண்மையான இந்தியன்தான்பா. ஒருத்தனோட கஷ்ட்டத்த பொழுதுபோக்கா ரசிக்கிறபாரு!.

  2. பின் நவீனத்துவமுனு பேசிக்குனு
    பேச்சு எழுதியே பேரீச்சம் பழம் வித்துடுவாங்க சார்! பழம்

  3. காக்கா முட்டை லாபத்துல ஒரு சிரு பகுதியாவது இவர்களின் முன்னேற்றத்திற்கு செலவிடப் படுமா ?

  4. தோழர்., படிக்க உண்மையிலேயே மிகச்சிறப்பான பதிவு. தனித்துவம் மிளிரும் வினவுவின் பாணியும் துணிவும் வெகு சிறப்பு.

    காக்க முட்டை விமர்சனம், 60 மார்க் விமர்சனத்துக்கு விமர்சனம்னு போனீங்க., அதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். இது “அதுக்கும் மேல”. சூப்பர் சூப்பர் சூப்பர்மா…..
    ஆனந்தம் பிளஸ் அதிர்ச்சி கமா அட்டகாசமான பதிவு.

    வேறு எப்படி சொல்வதுன்னே தெரியல.

  5. சென்று வந்த தோழர்களுக்கு மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

  6. வணக்கம் வினவு பிரிவினைவாதியே… நாட்டில் பேச வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது வினவுக்கு இப்படத்தின் விகடனின் மதீப்பீடை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன.. சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்குவது,முக்கியமான விஷயங்களை கண்டுகொள்ளாமலிருப்பது..இவ்ளோ பேசும் நீங்கள் யோகா தினத்தைப் பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன்? பேச வேண்டுமானால் ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும்..குறை ஏதும் இல்லையென்றால் சும்மா இருப்பதற்கு வேறு ஏதாவது பற்றி பேசலாம் என்று தாங்கள் எடுத்து கொண்ட தலைப்பு ஆஹா!!!! என்ன ஒரு தலைப்பு?

    • மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் இப்படி இருக்குது. இதைப் போய் கவித்துவம் அது இது இதுன்னு ஜல்லியடிச்சுட்டு இருக்குற அநியாயத்தை மட்டும்தான் வினவு தோலை உரிச்சுகாட்டுச்சுங்கைய்யா… வினவு விட்டுட்ட ஒரு பாயிண்ட்ட நீங்க கரெக்டா புடிச்சுட்டீங்க. அது என்னன்னா இப்படி குடி மக்களின் வாழ்க்கை இருக்குதேன்ற துளி சஞ்சலமும் இல்லாம யோகா பண்ணினாலே அது சர்வரோக நிவாரணினு நடுரோட்ல படுத்து ஒரு நாள் பொழப்பை வேடிக்கையா காட்டினாங்களே அந்த பாயிண்டுதானுங்கைய்யா… எதுங்கையா நல்ல விஷயம்? எது சாதாரண விஷயம்னு நினைக்கிறீங்க?

  7. தோழர்,சிறப்பான பதிவு,காக்கா முட்டை எடுத்த கூமுட்டை கூவத்துல முங்கி தன் பாவத்தை போக்கட்டும்.

  8. திடீர்நகர் மக்களின் வாழ்க்கையினை முழுவது இல்லாவிடினும் ஓரளவாவது காக்கா முட்டை வெளிக்கொண்டுவந்துள்ளது என்பது உண்மை என்பதை மறுக்கமுடியாது.விடுதலை பெற்று 60 ஆண்டுகள் மேலானபின்னரும் உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சிநாடென்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நமது (?) ஆட்சியாளர்கள் இனிமேலாவது அனைத்து மக்களும் வாழ்க்க்கைத்தரத்தில் உயர்வடைய திட்டங்கள் தீட்டி செயல்படுவர்களா ?

  9. நாட்ல நடக்கிற பிரச்சனையை உங்களோட ப்ளாக் மட்டும்தான் சொல்லனுமா? அப்படிப் பார்த்தா நீங்களே இதப் பற்றி ஒரு போஸ்ட் போட்டு உங்களோட கம்யுனிஸ்ட் புத்தகங்களை விற்பனை செய்கிறீர்களே? யாருமே எதை பற்றியும் பேசக்குடாது. வினவு மட்டும்தான் பேசணுமா என்ன? இப்படி நேர்மையா குப்பத்து மக்களை சொன்ன ஒரு படத்தை, உங்களுடை அதி மேதாவித்தனதால் எதிர்ப்பதை உங்களுடைய தோழர்களே விரும்ப மாட்டார்கள்.

    • வேலன்,யார் வேண்டுமனாலும் பேசலாம் ஆனா சாியா பேசனும்.வினவு சாியாதான பேசுது.

  10. உங்களை நான் ஒரு சீரியசான ஆள் என்று நினைத்தேன். அனால் ஒரு சினிமாவை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் ஒரு குப்பத்துக்குள் நுழைந்து அலப்பறை செய்து எங்களை சிரிக்க வைத்துவிட்டீர்கள். எல்லாரும் சிரிப்பதற்குள் இந்த கட்டுரையை நீக்கிவிடுங்கள். ப்ளீஸ்.

    • Mr.Velen,

      You are sooooooooooooo funny. May be you are not living in this world. May be you are living in the Utopian world. Mr. genius, Could you please explain how to approach a movie rather than making fun of others article. Will you ?

  11. […] ‘வினவு’ தளத்தில் இத்திரைப்படம் உருவான பகுதியில் எடுக்கப்பட்ட மக்களின் நேர்காணலும் ஒரு கலை எவ்வாறு ஏற்கனவே உருவாகியுள்ள நம்பிக்கையை வலுவாக்கி அதன் மூலம் விருதுபெற முயல்கிறது என்பதையும் மிக விரிவாகவே காட்டியது. (https://www.vinavu.com/2015/06/26/kakka-muttai-a-reality-check/) […]

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க