Monday, May 12, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்பா.ஜ.கவின் ராய்ப்பூரில் ஏழைகளுக்கு இடமில்லை !

பா.ஜ.கவின் ராய்ப்பூரில் ஏழைகளுக்கு இடமில்லை !

-

90 சதவீத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்மல்கர் குடும்பத்திடமிருந்து ஒரு கடிதம்

ரூ 5,000-க்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பம் எப்படி வாழ்கிறது. என்று ஆஷூதோஷ் பரத்வாஜ் கண்டறிகிறார். சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சத்தீஸ்கரில் கிட்டத்தட்ட அனைத்து கிராமப்புற குடும்பங்களும் அவ்வளவுதான் சம்பாதிக்கின்றன.

மூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப் புற இந்தியாவின் 4-ல் 3 குடும்பங்களின் முக்கிய பணமீட்டும் உறுப்பினரின் மாத வருமானம் ரூ 5,000-க்கு குறைவானது. சத்தீஸ்கரில் 90 சதவீத குடும்பங்களில் இதுதான் நிலைமை.

ராஷ்மி - தான்யா
மகள் தான்யாவுடன் ராஷ்மி. காது கேட்காத, வாய் பேசாத அந்தக் குழந்தைக்கு செயற்கை காது சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அது தங்களுக்கு எப்போதும் கட்டுப்படியாகப் போவதில்லை என்று அவளது அப்பா, அம்மாவுக்கு தெரியும். (படம் நன்றி : ஆஷூதோஷ் பரத்வாஜ், எக்ஸ்பிரஸ் போட்டோ)

ஈஷ்வர் நிர்மல்கரின் 5 பேர் கொண்ட குடும்பம் இந்த வரையறைக்குள் வருகிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, மாதம் ரூ 5,000 சம்பாதிப்பது கூட இழுபறியாகத்தான் இருக்கிறது. அவர்கள் வாழும் போரியா கலன்  கிராமம் சத்தீஸ்கர் அரசு உருவாக்கி வரும் புதிய தலைநகரான நயா ராய்பூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகன், மகள் திருமணத்துக்கு ஒரு பெருந்தனக்காரரிடமிருந்து ரூ 60,000 கடன் வாங்கியது அந்தக் குடும்பம். அவரிடம்தான் நிர்மல்கர் மாடு மேய்த்து வந்தார்.

ஐந்து, ஆறு ஆண்டுகள் முறையாக தவணை கட்டியபிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு   “இது வரை கட்டியது வட்டி மட்டும்தான், அசல் இன்னும் அப்படியே இருக்கிறது” என்று கடன் கொடுத்தவர் சொல்லியிருக்கிறார். நிர்மல்கரின் மனைவி பிர்ஜா பாய் தனது தம்பியிடமிருந்து ரூ 20,000 கடன் வாங்கினார், குடும்பத்தின் மருமகள் ராஷ்மி தனது தாய் வீட்டிலிருந்து ரூ 10,000 வாங்கி வந்தார். அந்தத் தொகைகளை கடன் அடைக்க கொடுத்த பிறகும், இப்போது ரூ 20,000 பாக்கியிருக்கிறது.

“கடன் கொடுத்த பெருந்தனக்காரருக்கு இதுவரை மொத்தம் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம் என்ற கணக்குக் கூட மறந்து போச்சு” என்கிறார் பிர்ஜா பாய்.

நிர்மல்கர் குடும்பத்துக்கு என்று சொந்தமாக நிலம் இல்லை. அவர்கள் வாங்கியது இந்தக் கடன் மட்டும் இல்லை; ஒரு கடனுக்கான வட்டியை கட்ட இன்னொரு கடன் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் நவுகர் லால் நிர்மல்கர் ஒரு கூட்டுறவு வங்கியிடமிருந்து ரூ 10,000 கடன் வாங்கி ஒரு பான் கடை திறந்தார். மாதா மாதம் ரூ 300 தவணை கட்டிய பிறகும் அந்தக் கடனில் இன்னும் ரூ 1,000 மீதியிருக்கிறது.

ஒரு பசு வாங்குவதற்கான கடனால் ஒரு குடும்பமே அழிந்தது பற்றி எழுத்தாளர் பிரேம் சந்த் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தனது “கோதான்” என்ற கதையில் எழுதியிருந்தார். அதேதான் தங்களது குடும்பத்தின் கதையும் என்றால் பிர்ஜா பாய் ஒத்துக் கொள்வார். காய்கறிகாரருக்கு ரூ 300, மளிகைக் கடைக்கு ரூ 500, கிராமத்து டாக்டருக்கு ரூ 900 என அனைத்துக் கடன்களையும் பட்டியலிடும் 55 வயதான பிர்ஜா பாய், “எல்லாக் கடனும் நான் செத்தால்தான் தீரும்” என்று பெருமூச்சு விடுகிறார்.

37 வயதான நவுகர் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவர் தனது கும்டி (பான் கடை) யில் மாதம் ரூ 4,000 வரை சம்பாதிக்கிறார். இதுதான் அக்குடும்பத்தின் முதன்மையான வருமானம். இதற்கு மேல் 57 வயதான பிர்ஜாவும், 65 வயதான நிர்மல்கரும் அறுவடை காலத்தில் விவசாய வேலைக்குப் போவார்கள். அப்படி வேலை கிடைத்தால் கூடுதல் வருமானம் வரும்.

அவர்கள் வீட்டில் கழிவறை இல்லை; அந்த குடும்பத்துக்கு வறுமைக்கோட்டுக்கு கீழானவர்களுக்கான குடும்ப அட்டை இல்லாததால் அரசு நலத்திட்டங்களும் கிடைப்பதில்லை. பெரும்பான்மை மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறினாலும், “பல தடவை போய் பார்த்துட்டோம். வறுமைக் கோட்டு அட்டை கிடைக்க மாட்டேங்குது. அந்த அட்டை இருந்தாலாவது, அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏதாவது உதவி கிடைத்திருக்கும்” என்கிறார் நவுகர்.

மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால், மண்ணும், சாணமும் சேர்த்து கட்டப்பட்ட அவர்களது வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்திலேயே இருக்க வேண்டும். போன ஆண்டுதான் ஒரு பக்கச்சுவர் இடிந்தது என்கிறார் ராஷ்மி.

நவுகரின் மூத்த மகள் 6 வயது தான்யாவுக்கு காது கேட்டல், பேச்சு குறைபாடு உள்ளது.  தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்திருக்கும் தான்யா, இருண்ட வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறாள். சுவரில் ராணி லட்சுமி பாயின் ஒரு பழைய போஸ்டர் தொங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நவுகர் அதை வாங்கியிருந்தார். “அப்போதெல்லாம், என் மூத்த மகள் பற்றி பெரிய கனவுகள் வைத்திருந்தேன். ஆனால்….”

அவளுக்கு செயற்கைக் காது அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். “இந்த அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்” என்று ராய்ப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவுகரிடம் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்தை தன்னால் ஒருபோதும் ஏற்பாடு செய்ய முடியாது என்று அவருக்கு தெரிகிறது.

3 வயதான அவரது இளைய மகள் பிரக்யா, அங்கன்வாடிக்கு போகிறாள். பிர்ஜா ஒரு பேரன் பிறப்பான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், ராஷ்மி கருத்தடை சிகிச்சை செய்து கொண்டு விட்டார் என்பதை நவுகர் இன்னும் தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு மேல் வளர்ப்பது தனக்கு கட்டுப்படியாகாது என்கிறார் நவுகர்.

நேரம் மாலை 7 மணியை தாண்டி விட்டிருக்கிறது. நிர்மல்கர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்  ஏதாவது கட்டிட வேலை கிடைக்குமா என்று தேட காலையிலேயே ராய்பூர் போயிருந்தார். அவர் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் இன்று இரவு ஏதாவது காய் சமைக்க முடியும் என்று நவுகர் கிண்டல் செய்கிறார். ஆனால், மற்ற நாட்களிலிருந்து இன்று எதுவும் மாறி விடப் போவதில்லை என்று பிர்ஜாவுக்கு தெரிகிறது. அவர்கள் வேலை தேடி நாள் தவறாமல் ராய்ப்பூருக்கு போகத்தான் செய்கிறார்கள். ஆனால், சத்தீஸ்கரில் அவர்களைப் போன்ற உடல் உழைப்பு தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவு இருப்பதால் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

நவுகர் முன்பு ஒரு முறை ராய்ப்பூரில் வேலை செய்ய முயற்சித்திருக்கிறார். நிர்மல்கர்கள் பாரம்பரியமாக துணி வெளுக்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். நவுகர் ராய்ப்பூரில் துணி தேய்க்கும் வண்டி ஏற்பாடு செய்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆனால், அந்த பகுதியில் இருந்த பிற துணி வெளுக்கும் தொழிலாளர்கள் சில நாட்களுக்குள்ளாகவே அவரை துரத்தி விட்டனர்.

அதனால், நகரத்தை விட கிராமத்தையும், அக்கம் பக்கத்தவரின் ஆதரவையும் நிர்மல்கர் குடும்பம் விரும்புகிறது. சென்ற ஆண்டு ஒரு விபத்துக்குப் பிறகு நவுகர் படுக்கையில் இருந்த கால கட்டத்தை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது அவர்களுக்கு. அவர்களை போலவே ஏழ்மையில் உள்ள சக கிராமத்தினர்தான் தங்களால் இயன்ற எல்லா உதவியையும் செய்தார்கள் என்கிறார் ராஷ்மி.

“எங்களைப் போன்றவர்களுக்கு ராய்ப்பூரில் இடம் இல்லை” என்று உறுதியாக சொல்கிறார் அவர்.

8 மணி வாக்கில் நிர்மல்கர் வந்து சேர்கிறார். 60 வயதான அந்த முதியவர் மெதுவாக நடந்து வருகிறார். அவரது தயக்கமான காலடிகள் பிர்ஜாவின் அச்சத்தை உறுதி செய்கின்றன. கடந்த சில மாதங்களின் பல நாட்களைப் போலவே இன்றும் ராய்ப்பூரில் வேலை தேடிப் போன அவரது நாள் வீணாகவே போனது.

பிர்ஜாவின் நெற்றிச் சுருக்கங்கள் ஆழமாகின்றன. அடுத்த மாதம் அந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய பண்டிகை ஹரியாலி தீஜ் வருகிறது. திருமணமான பெண்கள் தமது தாய்வீட்டுக்கு வருவார்கள், அவர்களுக்கு பரிசுகள் தரப்பட வேண்டும். பிர்ஜாவுக்கு 4 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு பரிசு கொடுக்க பிர்ஜாவுக்கு அவரது தாய் வீட்டிலிருந்தும், ராஷ்மிக்கும் வரும் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். “இப்படித்தான் வண்டி ஓடுது” என்று புன்னகைக்கிறார் ராஷ்மி.

பதில் உதவியாக, இன்னமும் பாரம்பரிய துணி வெளுக்கும் தொழில் செய்யும் ஒரு சில குடும்பங்களில் ஒன்றான நவுகரின் அக்கா கல்யாணி, தமக்குக் கிடைக்கும் எஞ்சிய துணிகளில் சிலதை தனது தம்பி குடும்பத்துக்கு கொடுத்து உதவுகிறார்.

எதைப் பேசினாலும், பேச்சு பெருந்தனக்காரருக்குக் கொடுக்க வேண்டிய  ரூ 20,000-க்கு திரும்புகிறது. அவர் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்று விட்டார். ஆனாலும் அவரது செல்வாக்கு குறித்து நிர்மல்கர் குடும்பத்துக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது “பரம்பரை வீட்டை” விற்பதுதான் கடனை அடைக்க ஒரே வழி என்று தெரிகிறது. மூன்று ஓலைக் குடிசைகளும் ஒரு முற்றமும் கொண்ட அந்த வீட்டுக்கு ரூ 50,000 விலை கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முந்தைய 2 திருமணங்களுக்கான கடனை அடைத்த பிறகு வாழ்வதற்கு ஒரு குடிசை போட பணம் எஞ்சியிருக்கும்.

மாதம் ரூ 5,000 சம்பாதிப்பதற்கான அவர்களது போராட்டம் அதன்பின்னும் தொடரும்.

–    தமிழாக்கம்: அப்துல்

ஆங்கிலத்தில் : Letter from the Nirmalkars: The 90 per cent – Ashutosh Bhardwaj (நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க