Tuesday, May 13, 2025
முகப்புசெய்திபாரிவேந்தர் இளையவேந்தர் கொடுமைகள் - குறுஞ்செய்திகள்

பாரிவேந்தர் இளையவேந்தர் கொடுமைகள் – குறுஞ்செய்திகள்

-

kamarajarகாமராஜர் காலம் பொற்காலமா?

யாரும் பார்க்க முடியாத பொற்காலங்களில் ஒன்று காமராஜர் காலம். பள்ளிக்கூடம் மிதிக்காதவர், குடும்பம் குட்டி இல்லாதவர், ஏழைத் தாயை பணக்காரத் தாயாக உயர்த்தாதவர், லஞ்ச லாவண்யங்களை நினைத்துக் கூட பார்க்காதவர், காங்கிரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்த அனுபவசாலி, தமிழகத்திற்கு பெரும் தொ

ழிற்சாலைகளை கொண்டு வந்தவர், மதிய உணவுத் திட்டம் மூலம் ஏழைக் குழந்தைகளை பள்ளியேறச் செய்தவர்…என்று நீள்கிறது சாதனைகளின் பட்டியல்.

பெரும் பண்ணையார்கள், தரகு முதலாளிகளால் தனது தோற்றத்திலிருந்து இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது காங்கிரசுக் கட்சி. இது உண்மையானால் அந்தக் கட்சியின் தலைவர் ஒருவர் பாமரருக்கு எப்படி உதவியிருக்க முடியும்? 60களில் இந்தியா முழுவதும் காங்கிரசு கட்சியின் மேல் இருந்த வெறுப்புதான் பல்வேறு மாநிலக்கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சிகளை தேர்தலில் வெற்றி பெறச் செய்தது.

காமராஜர், காந்தி போன்றோரின் எளிமை அக்கட்சியின் பணக்கார அடிப்படையை மறைக்கச் செய்யும் ஒரு தந்திரம். காமராஜர் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள்தான் இன்று தமிழக சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள். காமராஜரின் பிறந்த தினத்தை காசு செலவழித்து கொண்டாடுபவர்களும் இவர்களே! காமராஜர் காலத்தில் வந்த பொதுத்துறை தொழிற்சாலைகள் உண்மையில் தரகு முதலாளிகளின் வரம்பு, தேவை காரணமாக உருவானவை மட்டுமே.

காமராஜர் காலத்தில் சாதிக் கலவரம் இல்லை, ஏன்? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அடிமைத்தனத்தை எதிர்த்து கேள்வி கேட்டு சண்டை போடும் சுய பொருளாதார அடிப்படையில் இல்லை என்பதே.

வேறு வார்த்தைகளில் சொன்னால் காமராஜர் காலத்தில் செல்பேசி உண்டா, ஃபேஸ்புக் உண்டா, பீட்சா, பர்கர் உண்டா, மல்டி பிளக்ஸ் உண்டா, சூப்பர் பாஸ்ட் ரயில் உண்டா என்று கேட்டால் சிரிப்பார்கள். அதேதான், காமராஜர் காலம் பொற்காலம் என்பதும்.

_____________________________

பாரி வேந்தர், இளைய வேந்தர் கொடுமைகள்

iv 600 pixதாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து எனும்
எஸ்.ஆர்.எம் பச்சமுத்து பெற்றெடுத்த
பார்க்கவ குலம் அருளிய
ரவி பச்சமுத்துவின் பிறந்த தினம் இன்று!

“பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில்
இளையவேந்தரின் பிறந்தநாள் வாழ்த்து!”
– தினமலரின் முதல் பக்கத்தில் முழு பக்கமாக…
செயல் தலைவர் ரவி பச்சமுத்துவுக்கு
துணைப் பொதுச்செயலாளர் எஸ்.மதன் அளித்த
விளம்பரம் அது.

பச்சமுத்து ஆரம்பித்த கம்பெனிகள்
முதன்மையாக மூன்று!
எஸ்.ஆர்.எம் பல்கலை கல்வி என்றால்,
இந்திய ஜனநாயகக் கட்சி அரசியல் என்றால்,
புதிய தலைமுறை ஊடகக் கழகம் மீடியா ஆகும்.

மூன்றிலும் தந்தையின் கறை படிந்த கரங்களைப் பற்றி
காசு துட்டு பணத்தினை குவிக்கும்
இளைய வேந்தர் ரவி பச்சமுத்துவின் பிறந்த தினமிது!

பா.ஜ.கவின் தமிழக ஸ்பான்சராக
தலையெடுத்திருக்கும் பாரி, இளைய வேந்தர்களுக்கு
அரசியல் என்பது தொழிலை பாதுகாக்கும் ஒரு அடையாளம்!

என் பிறந்த நாளில் தமிழ் பெருமைப்படும்
என்று வைர முத்து சொன்னது போல,
இவர் பிறந்த நாளில்
பெருமையே பெருமைப்படும் என்று கூட அளப்பார்கள்!

இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவருக்கு
கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மதன்
அருளிய விளம்பரத்தின் மதிப்பு எவ்வளவு?

வேந்தர் மூவிஸுக்கும் பாரிவேந்தருக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்ட மதன் அவர்கள் இன்று இந்த வாழ்த்து மூலம் ஆதாரங்கள் கேட்பது அபத்தமென்பதை நிரூபித்திருக்கிறார்.

_______________________________

பாசிஸ்டுகளுக்கு ஜனநாயகம் கசக்கும்!

bal thakaray 400 pixகேள்வி: சிவசேனா ஒருபோதும் உட்கட்சி தேர்தல்களை நடத்தியதில்லை. எல்லா கட்சிகளும் அத்தகைய தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறதே, என்ன நினைக்கிறீர்கள்?

பால் தாக்கரே: கட்சிகள் அப்படி செய்ய வேண்டும் என்று யாராவது வற்புறுத்துவதை நான் எதிர்க்கிறேன். இது தேர்தல் ஆணையரின் வேலை இல்லை. எங்களுக்கென்று சொந்த வழி உண்டு. ஜனநாயகம், ஜனநாயக வழிமுறை எல்லாம் எங்களுக்கு உதவப் போவதில்லை. அவை கட்சியில் கோஷ்டிகளை கொண்டு வரும் என்பதால் நான் அதை தவிர்க்கிறேன். என்னுடைய அணுகுமுறை வெளிப்படையானது. என்னை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை நான் பாதுகாப்பேன். ஆனால் நீங்கள் என்னை விலக்கினால் நான் பாட்டுக்கு போய்விடுவேன். மாறாக நரசிம்மராவ் மாதிரி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டேன்.

(செப்டம்பர் 25, 1996-ம் ஆண்டில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே, அவுட்லுக் ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து..)

__________________
பிள்ளைக் கறி தின்னும் தமிழக அரசுக்கு தேசிய விருது!

new born 1 400 pixசெய்தி: குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்தல் தொடர்பாக சிம்லாவில் நடந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மாநாட்டில், குழந்தைகளின் இறப்பைக் குறைத்த தமிழகத்திற்கு முதல் பரிசு தரப்பட்டது!

தருமபுரி அரசு மருத்துவமனையில் இறந்து போன குழந்தைகளுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறோம்!

_________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்