Saturday, May 10, 2025
முகப்புசெய்திஅஜித்துக்கு உதவிய அப்புக்குட்டியின் பெருந்தன்மை

அஜித்துக்கு உதவிய அப்புக்குட்டியின் பெருந்தன்மை

-

அஜித்துக்கு தேவைப்படும் அப்புக்குட்டி – பின்னணி என்ன?

அஜித்துக்கு உதவிய அப்புக்குட்டி
அஜித்துக்கு உதவிய அப்புக்குட்டி

வீரம்” படத்தில் நடித்த அப்புக்குட்டியை பார்த்து “எப்போதும் ஒரே தோற்றத்தில் நடிக்கிறீர்களே” என்று கேட்ட அஜித் அதை மாற்றிக் காட்டுவதாக கூறியிருக்கிறார். ஒரு நாள் அப்புக்குட்டியை வரவழைத்து விதவிதமான உடைகள் ஏற்பாடு செய்து, பல்வேறு தொழில் நுட்பக் கலைஞர்கள் உதவியோடு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதில் சே குவேரா, தெண்டுல்கர் என வித விதமான கெட்டப்புகளில் அப்புக்குட்டியை மாற்றிக் காட்டுகிறார்.

ரேஸ் பைக், ரேஸ் கார், ரிமோட் விமான விளையாட்டு, விமானம் ஓட்டுதல் போன்ற ‘ஏழைகளின்’ விளையாட்டுகளை விரும்பி விளையாடும் நடிகர் தல, தான் கற்றுக் கொண்ட புகைப்படக் கலையை அரங்கேற்றம் செய்வதற்கு நடிகர் அப்புக்குட்டி தேவைப்பட்டிருக்கிறார். இதற்கென சில பல ஆயிரங்களையும் அவர் செலவழித்திருக்கிறார்.

முன்னணியில் இருக்கும் இந்த சினிமா செய்தி அஜித்தின் மனிதாபிமானத்தை ஆர்ப்பாட்டமாக பேசுகிறது. பேசட்டும். நமது கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

தொப்பையும், தாடியுமாக “அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக் குழு” போன்ற படங்களில் ஒரே தோற்றத்தில் நடித்துக் கொண்டிருந்த அப்புக்குட்டிக்கு நியூமராலஜி படி அவரது இயற்பெயரான சிவபாலனை திரும்பவும் பெயர் சூட்டிய அஜித், கிராமத்து தோற்றத்திலிருந்து விடுபட்டு நகரம், வில்லன், ஹீரோ என்று அனைத்து கெட்டப்புகளிலும் அப்புக்குட்டி சோபிப்பார் என்று நிரூபிக்கவே இந்த படங்களை எடுத்தாராம்.

முதலில் இந்த புகைப்பட முயற்சியால் கிடைத்த விளம்பரம் அஜித்துக்கு மட்டுமே. இதைப் பார்த்து அப்புக்குட்டியை எந்த தயாரிப்பாளரோ இல்லை இயக்குநரோ ஹீரோவாக போடப்போவதில்லை. சொல்லப் போனால் அவர் தற்போது நடித்து வரும் கிராமப்புற வேடங்கள் கூட இனி கிடைக்குமா என்பது சந்தேகம். தல விரும்பாத கெட்டப்பில் அப்புக்குட்டியை காட்டக்கூடாது என சிவபாலனது திரையுலக வாழ்வு முடிந்தாலும் ஆச்சரியமில்லை.

அடுத்து சினிமாவில் தோற்றம், அழகு, வயது போன்றவைகளை உருவாக்கியே நட்சத்திரங்களை உலவ விடுகிறார்கள். அவ்வளவு ஏன்? அஜித் நடித்த ஹீரோ வேடங்களில் அப்புக்குட்டியை நடிக்க விடுவார்களா என்ன? அடுத்து ஒருவரின் தோற்றத்தை வைத்தே சினிமா மட்டுமல்ல, அரசியல், ஊடகம் அனைத்திலும் முன்னணி இடங்கள் வழங்கப்படுகின்றது. கருப்பு கௌரவக் குறைச்சலாக பின்பற்றப்படும் நாட்டில் உயரம் குறைவாகவும், தொந்தி அதிகமாகவும் உள்ள அப்புக்குட்டிகளுக்கு வேறு என்ன வேடங்கள் கிடைத்து விடும்?

மேலும் இந்த “அழகு” மாந்தர்களின் கவர்ச்சிக்கு அடிமையாகியிருக்கும் ரசிகர்களும் எப்போதும் அப்புக்குட்டியை ஹீரோவாக ஏற்கப் போவதில்லை. இனி தனது படங்களின் நாயகிகளான த்ரிஷாவையும், நயன்தராவையும் விட்டு விட்டு, கோலி சோடா படத்தில் நடித்த கண்ணாடி போட்ட மாணவி நடிகை சீதாவை ஹீரோயினாக அஜித் ஏற்பாரா? அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று அஜித்தின் மனிதாபிமானத்தைப் பார்த்து பொங்குபவர்கள்தான் அதை ஒத்துக் கொள்வார்களா?

அப்புக்குட்டி அவர்பாட்டுக்கு அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அவரை ஹீரோவாக்குகிறோம் என்று மேன்மக்கள் கண்ணீர் விடுவதுதான் சகிக்க வில்லை. ஏழைகளுக்கு உதவுவதாக நீங்கள் பொங்க வேண்டுமென்றால் வழக்கமான இஸ்திரி பெட்டி, மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

________________________

பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’ – மீள் பதிவு!

mutton_biryani 700 pix

கோடி கோடியாக சுருட்டும் எந்த ஹீரோவாவது தங்களது கெட்டுப் போகும் உடலை, திரையில் பிரிஜ்ஜில் வைத்த ஃபிரஷ்ஷான தக்காளி போல காட்டுவதற்கு, தங்களது உடலை வதைக்கும் லைட்மேனுக்கோ, சண்டை நடிகர்களுக்கோ, துணை நடிகர்களுக்கோ, முகப்பூச்சு கலைஞர்களுக்கோ குரல் கொடுத்தார்களா?

தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா?

சினிமாத் தொழிலாளர்களின் துயரத்தை நேரில் அறிந்த அண்ணன் உண்மைத்தமிழன் கூட, புவனேஸ்வரியின் ஒரு கோடி ரூபாய் வராக் கடன் குறித்து கவலைப்படுபவர், தொழிலாளிகளுக்காக ஒரு நீண்ட பதிவு வேண்டாம், ஒரு குறும்பதிவு கூட போடவில்லையே?

அடுத்த நாள் மலமாக சிதறப்போகும் ஒரு மட்டன் பிரியாணிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? கூச்சமாக இல்லை? ஷூட்டிங்கில் தல போட்ட பிரியாணியை முழுங்கி விட்டு வீட்டில் தனது குடும்பத்தினர் கஞ்சி குடிப்பதற்கு பேட்டா வந்தால்தான் முடியும் என்ற நிலையில் எந்த தொழிலாளி அந்த மணமணக்கும் பிரியாணியை மகிழ்ச்சியுடன் முழுங்க முடியும்?

மேலும் படிக்க: பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’

_____________________________________________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்