Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆப் கி பாரும்.... காணமல் போன ஊரும்....

ஆப் கி பாரும்…. காணமல் போன ஊரும்….

-

MP villageசிட்டிசன் படத்தில் காணாமல் போன கிராமம் நினைவிருக்கிறதா?

ஆம். உண்மையிலேயே மத்தியப் பிரதேச மாநிலத்தின் பத்திரப் பதிவுத்துறை பதிவேடுகளிலிருந்தும் வரைபடத்திலிருந்தும், இந்தூர் மாவட்டம், ஹாட்டோட் வட்டம் பாலியா ஹெய்டர் என்ற 400 வீடுகளைக் கொண்ட கிராமமே காணாமல் போய்விட்டிருக்கிறது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ராம்லால் சர்மா தன் நிலத்தை விற்பதற்ககாக 2014-15-ம் வருவாய் ஆண்டுக்கான அரசின் நில வழிகாட்டி மதிப்பிடலை தேடும் போதுதான் சர்வே எண் 677/1 677/5. 677/9, 678/1 இவற்றின் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இருந்தே திருட்டுத்தனமாக நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும், அந்த வட்டம் முழுமைக்குமான எல்லா ஊர்களின் நில சர்வே எண்கள், வரை படங்கள் என மொத்த தகவல்களின் தொகுப்பும் இருக்கும். பதிவுத்துறை வழியாகத்தான் எல்லா வாங்கல், விற்றல் நடவடிக்கைகளும் செய்ய முடியும். நிலஅளவைகளில் என்ன பிரச்சனை என்றாலும், நிலத்தின் எல்லைகளில் பிரச்சனை என்றாலும் ஆவணங்களை அங்குதான் சரிபார்க்க முடியும்.

இந்தூர் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலியா ஹெய்டாவின் அப்படிப்பட்ட பதிவேடுதான் இந்தூர் பதிவாளர் அலுவலகத்தில் மாயமாகியிருக்கிறது.

கிராமமே பதிவேடுகளில் இல்லை எனில் அந்த கிராமத்தின் நில விற்றல் வாங்கல் விவகாரங்களை பதிவாளர் அலுவலகத்துக்கு கொண்டுவர வேண்டாம், பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டாம், வரி செலுத்த வேண்டாம், அரசாங்கத்துக்கு சல்லிக்காசு தரவேண்டாம் மக்களை மிரட்டியோ பேரம் பேசியோ ஏதோ ஒரு தொகைக்கு நிலத்தை வாங்கிக கொள்ளலாம். கிராம மக்கள் உடன் பட மறுத்து வழக்கு போட போனால், “அப்படி ஒரு கிராமமே இல்லை யுவர் ஆனர்” என அவர்களுக்கு எதிராக ரியல் எஸ்டேட் கம்பெனி வக்கீல் வாதாடுவார். அப்படி ஒரு கிராமம் இருந்தது என நிரூபிக்கும் பொறுப்பை அவர்கள் மக்கள் தலையிலேயே சுமத்தகூடும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை “சில” கட்டுமான நிறுவனங்களின் நலனுக்காக இந்த கிராமம் பதிவேடுகளில் இருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது என எழுதி இருக்கின்றது. எந்த “சில” கட்டுமான நிறுவங்கள் எவை என அது எக்காலத்திலும் சொல்லப் போவதில்லை.

ராம்லால் சர்மா கூறும் போது,

MP village“நான் பதிவாளர் அலுவலகத்துக்கு போன போது பல தலைமுறைகளாக நாங்கள் வசித்துவரும் எங்கள் கிராமம் காணமல் போன செய்தி தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்கிறார்.

அதன் பின்னரே ராஜேந்திர கே.குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமைசட்டம் மூலமாக இந்த முறை கேடுகளை வெளிக்கொணர்ந்துள்ளார். “இந்த கிராமம் காணாமல் போன பிறகு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மனைகளையும், வீடுகளையும் முறையான பதிவு இல்லாத முத்திரை தாள்களைப் பயன்படுத்தி விற்றிருக்கின்றனர்” என்கிறார் ராஜேந்திர குப்தா.

மாவட்ட நிர்வாகம் காணாமல் போன கிராமம் பற்றி “விசாரித்து” வருகிறதாம். இனி ரியல் எஸ்டேட் கட்டைப் பஞ்சாயத்துகளை சட்டப்படியே நடத்துவதற்கு இந்த காணாமல் போக வைக்கும் உத்தி பெரிதும் பயன்படும். இந்தியாவின் நிலவுடமை சமூகத்தில் சொத்துடமை, பாகப்பிரிவினை, பங்காளிச் சண்டை தோற்றுவிக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதைப் பயன்படுத்தியே இங்கிருக்கும் பெரும் வழக்கறிஞர், நீதிபதிகளை உள்ளடக்கிய நீதித்துறை உண்டு வாழ்கிறது.

இதற்கெனவே இங்கு பத்திரத்துறை நவீனமயமாக்கப்படாமல் எல்லா ஊழல்களுக்கும் இடம் கொடுக்கும் படியாக பராமரிக்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்களில் பிரச்சினைக்குள்ளான துறைகளின் கோப்புகள் காணாமல் போவது, எரிந்து போவது சகஜம்.

தற்போது ஊரையே பதிவிலிருந்து அழித்து விடுபவர்கள், கூடவே மக்களையும் சேர்த்து அழிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

மேலும் படிக்க: