Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !

தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !

-

ராண்டுக்குள் இரண்டாவது முறையாக மீண்டும் ஒருமுறை ஆளும் ஜெயா – சசி கும்பலுடைய அடிமை விசுவாசிகளின் அமளி-துமளி, அட்டகாசம்-அராஜகக் கூத்துகளை எவ்வித எதிர்ப்புமின்றி தமிழ்நாடு கண்டிருக்கிறது. இடையிடையே அக்கும்பலின் விடுதலைக்காக அதே அடிமை விசுவாசிகளின் அனைத்து மதப் பிரார்த்தனைகள், யாகங்கள் – பூசைகள், பால்குடம் – தீச்சட்டிகள், பரிகாரங்கள், தாடி – மொட்டை – தற்கொலைகள், இரண்டு இடைத்தேர்தல்கள் ஆகிய கோமாளிக் கூத்துகளையும் தமிழ்நாடு கண்டிருக்கிறது. இவையெல்லாம் தமிழக மக்களையும் பொதுச்சொத்தையும் அந்தக் கட்சிக்காரன்கள் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு சாராயத்தையும், கறி பிரியாணியையும், சில்லறைக் காசையும் வாரியிறைத்துச் செய்தவை.

ஜெயா வழிபாடு
அடிமை விசுவாசிகளின் மதப் பிரார்த்தனைகள், யாகங்கள் – பூசைகள், பால்குடம் – தீச்சட்டிகள் (கோப்புப் படம்)

இந்தப் பட்டியலில் கடைசியாக இடம் பெற்ற, தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் ஆடிய அருவருக்கத்தக்க கோமாளிக் கூத்து, அவர்களின் தலைமையே திட்டமிட்டு உத்திரவு போட்டு அரங்கேற்றியதாகும். இது, எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டுவதைப் போல அரசு டாஸ்மாக் சாராயக் கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் கொந்தளித்து, எழுச்சியுற்று நடத்திவரும் போராட்டங்களால் தனிமைப்பட்டிருக்கும் ஜெயா-சசி கும்பல் அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் செய்யப்படும் சதிதான் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக் கோரும் போராட்டங்கள் தமிழகமெங்கும் உச்ச கட்டத்தில் இருந்தபோது வெடித்தன அ.தி.மு.க. காலிகளின் இளங்கோவன் எதிர்ப்பு அராஜகங்கள். சட்டமன்றம் கூடுவதற்கு முதல்நாள் அவற்றை நிறுத்திக் கொள்ளும்படி ஜெயா-சசி கும்பல் உத்தரவு போட்டது.

கடந்த ஆகஸ்டு இரண்டாம் வாரம் நடந்த மோடி-ஜெயா சந்திப்பு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கீழ்த்தரமாகப் பேசிவிட்டார் என்பதைக் காரணங்காட்டி, ஒருவாரம் கழித்து, ஆளுங்கட்சிப் பொறுக்கிக் கூட்டம் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர், முன்னாள் அரசு ஊழியர் தேர்வாணையர், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எல்லாவற்றையும் விட ஜெயா-சசி கும்பலுடைய சொத்துக் குவிப்பு வழக்கறிஞர் நவநீதகிருட்டிணன் தலைமையில் திரண்டு இளங்கோவன் அலுவலகத்தையும் வீட்டையும் தாக்க முனைந்துள்ளது. ஜெயா-சசி கும்பலிடம் தனக்குரிய விசுவாசத்தைக் காட்டுவதற்காக ஆளுங்கட்சிப் பொறுக்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டில் நினைத்த இடங்களிலெல்லாம், நினைத்த நேரங்களில் போராட்டங்கள் என்ற பெயரில் தமது காலித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; இளங்கோவன் உருவ பொம்மைகளைக் கொளுத்தினார்கள். அவர் படங்களைச் செருப்பால், துடைப்பத்தால் அடித்தார்கள்; ஆபாச வசவுகளால் அர்ச்சனை செய்தார்கள்.

பல மணி நேரங்கள் சாலைப் போக்குவரத்தை முடக்கினார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலைத் தண்டித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக நாய், பன்றிகளை வைத்து அசிங்கப்படுத்தியதைப்போல மீண்டும் செய்தார்கள். தங்கள் பங்கிற்கு பா.ஜ.க. பரிவாரங்களும் இளங்கோவன் எதிர்ப்பு கலவரங்கள் நடத்தினர். குடிதண்ணீர், சாலைவசதி கேட்டும், டாஸ்மாக் சாராயக்கடைகளையும் மணற் குவாரிகளையும் மூடக்கோரியும் போராடும் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வழக்குப் போட்டு, சிறையிலடைக்கும் போலீசும் எல்லா மட்ட நீதிமன்றங்களும் ஆளும் கட்சி காலிகளின் அராஜகங்களை வேடிக்கை பார்க்கின்றன.

இத்தனையும் எதற்காக நடத்தப்பட்டன? மோடி-ஜெயா சந்திப்பு, உறவு குறித்து தனிப்பட்ட முறையில் அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் இளங்கோவன் பேசினார். ஓட்டுக்கட்சி அரசியலில் இதெல்லாம் ‘சகஜமப்பா’ என்றாகி விட்டது. ‘காமராஜர்-ராஜாஜி காலத்தில் அரசியல் நாகரிகமாக இருந்தது. திராவிட அரசியல் புகுந்துதான் எல்லாம் பாழாகிவிட்டது’ என்று அதே பல்லவி பாடப்படுகிறது. அது நிலவுடைமை, சாதி ஆதிக்கப் பிற்போக்கு அரசியல் என்று புதைக்கப்பட்டு அரை நூற்றாண்டாகி விட்டது. இப்போது அந்தப் பழங்கதையைப் பேசிப் புதுப்பிக்கும் முயற்சி பலிக்காது என்பது மட்டுமல்ல, அதற்கு மாற்றாக வந்த திராவிட, சுயமரியாதை, சமூகநீதி அரசியலும் அண்ணா-கருணாநிதியின் வெறும் சினிமா கவர்ச்சி அரசியலாகச் சீரழிந்து, இறுதியில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கும்பலின் பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலாகப் பரிணமித்தது. இப்போது அதை சாராயம்-கறி பிரியாணி-ரூபாய் நோட்டு பரிமாறுவதும், ரிக்கார்டு டான்சு, சினிமா நடிக-நடிகைகளின் காமெடி, கவர்ச்சிப் பேசசுகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் என்று மக்களது ஆதரவைத் திரட்டுவதும், இவற்றுக்கு ஏற்பாடு செய்யும் பிரமுகர்களையே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மேயர்களாகவும் அமைச்சர்களாகவும் நியமிப்பதும், போலீசு, அரசு அதிகாரிகள், நீதிபதிகள் இலஞ்ச-ஊழலில் தாராளமாக மிதக்க அனுமதிப்பதும், இவர்களையெல்லாம் வைத்துத் தேர்தல் தில்லுகளில் தன்னை யாரும் வெல்ல முடியாதவாறு பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலை ஜெயலலிதா உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்.

பழைய சினிமாக்களில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆருடன் அரைகுறை ஆடையுடன் தான் போட்ட கவர்ச்சி ஆட்டங்களைக் கூச்சநாச்சமின்றி இன்னமும் ஒளிபரப்பித் தனது ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிவரும் புரட்சித் தலைவியை இளங்கோவனுடைய பேச்சு அவமானப்படுத்தி விட்டதாகக் கூறித் தமிழகமெங்கும் மேற்படிக் கூத்துகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஜெயலலிதா என்னவெல்லாம் பேசி இப்போதைய நிலைக்கு வந்தார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற துணிச்சலில் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயாவின் அரசியல் தலைவர் என்பதற்கு மேல் என்ன உரிமையில், உறவில் அவரது பிண வண்டியில் ஏறித் தலைமாட்டில் உட்கார்ந்து அடாவடி செய்தார்! அவரோடு சேர்த்து உடன்கட்டைப் பேச்சுப் பேசினார்! எம்.ஜி.ஆருக்கு பாலில் விஷம் கொடுத்துக் கொன்றதாக ஜானகி மீது பழிபோட்டார்; எம்.ஜி.ஆரின் முன்னாள் நாயகி சரோஜாதேவியை மோர்க்காரி என்று வசைபாடினார். ‘இராஜீவைக் கொன்ற குற்றவாளி’ கருணாநிதியுடன் தேர்தல் கூட்டுவைத்த சோனியாவைப் பத்தினியா என்று கேட்டு, அவரது இத்தாலி பூர்வீகத்தைக் கேலி செய்தார். சட்டமன்றத்தில் தன்னைத் தி.மு.கழகத்தினர் மானபங்கபடுத்தி விட்டதாகத் தலைவிரி கோலத்துடன் நாடகமாடினார். அந்தப் புனிதவதி, தன் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடச் செய்தார் என்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்துக்குத் தனது மகளிரணியை ஏவிவிட்டு, சுப்பிரமணியசுவாமி முன்பாக ஆடையைத் தூக்கிக் காட்டி, ஆபாசக் கூச்சல் போடச் செய்தார்; சொத்துக் குவிப்பு வழக்குக்கு அனுமதியளித்தார் என்பதற்காக ஆளுநர் சென்னாரெட்டி தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாகப் பகிரங்கமாகப் புளுகினார். இப்படித் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளும் மாதரசியை இளங்கோவன் அவமானகரமாகப் பேசிவிட்டார் என்று கொந்தளித்துப் போகிறார்கள், அவரது கூலிப்படையினர்.

பணம் வாங்குவதற்காகவே தம்மைக் கற்பழித்துவிட்டதாக போலீசு மீது புகார் கூறுகிறார்கள் என்று வெட்கமின்றி, மனச்சாட்சியின்றி தமிழ்ப் பெண்கள் மீது பழிபோட்டவர்தான், இந்த ஜெயலலிதா! இதையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லுங்கள்! எதையாவது செய்து, யாரையாவது அவதூறாகப் பேசி தன் மீது கவனத்தை ஈர்த்து அரசியல் ஆதாயம் அடைவது என்கிற ஜெயாவின் அதே அதிரடிப் பொறுக்கி அரசியல் உத்தியைத்தானே இளங்கோவன் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்! இதற்காக நாமோ தமிழக மக்களோ ஏன் அக்கறைப்பட வேண்டும்!

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க