ஆர்.எஸ்.எஸ் – இந்துமுன்னணி சதியை முறியடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்!
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா – ஊர்வலம் எனும் பெயரில் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களை முன்னிறுத்தி அவர்களின் இந்துமத நம்பிக்கையை (இஸ்லாமிய – கிறிஸ்தவர்களின் மீதான வெறுப்பாக்கி) மதவெறிக்கலவரங்களாக்கி பிழைப்பு நடத்துவதில் கைதேர்ந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் உள்ளிட்ட இந்துமத வானரங்கள், தங்களுக்கு சவாலாக உள்ள பெரியாரின் தமிழ் மண்ணில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டுமென தீவிரமாக வேலை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி சட்டக்கல்லூரி முன்பாக ஆதிக்க சாதியமைப்பைச் சேர்ந்த சில கைக்கூலி மாணவர்களின் உதவியுடன் விநாயகர் சிலையை நிறுவி, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருப்பதாக பிரசுரங்களை விநியோகித்தது. பிரசுரம் பற்றி விசாரித்த போது அதில் குறிப்பிடப்பட்டிருந்த விழா அழைப்பாளர்கள் உட்பட பெரும்பாலான மாணவர்களின் பெயர்கள் அவர்களின் அனுமதியின்றி அச்சிடப்பட்டுள்ளது என்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வழக்கமான சதித்தனம் அம்பலமானது. தங்களுக்கும் இந்நிகழ்ச்சிக்கும் தொடர்பில்லையென கல்லூரி முதல்வரிடமும், காவல் ஆய்வளரிடமும் கடிதம் கொடுத்தனர் அம்மாணவர்கள்.
பு.மா.இ.மு-வின் சட்டக்கல்லூரி கிளை அமைப்பாளர் தோழர் சுந்தர் மூலம் கல்லூரியில் உள்ள ஜனநாயகபூர்வமான அனைத்து மாணவர் அமைப்புகளிடமும் விவாதித்து முடிவெடுக்கலாம் என திட்டமிட்டு SFI-யிடம் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ் சிலை வைப்பதை நாம் தடுக்க முடியாது என “தங்கள் அரசியல்” போலவே நம்பிக்கையிழந்து புலம்பியவர்களிடம் ஜனநாயகபூர்வமான அனைத்து மாணவர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராடினால் தடுத்து நிறுத்த முடியும் என புரிய வைத்தோம். சரி என ஏற்றுக்கொண்டு போனவர்கள் அதன் பின் வீணாக ஆர்.எஸ்.எஸ்-ஐ பகைக்க வேண்டுமா என யோசித்து ஒதுங்கிக்கொண்டார்கள் போலும்!
மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் பேசியதில் அமைப்பு ரீதியாக – தலைமை – இதை எதிர்க்க வேண்டுமென முன்வரவில்லை. எனினும், மற்ற அமைப்புகளிலிருந்து தார்மீக ரீதியில் ஆதரிப்பவர்களிடம் விவாதித்ததில் சிலை வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து, கல்லூரிமுன்பு சிலை வைத்து மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – இந்துமுன்னணியின் முயற்சியை தடுக்கக் கோரி உள்ளூர் காவல் ஆய்வாளர் மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும், விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, கல்லூரி முன்பு பெரியாரின் சிலையை வைத்து ஊர்வலம் நடத்துவோம் என எச்சரிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுப்பதாக கூறி மறுநாளே கல்லூரி முன்பு இரவு பகலாக காவலுக்கு ஆளை நிறுத்தியது போலீசு. செப்டம்பர் 16 அன்று பிள்ளையார் சிலை வைக்க முயற்சி செய்தவர்களை விரட்டிவிட்டது. சிலை வைக்க முயற்சித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், வண்டியை பறிமுதல் செய்யவும் மனுகொடுக்க சென்றபோது, கல்லூரி முன்பு சிலை வைக்க அனுமதி இல்லையென்ற மாவட்ட கண்காணிப்பாளார் மற்றும் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவின் ஆணையை காண்பித்து மாணவர்களை சமாதானம் செய்தது.
இவ்வாறு மாணவர்களின் தொடர்ச்சியான – உறுதியான போராட்டத்தால் சட்டக்கலூரியில் சாதி – மதவெறியைத் தூண்டி மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி, காலூன்ற முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் – இந்துமுன்னணியின் சதி முறியடிக்கப்பட்டது.
மறுபுறம், திருச்சி மாநகரில் 176 இடங்களில் அனுமதியுடன் சிலை வைத்திருந்தனர். மேலும், 22 இடங்களில் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதையொட்டி, 11 இடங்களில் திருட்டுத்தனமாக சிலைகளை வைத்தது இந்து முன்னணி கும்பல். திருட்டு சிலைகளை போலீசார் அகற்றியதை கண்டித்து செப்டம்பர் 18 அன்று ‘சாகும் வரை உண்ணாவித’ போராட்டம் அறிவித்தது இந்துமதவெறி கும்பல். போலீசுடனான ‘பேச்சுவார்த்தை’ நாடகத்தில் 11 சிலைகளையும் எடுத்த இடத்தில் வைக்கவும், அடுத்த வருடம் 22 சிலைகள் புதிதாக வைக்கவும் அனுமதி வாங்கியது.
மத்தியில் மோடி – மாநிலத்தில் ஜெயா என பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவெறியர்கள் கலவரங்களைத் தூண்டி தமிழகத்தில் கால்பதிக்க ‘வரப்பிரசாதமாக’ அமைந்துள்ளது. கட்டாய சமஸ்கிருத திணிப்பு, மாட்டிறைச்சிக்கு தடை, இஸ்லாமிய – கிருஸ்தவர்களின் மீதான மதவெறிக்கலவரங்கள், இந்துமதவெறியர்களால் தொடரும் முற்போக்கு எழுத்தாளர்களின் படுகொலை –கொலை மிரட்டல்கள் என நாட்டையே காவிமயமாக்கி வரும் இந்துமத பார்ப்பன பாசிச சக்திகளுக்கெதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது இன்றைய வரலாற்று கடமை!
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி