Wednesday, May 7, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை - மறையாத மனு நீதி

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி

-

மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில் வசித்து வரும் முகமது அக்லாக் தான் கொல்லப்பட்டவர். கடந்த 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளது. பின்னர் தடிகளாலும், கற்களாலும் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார். அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தாத்ரியின் அருகாமை கிராமமான பிசாராவில் ஒரு கோயிலின் மைக்கில் அக்லாக் குடும்பம் மாட்டிறைச்சி வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

முகமது அக்லாக்
கொல்லப்பட்ட முகமது அக்லாக்

அக்லாக்கின் மகள் சஜிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது இந்துத்துவ கும்பல். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரை கைது செய்தது போலீஸ். கொலையாளிகளில் சிலர் கைது செய்யப்பட்ட தகவல் பரவிய உடனே ‘மாட்டிறைச்சி உண்ட’ அக்லாக் குடும்பத்தினருக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி இந்துக்களை சாலை மறியலில் ஈடுபட வைத்திருக்கின்றனர் இந்து மதவெறியர்கள்.

போலீஸ் வந்து விசாரித்த போது அது ஈத் பெருநாளுக்காக வாங்கிய ஆட்டிறைச்சி என்று அக்லாக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கள் நடவடிக்கையில் ‘நடுநிலையை பேண’ விரும்பிய போலீஸ் அக்லாக் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

‘தங்கள் வீட்டில் கைப்பற்றியது மாட்டிறைச்சி இல்லை என்றால் தனது தந்தையின் உயிரை திரும்ப பெற்று தருவார்களா?’ என்று கேட்கிறார், சஜிதா.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் பசுவை வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முன்னெடுக்கும் அரசியல் தொடர் நிகழ்வின் ஒரு பகுதி. 1996-ம் வருடம் இயற்றப்பட்டு கிடப்பில் கிடந்த மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் புத்துயிரூட்டியது மகராஷ்டிர பா.ஜ.க. அரசு. அதனை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசு ஆளும் காஷ்மீரிலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டதை எதிர்த்து அந்த மாநில மக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பக்ரீத் தொழுகை முடிந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்லாக்கின் உறவினர்கள்
அக்லாக்கின் உறவினர்கள்

‘மாட்டிறைச்சிக்கு தானே தடை; நாம் தான் அதனை உண்பதில்லையே’ என்று இருந்து விடலாமா என்றால் அதற்கும் சோதனையை ஏற்படுத்தியது மகராஷ்டிரா அரசு. ஜைனர்களின் மதவிழா ஒன்றை காரணம் காட்டி செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை சிக்கன், மட்டனுக்கு தடை விதித்தது மகராஷ்டிர பா.ஜ.க அரசு.

உலகமே தின்னும் மாட்டிறைச்சியை கொலைக்கான தண்டனையாக வைத்திருப்பது மனுநீதியின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டும்தான். பல்வேறு நாடுகளில் விபத்துக்களால், போர்களால், குடும்ப வன்முறைகளால் மக்கள் இறக்கின்றனர். மதவெறியாலும் கூட இறக்கின்றனர். ஆனால் ஒரு உணவுப் பொருளால் கொல்லப்படும் இந்துமதவெறிக்கு இணை எதுவுமில்லை. இதைவிட காட்டுமிராண்டித்தனமும், அநாகரிகமும் எங்காவது உள்ளதா? இல்லை அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?

வேண்டாம் வம்பு என்று ஒதுங்கி செல்ல நினைத்தாலும் கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துமதவெறியால் பாதிக்கப்பட்டு வருகிறது. ‘அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை’ என்ற ‘நற்சான்றிதழுடன்’ அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது. இந்த கையறு நிலை உங்களை உறுத்தவில்லை என்றால் பார்ப்பன இந்துமதவெறியின் பலிபீடத்தில் நமது அரசியல், பண்பாட்டு உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்.

– சம்புகன்

பி.பி.சி செய்தி