தேர்தல் நடத்தக்கோரி போராடிய மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது போலிசு கொலைவெறி தாக்குதல் – தொடரும் மாணவர் போராட்டங்கள்
தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளில் ஜனநாயகபூர்வமான மாணவர் தேர்தல் இன்றுவரை நடைபெறுவது சென்னை மாநிலக்கல்லூரியில் மட்டும்தான். வழக்கமாக ஜூலை முதல் வாரத்தில் தேதி அறிவிக்கப்பட்டு ஆகஸ்டு 15-க்குள்ளாக தேர்தல் நடந்து முடிந்துவிடும். ஆனால் இந்தாண்டு இன்று வரை தேர்தல் நடைபெறவில்லை. முறையான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
இதையொட்டி கடந்த ஜூலையிலிருந்தே தேர்தலை நடத்தக்கோரி கல்லூரி முதல்வருடன் பேச்சுவார்த்தை, நான்கைந்து முறை உள்ளிருப்பு போராட்டம் என மாணவர்கள் போராடியுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் மாணவர்களை போலீசைக்கொண்டு கலைத்துள்ள முதல்வர், ஒருமுறை கூட மாணவர்களின் கோரிக்கையை மதிக்கவில்லை. தேர்தல் நடத்தினால் சண்டை வருகிறது என்று போலீசும் கல்லூரி நிர்வாகமும் கூறிவரும் நிலையில், பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த 4 மாதங்களாக கல்லூரிக்குள் எவ்வித சண்டைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்று முடிவெடுத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து சுமார் 350-க்கும் மேற்பட்டோர் 12–10–2015 அன்று கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக முடிவு செய்து என காலை 10 மணிக்கு கிளம்பி வந்தனர். மாணவர்களை கண்டு கல்லூரி கதவு மூடப்பட்ட நிலையில் வேறு வழியின்றி காமராஜர் சாலையில் நின்று முழக்கமிட்டனர். ஆனால் 11 மணிக்கு செல்ல வேண்டிய முதல்வரை காரணம் காட்டி கேள்வி எதுவும் கேட்காமலே மாணவர்கள் மீது போலிசு கொலைவெறியுடன் தாக்கியது. கலைந்து ஓடிய மாணவர்களையும் ஓட ஓட விரட்டி, விரட்டி அடித்தனர். இதில் மண்டை உடைக்கப்பட்ட முதுகலை மாணவர்கள் ஜெய்சிங், கோபிநாத் இருவரையும் மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லாமல் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தேர்தலில் வேட்பாளராக நின்றவர்கள். மேலும் இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் போலிசு தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
பின்னர், மீதமிருந்த மாணவர்கள் சுமார் 50 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட, அவர்களை பேச்சுவார்த்தை என்று சொல்லி அழைத்துச் சென்றது கல்லூரி நிர்வாகம். பேச்சுவார்த்தை என்றால் இரண்டு தரப்பினரும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துப்பேசுவதுதான். ஆனால் இங்கு மாணவர்களுக்கு பேச அனுமதியே வழங்காமல் கல்லூரி முதல்வரும், துணை இயக்குநரும், போலீசு ஏசியும் மிரட்டி ‘பேச்சுவார்த்தை’யை முடித்துள்ளனர்.
“விருப்பமிருந்தால் படி, இல்லையெனில் டிசி வாங்கிக்கொண்டு செல்” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். மேலும், “கல்லூரியில் ஜனநாயகபூர்வமான தேர்தல் நடத்தமுடியாது, வேண்டுமானால் பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் நடத்துகிறோம்” என மிரட்டியுள்ளனர்.
ஜனநாயகபூர்வமான தேர்தல் என்பது நேரடியாக மாணவர்கள் வாக்குப்பதிவு செய்து வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது. பிரதிநிதித்துவ தேர்தல் என்பது கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் உள்ள குறிப்பிட்ட மாணவர்களை ஆசிரியர்களே தேர்ந்தெடுத்து அவர்களுள் ஒருவரை அந்த பிரதிநிதிகள் தேர்வு செய்வது. இந்த பிரதிநிதித்துவ தேர்தலே இப்போது தேர்தல் நடக்கும் மற்ற கல்லூரிகளில் நடப்பது. அதாவது பெரும்பான்மை மாணவர்களை தேர்தலில் இருந்து விலக்கி வைப்பதும், கல்லூரி நிர்வாகத்துடன் உடன்பட்டு மாணவர் நலன்களை கண்டுகொள்ள மறுக்கும் மாணவர்களையே தலைவர்களாக்கும் முறை. எனவே பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் பாதி மாணவர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர். மீதமிருந்த மாணவர்களை மிரட்டி வெளியேற்றி உள்ளது கல்லூரி நிர்வாகம்.
மாணவர்களுக்கு தேர்தல்தான் ஜனநாயக முறையில் நடத்த முடியாது என்றாலும் பேச்சுவார்த்தை கூட ஜனநாயக முறைப்படி நடத்தமுடியாது என காட்டியுள்ளது நிர்வாகம்.
இதற்கிடையில் அடிபட்ட ஏழு மாணவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். போலீசு குவிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் அடிபட்ட மாணவர்களை பார்க்க சென்றிருந்த மாணவர்கள் நான்கு பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றும் காயமடைந்த மாணவர்களை மிரட்டிய படியும் இருந்தது போலீசு.
இதையொட்டி சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்து 13-10-2015 அன்று காலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி, தியாகராயா கல்லூரி, புதுக்கல்லூரி ம்ற்றும் சட்டக்கல்லூரிகளில் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக போராட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் தெரிவித்திருந்தார்.
இதனால் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் இன்றைய தினம் காலை முதலே பெரும் போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பச்சையப்பன் கல்லூரியில் போலீசு படையுடன் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களும் கல்லூரி வாயிலை காவல் காத்து நின்றுக்கொண்டிருந்தனர்.

கல்லூரியில் தேர்வு முடிந்த பின்னர் போலீசு ஒவ்வொரு வகுப்பறையிலும் நுழைந்துக்கொண்டு மாணவர்களை வெளியே போகுமாறு மிரட்டிக்கொண்டிருந்தது. மேலும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் முன்னாள் பச்சையப்பன் கிளை செயலர் தோழர் செல்வத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இதுவரை அவரை அடைத்து வைத்துள்ள இடத்தை சொல்ல மறுக்கிறது.
மேலும் பச்சையப்பன் கல்லூரி, சட்டக்கல்லூரி, தியாகராயா கல்லூரி, மாநிலக்கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராயா கல்லூரியில் சுமார் 100 மாணவர்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சென்னை புதுக்கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநிலக்கல்லூரி மாணவர்களை தாக்கிய போலிசை கண்டித்தும், மாணவர் தேர்தல் நடக்காவிடில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கோரியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தேர்தலை புறக்கணிப்போம்! புதுக்கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
“மாணவர்களிடையே பிளவு ஏற்படும் என்று பேரவை தேர்தலை நிறுத்தினால், மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை நிறுத்த முடியுமா? மாணவர்களுக்கான குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை கூட இந்த அரசு பறித்துள்ளது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் வரையில் போராட்டம் தொடரும்” என்று அறிவித்தனர்.
நாடுமுழுவதும் அனைத்து பிரிவு மக்களின் ஜனநாயக உரிமைகளும் பறித்தெடுக்கப்படும் வேளையில் அடக்குமுறைகளுக்கு பணியாமல் வீறு கொண்டெழ துவங்கிவிட்டது மாணவர் வர்க்கம். மாநிலக்கல்லூரி போராட்டம் மாநிலம் முழுவதும் பற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அடக்குமுறைகளுக்கு எதிராக அடிபணியாமல் மாணவர்கள் போராடத் துவங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு தோள் கொடுப்பதுதான் நமது கடமையாக இருக்க முடியும்.
ஜனநாயக உரிமைக்காக போராடும் படிக்கும் மாணவர்கள் மீது போலீஸ் வெறிகொண்டு தாக்குகிறது!
மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது போலிசின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து திருவாரூர், நாகை பு.மா.இ.மு மாணவர்கள் இரு மாவட்டங்கள் முழுவதும் காவல் துறை, அரசைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை