கடந்த (2015, நவம்பர்) 09, 10 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையினால் கடலூர் மாவட்டமே நீரில் மூழ்கியுள்ளது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய தாலுகாக்களை சார்ந்த குமராட்சி முதல் ஆலப்பாக்கம் வரையிலான 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வீடுகள், குடிக்க தண்ணீர், உண்ண உணவு இன்றி தவித்து வருகின்றனர்.
இரண்டு லட்சம் எக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, மரவள்ளி, உளுந்து, மணிலா போன்ற பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 5000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆடுகள், கோழிகள், மாடுகள் என ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் கிராமங்களுக்கு செல்லும் 30-க்கும் மேற்பட்ட தமிழக நெடுஞ்சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது ஒரளவு சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரலாறு காணாத வெள்ளத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1) சென்னைக்கு குடிநீர் வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வீராணம் ஏரியில் அதன் கொள்ளளவான 45 அடியை எட்டும் வரை விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடாத ஆட்சியாளர்களின் நயவஞ்சகம்
2) கெடிலம் ஆற்றின் அகலத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும், கரையோரத்தில் உள்ள கிராம நிலவுடமையாளர்களின் ஆக்கிரமிப்புக்காகவும் சுருக்கியது.
3)ஜனவரி முதல் பெண்ணையாற்றில் பிடாகம், கண்டரகோட்டை அருகே மணல் குவாரி அமைத்து ஆயிரக்கணக்கான டன் மணலை கொள்ளையடித்தது போன்றவைகளே.
இவற்றை ஆதாரபூர்வமாக விரைவில் எழுதுவோம்.
வெள்ளம் வந்து மூன்று நாட்கள் ஆன பிறகு அதிகார வர்க்கத்தின் ஆறு குறுநில மன்னர்கள் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அம்மாவின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் காரணங்களுக்காக பித்தலாட்டமான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். இதன் இலட்சணம் ஊடகங்களிலேயே சந்தி சிரிக்கின்றது.
மேலும் மாவட்டத்தில் உள்ள நகர பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கூரை வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. மேலும் பாடபுத்தகங்கள், வீட்டுபத்திரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகர பகுதிகளில் உள்ள சுமார் 4,000 பேர்கள் வெளி முகாம்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் சேறும் சகதியுமாக உள்ளதால் யாரும் செல்ல முடியாத அவலநிலை இன்னமும் நீடிக்கின்றது. அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பார்வையிட்டு சென்றாலும் யாரும் குடியிருப்பு பகுதிக்கு வருவதில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் மக்கள் அதிகாரத்தின் தொண்டர்கள் கடந்த 14.11.2015 சனிக்கிழமை அன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று வீடு மற்றும் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக கடலூர் புருஷோத்தமன் நகரில் தண்ணீர் புகுந்துள்ள வீடுகளை சுத்தம் செய்வது, சேறு படிந்துள்ள பாத்திரங்களை சுத்தம் செய்வது, கழிவுகளை அகற்றும் பணிகளை செய்வது, கால்வாய்களை சுத்தம் செய்வது, முட்புதற்களை அகற்றுவது போன்ற சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
வெள்ளத்தால் முகாம்களில் துவண்டு போயிருந்த மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினரின் இந்த பணிகளால் நம்பிக்கை பெற்று மீண்டும் தங்களின் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து தவித்துக் கொண்டிருந்த போது எட்டிப்பாக்காத போலிஸ், மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்து உடனே அங்கு வந்து உயர் அதிகாரிகளுக்கு உளவு செய்தி அனுப்புகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரத்தின் மீட்பு பணிகள் தொடரும்…
எங்களோடு இணைந்து வெள்ள நிவாரண மீட்பு பணியாற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மக்கள் அதிகாரம்,
கடலூர்: 81108 15963 – 97864 87355
___________________________________
விசூர், பெரிய காட்டுப்பள்ளத்தில்
மக்கள் அதிகாரத்தின் மீட்புப் பணி………
கடந்த 9,10-ம் தேதி அன்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின. அவற்றில் அதிக அளவு பாதிப்புக்குள்ளகியது கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கவை சார்ந்த விசூர் மற்றும் பெரிய காட்டுப்பளையம் என்ற இரண்டு கிராமங்கள். அதற்கு காரணம் இந்த இரு கிராமங்களும் வெல்லவேறு ஆற்றின் அருகில் இருப்பதனால் ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்தது.
இந்த வெள்ளத்தில் விசூரில் இரண்டு பேரும், பெரிய காட்டுப்பாளையத்தில் பத்து பேர் என பனிரெண்டு பேர் மாண்டு போயுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான விலை நிலங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளன. நிலத்தின் மீது 2 மீட்டர் அளவிற்கு சகதி – மணல் படிந்துள்ளது. தற்போது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் அப்பகுதி மக்கள், கடந்த எட்டு நாட்களாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்…
அவர்களின் துயரம் துடைக்கும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அவர்களோடு நின்று கடந்த மூன்று நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், உடைமைகளை சுத்தம் செய்து கொடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து நம்பிக்கையூட்டி வருகிறது மக்கள் அதிகாரம்……
பெரியகாட்டுபாளையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்:
விசூரில் மக்கள் அதிகாரம் தோழர்களின் நிவாரணப் பணிகள்:
____________
நான்காவது நாளாக மேல்காட்டுப்பாளையத்தில் தொடரும்
மக்கள் அதிகாரத்தின் மீட்பு பணி.
___________________________________