தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மையும்.

“தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை!” – மோடி அரசின் “தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தை” ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் விமரிசனம் இது. நீதிபதிகளின் அதிகார வரம்பை மட்டுமின்றி, அருகதையையும் கேள்விக்குள்ளாக்கி அருண் ஜெட்லி விமரிசித்துள்ள போதிலும் உச்ச நீதிமன்றம் அடி வாங்காதது போல நடித்து நிலைமையைச் சமாளித்துக் கொண்டது. ஆனால், நவம்பர் 5-ம் தேதியன்று நீதித்துறையை அழிக்க முயற்சி நடப்பதாக மேற்கூறிய தீர்ப்பை வழங்கிய அமர்வின் மூத்த நீதிபதி கேஹர் குற்றம் சாட்ட, உடனே ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் (பா.ஜ.க.வினர்) நீதிபதிகளை எதிர்த்து அங்கேயே கூச்சலிட்டதாகத் தொலைக்காட்சி செய்திகள் கூறின.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கெனவே நிலவி வரும் முறைகேடுகள் தோற்றுவித்துள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு, மொத்த நீதித்துறையையும் விழுங்கும் நோக்கத்துடன் பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட, தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC), நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்து அளித்த தீர்ப்பினால், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சகிக்கவொண்ணாத ஆத்திரம் கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளே மேற்கண்ட சம்பவங்கள்.

நீதிபதி பதவிகளை ஆக்கிரமித்து, நீதிமன்ற வளாகங்களையே ஷாகாக்களாக மாற்றுவதற்கு சங்க பரிவாரம் தீட்டியிருந்த சதித்திட்டத்திற்கு இது ஒரு தற்காலிகப் பின்னடைவு. அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தனது நோக்கத்துக்கேற்ப ஆடவைக்க மோடி அரசால் முடியவில்லை என்றும் இதற்கு நாம் பொருள் கொண்டுவிடக்கூடாது.
அரசின் கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் முதல் அதிகார வர்க்கம் வரையில் எல்லா நாற்காலிகளையும் பார்ப்பன பாசிஸ்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அமித் ஷா, வன்சாரா போன்ற கொலைகாரர்கள் விடுதலை, குஜராத் படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்த வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, மாயா கோத்னானிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி ஜியோத்ஸ்னா யாக்னிக் ஆகியோருக்குக் கொலை மிரட்டல், தீஸ்தா சேதல்வாத் மீதான பொய்வழக்கு போன்ற பல சான்றுகள், மோடி அரசின் தாளத்திற்கு நீதிமன்றங்கள் ஆடத்தொடங்கி விட்டதைக் காட்டுகின்றன.
இருப்பினும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் சுமார் 384 நீதிபதி பதவிகளை விழுங்குவதற்கு மோடி அரசு போட்டிருந்த திட்டத்துக்கு இந்த தீர்ப்பு ஒரு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
நாடாளுமன்றம்-சட்டமன்றங்கள், நிர்வாக எந்திரம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களுக்கிடையில் தத்தம் அதிகார எல்லை குறித்து அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பின்னர் அவை தமக்குள் சமரசமாகிக் கொள்வதும் நாம் இதுவரை காணாத நிகழ்வுகள் அல்ல. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் யாருடையது என்பதுதான் இந்தப் பிரச்சினையின் மையம் என்ற போதிலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பெரும்பான்மை மக்களின் விருப்புக்கும் இடையிலான மோதலாக இது சித்தரிக்கப்படுகிறது.
***
1993-க்கு முன்பு வரையில் நீதிபதிகளை நியமிக்கும் முதன்மை அதிகாரம் அரசிடம்தான் இருந்தது. “உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு முன்னர், தலைமை நீதிபதியை அரசு கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்” என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதன் பொருள் ‘ஒப்புதல் பெறவேண்டும்’ என்பதுதான் – என்று இதற்கு 1993-ல் விளக்கமளித்தது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம், நீதிபதிகளைத் தெரிவு செய்தது. பின்னர் 1998-ல் அளிக்கப்பட்ட இன்னொரு தீர்ப்பின்படி இது ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியமாக மாற்றப்பட்டது. “நமக்கு நாமே திட்டம்” என்று கிண்டலாக அழைக்கப்படுகின்ற, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்து கொள்ளும் இந்த முறை நீதித்துறை ஊழலின் அடிக்கொள்ளியாக இருந்து வருகிறது.
இதனை ரத்து செய்து நீதிபதிகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய ஆணைய மசோதாவை ஐ.மு.கூ. அரசு, 2013-ல் கொண்டு வந்தது. எனினும், அது நிறைவேறுவதற்கு முன்னரே மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. 2014 மே மாதத்தில் பதவியேற்ற மோடி அரசு, ஆகஸ்டு மாதத்திலேயே நீதித்துறை நியமன ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. சர்வகட்சி ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
“உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் இரு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு பிரபல நபர்கள் – என 6 பேர் கொண்ட குழு நீதிபதிகளைத் தெரிவு செய்யும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகிய மூவரும் சேர்ந்து இரண்டு பிரபல நபர்களை முடிவு செய்வர். 6 பேர் கொண்ட இந்தக் குழுவில் எந்த இரண்டு பேர் ஆட்சேபம் தெரிவித்தாலும், குறிப்பிட்ட நபர் நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுத்து நிறுத்தலாம்” என்று கூறியது இச்சட்டம்.
இந்தச் சட்டத்தின் விளைவாக நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் பெற்றிருந்த மேலாண்மை மிக்க அதிகாரம் ரத்து செயப்படும். அது மட்டுமின்றி, மற்றெல்லா நிறுவனங்களையும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மோடி அரசு, நீதித்துறை நியமனங்களையும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் இச்சட்டம் அளிக்கிறது. உளவுத்துறை மூலம் வதந்திகளைப் பரப்பி, கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதைச் சதித்தனமான முறையில் தடுத்த மோடி அரசுக்கு, தனக்கு ஒவ்வாத யாரையும் நீதிபதியாக நியமிக்க முடியாமல் தடுப்பதற்கான அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.
கீழிருந்து மேல் வரை நீதித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதும், நீதிபதிகள் நியமனத்தில் நிலவும் அப்பட்டமான முறைகேடுகளும், இரகசியத்தன்மையும், மக்களுக்கு எந்த விதத்திலும் பதிலளிக்கத் தேவையில்லாத வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பும், ஊழல் முதல் பாலியல் குற்றங்கள் வரையிலான எதற்கும் நீதிபதிகளைத் தண்டிக்கவியலாத நிலை நிலவுவதும், நீதித்துறைக்கு எதிராக உருவாக்கியிருக்கும் பொதுக்கருத்தின் துணை கொண்டுதான் இந்த சட்டத்தை மோடி அரசு நியாயப்படுத்திக் கொள்கிறது. ஆனால், ஊழல் நீதிபதிகளைத் தண்டிப்பதற்கான வழிமுறை உள்ளிட்ட எதையும் இந்த சட்டம் முன்வைக்கவில்லை. ஏனென்றால், நீதித்துறையைச் சீரணிப்பதுதான் மோடி அரசின் நோக்கமேயன்றி, அதனைச் சீரமைப்பது அல்ல. அவ்வாறு சீரமைப்பதும் இயலாது.
நீதித்துறையின் சீர்குலைவு என்பது இந்த மொத்த அரசமைப்பின் தோல்வியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது. கட்சிகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட மற்றெல்லா நிறுவனங்களும் தோற்று அம்பலப்பட்டு நிற்கும் நிலையில், இந்த அரசமைப்பின் நம்பிக்கை நட்சத்திரமாக நீதித்துறை ஆளும் வர்க்கத்தால் சித்தரிக்கப்பட்டது. நீதித்துறையைக் கைப்பற்றுவது என்ற தங்களது உடனடி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு விட்டதனால், ஆத்திரம் கொண்டு தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை என்று நீதிபதிகளைப் பழிக்கிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலர்களான பார்ப்பன பாசிஸ்டுகள். அவமதிக்கட்டும். அவமதிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானே உண்டு.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________