Saturday, May 3, 2025
முகப்புகலைகவிதைமக்கள் சேவையில் தொழிலாளிகள் - கார்ப்பரேட் சேவையில் நிறுவனங்கள்

மக்கள் சேவையில் தொழிலாளிகள் – கார்ப்பரேட் சேவையில் நிறுவனங்கள்

-

ஒதுங்கிய குப்பைகளைsanitary-workers-flood-relief-assistance (18)
உங்களால் ஒதுக்கப்பட்டவர்கள்
அள்ளுகிறார்கள்

குப்பைவாரும் சாதியிடம்
கொள்வினை கொடுப்பினை
கூடாது எனும்
உங்கள் கொள்கையை
துப்புரவு தொழிலாளிகள்
கடைபிடித்தால்
இந்நேரம் என்னாகும் சென்னை!

எத்தனையோ
பாதாள சாக்கடைகளைப்
பார்த்தவர்கள்
கொசு முட்டையில்
வளர்ச்சி பொரிக்கும்
நகரமயத்தின்
கோரத்தைப் பார்த்து
பதைக்கிறார்கள்.

ஊர்விட்டு உறவுவிட்டு
வேலைதான் எனினும்
உடல்நலம்
இழப்புதான் எனினும்
உதவும்
மனிதசேவையில்
மனம் விரிந்த தொழிலாளிகள்
ஒருநாள் இழப்பையும்
சகிக்காமல்
ஐ.டி தொழிலாளிகளை
அடுத்த கணமே
அடுத்த லாபத்திற்கு
அடுத்த நகரத்திற்கு
வருவதை பார்த்து திகைக்கிறார்கள்.

கால்டாக்சி, செல்போன்
இணையம், இன்சாட்
எது இருந்தும்
தனியார்மக் குப்பையால்
மூடப்பட்ட
பிணங்களின் தலைநகரை பார்த்து
அஞ்சுகிறார்கள்.

குப்பைகளைப் பார்த்தல்ல
இவ்வளவு குப்பைகளை
நுகரமுடிந்த
மேட்டுக்குடி தொப்பைகளைப் பார்த்து
மலைக்கிறார்கள்.

வரலாறு காணாத
பெருவெள்ளம்
எதை எதையோ உணர்த்தியதாய்
பாடம் சொல்லும்
தருணத்தின் புதல்வர்களே,
வரலாறு நெடுக
அடிமனதில் சேகரித்த
சாதிக்குப்பையை
இப்போதும் கூட
வீசி எறியாமல்
மனிதம் கூசும்படியான
நடத்தையை பார்த்தே
அவர்கள் நடுங்குகிறார்கள்.

பார்க்கவே
குமட்டுவதாய்
நீங்கள் சொல்லும்
சாக்கடை சகதி
வெளியில் மட்டும்தானா?

காணவே அருவருக்கும்
உங்கள் கழிவுகளில்
தன் உயிரை பணயம் வைத்து
அந்த தொழிலாளிகள்
கை வைத்திருக்கிறார்கள்.

காணாத இடங்களில் எல்லாம்
ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் உள்மனதின்
சாதி மதவெறிக் கழிவுகளில்
கொஞ்சம் கை வையுங்களே
ஊர் சுத்தமாகட்டும்

-துரை சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க