Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்

கருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்

-

ன்புடையீர் வணக்கம்,

prpc-madurai-12th-year-banner-2சமீபத்திய மழை வெள்ளத்தில் கோடிக்கணக்கான மக்கள் குந்தக் கூட இடமில்லாமல் வெட்ட வெளியில் நின்று உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த மாடிகளிலும், தாழ்ந்த குடிசைகளிலும் வாழும் மக்கள் பேதமில்லாமல் இயற்கை ஒன்றுபடுத்தியிருக்கிறது. பட்டினி, பசி, குளிர், காய்ச்சல், நோய்த் தொற்று எல்லோரையும் ஒரு சேர வாட்டி வதைத்திருக்கிறது. அரசு செயலிழந்து நிற்கிறது. இந்த அகோர மழை வெள்ளத்திற்கு யார் காரணம்? வேறுயாரும் இல்லை. அரசுதான் காரணம். தெரிந்தே இயற்கையைச் சீண்டி விளையாடுபவர்கள் ஆட்சியாளர்கள்தான். பன்னாட்டு-இந்நாட்டு முதலாளிகள்தான். ஆனால், பாதிக்கப்படுவது, செத்து மடிவது என்னவோ மக்கள்தான். ஏழைகள்தான்.

இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அம்மா தி.மு.க.வின் அரசியல் விளையாடுகிறது. நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் தன்னார்வலர்களைத் தடுத்து நிறுத்தி அம்மாவின் படத்தை ஒட்டி அம்மாவின் பெயரால்தான் வழங்க வேண்டும் என்று அடித்து உதைக்கிறார்கள் அந்தக் காலிகள். சாவிலும் ஆதாயம் பார்க்கும் வக்கிரம், எல்லாவற்றிலும் “நான்” “எனது” என்று மமதையோடு சொல்லிவரும் ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்குகிறார். அவரை விமர்சிப்பது, “ராஜ துரோகம்” என்கிறார் அந்தக் கலையரசி. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை வாக்காளர்களாக மட்டுமே அவரால் பார்க்க முடிகிறது. இதுதான் அவரது ஜனநாயகப் பண்பு. கருத்துரிமை என்பது அம்மாவைப் புகழ்பாடுவது. ஜனநாயக உரிமை என்பது எந்த ஒரு சிறு எதிர்ப்பையும் காட்டாமல் இருப்பது.

இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை அமல்படுத்திவரும் பா.ஜ.க அரசு. உள்நாட்டில் தனது பரிவாரங்களை தறிகெட்டுத் தாண்டவமாடவிடும் மோடி அயல் நாடுகளில் போய் ஜனநாயக வேடமிட்டுத் திரிகிறார். கோமாதாவின் பெயரால் அரங்கேறும் படுகொலைகள் தொடங்கி சிறுபான்மையினரை அச்சுறுத்தி நாட்டைவிட்டே வெளியேற்றும் தேச, பார்ப்பன இந்துமத வெறியில் திளைத்து இன்புறுகிறது அந்தக் கும்பல். “நாய்”களை விடக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் தலித் மக்கள்.

prpc-madurai-12th-year-banner-1உயர்-உச்ச நீதிமனங்களை கைப்பற்றி விட்டால் நாட்டையே கைப்பற்றி விட்டதாகும் என்று உணர்ந்து அதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களைப் பணிநீக்கம் செய்து பழி தீர்க்கிறது ஆர்.எஸ்.எஸ் அரசு. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு சில பார்ப்பன நீதியரசர்கள் அரசியல் சாசனத்திற்கு புறம்பாக பாராளுமன்றம் சட்டமியற்றுவது போல ஆணைகளை பிறப்பிக்கிறார்கள். மக்கள் தாங்கள் சொல்கிறபடிதான் உண்ண வேண்டும், உடுத்தவேண்டும் என்று அச்சுறுத்தும் இவர்கள் இந்துக்கள் எப்படி உடையணிந்து கடவுளைக் கும்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கின்றனர். டிசம்பர் 6-ல் இசுலாமிய – தலித் மக்கள் போராடக் கூடாது என்று தடை விதிக்கின்றனர். தமிழகத்தின் பெருமையான சுயமரியாதை திருமண சட்டத்தை மறைமுகமாகச் சிதைக்கிறார்கள் இந்த வேதியரசர்கள்.

கருத்துரிமை, ஜனநாயக உரிமை, சமநீதி, சமத்துவம் என்பவையெல்லாம் பார்ப்பன இந்து சனாதனத்தின்படிதான் என்று அடித்துச் சொல்கிறது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பரிவாரங்கள். ஒருபுறம் சகிப்புத்தன்மை-பன்முகத்தன்மை என்பதுதான் பாரதத்தின் அடையாளம், பழம் பெருமை என்று சொல்லிக் கொண்டே வன்முறை, பார்ப்பன இந்து சனாதானக் கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது. இந்த அபாயங்கள் இந்திய மக்களை நிரந்தரமாக அச்சுறுத்தும் அபாயங்கள். ஆட்சிகள் மாறினாலும், இந்த அபாயம் மாறாது என்று எச்சரிக்கை செய்கிறது மக்களு உரிமைப் பாதுகாப்பு மையம். இதற்கு எதிராகப் போராட வேண்டிய பொருத்தமான தருணம் இது என்பதை சுட்டிக்காட்டி உங்களைப் போராட அழைக்கின்றோம். மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக மாறிவிட்ட இந்த பேரபாயத்தை, வாழும் உரிமைக்கான அதிகாரத்தை மக்களே கையிலெடுப்பதன் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.

prpc-madurai-12th-year-poster-2

12-ம் ஆண்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

கருத்தரங்கம்

19-12-2015 சனிகிழமை மாலை 5 மணி
மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை

கருத்துரிமையை பாதுகாக்க களத்தில் இறங்குவோம்!
பாய்ந்து வரும் பார்ப்பன மதவெறி பாசிசத்தை வீழ்த்துவோம்!

மனித உரிமை ஆர்வலர்களே அணிதிரண்டு வருவீர்.

தலைமை : திரு ம. லயனல் அந்தோணிராஜ்
மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம், மதுரை

வரவேற்புரை : திரு மு. சங்கையா
மாவட்டப் பொருளாளர், ம.உ.பா.மையம், மதுரை.

உரை : காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை எது?
திரு சே. வாஞ்சிநாதன், B.Sc, B.L
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்

சிறப்புரை : சகிப்புத்தன்மை – பன்முகத்தன்மை: ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் கொள்கையா?
வழக்கறிஞர் எஸ்.பாலன், பெங்களூர்.

நன்றியுரை : திரு பா.நடராஜன், B.A., B.L.
மாவட்டத் துணைத்தலைவர், ம.உ.பா.மையம், மதுரை

நூல் அரங்கம் (கீழைக்காற்று)

prpc-madurai-12th-year-banner

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டம்
150 E, ஏரிக்கரை சாலை, K.K.நகர், மதுரை – 20,
தொடர்புக்கு 94434 71003