Saturday, May 3, 2025
முகப்புகலைகவிதைபொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !

பொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !

-

யல் வெடிப்பெங்கும்
ரியல் எஸ்டேட்
முளைக்குது.

கால்நடைகளின்
பட்டுப்போன வாயில்
பாலித்தீன் நுரைக்குது!

பொட்டுத் தண்ணியும்
தட்டுப்படாமல்
சிட்டுக்குருவிகள்
கண்கள் எரியுது!

அரிசி களைந்தெறியும்
ஈரம்
தேடித்தேடி ஏமாந்து
கோழி குஞ்சுகளுடன்
நெஞ்சு வேகுது

ஊற்றுக் கண்ணை
இழந்த துயரில்
ஆற்று மணல்
காற்றில் அழுவுது

துத்திப்பூவின் முகத்தில்
மணல் லாரிச்சக்கரம்
ஏறிக் கிடக்குது

அத்தனைக் கட்சிகள்
கொள்ளைக்கு சாட்சியாய்
காட்டாமணக்கு
மண்டிக் கிடக்குது

மீனவர் இரத்தம்
கலந்து
கலந்து
கடல்
தன் நிறத்தை இழக்குது!

புத்தம் புதிதாய்
ஊருக்கே விளைவித்துக் கொடுத்த கைகளில்
ரேசன் அரிசியின்
வீச்சம் அடிக்குது

பையப் பைய
விவசாயத்தையே
ஒழித்துக் கட்டும்
கார்ப்பரேட் கொள்கை
பொங்கல் பரிசாய்
ரேசன் பையில் தெரியுது

ஆதாரவிலை போதாமல்
கணுக் கணுவாய்
கரும்பு விவசாயி
வாழ்க்கை கருகுது!

பூந்தாது
ஒன்று கிடைக்காமல்
வண்ணத்துப் பூச்சி
பாழுங்கிணற்றில்
வீழுது

களிமண் ஈரம்
காணாமல்
கைத்தொழில்
சக்கரத் திருகைச் சுற்றாமல்
கடனில் சுழன்று சுழன்று
குயவர் கைகள்
காய்ந்து இருகுது

மாடு பிடிப்பது
தமிழர் கலாச்சாரமென்று
ஊரே புழுதி பறக்குது!
மணி பிடிக்க
கோயில் கருவறைக்குள்
போனால்
சாதி கொம்பு முட்டுது
மனுதர்மம் அடக்க
முடியாதவன் ‘வீரத்தை’
மாடு
ஏற இறங்கப் பார்க்குது

அய்வகை நிலமும்
அருந்தமிழ் வாழ்வும்
தரிசாய் கிடக்குது
அநியாயமாய்
எரிசாராயத்தில்
ஒரு இனமே எரிந்து கிடக்குது

உற்றுப் பார்த்தால்
வட்டி பொங்குது
ஆன்லைன் கரும்பில்
சீழ் வடியுது

எட்டிப் பார்த்தால்
எல்லா வீட்டிலும்
கலர் கலராய்
டி.வி. பொங்குது

தமிழரை இழந்த
தமிழர் திருநாள்,
உழவரை இழந்த
உழவர் திருநாள்
எனும்
உண்மைகள் விரியுது!

ஒருபோகமும் வழியில்லா
தமிழர் தெருக்களில்
முப்போகமும்
டாஸ்மாக் பொங்குது!

உள்ளூர் சோடா, கலரை
ஒழித்த வேகத்தில்
பெப்சி, கோக்
பீறிட்டு பொங்குது.

சில்லறை வணிகம்
புதைத்த இடத்தில்
டாடா, ரிலையன்சு
ஊற்று பொங்குது!

கடைசியில்,
உள்ளதை எல்லாம்
இழந்து
உதிரம் சுண்டும்
கடின உழைப்பில்
காண்ட்ராக்ட் தொழிலாளிகள்
கண்களில்
தனியார்மயத்தால்
எரிந்த இரவுகள்
தகித்து, கொதித்து பொங்குது!

நல்ல சோறில்லை…
நாட்டில் மதிப்பில்லை…
விவசாயி வாழ்க்கை
அலங்கோலமாகிக் கிடக்குது!

ஒரு நாளைக்கு மட்டும்
வேட்டியைக் கட்டி
புடவையைச் சுற்றி
காசுள்ள வர்க்கம்
கலர் கோலங்கள் காட்டுது.

விவசாய வர்க்கமோ
மங்கலோ… மங்கல்
அவர்கள்
வேண்டும் மாற்றத்திற்கு
சேர்ந்து குரல் கொடுக்காமல்
பானையை பார்த்து மட்டும்
போதுமா?
பொங்கலோ… பொங்கல்!

காணும்
அநீதிகளுக்கு எதிராக
களத்தில் பொங்குவோம்
மகிழும் மாநிலம்!

– துரை சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க