Saturday, May 10, 2025
முகப்புசெய்திமகாமக குளமும் தேர்தல் களமும்

மகாமக குளமும் தேர்தல் களமும்

-

தேர்தலுக்கும்
மகாமகத்திற்கும்
தெரிவதில்லை
வித்தியாசம்.

holy-election-11
அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை படுத்திய பாவத்தைத் தொலைத்து புண்ணியம் காணலாம் என்பது வாக்காளர் நம்பிக்கை

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொரு முறை
பண்ணிய பாவத்தைத் தொலைத்து
புண்ணியம் தேடலாம் என்பது
பக்தர்கள் நம்பிக்கை

அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை
படுத்திய பாவத்தைத் தொலைத்து
புண்ணியம் காணலாம் என்பது
வாக்காளர் நம்பிக்கை

இருபது தீர்த்தம்
நீற்று எட்டு குட புனித நீர்
இவ்வளவு ஊற்றியும்
தேறாத குளத்திற்கு
தெய்வீக அருளின் மீது
குளோரின் தெளித்தாலும்
‘கலெக்சன்’ கிருமிகள் சாவதில்லை!

இந்திய அரசியல் சட்டம்,
ஏகப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகள்,
எஸ்.பி, கலெக்டர், டி.ஜி.பி,
வருவாய்த்துறை உயர் அதிகாரிகள்,
எவ்வளவு போட்டாலும்
மது, பணபரிவர்த்தனை
போலி வாக்காளர் தடுக்க
குளோரின் கணக்கில்
குழுக்களை தெளித்தாலும்
‘எலெக்சன் கிருமிகள்’ சாவதில்லை!

mahamaham
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொரு முறை பண்ணிய பாவத்தைத் தொலைத்து புண்ணியம் தேடலாம் என்பது பக்தர்கள் நம்பிக்கை

வாக்காளர்களுக்கு
ஆட்சி வழங்க கணினிகள்
பக்தர்களுக்கு
ஆசி வழங்க துறவிகள்
அடையாள அணி வகுப்பு,
தேர்தலுக்கு காக்கிகள்
திருவிழாவுக்கு துறவிகள்

தேர்தல் புனிதத்தில்
மெருகூட்ட
வெளி மாநில
துணை ராணுவப் படை
மகாமகப் புனிதத்தில்
வெறியூட்ட
வெளி மாநில
நாகா சாதுப்படை

கறுப்பு பூனைகள்
காவலுடன்
வாக்கு எந்திரங்களை
புனிதமாக்கி
பொத்தி வைக்கும் வைபவங்கள்,

வெள்ளை பூணூல்கள்
காவலுடன்
கண்ணாடி பல்லக்கில் அமிர்த நீர்,
கலந்து
குளத்து நீரை புனிதமாக்கும் பூஜைகள்

பரவசத்தில்
கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்
பக்தர்கள்,
சின்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்
வாக்காளர்கள்

கை மெய் ஒடுக்கி
கடவுளைத் தொழுது
உய்ய வழி தேடி
ஒரு கை நீர் தெளித்து
ஒரு நாள் கூத்து தெளிந்து
வரு நாள் துன்பங்கள்
வருத்தையில்
“எந்த குளத்தில் குளித்தாலும்
அந்த அழுக்கு போகாது
என்னதான் செய்வது?” என
பக்தர்களுக்கு வரும் ஞானம்!

கை மை வைத்து
கணினி பொத்தானை அழுத்தி
உய்ய வழி தேடி
ஒரு ஓட்டாய் தான் கரைந்து
உள்ளதும் போய்,
வரும் ஆட்சி,
சூடு வைக்கையில்
வரும் வாக்காளருக்கு ஞானம்,
“எவனுக்கு போட்டாலும்
எமனுக்கு போட்ட மாதிரியே!
எப்பதான் மாறுமோ?!”

அதோ மகாமகக் குளக்கரையில்…
‘ஆண்டவர்’ அசரிரீ,
“பக்தா!
குளத்துக்கே முழுக்கு போடு
சுத்தம் தெளிவாகும்
தேர்தலுக்கே முழுக்கு போடு
சித்தம் தெளிவாகும்!”

– துரை சண்முகம்