Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மோடியின் அடுத்த ரிலீஸ் - டிஜிட்டல் போலீசு !

மோடியின் அடுத்த ரிலீஸ் – டிஜிட்டல் போலீசு !

-

முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், செய்தித் தாள்கள், வலைப்பூக்கள், அதில் வரும் பின்னூட்டங்களை முதற்கொண்டு கண்காணிக்க தனிச்சிறப்பான ஒரு கண்காணிப்பு அமைப்பை இந்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தேசிய ஊடக பகுப்பாய்வு மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மையம் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய  Increased-Surveillanceகண்காணிப்பு அமைப்பாக செயல்படும். பத்திரிகைகளின் தகவல்களின் படி இது பழைய அச்சு ஊடகங்கள் முதல் நவீன டிஜிட்டல் மீடியா வரை அனைத்தையும் கண்காணிக்கும் அமைப்பாக இருக்கும்.

ஏற்கனவே இது போன்ற இரண்டு காண்காணிப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மின்னனு ஊடக கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு 24X7 முறையில் 600க்கும் மேற்பட்ட காட்சி ஊடகங்களை (தொலைக்காட்சி சானல்கள்) கண்காணித்து வருகிறது. இந்த மின்னணு மையத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் பணி என்னவென்றால் சானல்களை கண்காணித்துக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை அளிப்பதாகும். இணையம் சமூக வலைதளங்களை கண்காணிக்க மற்றொரு ஊடக பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் Big Data and Analytics(பெரும்  தரவு மற்றும் பகுப்பாய்வு) என்ற துறை வேகமாக முன்னேறி வரும் ஒன்றாகும். இந்த துறையின் பணி என்ன? இணையத்தில் கொட்டி கிடக்கும் ஏராளமான தரவுகளை பகுப்பாய்வு செய்து அதிலிருந்து தகவல்களை திரட்டுவது. வங்கி முதல் பீசா கடை முதலான அனைத்து நிறுவனங்களும் இதில் தற்போது கவனம் செலுத்திவருகின்றன.

இந்த தொழில்நுட்பம் மிகப் பிரம்மாண்டமான அளவில் பகுப்பாய்வுகளை சாத்தியப்படுத்தியுள்ளது. ஒரு அரசு இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது அதன் பயன்பாடுகளை அளவிடவே முடியாது. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்கள் நுகர்வோர் என்ற அளவிலும், அரசுகள் குடிமக்கள் என்ற அளவிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

மோடி அரசால் உருவாக்கப்படவிருக்கும் இந்த மையத்தில் டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டடியூட் ஆஃ டெக்லாலனிஜியின் துணை பேராசிரியர் பொன்னுரங்கம் குமரகுரு என்பவர் வடிவமைத்திருக்கும் மென்பொருள் பயன்படுத்தப்படவிருக்கிறது.

இந்த மென்பொருள் நமது பதிவுகளை எண்ணிறந்த முறையில்வகைப்படுத்தும். உதாரணமாக அரசுக்கு ஆதரவு எதிர்ப்பு, கெயில் திட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்புமோடி ஆதரவு, மோடி எதிர்ப்பு, மோடி பக்தர் என இன்னும் ஏராளமான முறைகளில் வகைப்படுத்தலாம். கருத்துக்களை வைத்து மட்டுமல்ல யாரெல்லாம் என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறார்கள், சான்றாக தோழர் என்று பயன்படுத்துவது யார், புரட்சி என்று பேசுவது யார், பாசிஸ்டுகள் என்று அழைப்பது யார்….என்றெல்லாம் வகை பிரிக்கலாம். இவற்றை ஆள் போட்டு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் ஒரு மென்பொருளே சடுதியில் இலட்சக்கணக்கான நபர்களை பிரித்து சேமித்து வைத்து விடும்.

எதிர்மறையாக எழுதுபவர்களின் பழைய வரலாறாகளை கிளறி தொடர்ந்து அரசை எதிர்த்து வருகிறாரா இல்லை குறிப்பிட்ட பிரச்சனையில் எதிர்க்கிறாரா என அரசு தெரிந்து கொள்ளும் வகையிலும் இதை பயன்படுத்தலாம். மேலும் குறிப்பிட்ட நபரின் பின்னணி, விருப்பங்கள் முதலியவற்றையும் தொகுத்து தரும் வகையில் இந்த மென்பொருள் வடிமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் அரசை தீவிரமாக எதிர்க்கிறாரா, மென்மையாக எதர்க்கிறாரா, நடுநிலைமையா, ஆதரவா, தீவிர ஆதரவா, குறிப்பிட்ட பிரச்சினையில் மட்டும் நிலைப்பாடா, அனைத்திலுமா என்றெல்லாம் பிரிக்க முடியும் என்று செய்திகள் கூறுகின்றன.

பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை மோடியின் தேர்தல் வெற்றி முதல், வெளிநாட்டு பயணங்கள் கூட்டங்கள் வரை அனைத்தும் மென்பொருட்களின் துணையோடு பல கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டன. தற்போது மோடி அரசை எதிர்த்து வரும் கருத்துக்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய அவதூறுகளை அவிழ்த்து விடுவதற்கு இந்த புதிய கண்காணிப்பு மையம் பயன்படும். மேலும் இந்த ஊடக கண்காணிப்பு மையம் தன் தகவல்களை வைத்து மைய அரசின் புலனாய்வு, போலீஸ் அமைப்புகளோடு சேர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பயன்படும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நாளை காங்கிரசு அரசு வெற்றி பெற்றாலும் அரசு என்ற முறையில் அவர்களும் இந்த மையத்தை இப்படித்தான் பயன்படுத்துவார்கள்.

பிற்காலத்தில் இதை ஆதார் திட்டத்துடன் இணைக்கப்பட்டால் அந்த நபரைப்பற்றிய அனைத்தும் அரசின் கைகளில் சில வினாடிகளில் கிடைத்து விடும்.இந்த தகவல்களை போலீஸ் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு துறையிருக்கு வழங்கும் வகையில் தேசிய ஊடக மற்று பகுப்பாய்வு மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்துத்துவ பாசிஸ்ட் பால்தாக்ரேவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக இரு பெண்களை போலீசார் கைது செய்தது, ஜெயலலிதாவிற்கு எதிராக பாடல் வெளியிட்டதற்காக கோவன் கைது, வினவு பொறுப்பாளர் காளியப்பன் மீது அடக்குமுறை ஏவப்பட்டது நினைவிருக்கலாம். அரசின் அடக்குமுறைகள் ஏற்கனவே அதிகமா இருக்கும் நிலையில் இந்த புதிய கண்காணிப்பு மையம் அரசின் அடக்குமுறைகளை தீவிரப்படுத்தும். சமூக வலைத்தளங்கள ஓரளவுக்கேனும் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் வாய்ப்பு பெற்றிருக்கும் நிலையில் மக்களை சொந்தமாகவே தணிக்கை செய்து பேசவைக்கும் நிலைக்கு ஆளாக்குவது தான் அரசின் விருப்பம். அரசு விரும்பாத பதிவுகளை முகநூல் உள்ளிட்ட நிறுவனங்களே நீக்கிவருகின்றன என்றாலும் அந்த அளவுக்கு கூட பொறுத்திருக்க அரசு விரும்பவில்லை என்பதை தான் இது காட்டுகிறது.

சகிப்பின்மை குறித்த விவாதங்கள், மோடி அரசின் அமைச்சர்கள் பற்றிய ஊழல் விவகாரங்கள், தற்போது ஜே.என்.யு என தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார துறையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் போன்றவைகளை மோடி அரசின் மீதான மாயைகளை அகற்றி வருகிறது. மக்கள் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. குர்கானில் தொடங்கி, தண்டகாரண்யா, கெயில், போஸ்கோ என மக்கள் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. மெய்நிகர் உலகம் இதை ஓரளவு பிரதிபலிக்கவும் செய்கிறது.

இந்த அமைப்பின் நோக்கமாக அரசும் நாம் கூறுவதை தான் சொல்கிறது. “அரசுக்கு எதிரான தனிநபர்களின் கருத்துக்கள் பொதுமக்களின் போராட்டங்களாகவோ இல்லை சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ மாறிவிடாமல் இருக்கும் பொருட்டு “உடனடி எதிர்ப்பு” தெரிவிப்பது” என்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கபடுகிறது.

பாசிஸ்டுகள் தங்களை நிழலை பார்த்துக்கூட மட்டுமல்ல முகநூல் பதிவைபார்த்துக் கூட பயப்படுவார்கள் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கிறது இந்த கண்காணிப்பு.

இந்த கண்காணிப்புகளுக்கு அஞ்சாமல் அரசுகளை எதிர்த்து கண்டிப்பதும் குரல் கொடுப்பதும் நமது கடமையாகும்.

மேலும் படிக்க